தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
قال الشّيخ محي الدين ابن عربي قُدس سرّه وقد عصم الله تعالى الإسمَ ‘ الله ‘ أن يُطلق على أحد، وما عَصَمَ إطلاق لفظة ‘ إله ‘، قال تعالى ‘أفرأيت من اتّخذ إلهه هواه ‘ ولله تعالى فى ذلك سرّ يعلمه العلماء بالله تعالى، لا يُسطر فى كتاب، لأنّ الكتاب يقع فى يد أهله وغير أهله،
“அல்லாஹ்” என்ற சொல் “இலாஹ்” என்ற சொல்லின் மாறுபட்ட சொல்லேயாகும். அதாவது “அல் இலாஹ்” என்ற சொல்லில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வந்த சொல்தான் அல்லாஹ் என்ற சொல்லாகும்.
இதன் அதிசயமென்னவெனில் இச்சொல் உலக வரலாற்றில் எவருக்கும் பெயராக வைக்கப்படவில்லை. அவனே அதைப் பாதுகாத்தான். ஆயினும் அல்லாஹ் என்ற சொல்லின் மூலமான “இலாஹ்” என்ற சொல் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு பெயராக வைக்கப்பட்டுள்ளது. இதுவே அதிசயம்.
أفرأيت من اتّخذ إلهه هواه
எவர் தன்னுடைய மனோ இச்சையை தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டாரோ அவரை நீங்கள் பார்த்தீர்களா? (திருமறை 45-23)
மேலே எழுதிக் காட்டிய திருக்குர்ஆன் வசனத்தில் “ஹவா” என்ற மன ஆசைக்கு – மனவெழுச்சிக்கு “இலாஹ்” என்று அல்லாஹ்வே பெயர் வைத்துள்ளான். இத் தத்துவத்தில் ஓர் இரகசியம் உண்டு. அதை எழுத்தில் தர ஸூபிஸம் விருபம்வில்லை. ஏனெனில் எழுதினால் அது பலர் கைக்கும் கிடைக்கும். அதன் இரகசியத்தை சுமப்பதற்குத் தகுதியானவனும் இருப்பான். தகுதி இல்லாதவனும் இருப்பான். அந்த இரகசியத்தை எழுத்து வடிவில் தராமல் ஒருவர் பேச மற்றவர் கேட்டறிவதே பொருத்தமானது. ஆகையால் அது பற்றி ஸூபிஸ மேதைகளிடம் நேரில் கேட்டறிவதே சிறந்ததாகும்.
இது போன்ற இன்னும் சில விடயங்கள் உள்ளன. அவற்றையும் ஸூபிஸ ஞானத்தில் முத்திப்பழுத்த ஒரு மகானிடம் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வதே சிறந்தது. இறையியலோடு தொடர்புள்ள விடயங்களை இறைஞானிகளிடம் கேட்டுக் கற்றுக் கொள்வதே சிறந்தது. ஏனெனில் இறைஞானம் தெரியாத ஓர் ஆலிமிடம் இறைஞானம் பற்றிக் கேட்டால் அவர் தனக்குத் தெரிந்ததையே சொல்லித் தருவார். அது பிழையாக இருப்பதற்கே வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
ஒருவன் “தப்லீக் ஜமாஅத்”தில் “பனா” ஆன – அதிலேயே லயித்துப் பைத்தியம் பிடித்தவர் போன்ற ஒருவரிடம் சென்று முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, உள்ளானவனும் அவனே, வெளியானவனும் அவனே என்ற திருமறை வசனத்திற்கு விளக்கம் கேட்டானாம். அதற்கவர், அனைத்திற்கும் முந்தினவன் அவன்தான் என்றும், அனைத்திற்கும் பிந்தினவன் அவன்தான் என்றும், தனது திருக்கரத்தை விரித்துக் காட்டி வெளியானவனும் அவனே, அதைப் பொத்திக் காட்டி உள்ளானவனும் அவனே என்றாராம். ஸுப்ஹானல்லாஹ்! என்ன அருமையான விளக்கம். எங்கு சென்று இத்தகைய தத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்? கஃபாவின் உள்ளே சென்று கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் இப்படியொரு ஞானம் கிடைக்குமா? அவர் நல்ல மனிதன்தான். என்ன செய்யலாம்? அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஆதிபிதாவை நினைத்தால் அவர் யாரென்று தெரிந்துவிடும்.
اللهم ارزقه علم التوحيد وعلّمه علم التصوّف، وافتح قلبه واهده الصـراط المستقيم، صراط الّذين أنعمت عليهم من النبيّين والصدّيقين والشّهداء والصالحين والمتصوّفين المعتبرين المعتمدين،