Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மௌலானா ஜலாலுத்தீன் ரூமீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் பீஹி மாபீஹி எனும் ஞானப் பேழையிலுருந்து

மௌலானா ஜலாலுத்தீன் ரூமீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் பீஹி மாபீஹி எனும் ஞானப் பேழையிலுருந்து

தொகுப்பு : சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) அவர்கள்

ஹக்கு தஆலா மனிதனை தன்னை அறிந்தவனாக ஆக்கிய போது அவன் தனது உள்ளமை எனும் (விண்வெளி ஆராய்ச்சிக்) கருவியில் இறை (தஜல்லீ ) வெளிப்பாட்டையும் அவனது அழகையும் வினாடிக்கு வினாடி காட்சியாக காண்பவனாக ஆகிவிட்டான்.
//பீஹி மாபீஹி பக்கம் -39//


இறை சன்னிதியில் இரண்டு “நான்” களுக்கு இடமில்லை. நீயும் “நான்” என்று கூறுகிறாய். அவனும் “நான்” என்று கூறுகிறான். ஒன்றோ அவனுக்கு முன்னால் நீ மரணிக்கவேண்டும் . அல்லது உனக்கு முன்னால் அவன் மரணிக்கவேண்டும். அப்போது தான் இருமை இல்லாமல் போகும். தூய்மையான அவன் மரணிப்பது என்பது அசாத்தியமானது. அவன் நித்திய ஜீவன். அவன் மிக்க அன்பும் உட்கிருபையும் உடையவன். அவன் மரணிப்பது சாத்தியம் என்றிருந்தால் இருமை நீங்குவதற்காக உனக்காக அவனே மரணித்திருப்பான்.
// பீஹி மாபீஹி பக்கம் -58,59//


வஸ்துக்கள் அனைத்தும் திரைகளாகும். மனிதர்கள் இவ்வுலகிலிருந்து சென்று திரைகளின்றி அரசனை (இறைவனை) காண்கின்ற போது இந்த வஸ்துக்கள் அனைத்தும் திரைகள் என்பதை அறிந்து கொள்வார்கள். யதார்த்தத்த்தில் அவர்களால் தேடப்பட்டவன் அந்த ஒருவன் மட்டுமே.
// பீஹி மாபீஹி பக்கம் -71 //


ஹக்கு தஆலா (வஸ்துக்கள் எனும்) திரைகளை நன்மைக்காகவே படைத்துள்ளான். ஹக் தஆலாவின் அழகு திரையின்றி வெளியானால் அதை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் எங்களிடமில்லை. அதைக் கொண்டு நாம் இன்புறவும் முடியாது.
இந்த திரைகளின் மூலமே உதவியையும் பிரயோசனத்தையும் பெறுகின்றோம்.
சூரியன் தூரத்தில் இருப்தனால்தான் அதன் ஒளியில் நாம் நடக்கின்றோம். அழகானதையும் அசிங்கமானதையும் வேறுபடுத்தி அறிந்து கொள்கின்றோம். அதன் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்கின்றோம். அதன் வெப்பத்தினால் மரங்களும் தோட்டங்களும் கனிவர்க்கங்களை தருகின்றன. அதன் வெப்பத்தினால் கசப்பான காய்களும் இனிமையான பழங்களாக மாறுகின்றன. அதன் தாக்கத்தினால் தங்கமும் வெள்ளியும் மாணிக்கமும் வெளிவருகின்றன.
சூரியன் தூரத்தில் இல்லாமல் மிக அருகில் வந்துவிட்டால் எந்த பயனும் பெற முடியாது. அகிலமும் படைப்புகள் அனைத்தும் எரிந்துவிடும். எதுவும் எஞ்சியிருக்காது.
// பீஹி மாபீஹி பக்கம் -72 //


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறை காட்சியில் மூழ்கிய வேளையில் பேசியபோது “அல்லாஹ் கூறினான்” என்று சொல்வார்கள். வெளித் தோற்றத்தில் அவர்களின் நாவு தான் பேசியது. ஆனால் அவர்கள் இருக்க வில்லை. யதார்த்தத்த்தில் பேசியவன் ஹக்கு தஆலாதான்.
// பீஹி மாபீஹி பக்கம் -78//


