தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
رقية العقرب جائزة
رقية العقرب جائزةٌ، لما روى مسلم عن جابر بن عبد الله قال: لَدَغَتْ رجلا عقرب، ونحن جُلوسٌ مع رسول الله صلى الله عليه وسلم، فقال رجل يا رسول الله! أَرْقِيْهِ قال صلّى الله عليه وسلّم ‘من استطاع منكم أن ينفع أخاه فَلْيَفْعَلْ ‘
وفى رواية فَجَاءَ آلُ عمرو بن حزم إلى النّبي صلّى الله عليه وسلّم فقالوا يا رسول الله كانت عندنا رُقْيَةٌ نَرْقَى بها من العقرب، وإنّك نهيتَ عن الرُّقَى، فقال صلّى الله عليه وسلّم أَعْرِضُوْا عليَّ رُقاكُمْ، فعَرَضُوهَا عليه، فقال صلّى الله عليه وسلّم ما أَرَى بها بأسًا من استطاع منكم أن ينفع أخاه فلينفعه،
தேள் கடிக்கு மந்திரித்தல் ஆகும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அறிவிக்கிறார்கள்.
ஒரு மனிதனை தேள் தீண்டியது. அவ்வேளை நாங்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடன் இருந்தோம். அப்போது எங்களில் ஒருவர் அல்லாஹ்வின் றஸூலே! அதற்காக நான் மந்திரிக்கலாமா? என்று கேட்டார். அதற்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உங்களில் ஒருவர் தனது சகோதரனுக்கு நன்மை செய்ய விரும்பினால் – சக்தியிருந்தால் செய்யட்டும் என்று பதில் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்
அறிவிப்பு – ஜாபிர் பின் அப்தில்லாஹ்.
இன்னொரு அறிவிப்பில் பின்வருமாறு வந்துள்ளது.
அம்றுப்னு ஹஸ்ம் கூட்டத்தினர் பெருமானாரிடம் வந்து அல்லாஹ்வின் றஸூலே! எங்களில் எவருக்காவது தேள் கடித்தால் எங்களிடமிருந்த மந்திரம் சொல்லி நாங்கள் மந்திரித்து வந்தோம். தாங்கள் மந்திரிப்பதை தடை செய்துள்ளீர்கள். நாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்கள். அப்போது நபீகட்கரசர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உங்களிடமுள்ள மந்திரத்தை எனக்குச் சொல்லுங்கள் என்றார்கள். அவர்கள் சொல்லிக் காட்டியபோது இதில் குற்றமொன்றுமில்லை. உங்களில் யாராவது தனது சகோதரனுக்கு நன்மை செய்ய முடிந்தால் செய்யட்டும் என்று அருளினார்கள்.
وَفِى رِوَايَةٍ أَعْرِضُوْا عَلَيَّ رُقَاكُمْ، مَا لَمْ يَكُن فِيْهَا شَيْئٌ،
இன்னோர் அறிவிப்பில் உங்களிடமுள்ள மந்திரத்தை எனக்குச் சொல்லிக் காட்டுங்கள். அதில் எதுவுமே இல்லையாயின் தவறில்லை என்று கூறினார்கள். (அதில் மார்க்கத்துக்கு முரணான எதுவும் இல்லையானால் அதில் குற்றமில்லை என்றார்கள்)
فَالرُّقَى جَائِزَةٌ بِكِتَابِ اللهِ أَوْ بِذِكْرِهِ، وَمَنْهِيٌّ عَنْهَا إِذَا كَانَتْ بِالْفَارِسِيَّةِ أَوْ بِالْعَجَمِيَّةِ أَوْ بِمَا لَا يُدْرَى مَعْنَاهُ، لِجَوَازِ أَنْ يَكُوْنَ فِيْهِ كُفْرٌ،
இது ஹதீது அல்ல. இறை ஞானிகளின் பேச்சு.
திருக்குர்ஆன், திக்ர் முதலானவற்றைக் கொண்டு மந்திரித்தல் ஆகுமானதாகும். மேற்கண்ட இரண்டையும் தவிர வேறு எதைக் கொண்டும் – பாரசீக மொழியிலோ, வேறு எந்த மொழியிலோ மந்திரித்தல் ஆகாது. ஏனெனில் அவற்றின் பொருள் தெரியாமற் போவதால் அதில் “குப்ர்”ஆன சொற்கள் வந்திருப்பதற்கு சாத்தியமுண்டு.
எந்த மொழியிலான மந்திரமாயினும் அதில் ஷெய்தான்கள், விக்கிரகங்களின் பெயர்கள் இருக்குமாயின் அது கொண்டு மந்திரித்தலும் கூடாது. இவையில்லாமல் ஸஹாபாக்கள், வலீமார்கள், நல்லடியார்களின் பெயர்களைக் கொண்டு மந்திரித்தல் பிழையாகாது.
தமிழ் மந்திரவாதிகளில் சிலர் உள்ளனர். வைத்தியம் செய்வதற்காக முஸ்லிம்கள் அவர்களிடம் சென்றால் விக்கிரகங்களின் பெயர்களைச் சொல்வதுடன் இடையில் முஹ்யித்தீன் ஆண்டகை என்றும் சொல்வர். இவ்வாறு அவர்கள் சொல்வது முஸ்லிம்களைக் கவர்வதற்காக என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பொதுவாக திருக்குர்ஆன் வசனங்கள், ஹதீதுகளில் வந்த வசனங்கள், அவ்லியாஉகள், இஸ்லாமியப் பெரியார்கள் ஓதிய, வைத்தியம் செய்யும் போது பாவித்த வசனங்கள் எமக்குப் புரியாது போனாலும் அவர்களை நம்பியும், முன்மாதிரியாகக் கொண்டும் நாமும் செய்யலாம். பாவிக்கலாம். இதில் தவறில்லை.
