தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
அண்ணலெம் பெருமான், அஹ்மத் எங்கள் கோமான் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “உம்மத்” சமூகத்தின் ஈருலக நல் வாழ்வுக்காகவும் அவர்களுக்கு அல்லாஹ் அன்பளிப்பாக வழங்கிய வழிகாட்டிதான் திருமறை என்ற “அல்குர்ஆன்” ஆகும்.
திருக்குர்ஆனை “வுழூ” என்ற வெளிச் சுத்தமின்றி தொடலாகாதென்பதே இமாம்கள், அறிஞர்கள், மெய்ஞ்ஞானிகள் மற்றும் ஷெய்குமார்கள், அவ்லியாஉகள் அனைவரினதும் ஏகோபித்த முடிவாகும். நமது முன்னோர்களும் இதே கொள்கையில் வாழ்ந்தே மரணித்துமுள்ளார்கள். “வுழூ” இன்றி திருமறையை தொடுவதை முன்னோர்கள் கடுமையாக எச்சரித்துமுள்ளார்கள்.
முன்னோர்கள் திருக்குர்ஆன் பிரதிகளுக்கு துணியால் உறை செய்து போடாமல் அதை தொடவே மாட்டார்கள். அவர்கள் திருக்குர்ஆன் பிரதிகளை கையில் எடுத்தவுடன் அதை முகத்தில் வைத்து முத்தமிட்டு அருள் பெறுவதே அவர்களின் முதல் வேலையாகவும் இருந்தது.
ஆயினும் இன்று திருக்குர்ஆன் பிரதிகள் வஹ்ஹாபிகளின் கைப்பந்தாகிவிட்டது. அது இன்னும் சில காலத்தில் அவர்களின் கால் பந்தாக மாறாதென்பதற்கு எந்த ஓர் உத்தரவாதமும் கிடையாது.
நான் அறிந்த காலத்திலிருந்து திருக்குர்ஆன் பிரதிகள் படித்தவர்களாலும், படிக்காதவர்களாலும் உயரமான இடத்திலேயே வைக்கப்பட்டு வந்துள்ளன. ஆயினும் அது இன்று தரையில் தூக்கியெறியப்படுகின்றது. பழைய பேப்பர்களுடன் திருக்குர்ஆன் பழைய பிரதிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறான தரமற்ற இழி செயல்களுக்கு வழிவகுத்தவர்கள் வஹ்ஹாபிகளேயாவர்.
நாலாவது கலீபா ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
حُرُوف القرآن ثلاثمأة ألف وخمسة وعشرون ألفا وثمانية وسبعون حرفا
திருக்குர்ஆனின் எழுத்துக்கள் (325078) மூன்று இலட்சத்து இருபத்து ஐயாயிரத்து எழுபத்து எட்டு எழுத்துக்கள்.
இத்தனை நன்மையா?
ஒரு ஹர்புக்கு – எழுத்துக்கு 10 நன்மைகள் வீதம் முழுக்குர்ஆனையும் ஓதினால் 3,250,780 (முப்பத்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்து எழுநூற்றி எண்பது) நன்மைகள் கிடைக்கும்.
இலங்கை நாட்டில் ஒருவன் மரணித்தால் அவனின் ஆத்ம சாந்தியை கருத்திற் கொண்டு “மையித்” மரணித்தவனின் உறவினர்கள் அவன் பெயரால் திருக்குர்ஆன் முழுவதையும் உலமாஉகளைக் கொண்டு ஓதி அதன் நன்மையை மரணித்தவனுக்கு “ஈஸால்” சேர்த்து வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
அன்று அந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட உறவினர்கள், உலமாஉகள் அனைவருக்கும் விருந்து கொடுத்து கௌரவிப்பார்கள். உலமாஉகளுக்கு அன்பளிப்பும் கொடுப்பார்கள்.
இவ்வாறு மரணித்த முதல் நாளும், மூன்றாம், ஏழாம், பதினைந்தாம், முப்பதாம், நாற்பதாம் நாட்களிலும் நடைபெறும். ஒவ்வொருவரும் தமது பொருளாதார வளர்ச்சிக்கேற்ப செய்து கொள்வார்கள். பிறகு ஒவ்வொரு வருடமும் வருட கத்தம் என்று செய்து கொள்வார்கள்.
முஸ்லிம்கள் இலங்கை நாட்டில் கால்பதித்த நாள் முதல் அவர்கள் மேற்கண்டவாறே செய்துள்ளனர்.
ஆயினும் வஹ்ஹாபிஸம் என்ற கொரோனா எப்போது வந்ததோ அன்று முதல் மேற்கண்ட நற் செயல்கள் யாவும் “ஷிர்க்” என்றும், “குப்ர்” என்றும், “பித்அத்” என்றும் பொது மக்கள் மத்தியில் கூறப்பட்டு மக்கள் திசை திருப்பப்பட்டனர். நாள் செல்லச் செல்ல வஹ்ஹாபிகளின் வழிகேடு பரவி அதிகமானோர் வழி கெட்டுப் போயினர்.