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள், நபிமார்களைப்பற்றி பேசினார்கள். உலக முடிவு வரை நடைபெறும் விடயங்களைப் பற்றியும் பேசினார்கள். அர்ஷ், குர்ஸீ மற்று முள்ள ஆரம்ப படைப்புகளைப் பற்றியும் பேசினார்கள். புதிதாக படைக்கப்பட்ட ஒருவர் இவ்வாறான முன்னைய படைப்புகளைப் பற்றி பேசமுடியாது. எனவே பேசியது அவர்கள் அல்ல. ஹக்கு தஆலாதான் பேசினான்.
அவர்கள் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
அது அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. 53 :03

// பீஹி மாபீஹி பக்கம் -78 //


** “அனல் ஹக்” நானே மெய்ப்பொருள் என்பது வலுப்பமான வாதம் என மனிதர்களில் சிலர் நினைக்கின்றனர். யதார்த்தத்தில் அது வலுப்பமான பணிவு. “அன அப்துல் ஹக்” நான் ஹக்கின் (மெய்ப்பொருளின்) அடியான் என்று சொல்பவன் “நான்” என்றும் “அல்லாஹ்” என்றும் இரண்டு உள்ளமைகளை தரிபடுத்துகிறான்.
“அனல் ஹக்” நானே மெய்ப்பொருள் என்று சொல்பவன் தன்னை அழித்து காற்றிடம் ஒப்படைத்து விட்டான்.
“அனல் ஹக்” என்பதன் பொருள் நான் இல்லாதவன், நான் மொத்தமாக இல்லாதவன், நான் ஒரு வஸ்துவும் அல்ல. எல்லாம் அவனே, அல்லாஹ்வுக்கு வேறான உள்ளமை இல்லை.
// பீஹி மாபீஹி பக்கம் -83//


** ஒவ்வொரு நாளிலும்(ஒவ்வொரு கணப் பொழுதிலும்) அவன் ஒரு காரியத்திலேயே (தஜல்லீ – வெளிப்பாட்டிலேயே) இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 55:29)
அவன் (அல்லாஹ்) ஆயிரம் முறை தஜல்லீ – வெளிப்பட்டாலும் அவனது ஒரு வெளிப்பாடு மற்றய வெளிப்பாட்டுக்கு ஒப்பாகாது. நீ இந்த வினாடியும் அல்லாஹ்வை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றாய். ஒவ்வொரு வினாடியும் அவனது சுவடுகளிலும் அவனது செயல்களிலும் பல்வேறு தோற்றங்களாக நீ அவனைக் காண்கின்றாய். அவனது செயல்களில் ஒன்று மற்ற செயலுக்கு ஒப்பாகாது. மகிழ்ச்சியான நேரத்தில் ஒரு தஜல்லீ –வெளிப்பாடு. கவலையான நேரத்தில் மற்றொரு வெளிப்பாடு. பயமான நேரத்தில் மூன்றாவது வெளிப்பாடு. ஆதரவுவைக்கும் நேரத்தில் நான்காவது வெளிப்பாடு. ஹக் தஆலாவின் செயல்களும் அவனது செயல்களின் வெளிப்பாடுகளும் ஒன்றுக்கொன்று மிக வித்தியாசமானவை. ஒன்று மற்றதற்கு ஒப்பாகாது. அவனது செயல்களின் வெளிப்பாடுகள் போல் அவனது தாத்- உள்ளமையின் வெளிப்பாடுகளும் ஒன்றுக்கொன்று மிக வித்தியாசமானவை. நீயும் அவனது குத்றத்தின் ஒரு பகுதிதான். ஒவ்வொரு வினாடியும் நீ ஆயிரம் தோற்றங்களை அணிந்துகொள்கின்றாய். நீ ஒன்றில் நிலைத்திருப்பதில்லை,
// பீஹி மாபீஹி பக்கம் -173//