உதாரணமாக எனது தந்தை “மக்றூஹ்” ஆன விடயத்தையும், خِلَافُ الْأَوْلَى சிறந்ததல்ல என்று சொல்லப்பட்ட விடயங்களையும் கூடச் செய்யாத கடும் பக்தியுள்ள ஓர் ஆலிமும், நிகரற்ற ஓர் ஆரிபும் ஆவார்கள். இவர்கள் எந்த அளவு இறை பக்தியும், பேணுதலும் உள்ளவர்களுமென்றால் அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் எனது சகோதரிகளுக்காக மூன்று வீடுகள் கட்டினார்கள். அவ்வீடுகளுக்கு மின்சார இணைப்பு செய்தவர்கள் ஒரு வீட்டில் கூட “ப்ளக்” பாவிப்பதற்கு வழி செய்யவில்லை. என் தாயும், என் சகோதரிகளும் ரேடியோவில் ஹதீது சொன்னால் அதைக் கேற்பதற்காக மட்டும் “ப்ளக்” வைத்துத் தாருங்கள். சினிமா பாட்டு கேட்க மாட்டோம் என்று கெஞ்சிக் கேட்டும் கூட அவர்கள் இணங்கவில்லை. அவர்கள் கூறிய காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
مَنْ حَامَ حَوْلَ الْحَمَى يُوْشِكَ أَنْ يَقَعَ فِيْهِ
வரம்பில் மேயும் மாடு வயலிலும் இறங்கி மேயும். இது நபீ மொழி.
இதன் கருத்தென்வெனில் ஊசியை ஓட்ட இடம் கொடுத்தால் உலக்கையை ஓட்டுதல் போல் ரேடியோவில் ஹதீது கேட்பதற்காக மட்டும் “ப்ளக்” வசதி செய்து கொடுப்பது வரம்பில் மாடு மேய்வதற்கு அனுமதிப்பது போன்றதாகும். வரம்பில் மாடு மேய்ந்து கொண்டிருக்கும் போது அது வயலில் இற்ங்கி வயலை நாசமாக்குவது பெரிய காரியமல்ல. “ப்ளக்” வசதி செய்து கொடுத்தால் காலப் போக்கில் சினிமா பாட்டுக் கேட்கக் கூடிய சூழ்நிலை தானாகவே வந்துவிடும். அவ்வாறு வரமாட்டாதென்று சொல்வதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இன்னுமொரு விடயம். ஸெய்யிதுனா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
كُنَّا نَدَعُ سَبْعِيْنَ بَابًا مِنَ الْحَلَالِ مَخَافَةَ أَنْ نَقَعَ فِى حَرَامٍ،
ஒரு “ஹறாம்” வந்துவிடுமென்று பயந்து அது வராமலிருப்பதற்காக எழுபது “ஹலால் “ஆன விடயங்களை நாங்கள் விட்டு நடப்போம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.
உமர் நாயகத்தின் இத் தத்துவத்தையும், மேலே சொன்ன வரம்பில் மேயும் மாடு வயலிலும் மேயும் என்ற தத்துவத்தையும் ஆதாரமாக என் தந்தை கூறி “ப்ளக்” வைக்க முடியாதென்று ஒற்றைக் காலில் நின்று தனது இலட்சியத்தை சாதித்துக் கொண்டார்கள்.
என் தந்தையின் பக்தி நிலையை நான் பாராட்டுகிறேன். எனினும் இக்காலத்தைப் பொறுத்தவரை அவர்கள் வாழ்ந்தது போல் இக்கால மக்களை வாழ வைப்பது முட்டையில் மயிர் பிடுங்குவது போன்ற முடியாத காரியமாகும். நானும் தந்தை போல் நிற்க முடியாது. அவர்கள் பேணுதலில் என்னைவிடப் பல படிகள் கடந்தவர்களாவர்.
எனவே, அனாச்சாரம், அநீதி, அட்டூழியம், பொறாமை, வஞ்சகம், எரிச்சல், சதி போன்ற அசுத்தங்களை இன்று வாழும் மக்களிற் பலர் – அதிகமானோர் தமது உள்ளங்களில் இருத்தி மனம் போன போக்கில் அவர்கள் வாழ்ந்து வரும் இக்கால கட்டத்தில் மார்க்க அனுஷ்டானங்களைப் பேணி நடப்பது நெருப்புத்தணலை உள்ளங்கையில் வைத்திருப்பது போன்றதேயாகும்.
அல்லாஹ் என்னையும், அனைத்து முஸ்லிம்களையும் பாதுகாப்பானாக!
எனவே, பெரியார்கள், அவ்லியாஉகள் வைத்தியம் செய்யும் போது பாவித்த வசனங்களை நாமும் பாவிக்கலாம். அவற்றின் கருத்துக்கள் நமக்குப் புரியாது போனாலும் அவர்களை நம்பியும், அவர்களை முன்மாதிரியாகக் கொண்டும், அவர்களின் பேணுதலை அடிப்படையாகக் கொண்டும் நாமும் பாவிக்கலாம்.
எனது கட்டுரைகளை நுகர்கின்ற எவராயினும் எனக்காக ஒரு நொடி நேரம் இரு கரமேந்தமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.