قولُ الصوفي : ما في الوجود الا الله
“வுஜுத்”இல் அல்லாஹ் தவிர வேறு இல்லை! இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வே!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
سَمَّى اللهُ القُرآنَ ذِكرًا ، وفيه أسماءُ الشّياطِينِ والمَغْضُوْبِ عليهم، والمُتَلَفَّظُ به يُسَمَّى ذِكْرَ الله، فإنّه كلامُ الله، وهذا ممّا يؤيِّد قول ليس في الوجود الّا الله،
( شرح كلمات الصوفيّة ، من كلام شيخ الأكبر ، ص ٣٩١)
இருப்பவை யாவும் அல்லாஹ்தான் அவனன்றி வேறொன்றுமில்லை. என்பது ஸூபீ மகான்களின் தத்துவம். “பாதின்” உள்ரங்க அறிவு ஞானம் உள்ள மகான்களுக்கு இது சாதாரண பேச்சு. “ளாஹிர்” வெளிரங்க அறிவு மட்டும் உள்ளவர்களுக்கு இது தலையில் விழுந்த பேரிடி.
கடந்த காலத்தில் இத்தத்துவத்தைச் செவியேற்ற கதிரையிலிருந்த ஒரு மௌலவீ தரையில் விழுந்து தலை வெடித்து பல நாட்கள் மருத்துவமனையில் இருந்து சுகம் பெற்றதற்கும் வரலாறு உண்டு. வரலாறு நீண்டது. சொன்னால் அவரின் பெயரையும் எழுத வேண்டும். அதை எழுதினால் அவரைக் காண்பவர்கள் நையாண்டி செய்வார்கள். ஆகையால் அவர் மீது நான் இரங்கி எழுதவில்லை. “ளாஹிர்” உடைய உலமாஉகள் சிறிய சலசலப்புக்கே பயந்து போவர். “பாதின்” உள்ரங்க அறிஞர்களோ பனங்காட்டு நரிகள். அவர்கள் எந்த ஒரு சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்கள். தலை வெடித்த மௌலவியோ மத்ரஸா காலத்தை வீணாக்கிய ஒருவர். இப்படியான இடி விழுந்தால் சகித்துக் கொள்ள மாட்டார். நல்ல காலம் அவர் மோட்டார் வாகனத்தில் செல்லும் போது கேட்டிருந்தால் அவரே வெடித்திருப்பார் போலும். அல்லாஹ் காப்பாற்றி விட்டான்.
இருப்பவை யாவையும் அல்லாஹ்வாக பார்ப்பதும், அல்லாஹ் என்று விளங்கிக் கொள்வதுமே சரியான “அகீதா” கொள்கையும், நம்பிக்கையுமாகும். இதுவே வணக்கங்களில் சிறந்ததுமாகும். “வுழூ” என்ற வெளிச்சுத்தமின்றியும், சுவாசிப்பது போல் எண்ணாமலும், நாடாமலும், உறக்கத்திலும் விழிப்பிலும், மற்றும் 24 மணி நேரத்திலும், இலகுவாக செய்யக் கூடிய அமல் – வணக்கமும் இதுவேதான்.
மேலும் والذّاكرين الله كثيرا والذاكرات அல்லாஹ்வை அதிகம் “திக்ர்” நினைக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அல்லாஹ் ஆயித்தப் படுத்திய பாவமன்னிப்பையும், பெருங்கூலியையும் பெற்றுக் கொள்வதற்கான வழியும் இதுவேதான்.
أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
அல்லாஹ் அவர்களுக்காக பாவமன்னிப்பையும், வலுப்பமான கூலியையும் ஆயித்தம் செய்து வைத்துள்ளான்.
(திருக்குர்ஆன் – 33 – 35)
திருக்குர்ஆனுக்கு அல்லாஹ் “திக்ர்” என்று அதிலேயே பெயர் வைத்துள்ளான்.