** “லாஇலாஹ இல்லல்லாஹ்” “அல்லாஹ்வுக்கு வேறான நாயன் இல்லை” என்பது பொது மக்களின் நம்பிக்கை. “லாஹுவ இல்லா ஹூ” அவனுக்கு வேறான அவனில்லை என்பது விஷேடமானவர்களின் நம்பிக்கை.
கனவில் ஒருவன் தான் அரசனாக சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதையும் தன்னைச் சூழ அதிகாரிகளும் பணியாளர்களும் நிற்பதையும் காண்கின்றான். இதன்போது “நானே அரசன் என்னைத்தவிர வேறு அரசன் இல்லை” என்று கனவில் கூறுகிறான். கனவிலிருந்து விழித்தபோது வீட்டில் தன்னைத்தவிர யாரையும் அவன் காணவில்லை. இப்போது “நான், என்னைத்தவிர யாருமில்லை” என்று கூறினான். இதற்குத்தான் விழிப்பு நிலை அவசியமாகின்றது. தூக்கத்தில் இந்த உண்மையை காணமுடியாது.
// பீஹி மாபீஹி பக்கம் -176 //


** ஹக் தஆலா அபூயஸீத் அல்பிஸ்தாமீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் “அபூயஸீதே நீ எதை நாடுகிறாய்” என்று கேட்டான். அதற்கவர்கள் “நான் நாடாமல் இருக்க நாடுகிறேன்” என்றார்கள். மனிதனுக்கு இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று எதையாவது நாடுவான் அல்லது எதையும் நாடமாட்டான். எதையும் எப்போதும் நாடாமல் இருப்பது சாதாரண மனிதனின் தன்மை அல்ல. அவ்வாறு எதையும் எப்போதும் நாடாமல் இருப்பதாயின் தான் முற்றாக அழிந்தவனாகவே இருப்பான். அவன் அழியாதவனாக இருந்தால் எதையாவது நாடும் தன்மை அல்லது எதையும் நாடாமல் இருக்கும் தன்மை அவனில் இருந்துகொண்டே இருக்கும். ஆயினும் இரண்டென்ற நிலையும் பிரிவினை நிலையுமற்ற முழமையான ஒன்றித்த பூரண குருநாதராக அபூயஸீத் அல்பிஸ்தாமீ றஹிமஹுல்லாஹ் அவர்களை பூரணப்படுத்த ஹக் தஆலா நாடினான். நீ ஒரு வஸ்துவை நாடும்போதுதான் உனக்கு வேதனை – வலி ஏற்படுகின்றது. நீ எதையும் நாடாவிட்டால் உனக்கு எந்த வேதனையும்- வலியும் இல்லை
// பீஹி மாபீஹி பக்கம் -192 //

மன்ஸூர் அல்ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்களின் இறைகாதல் எல்லையை அடைந்தபோது தன்னை அழித்து தனக்கு விரோதியானார்கள்.
“அனல் ஹக்” நானே மெய்ப்பொருள் அதாவது நான் அழிந்துவிட்டேன் ஹக் தஆலாவே நிலைபெற்றுள்ளான் என்று சொன்னது அடிமைத்தனத்தினதும் பணிவினதும் முடிவாகும். அவன் மட்டுமே இருக்கின்றான் என்பதே இதன் அர்த்தமாகும்.
“நீ அல்லாஹ், நான் அடியான்” என்று சொல்லும்போது அற்கு பெருமையும் வாதாட்டமும் உண்டாகின்றது. இவ்வாறு சொல்லும்போது நீ இருப்பதாக தரிபடுத்துகிறாய் இதன்போது இரண்டு என்ற நிலை வலியுறுத்தப்படுகிறது.
“ஹுவல் ஹக்” – அவன் மெய்ப்பொருள் என்று நீ சொன்னாலும் அங்கும் இரண்டு என்ற நிலை இருக்கிறது. நான் என்பது மட்டும் இருந்தால் அவன் என்பது அசாத்தியமானது. எனவேதான் ஹக் தஆலா “அனல் ஹக்” நானே மெய்ப்பொருள் என்று சொன்னான். ஏனெனில் அவன் அல்லாது இருக்கவில்லை. மன்ஸூர் அல்ஹல்லாஜ்(றஹிமஹுல்லாஹ்) அழிந்துவிட்டார் அது ஹக் தஆலாவின் பேச்சு.
// பீஹி மாபீஹி பக்கம் -277//

RELATED ARTICLES

Most Popular

Recent Comments