தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
“அல்லாஹ்” இறைவன் ஒருவன்தான். மொத்தத்தில் ஒருவனேயன்றி எண்ணிக்கையில் ஒருவனல்ல. எண்ணிக்கையில் ஒருவனென்றால் அவன் எண்ணப்பட்டவனாகிவிடுவான். ஒன்று ஒன்றுதான். அதை எண்ண முடியாது. ஒருவனிடம் ஒரேயொரு எழுதுகோலைக் கொடுத்து இதை எண்ணு என்று சொல்வது பொருத்தமில்லை. மாறாக பல எழுதுகோல்களைக் கொடுத்து இதை எண்ணு என்றால் அது பொருத்தமானதும், அவனால் எண்ண முடிந்ததுமாகும். ஆனால் ஒரேயொரு எழுதுகோலைக் கொடுத்து இதை எண்ணு என்று சொன்னால் இது ஒன்றுதானே ஒன்றை எவ்வாறு எண்ணுவது என்று அவன் கோட்பான்.
ஆகையால் அல்லாஹ் ஒருவன்தான். ஆயினுமவன் எண்ணிக்கை சார்ந்த ஒருவனல்ல. மொத்தத்தில் ஒருவன் என்பதே சிறந்தது. ஏனெனில் இறைவனைப் பற்றிக் கூறிய பலர் اللهُ غيرُ مَحْدُوْدٍ وَغَيْرُ مَعْدُوْدٍ அல்லாஹ் கட்டுப்பாடு இல்லாதவனும், எண்ணப்படாதவனுமாவான் என்று கூறியுள்ளார்கள். அவனைக் கொண்டு “ஈமான்” நம்பிக்கை கொள்வதாயின் இவ்வாறுதான் கொள்ள வேண்டும்.
ஒருவன் “முஃமின்” விசுவாசியாவதற்கு இறைவன் ஒருவன் உள்ளான் என்று மட்டும் நம்பினால் போதாது. அவ்வாறு நம்புதல் போதுமென்றிருந்தால் எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவனாயிருந்தாலும் அவனும் விசுவாசியாகவே இருப்பான். இறை நம்பிக்கை இல்லாத நாத்திகன் மட்டுமே “முஃமின்” விசுவாசியல்ல. அவன் எதிலும் அடங்காதவனாவான்.
ஒருவன் விசுவாசியாவதாயின் ஆறு அம்சங்களை நம்ப வேண்டும். அல்லாஹ்வை நம்ப வேண்டும். மலக்குகளை நம்ப வேண்டும். வேதங்களை நம்ப வேண்டும். “றஸூல்” தூதர்களை நம்ப வேண்டும். இறுதி நாளை நம்ப வேண்டும். நன்மையும், தீமையும் இறைவனில் நின்றுமுள்ளது என்று நம்ப வேண்டும்.
இறைவனை நம்புதல்.
இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று நம்புதல். இவ்வாறு நம்பினவன் “முஃமின்” விசுவாசி. இவ்வாறு நம்பாதவன் “முல்ஹித்” நாத்திகன்.
அல்லாஹ்வை நம்பினவன் என்று ஒருவனைச் சொல்வதாயின் அவன் மேலே கூறிய ஆறு அம்சங்களையும் நம்ப வேண்டும். விரிவாக நம்பாது போனாலும் ஓரளவேனும் விபரமாக நம்ப வேண்டும். இறைவன் இருக்கின்றான் என்று மட்டும் நம்புதல் போதாது.
குறைந்த பட்சம் அல்லாஹ் இருக்கின்றான் என்று நம்புவதுடன் அவனில் அவசியம் இருக்க வேண்டிய 20 தன்மைகளையும், அவனில் இருக்க முடியாத 20 தன்மைகளையும், அவனில் இருப்பதும், இல்லாதிருப்பதும் சமமான 01 தன்மையையும் ஓரளவு விளக்கத்துடனாவது அறிந்திருத்தல் “வாஜிப்” கடமையாகும்.
இதேபோல் நபீமாரில் அவசியம் இருக்க வேண்டிய நான்கு பண்புகளையும், அவர்களில் அறவே இருக்க முடியாத நான்கு பண்புகளையும், மற்றும் இருப்பதும், இல்லாதிருப்பதும் சமமான ஒரு தன்மையையும் ஓரளவு விளக்கத்துடனாவது அறிந்திருத்தல் “வாஜிப்” கடமையாகும். கடமையென்றால் “பர்ழ் ஐன்” ஆண், பெண் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும். “பர்ழ் கிபாயா” அல்ல.
“பர்ழ் கிபாயா” என்பது ஒவ்வொருவர் மீதும் கடமையானதல்ல. ஆயினும் ஓர் ஊரிலுள்ளவர்களில் ஒருவராவது அந்தக் கடமையை செய்து விட்டால் போதும். மற்றவர்களும் குற்றத்திலிருந்து தப்பிவிடுவார்கள். ஆயினும் ஊரிலுள்ள ஒருவரும் அந்தக் கடமையை செய்யவில்லையானால் அனைவரும் குற்றவாளிகளாகிவிடுவர்.
இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் மார்க்க அறிஞர்களையும், மார்க்க கல்வி கற்கும் மாணவர்களையும், பொது மக்களில் மார்க்க கல்வியுடனும், மற்றும் வணக்க வழிபாடுகளுடன் தொடர்புள்ள சிலரையும் தவிர மற்றவர்கள் அனைவரும் இறைவன் தொடர்பான, நபீமார் தொடர்பான மேற்கண்ட விடயங்களை அறியாதவர்களாகவே உள்ளனர்.
இவ்விபரங்களை அறிவது உலமாஉகளுக்கு மட்டும் சொந்தமானதென்று பலர் நினைக்கலாம். உண்மை அவ்வாறில்லை. இவ்விபரங்களை அறிவது “முகல்லப்” அனைவர் மீதும் கடமைதான்.
“அகீதா” கொள்கை தொடர்பான எந்த ஒரு நூலை எடுத்தாலும் அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும்.
يَجِبُ عَلَى كُلِّ مُكَلَّفٍ أَيْ عَاقِلٍ بَالِغٍ أَنْ يَعْرِفَ مَا يَجِبُ لِمَوْلَانَا عَزَّ وَجَلَّ وَمَا يَسْتَحِيْلُ عَلَيْهِ وَمَا يَجُوْزُ لَهُ
இறைவனுக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்புகளையும், அவனுக்கு இருக்க முடியாத பண்புகளையும், அவனுக்கு இருப்பதும், இல்லாதிருப்பதும் சமமான தன்மையையும் ஒவ்வொரு “முகல்லப்” அறிந்திருப்பது கடமையாகும். يَجِبُ என்ற சொல் கடமையை குறிக்குமேயன்றி “ஸுன்னத்” என்பதைக் குறிக்காது.
மொத்தம் 41 தன்மைகளையும், அதேபோல் நபீமாருக்குரிய தன்மைகளையும் அறிந்திருப்பது கடமையாகும்.
இறைவனுக்குரிய தன்மைகளையும், நபீமாருக்குரிய தன்மைகளையும் விபரமொன்றும் தெரியாமல் பச்சைக் கிளி போல் சொற்களை மட்டும் மனனம் செய்திருப்பது அத்தன்மைகளை அறிந்ததாக ஆகாது. ஒரு “முகல்லப்” அறியாமலிருப்பானாயின் அவன் தனது கடமையை நிறைவேற்றாத பாவியாகிவிடுவான்.
இவ்விடயத்தில் மார்க்கம் கற்ற உலமாஉகளுக்கும், பொது மக்களுக்கும் வித்தியாசம் உண்டு. உலமாஉகள் பொது மக்களை விட இது தொடர்பான விடயங்களை அதிகமாக அறிந்திருத்தல் அவசியம்.
ஏனெனில் பொது சனம் மார்க்க விடயங்களை உலமாஉகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஆகையால் அவர்கள் விளக்கம் சொல்லிக் கொடுக்கும். அளவு இந்த விபரங்களையும், மார்க்க சட்டங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.
நமது இலங்கை நாட்டைப் பொறுத்தவரை மேலே நான் குறிப்பிட்ட மூன்று சாரார் தவிர ஏனைய பொது மக்களில் இறைவனைப் பற்றி அறிய வேண்டிய விடயங்களையும், நபீமார் பற்றி அறிய வேண்டிய விடயங்களையும் அறியாதவர்களே 90 வீதம் உள்ளனர். இவர்கள் நிரந்தரப் பாவிகளாவர்.
مُكَلَّفْ –
முகல்லப் என்ற சொல்லுக்கு அகராதிப் பொருளும் உண்டு. “பிக்ஹ்” சட்டக்கலைப் பொருளும் உண்டு. இச் சொல்லுக்குரிய அகராதிப் பொருள் கஷ்டம் கொடுக்கப்பட்டவன் என்பதாகும். சட்டக்கலையில் இச்சொல்லை இரண்டு அம்சங்கள் உள்ள ஒருவனுக்கு பயன்படுத்துவார்கள். ஒன்று عَاقِلْ மற்றது بَالِغْ (ஆகில் பாலிக்غ ) “ஆகில்” என்றால் புத்தியுள்ளவன். “பாலிக்غ” என்றால் வயது வந்தவன். பருவ வயதை அடைந்தவன் என்று பொருள் வரும்.
ஏவல், விலக்கலுக்கு உட்பட்டவன் சட்டக்கலையில் “முகல்லப்” என்று அழைக்கப்படுவான்.
