Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கௌரவ உலமா சபையின் தலைவர் அவர்களே!

கௌரவ உலமா சபையின் தலைவர் அவர்களே!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

لا سلام عليك حتّى تؤمن بالله وبرسوله وتؤمن بوحدة الوجود، وتؤمن بما سوى الله أنّه عدمٌ محض فى الحقيقة،

நீங்கள் அல்லாஹ்வையும், அவனின் திருத்தூதரையும் நம்பும் வரையும், இதேபோல் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை சரியென்று நம்பும் வரையும், இதேபோல் எதார்த்தத்தில் அல்லாஹ் தவிர வேறொன்றுமே இல்லையென்று நம்பும் வரையும் உங்களுக்கு எனது “ஸலாம்” கிடையாது. அது சொல்லவும் முடியாது.

لأنّك كفّرتني وكفّرتَ جما غفيرا وجمعا كبيرا من المسلمين والمؤمنين الّذين شهدوا بألسنتهم وأفئدتهم أن لا إله إلّا الله، وأن لا موجود إلّا الله، وأن لا مستعان إلّا الله، وأن لا مستغاث إلا الله، وأن لا فاعل إلا الله، وأن لا ناصر إلا الله،

ஏனெனில் நீங்கள் முஸ்லிம்களிலும், முஃமின்களிலும் – விசுவாசிகளிலும் பெரும் சமுகமொன்றை “காபிர்” என்று கூறிவிட்டீர்கள். அவர்களோ தமது நாவுகளாலும், உள்ளங்களாலும் அல்லாஹ் அல்லாத வேறு ஒன்றுமில்லை என்றும், உதவி செய்பவன் அவனல்லாத வேறு யாருமில்லை என்றும், இரட்சிப்புக்கு பாத்திரமானவன் அவன் அல்லாத வேறு யாருமில்லை என்றும், எதைச் செய்பவனாயினும் அவனல்லாத எவருமில்லை என்றும், உதவி செய்பவன் அவனல்லாத வேறு யாருமில்லை என்றும் சாட்சி சொன்னவர்களாயிருக்கும் நிலையில் அவர்களை மதம் மாறியவர்கள் என்றும் சொல்லிவிட்டீர்கள்.

أما قرأتَ يا رئيس جمعيّات العلماء بدولة سريلانكا كُتُبَ الأحاديث الدالّة على كُفر من قال لمسلمٍ يا كافرُ؟ وألا تعلمُ يا رئيس رؤساء جمعيّات العلماء أنّ لفظة الكافر تشمل المرتدَّ والزِّنديقَ والمنافقين الّذين يقولون للمؤمنين إنّا معكم، ويقولون للكافرين والمشـركين إنّا معكم،

இலங்கையின் அனைத்து உலமா சபைகளின் தலைவர் அவர்களே! நீங்கள் பெருமானாரின் அருள் மொழிகளின் தொகுப்பான “ஹதீது” நூல்களை வாசிக்கவில்லையா? ஓதவில்லையா? அவற்றில், “ஒரு முஸ்லிமை “காபிர்”, “முர்தத்” என்று சொன்னவன் “காபிர்” ஆகிவிட்டான்” என்று பல நபீ மொழிகள் வந்துள்ளதை நீங்கள் அறியவில்லையா? அவற்றை நீங்கள் ஓதவில்லையா?

ஜம்இய்யதுல் உலமாக்களின் தலைவர்களின் தலைவர் அவர்களே! மேற்கண்ட நபீ மொழியில் வந்துள்ள “காபிர்” என்ற சொல், “முர்தத்”, “சிந்தீக்” என்போரையும், விசுவாசிகளைக் கண்டால் நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம், காபிர்களைக் கிண்டல் செய்கிறோம் என்றும், காபிர்களைக் கண்டால் நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம், ஆயினும் முஸ்லிம்களை நாங்கள் கிண்டல் செய்கிறோம் என்றும் சொல்கின்ற இரு நாக்குடைய “முனாபிக்” நயவஞ்சகர்களையும் உள்வாங்கிய சொல் என்பது உங்களுக்குத் தெரியாதா?

உங்களின் “பத்வா”வினால் சமுக, மார்க்க ரீதியில் முஸ்லிம்களுக்கிடையே பகைமை, பொறாமை, எரிச்சல், முஸ்லிம் – முர்தத் என்ற ஏற்றத்தாள்வு, பாரபட்சம் என்பன தலை தூக்கிவிட்டன. சும்மா கிடந்த சங்கை ஊதிக் குழப்பிவிட்டீர்கள்.

