தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
மான் குட்டி மஸ்தான்.
இவர் ஒரு மான் குட்டியோடு காத்தான்குடிக்கு புதிதாக வந்தார். எங்கிருந்து இங்கு வந்தார்? என்பது எவருக்கும் தெரியாது. அவருடன் எவர் பேசினாலும் பேசமாட்டார். சில நேரம் அவர் விரும்பினால் மட்டும் விரும்பியவர்களுடன் பேசுவார்.
இவர் காத்தான்குடி பிரதான வீதி ஆரையம்பதியிலிருந்த காஸிம் ஹாஜியாரின் அரிசி ஆலைக்கு பக்கத்தில் மர முந்திரிகை தோட்டத்தில் தன்னந்தனியாக ஓலைக் குடிசையொன்றில் வாழ்ந்து வந்தார். அங்கு ஒரு மானும் அவர் வளர்த்து வந்தார்.
அக்காலத்தில் வாழ்ந்த இறை வணக்கத்தோடு தொடர்புள்ள காத்தான்குடியைச் சேர்ந்த சில வயோதிபர்கள் அவர் ஞான வழி நடக்கின்ற ஒரு மஸ்தான் என்பதையும், ஒரு ஸூபீ என்பதையும் அறிந்து அவரைச் சந்திக்கச் சென்றனர். அவரும் இவர்களை ஆதரித்து இறை ஞானம் பேசத் தொடங்கியதால் இவர்கள் தினமும் “அஸ்ர்” தொழுகையின் பின் சென்று இஷா தொழுகையுடன் திரும்பி வருவார்கள். மஸ்தான் சில நாட்களில் பேசுவார். சில நாட்களில் மௌனியாகிவிடுவார். அவர் ஒரு ஞானி என்று மட்டுமே அவருடன் தொடர்பாயிருந்தவர்கள் அறிந்திருந்தனர். அவர் அதிக நேரம் மௌனியாயிருந்ததால் அவரிடமிருந்து அவரின் மேலதிக விபரங்களை அறிய முடியாமற் போயிற்று.
ஒரு நாள் “அஸ்ர்” தொழுகையின் பின் அவர் வெளியே செல்லப் புறப்பட்ட போது அவருடன் தொடர்பானவர்களும் காத்தான்குடியை நோக்கி வந்தார்கள். அவர் முன்னால் வர பின்னால் அவரின் மானும் வந்தது. அவரோடு தொடர்பானவர்களும் வந்தனர்.
மஸ்தான் நேராக அஸ்ஸெய்யித் செய்ன் மௌலானா பள்ளிவாயலுக்கு முன்னாலுள்ள மையவாடியில் அடக்கம் பெற்றுள்ள “ஆலீ அப்பா” தர்ஹாவுக்கு வந்தார். அக்காலத்தில் இவ்விடம் ஓலையால் வேயப்பட்ட சிறிய குடிசையாக இருந்தது. மஸ்தான் மூடிய கண்களைத் திறக்காமல் சிறிது நேரம் நின்ற பின், இங்கு ஓர் ஆலிம் இடுப்பில் சால்வை கட்டிய நிலையில் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று மட்டும் சொல்லிவிட்டு மௌனியாகிவிட்டார். அதனால் அவர் மூலம் அடக்கம் பெற்றுள்ளவரின் மேலதிக விபரங்களை அறிய முடியாமற் போயிற்று. மஸ்தான் சொன்ன பிறகுதான் கூடவந்தவர்களுக்கு அவர் ஆலிம் என்பது தெரிய வந்தது.
அவருடன் சென்றவர்கள் காத்தான்குடி வாசிகளாயிருந்ததால் அங்கு அடக்கம் பெற்றுள்ளவரின் விபரங்களை அறிந்து கொள்வதற்காக அவர்களை விட வயதில் மூத்தவர்களிற் பலரைக் கண்டு அவரின் விபரங்களைத் திரட்டத் தொடங்கினார்கள். அவர்கள் மூலம் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு.
அந்த மனிதர் எங்கிருந்து வந்தார் என்பது கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
அவரின் பெயர் தெரியவில்லை என்றும், அவர் ஆலிமாக இருந்ததால் மக்கள் அவரை “ஆலிம் அப்பா” என்று அழைத்து வந்தது “ஆலீ அப்பா” என்று மருவி விட்டதென்று அவர்கள் கூறினார்கள்.
ஆலிம் அப்பாவின் வரலாறு
அதை இங்கு சுருக்கமாக எழுதுகிறேன்.