“ஆகில்” என்றால் புத்தியுள்ளவன் என்று பொருள். ஒருவனுக்கு ஏவல் விலக்கல் கடமையாவதாயின் அவன் புத்தியுள்ளவனாயிருத்தல் வேண்டும். இங்கு புத்தியுள்ளவன் என்பது பைத்தியகாரனை மட்டும் குறிக்காதேயன்றி புத்தி குறைந்தவனைக் குறிக்கும். பைத்தியக்காரன் ஏவல் விலக்கலுக்கு உட்பட்டவனல்ல. இதேபோல் அறவே புத்தி இல்லாதவர்கள் உள்ளனர். இவர்கள் பைத்தியக் காரர் பட்டியலில் சேராது போனாலும் இவர்களுக்கு ஒன்றுமே புரியாது. இவர்களும் ஏவல் விலக்கல் விடயத்தில் பைத்தியக்காரர்கள் போன்றவர்களேயாவர். இவர்களுக்கும் ஏவல் விலக்கல் கிடையாது.
“பாலிக்(غ)” என்றால் வயது வந்தவன். பருவ வயதை அடைந்தவன் என்று பொருள் வரும். பருவ வயதென்பது ஆணாயினும், பெண்ணாயினும் 15 வயதைக் குறிக்கும். ஆணோ, பெண்ணோ 15 வயதை அடைந்தால் அவர்கள் வயது வந்தவர்கள்தான். பெண்ணாயின் அவளுக்கு இந்திரியம் வர வேண்டுமென்றோ, தீட்டு வர வேண்டுமென்பதோ நிபந்தனையல்ல. ஆணாயின் அவனுக்கும் இந்திரியம் வர வேண்டுமென்பது நிபந்தனையல்ல. இது வயதைக் கொண்டு பருவமடைதல் எனப்படும். எனினும் ஆண் 15 வயதை அடையுமுன் அவனுக்கு இந்திரியம் வெளியானால் அல்லது பெண் 15 வயதை அடையுமுன் இந்திரியம் வெளியானால் அல்லது தீட்டு வந்தால் இவர்களும் வயது வந்தவர்களேதான்.
“முகல்லப்” என்று சொல்வதற்குப் பொருத்தமானவர்கள் அனைவரும் ஏவல் விலக்கல்களுக்கு உட்பட்டவர்களேயாவர். இவர்கள் அல்லாஹ் பற்றியும் நபீமார் பற்றியும் மேற்கண்டவாறு அறிந்திருப்பது அவர்களின் கடமையாகும்.
“முகல்லப்” என்ற சொல்லுக்கு அகராதிப் பொருள் கஷ்டம் கொடுக்கப்பட்டவன் என்பதாகும். இதன் விபரம் “தஸவ்வுப்” ஸூபிஸம் தொடர்பான விளக்கமுள்ளதாயிருப்பதால் எழுத வேண்டிய இடத்தில் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்.
ஒரு நாள் நான் சென்னை அங்கப்பநாயகன் தெரு “மஸ்ஜித் மஃமூர்” பள்ளிவாயலில் “ஸுப்ஹ்” தொழுகையின் பின் “அவ்றாத்” ஓதிக் கொண்டிருந்தேன். சுமார் 50வயது மதிக்கத்தக்க, தப்லீக் ஜமாஅத் பாணியில் உடை உடுத்திருந்த ஒருவர் என்னிடம் வந்து ஸலாம் சொன்னார். பதில் சொன்னேன். கட்டியணைத்து “முஸாபஹா” செய்தார். என்னைத் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன். நான் காத்தான்குடி, உங்களிடம் சிறு வயதில் குர்ஆன் ஓதியிருக்கின்றேன். நான் ஜமாஅத்தில் டில்லி போய் வருகிறேன் என்றார்.
உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் கோபிக்க மாட்டீர்களா? என்று கேட்டேன். நீங்கள் அடித்தாலும் வேதனைப்பட மாட்டேன் என்றார். அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான தன்மைகள் எத்தனை? என்று கேட்டேன். விளங்கவில்லை என்றார். விபரமாகக் கேட்டேன். அது பற்றி எனக்குத் தெரியாது என்றார். எத்தனை வருடங்களாக ஜமாஅத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்டேன். சுமார் 15 ஆண்டுகள் என்றார். இத்தனையாண்டுகள் “தீன்” பணி செய்கின்ற நீங்கள் உங்களைப் படைத்து வளர்த்துப் பாதுகாத்து பொருளாதார வசதியோடு உங்களைச் சிறப்பாக்கி வைத்திருக்கும் உங்கள் இறைவனை நீங்கள் அறியாமலிருப்பது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இதன் பிறகு இஸ்லாமிய “அகீதா” தொடர்பாக நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.
50 வயதை அடைந்தும் அல்லாஹ்வின் தன்மைகள் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லத் தெரியாத இவரின் காலம் வீணான காலமாகிவிட்டது.
பீற்றற்றுரித்தி தனைப் பீக்குழியை சாக்கடையை
கார்த்தேன் வளர்த்தேன் என் கண்ணே றஹ்மானே!