ஒரே வீட்டில் நாளாந்தம் பிரச்சினை, இன்று, நேற்றிலிருந்தல்ல, “பத்வா” வழங்கிய காலத்திலிருந்தே பிரச்சினைதான். சுமார் 42 ஆண்டுகளாகப் பிரச்சினைதான். இதற்குப் பிரதான காரணம் கண்ணில்லாத முல்லா முப்திகளின் பத்வாதான். வேறொன்றுமே இல்லை. ஒரே வீட்டில் நான்கு கொள்கையுடையோர் உள்ளனர்.

தந்தை பத்வாவுக்கு ஆதரவானவர். தாய் எனக்கு ஆதரவானவர். மகன் முதற் தர வஹ்ஹாபீ. மகள் தப்லீக் ஜமாஅத். கொள்கையில் எதிரும், புதிருமான நான்கு கொள்கையுள்ளவர்கள் இருப்பதால் மார்க்க விடயத்தில் அவர்களால் ஒன்றுபட முடியவில்லை. நாள் குறைந்தால் கூட அவர்களுக்கிடையில் அடிக்கடி வாய் தர்க்கமும், அடிதடியும் நடந்து கொண்டே இருக்கும்.

திருமண வீடுகளிலும் பிரச்சினை. வீட்டில் நடைபெறுகின்ற விஷேட வைபவங்களின் போதும் பிரச்சினை. இத்தகைய இழிநிலை உங்களின் “பத்வா”வினால் ஏற்பட்டதேயாகும்.

நீங்கள் “பத்வா” கொடுத்து நாட்டைக் குழப்பிவிட்டு தலைமறைவாகிவிட்டீர்கள்.

عَن أَنَس؛ أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ: الْخَلْقُ عِيَالُ اللَّهِ وَأَحَبُّهُمْ إِلَى اللَّهِ أَنْفَعُهُمْ لعياله

படைப்பு அல்லாஹ்வின் குடும்பம். அவர்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவர் அந்தக் குடும்பத்தவர்களுக்கு அதிகம் நன்மை செய்பவர் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.

ஆதாரம்: முஸ்னதுல் பஸ்ஸார்
அறிவிப்பு: அனஸ் றழியல்லாஹு அன்ஹு

“இயால்” குடும்பம் என்பது, ஓர் ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவ்விருவருக்கும் பிறந்த பிள்ளைகள், அவர்களின் பேரன், பேர்த்திகள், மற்றும் நெருங்கிய உறவினர் அனைவரையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும்.

படைப்பு அல்லாஹ்வின் குடும்பம் என்பது இந்த வகையிலுள்ள குடும்பம் அல்ல. இதை பின்வரும் உதாரணம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதற்கிடையில் அறிவுக் கண் பார்வை மங்கிப் போனவர்களுக்காக சில விளக்கம்.

அல்லாஹ்வுக்கு உதாரணம் உண்டா? இல்லையா? என்று எவரும் சந்தேகிக்கத் தேவையில்லை. அவனுக்கு உதாரணம் உண்டு என்று அவனே அருள் மறையில் கூறியுள்ளான்.


وَلِلَّهِ الْمَثَلُ الْأَعْلَى
அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு. (திருமறை 16-60)

அல்லாஹ்வுக்கு உதாரணம் உண்டு. ஆயினும் அவனுக்கு நிகர் இல்லை.


لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
அவன் – அல்லாஹ் போல் எதுவுமில்லை. அவனே கேட்பவனும், பார்ப்பவனுமாவான். (திருக்குர்ஆன் 42-11)


وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
“அவனுக்கு – அல்லாஹ்வுக்கு நிகராக எவருமில்லை” (திருக்குர்ஆன் 112-4)

மேற்கண்ட இவ்விரு வசனங்களும் அவனுக்கு நிகரில்லை என்று கூறுகின்றன. முந்தின வசனம் அவனுக்கு உதாரணம் உண்டு என்று கூறுகிறது.

உதாரணத்திற்கும், நிகருக்கும் வேறுபாடு தெரியாத அரை குறை உலமாஉகள் திருக்குர்ஆன் வசனம் ஒன்றுக்கு மற்றது முரணானதென்று தடுமாறுவார்கள். அவர்கள் சரியாக ஆய்வு செய்தால் தடுமாற்றம் வராது. திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்று மற்றதற்கு முரணான வசனம் எதுவுமில்லை.