ஆலிம் அப்பா அவர்கள் ஒரு நாள் ஐந்தாம் குறிச்சி ஜாமிஉள்ளாபிரீன் மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகையின் பின் மார்க்க உபன்னியாசம் செய்தார். (அக்காலத்தில் இப்பள்ளிவாயல் மீரா பள்ளிவாயல் என்று அழைக்கப்பட்டதென்பதும், தற்போது “ஜாமிஉள்ளாபிரீன்” ஜும்ஆப் பள்ளிவாயல் என்று அழைக்கப்படுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் தனது உரையில் “பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அழகிய வாலிபனின் உருவத்தில் தலையில் தங்க கிரீடமும், காலில் தங்கச் சப்பாத்தும் அணிந்தவனாக தனது “றப்”பைக் கண்டார்கள்” என்று கூறினார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அக்கால உலமாஉகள் சீறி எழுந்து அவர் மீது பாய்ந்து, நீ என்ன சொல்கிறாய்? இவ்வாறு எந்த கிதாபில் உள்ளது என்று கோபம் கொப்பளித்த நிலையிலும், கண்கள் சிவந்த நிலையிலும், உடல் நடுங்கிய நிலையிலும் கேட்டார்கள். அதற்கவர், ஒரு வாரம் தவணை தாருங்கள் என்று கேட்டார். தவணை கொடுத்த உல(க)மாக்கள் அடுத்த வாரம் ஜும்ஆவுக்குப் பிறகு விளக்கம் சொல்ல வேண்டும் என்று எச்சரித்தார்கள். ஒரு வாரம் ஒரு நாள் போல் உருண்டோடியது.
ஆலிம் அப்பா ஒழிக்கவில்லை. சொன்னபடி ஜும்ஆத் தொழுகைக்காக வழமைக்கு மாறாக பெரிய சால்வை போட்டவராக நேர காலத்தோடு பள்ளி வந்தார். அன்று பெரு மழை நாளாயிருந்தும் கூட பள்ளிவாயலில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பொடியன்மார் புழுதி கிளப்பினர்.
ஜும்ஆத் தொழுகை முடிந்தபின் ஆலிம் அப்பா எழுந்து “நான் பேசியதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் பேசியது பிழை அல்ல. அதற்கான “கிதாப்” என் கையில் இல்லை. தேடி அலைந்தேன் கிடைக்கவில்லை. கிடைத்தாற்கூட உங்களுக்கு விளக்கி வைக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. எனது இந்த சால்வையை இடுப்பில் கட்டுகிறேன். நான் மரணித்து என்னைக் குளிப்பாட்டும் போது இதை அவிழ்த்துக் குளிப்பாட்டிய பின் மீண்டும் இருந்தது போல் கட்டி விடுங்கள். நான் மறுமையில் அல்லாஹ்வைச் சந்தித்த பிறகுதான் இதை அவிழ்ப்பேன்” என்று சத்தியம் செய்தார்.
அங்கு ஒரு சில நல்லவர்கள் இருந்ததால் குழப்பமின்றிக் கூட்டம் அமைதியுடன் கலைந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
அவர் மரணித்த பின் பொது மக்களால் அவ்வாறே செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு வந்த மான்குட்டி மஸ்தான், இங்கு இடுப்பில் சால்வை கட்டிய நிலையில் ஒருவர் உறங்குகிறார் என்று குறிப்பிட்டது “ஆலிம் அப்பா” அவர்களைத்தான். ஆலிம் அப்பா நல்லடக்கம் செய்யப்பட்டு பல வருடங்களின் பின் வந்தவர்தான் மான்குட்டி மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மகான்கள் என்றும் மகான்கள்தான்.
ஆலிம் அப்பாவின் காலத்தில் நான் இருந்திருந்தால் அவருக்கு கை கொடுத்து அவரை ஆதரித்திருப்பேன். அவரை மிரட்டிய உலமாக்களுக்கு வாந்திபேதி மாத்திரை கொடுத்திருப்பேன்.
இது போன்ற ஒரு நிகழ்வுதான் எனக்கும் நடந்தது. ஆயினும் ஆலிம் அப்பாவின் காலத்திலிருந்த உலமாஉகள் சீறிப் பாய்ந்தது மட்டும்தான். அவருக்கு “முர்தத்” பத்வா கொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஹலாலான முறையில் பிறந்தவர்கள். ஹலால் குட்டிகள். ஹறாம் குட்டிகள் அல்லர்.
ஆலிம் அப்பா உறங்கும் மையவாடி பொது மையவாடியாயினும் அதை நிர்வகிப்போர் தர்ஹாவை அழகாக அமைத்து அதை “ஹயாத்” ஆக்குவார்களாயின் அவர்கள்
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
“அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துவோர் “தக்வா” உள்ளவர்கள்” என்ற திருக்குர்ஆன் வழிகாட்டலின் படி இறையச்சமுள்ளவர்கள் பட்டியலில் சேர்ந்து கொள்வார்கள்.
குறிப்பு: மான்குடிட்டி மஸ்தான் எங்கு போனார்? என்ன நடந்தது? என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
ஓர் ஊரில் ஒரு மகான் – மார்க்க மேதை அடக்கம் பெற்றுள்ளார்கள் என்பதை அறிந்தால் அவர்களின் அடக்கவிடத்தை கூட்டித் துப்பரவு செய்து சுத்தமாக வைத்திருப்பதும், அவர்களைத் தரிசிப்பதும், “பர்ழ்” போன்ற கடமை என்றால் மிகையாகாது.