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
நிச்சயமாக நாங்கள் “திக்ர்” என்னும் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதை பாதுகாப்பவர்கள்.
(திருக்குர்ஆன் – 15 – 09)
இந்த வசனம் திருக்குர்ஆனை “திக்ர்” என்று சொல்கிறது. முஸ்லிம்களில் அநேகர் திருக்குர்ஆனுக்கு “திக்ர்” என்று சொல்வதில்லை. இதற்கு காரணம் அறிவின்மையேயாகும்.
திருக்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் பேச்சு. அது كلام الله – என்றும் சொல்லப்படும். திருக்குர்ஆன் வசனங்கள் எத்தனை என்பதில் இன்னும் தீர்க்கமான, இரண்டாம் அபிப்பிராயத்துக்கு இடமில்லாத ஒரு முடிவு எட்டப்படவில்லை.
நான் சிறுவனாயிருந்த காலத்திலிருந்து இன்று வரை திருக்குர்ஆன் வசனங்கள் மொத்தம் 6666 என்று சொல்லப்பட்டுவருகிறது. இந்தக் கணக்கு யாரால் எப்போது சொல்லப்பட்ட தென்பதற்கு என்னிடம் ஆதாரமில்லை எனினும் நான் சிறுவனாயிருந்த காலம் முதல் இன்று வரை இவ்வாறே சொல்லப்பட்டு வருகிறது.
நபீ தோழர் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னதாக ஒரு தகவல் உண்டு. இதற்கு ஆதாரம் என்னிடமுண்டு.
عن ابن عباس قال (جميعُ آيِ القُرْآنِ سِتَّةُ آلافِ آيةٍ وسِتُّمِأةِ آيةٍ وسِتَّ عشرَةَ آيةً، وجميعُ حُروفِ القرآن ثَلَاثُمِأَةِ اَلفِ حرفٍ وثلاثةٌ وعشرُونَ ألف حرفٍ وسِتُّمأةِ حرفٍ وأحدٌ وسَبعونَ حَرْفًا)
( الموسوعة القرآنية)
திருக்குர்ஆன் வசனங்கள் 6616ஆகும். எழுத்துக்கள் 323,671 ஆகும். இந்தப் பதிவின்படி 50 வசனங்கள் குறைவான கணக்காகும். எழுத்துக்களின் எண்ணிக்கையில் இரண்டாம் கருத்தை நான் காணவில்லை. அனைவரும் ஒரே மாதிரியே கூறுகின்றனர். தேவையாயின் எண்ணித்தான் பார்க்க வேண்டும்.
(ஆதாரம் – அல்மவ்ஸூஅதுல் குர்ஆனிய்யா)
இத்தகவலின் படி “குர்ஆன்” என்றும், அல்லாஹ்வின் பேச்சு என்றும் சொல்லப்படுவது 6616 வசனங்களேயாகும். அதுவே كلامٌ قديمٌ பூர்வீகமானது. அதாவது படைக்கப்படாதது என்று நம்புதல் ஈமான் – விசுவாசத்தில் ஓர் அங்கமாகும்.
ஆனால் இன்று விபரம் தெரியாத மக்கள் குர்ஆன் என்பது குறித்த வசனங்கள் அச்சிடப்பட்ட தாள்களைக் கொண்டு கோர்த்துக் கட்டப்பட்டதென்று நினைக்கிறார்கள் போலும். அது முஸ்ஹப் – مصحف என்றுதான் சொல்லப்படும். ஆயினும் மக்கள் வழக்கிலும், நடைமுறையிலும் அது “குர்ஆன்” என்று சொல்லப்படுகிறது. ஒருவர் இன்னொருவரிடம் அந்த குர்ஆனை எடு என்று தான் சொல்வாரே தவிர “முஸ்ஹபை” எடு என்று சொல்வதில்லை, இவ்வாறு சொல்வதை தவறு என்று நான் கூறவில்லை, எனினும் எவருமே தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாதென்பதற்காக இங்கு இவ்விபரம் எழுதினேன்.