ஆயினும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வேரூன்றிப் போன வயோதிபர்களும், அறிவுள்ள மக்களும், ஆய்வாளர்களும் தடம் புரளாமல் தமது கொள்கையிலேயே வாழ்ந்து வருகின்றனர். வஹ்ஹாபிகள் தமக்கு ஆதரவாக மக்களை ஒன்று சேர்ப்பதற்காக குர்ஆன் வசனங்களையும், நபீ மொழிகளையும் தலை கீழாய்ப் புரட்டி பேசி வருகின்றனர்.
இலங்கை நாட்டின் சில பகுதிகளில் பின்வருமாறும் ஒரு வழக்கமுள்ளது. அதாவது மரணித்த ஒருவரின் ஆத்ம சாந்திக்காக, அல்லது உயிரோடுள்ளவரின் மறுமை வாழ்வுக்காக திருக்குர்ஆன் 30 பாகங்களையும் 40 தரம் – அதாவது 1200 பாகங்கள் ஓதி குறித்த நபருக்கு அதன் நன்மையை சேர்த்து வைத்தல். இவ்வாறு செய்வதை “பெரிய கத்தம் ஓதுதல்” என்று சொல்வார்கள்.
ஒருவரால் 1200 பாகங்களையும் ஓதி முடிக்க முடியாதாகையால் ஐந்து மௌலவீமார்களிடம் இதை ஒப்படைத்து விடுவார்கள்.
ஓதி முடிந்த பின் ஒரு நாளில் தமாம் – முடிக்கும் நிகழ்வு நடைபெறும். அன்று மரணித்தவரின் உறவினர்கள், மௌலவீமார், மற்றும் அயலவர்கள் அழைக்கப்பட்டு விருந்து வைபவம் ஒன்று நடைபெறும்.
அன்று அரிசி மா ரொட்டி, தேங்காய், அரிசி என்பன ஏழைகளுக்கு மரணித்தவர் பெயரால் வழங்கப்படும்.
மரணித்தவரின் ஆத்ம சாந்திக்காக நடைபெறுகின்ற மேற்கண்ட நிகழ்வுகளின்போது நன்மைகள் மட்டும்தான் நடைபெறுமேயன்றி மார்க்கத்திற்கு முரணான எந்தவொரு செயலும் நடைபெறமாட்டா.
வஹ்ஹாபிகள் மேற்கண்ட இந் நிகழ்வையும், பொதுவாக மரணித்தவர்களுக்காக திருக்குர்ஆன், யாஸீன் அத்தியாயம் போன்றவை ஓதுவதையும், அவற்றின் நன்மைகளை மரணித்தவர்களுக்கு சேர்த்து வைப்பதையும் கடுமையாக மறுப்பர். மறுப்பது மட்டுமன்றி இவையாவும் “ஷிர்க்”, “பித்அத்” என்றெல்லாம் கொக்கரிப்பர்.
வஹ்ஹாபிகள் இதற்குக் கூறும் காரணம் இவ்வாறு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் செய்யவில்லை என்பதும், وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَى என்ற திரு வசனத்திற்கு தமது மன இச்சைக்கேற்றவாறு “ஒருவனுக்கு இன்னொருவர் செய்கின்ற நன்மை சேராது” என்று கண்ணை மூடிக் கொண்டு பொருள் கொண்டதுமேயாகும். வஹ்ஹாபிகளின் இந்த ஆட்சேபனைக்கு “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற நூலில் விளக்கம் கூறியுள்ளோம். தேவையானோர் அங்கு கண்டு கொள்ளலாம்.
عن ابن عباس قال: جَمِيْعُ آيِ الْقُرْآنِ سِتَّةُ آلَافِ آيَةٍ وَسِتُّمِأَةِ آية وسِتُّ عشرة آية،
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். (திருக்குர்ஆனின் வசனங்கள் 6616 – ஆறாயிரத்து அறுநூற்றுப் பதினாறு) என்று கூறியுள்ளார்கள். இதற்கு மாறாக 6666 வசனங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனின் “ஹர்பு” எழுத்துக்களின் எண்ணிக்கை ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் சொற்படி 325078 என்று மேலே சொன்னோம். ஆயினும் இதிலும் கருத்து வேறுபாடு உண்டு. இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் சொற்படி
وجميع حروف القرآن ثلاثمأة ألف حرفٍ وثلاثة وعشرون ألف حرف وستّمأة حرف وأحدٌ وسبعون حرفا (الموسوعة القرآنيّة)
323,671 எழுத்துக்களாகும். இவர்களின் கூற்றுப்படி ஓர் எழுத்துக்கு பத்து நன்மைகள் வீதம் முழுக்குர்ஆனையும் ஓதினால் 3,236,710 (முப்பத்து இரண்டு இலட்சத்து முப்பத்து ஆறாயிரத்து எழுநூற்றிப் பத்து) நன்மைகள் கிடைக்கும்.