திருக்குர்ஆனில் இன்னுமோர் இடத்தில் فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ “அல்லாஹ்வுக்கு “அம்தால்”கள் கூறாதீர்கள்” என்று அல்லாஹ் கூறியுள்ளான்” (திருக்குர்ஆன் 16-74)

இத்திருவசனத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு உலமாஉகளில் மொழியறிவு, அகராதியறிவு இல்லாதவர்கள் அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறாதீர்கள் என்று வாதிடுகிறார்கள். அவர்களின் அறியாமையை என்னென்பது?

இவ்வாறு வாதிடுவோரிடம் நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான். நீங்கள் இறுதியாக நான் எழுதிய فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ என்ற திரு வசனத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு உதாரணம் கூற முடியாது என்று சொன்னால் وَلِلَّهِ الْمَثَلُ الْأَعْلَى அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு என்று சொன்னவனும் அல்லாஹ்தானே! இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்று இன்னொன்றுக்கு முரணாக உள்ளதென்று சொல்லப் போகின்றீர்களா?

இது உங்களின் அறியாமையாகும். நான் கூறும் விளக்கத்தை நன்றாக கவனியுங்கள்.

அறபு மொழியில் مَثَلٌ என்றும், مِثْلٌ என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. “மதலுன்” என்ற சொல்லுக்கு உதாரணம் என்றும், “மித்லுன்” என்ற சொல்லுக்கு நிகர் என்றும் பொருள் வரும்.

ஆனால் இவ்விரண்டிற்கும் பன்மைச் சொல் ஒன்று போல்தான் வரும். அதாவது أَمْثَالْ அம்தால் என்று வரும். இவ்விரு சொற்களுக்குமுள்ள வித்தியாசம் தெரியாதவர்கள் “அம்தால்” என்ற பன்மைச் சொல் مَثَلٌ மதலுன் என்ற சொல்லின் பன்மைச் சொல் என்று நினைத்து அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறாதீர்கள் என்று தப்பான பொருள் கூறுகிறார்கள். இது அறியாமையும், ஆய்வின்மையுமாகும்.

திரு வசனத்தில் வந்துள்ள “அல் அம்தால்” என்ற சொல் مِثْلٌ – மித்லுன் என்ற சொல்லின் பன்மைச் சொல் என்பதை அறிந்து – விளங்கி இவ்வசனத்திற்கு அல்லாஹ்வுக்கு நிகர் கூறாதீர்கள் என்று கருத்துக் கொள்ள வேண்டும். உதாரணங்கள் கூறாதீர்கள் என்று பொருள் கொண்டு அல்லாஹ்வுக்கு உதாரணம் கூற முடியாதென்ற வாதத்தை இந்த அரை அவியல்கள் கைவிட வேண்டும்.

இவர்கள் நாங்கள் சொல்வதுதான் சரியென்று உடும்புப் பிடி பிடித்தார்களாயின் அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு என்ற திரு வசனத்திற்கு இவர்கள் பதில் கூற வேண்டும். கூற முடியாது.

உதாரணத்திற்கும், நிகருக்கும் நான் கூறிய விளக்கம் விளங்காத போலிகள் தாராளமாக என்னிடம் நேரில் வந்து விளக்கம் கேட்கலாம்.

بَابِيْ مَفْتُوْحٌ لِكُلِّ سَائِلٍ لَيْلًا وَنَهَارًا، صَبَاحًا وَمَسَاءًا، فَمَنْ دَقَّ الْبَابَ فُتِحَ لَهُ،

எனவே, அல்லாஹ்வுக்கு உதாரணம் கூற முடியுமாதலால் “படைப்பு அல்லாஹ்வின் குடும்பம்” என்பதற்கு ஓர் உதாரணம் கூறி தெளிவு படுத்துகிறேன்.

ஒரு மரத்தை விட்டும் பிரயாத, அதற்கு வேறாகாத கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் அனைத்தையும் உள் வாங்கிய மரம் போன்றதே குடும்பம்.

படைப்பு அல்லாஹ்வின் குடும்பம் என்பது இந்த வகையிலான குடும்பமேயாகும்.