இப்போது தலைப்பின் விபரத்தை கூறுகிறேன். திருக்குர்ஆனில் ஷெய்தான்கள், யஹுதிகள், நஸாறாக்கள், பிர்அவ்ன், நாய், பன்றி, மலை, கடல், இவை போன்ற மற்றும் எத்தனையோ படைப்புக்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒருவன் திருக்குர்ஆன் ஓதும் போது மேற்கண்ட படைப்புக்களின் பெயர்களைக் கூறுகிறான். மொழிகிறான். இவற்றை மொழிவதால் ஓர் எழுத்துக்கு பத்து நன்மை வீதம் ஷெய்தான் شيطان என்று ஒருவன் மொழியும் போது அவனுக்கு 50 நன்மைகளும், “பிர்அவ்ன்” என்று மொழியும் போது அவனுக்கு அதே போல் 50 நன்மைகளும், كلب “நாய்” என்று மொழியும் போது 30 நன்மைகளும், خنزير “பன்றி” என்று மொழியும் போது 50 நன்மைகளும் கிடைக்கின்றன.
திருக்குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மை வீதம் 323,671 எழுத்துக்களுக்கும் 3,236,710 (முப்பத்து இரண்டு இலட்சத்துமுப்பத்து ஆறாயிரத்து எழு நூற்றுப் பத்து) நன்மைகள் கிடைக்கின்றன.
இப்பதிவின் சுருக்கம் என்னவெனில் குர்ஆனை – அல்லாஹ்வின் பேச்சை அல்லாஹ்வின் “கலாம்” பேச்சென்று சொல்லப்படுவதினாலும், ஓர் எழுத்துக்கு பத்து நன்மை வீதம் மேற்கண்ட நன்மைகள் கிடைப்பதினாலும் அல்லாஹ் பன்றி என்று சொன்னதால் அதை நாமும் அவ்வாறே சொல்லும் போது 50 நன்மைகள் நிச்சயமாக கிடைப்பதால் அல்லாஹ் திருக்குர்ஆனை “திக்ர்” என்று சொல்லியுள்ளதில் எண்ணற்கரிய தத்துவங்கள் மறைந்தும், புதைந்தும் உள்ளன என்பது தெளிவாகிறது எனவே பன்றியும், நாயும், மற்றுமுள்ள அனைத்துப் படைப்புக்களும் அல்லாஹ்வுக்கு வேறுபடாத அவனின் வெளிப்பாடுகள் என்பதை நம்ப வேண்டும். இதற்கு மாறாக எவனாவது சொல்வானாயின் அவனும் அப்புஹாமியும், அருணாச்சலமும், அல்பிரட்டும் ஒரு நூலில் கோர்க்க வேண்டியவர்களேயாவர்.
திருக்குர்ஆனில் மேற்சொன்னவாறு சுத்தமான, அசுத்தமான படைப்புக்கள் கூறப்பட்டிருக்கும் நிலையில் அவையாவும் சேர்ந்து மொத்தமாக அல்லாஹ்வின் பேச்சு என்று சொல்வதன் மூலம் சர்வ சிருட்டிகளும் அவன்தான் என்பதை இத்தத்துவம் சுட்டிக் காட்டுவது சிலரின் தலைக்கு ஏறாமலிருப்தேனோ!
இந்த அடிப்படையில் நமது ஆய்வை விரித்தால் தொழுகையில் அறபு தெரிந்த ஒருவன் குர்ஆனை ஓதும் போது உலகிலுள்ள பல்லாயிரம் படைப்புகள் பற்றி அவன் நினைக்க வேண்டுமல்லவா? இது எவ்வாறு சாத்தியமாகும். இதன் படி தொழுகையில் அல்லாஹ்வின் நினைவிலேயே இருக்க வேண்டுமென்பதும் எவ்வாறு சாத்தியமாகும்?!