திருக்குர்ஆனின் வசனங்கள் எத்தனை? எழுத்துக்கள் எத்தனை? என்பதில் கருத்து வேறுபாடு காணப்பட்டாலும் இதற்குத் தீர்க்கமான முடிவை இலங்கை நாட்டின் உலமாஉகளின் மகா சங்கமான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவால் தமக்கு தீர்க்கமான முடிவு கூற முடியாதென்று பகிரங்கமாக அறிவித்தால் எமது ஸூபிஸ உலமா சபை பதில் கூறும்.
திருக்குர்ஆனின் வசனங்கள் எத்தனை? எழுத்துக்கள் எத்தனை? என்று தீர்க்கமான ஒரு முடிவு அவசியம். இன்றேல் பிற மதத்தவர்களின் நகைப்புக்கு முஸ்லிம்கள் ஆளாகிவிடுவர்.
இதேபோல் “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்” என்ற திருமறை வசனத்தின் எண்ணிக்கை குறித்தும் தீர்க்கமான முடிவையும் மகா சங்கமே பொறுப்பேற்றுக் கூற வேண்டும். அல்லது எமது சபை கூறும்.
முன்னோர்களில் அநேகர் “பிஸ்மில்லாஹ்” எழுதுவதற்குப் பதிலாக 786 எண்களை எழுதுவர். நமது அப்பாமார், பாட்டன்மார் தமது உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போது இந்த எண்களை (786) கடிதத்தின் மேற்பகுதியில் எழுதி வந்துள்ளார்கள். இவ்வாறு செய்தல் சரியா? பிழையா? என்பதை பொது மக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பையும் மகா சங்கமே பொறுப்பேற்க வேண்டும். தவறினால் நாம் விடை சொல்வோம்.
முன்னோர்களிடம் பின்வரும் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது ஒருவர் இன்னொருவருக்கு கடிதம் எழுதி அதை தபால் மூலம் அனுப்புவதாயின் அந்தக் கடித உறையின் மேற்பக்கம் قِطْمِيْرْ – “கித்மீர்” என்ற சொல்லை எழுதியனுப்புவார்கள். இவ்வாறு செய்தல் அக்கடிதம் தவறில்லாமல் பாதுகாப்பாக உரியவனுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகும்.
முன்னோர்களான முஸ்லிம்களிற் பலர் இவ்வாறு செய்ததற்கு ஓர் அடிப்படை உண்டு. அதாவது திருக்குர்ஆனில் “கஹ்ப்” குகை அத்தியாயத்தில் கூறப்பட்ட “அஸ்ஹாபுல் கஹ்ப்” குகைவாசிகள் 07 பேர்களும் ஜோர்தான் நாட்டிலுள்ள குகை ஒன்றில் 309 ஆண்டுகள் தொடரான உறக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் சாப்பிடவுமில்லை, குடிக்கவுமில்லை, குளிக்கவுமில்லை. இவர்களின் பாதுகாப்புக்காக அல்லாஹ் ஒரு நாயை நியமித்தான். அது 309 வருடங்கள் தொடராக விழித்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டே இருந்தது. அந்த நாயின் பெயர்தான் “கித்மீர்” என்பதாகும்.
எனவே, இதன் நினைவாக பாதுகாப்புக் கருதி இப் பெயரை கடிதங்களில் எழுதியனுப்பும் வழக்கம் முஸ்லிம்களுக்கிடையில் இருந்து வந்தது.
வந்ததும் வந்தார்கள் புனித இஸ்லாம் மார்க்கத்தை சரியாகப் புரிந்த வஹ்ஹாபிஸ மகான்கள். இறைவனை நினைவூட்டிக் கொண்டிருந்த அனைத்துச் சின்னங்களையும் “பித்அத்”, “ஷிர்க்” என்ற பெயர்களால் அழித் தொழித்தார்கள். தரைமட்டமாக்கினார்கள்.
பிஸ்மில்லாஹ் என்ற வசனத்திற்குப் பதிலாக 786 என்ற எண்களை எழுதுவது “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்” என்று தமிழிலோ, அறபியிலோ எழுதுவதற்கு ஈடாகுமா? என்று அறிவதை விட இவ்வாறு எழுதுவது “ஷிர்க்” அல்லது “பித்அத்” ஆகுமா? என்பதை அறிவது முக்கியமானதாகும்.
அல்லாஹ்வையும், இஸ்லாமிய சின்னங்களையும் கறையான் மரத்தை அரிப்பது போல் அரித்தரித்து இறுதியில் இஸ்லாமை அறுக்கவும், அரிக்கவும் வந்த சுண்டெலிக் குஞ்சுகளைப் பயந்து செயல்படுவோம்.
(இப்பதிவை வாசிக்கும் சகோதர, சகோதரிகள் எனது உடல் நலத்திற்காகவும், என் உள்ளத்திலுள்ள தேவைகள் நிறைவேறுவதற்காகவும் அல்லாஹ்விடமும், அவன் நேசர்களிடமும் கையேந்துமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்)