அல்லாஹ்வை அவனின் “வுஜூத்” எனும் உள்ளமையை ஒரு மரத்திற்கு உதாரணமாகவும், அம்மரத்தின் அனைத்து பாகங்களையும் அல்லாஹ்வின் படைப்புக்களாகவும் நாம் சிந்தித்தால் பௌத மதத்தைச் சேர்ந்தவனும், இந்து மதத்தைச் சேர்ந்தவனும், மற்றும் கிறித்து மதம், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரே மரத்தின் உறுப்புக்களேயாவர்.

படைப்பு அல்லாஹ்வின் குடும்பம் என்ற நபீ மொழி தருகின்ற தத்துவத்தை நான் மேலே கூறிய உதாரணத்தை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தால் எந்த மதத்தை, எந்த இனத்தை, எந்த நிறத்தை, எந்த உடலமைப்பைக் கொண்டவர்களாயினும் அவர்கள் அனைவரும் அல்லாஹ் என்ற மரத்தின் உறுப்புக்கள் போன்றவர்களேயாவர்.

இந்த உணர்வு மனிதர்களிடம் இருந்தால் மனிதர்களில் யார் யாரைக் கழிப்பது? யார் யாருக்கு அடிப்பது? ஏசுவது? யார் யாருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது? யார் யாருக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்குவது? யார் யாரை கீழ் சாதி என்று கழிப்பது? தூரப்படுத்துவது?

படைப்பு அல்லாஹ்வின் குடும்பம் என்றுதான் நபீ பெருமான் அருளினார்களேயன்றி மனிதன் அல்லாஹ்வின் குடும்பம் என்று கூறவில்லை.

ஆகையால் அனைத்து படைப்புக்களையும் – உயிரினத்தையும், அவற்றிலும் குறிப்பாக மனிதர்கள் அனைவரையும் அல்லாஹ்வின் குடும்பமாகவே கருத வேண்டும். இத்தகைய உணர்வு இருக்க வேண்டியவர்கள் முஸ்லிம்கள்தான். ஆயினுமின்று உலகில் இத் தத்துவம் பேணிச் செயற்படுவோர் ஆங்கில நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட வெள்ளைக் காரர்களேயாவர்.

நாம் பல வெள்ளைக் காரர்களைப் பார்க்கிறோம். அவர்களுக்கும், எமக்கும் எந்த வகையிலும் அறிமுகமோ, தொடர்போ இல்லாது போனாலும் அவர்கள் எம்மைக் கண்டால் புன்னகைத்து, கை காட்டிச் செல்கிறார்கள். மனிதனோ, மிருகமோ ஏதேனுமோர் உயிர் பிராணி ஒரு கஷ்டத்தில் மாட்டி துன்புறுவதை வெள்ளைக் காரர்கள் கண்டால் எவரிடமும், எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் அந்த உயிரைக் காப்பாற்றுவதற்காக, அதன் கஷ்டத்தை நீக்கி வைப்பதற்காக கடும் பாடு படுகிறார்கள். பல உதாரணங்கள் கூறலாம். விடயம் நீண்டுவிடும்.

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ،

நீ ஒருவரைக் கண்டு புன்னகைப்பது – சிரிப்பது – முகமலர்வது நீ அவனுக்கு வழங்கும் அன்பளிப்பு – “ஸதகா” என்று கூறினார்கள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்.

ஒற்றுமைக்கும், பிறர் மனதை மகிழ்விப்பதற்கும் நபீகள் நாயகம் காட்டியுள்ள வழி அற்புதமானது. ஒருவனின் முகம் பார்த்து புன்னகைப்பது, புன்முறுவல் செய்வது அவனின் கவலைக்கு மருந்தாகவும், அவனுடைய மன மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் விருந்தாகவும் அமைகிறது.

ضِحْكٌ என்றால் ஓரளவு சத்தமாக சிரித்தல், قَهْقَهَةُ என்றால் சத்தமாகச் சிரித்தல், تَبَسُّمٌ என்றால் புன்னகைத்தல். இந்த நபீ மொழியில் பெருமானார் அவர்கள் تَبَسُّمٌ என்ற சொல்லைப் பயன்படுத்தியதில் அர்த்தமில்லாமல் இருக்குமா? அதை இங்கு எழுதத் தொடங்கினால் விஷயம் நீண்டுவிடும்.

இருந்தாலும் ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன். புன்னகை என்றால் பல் தெரியாமல் சிரித்தல். அதாவது முகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.

உனது சகோதரனின் முகம் பார்த்து சிரிப்பது வணக்கமெனில் அவனுக்கு வேறு உதவிகள் செய்வதற்கு கிடைக்கும் பரிசில்களை என்னென்று சொல்வது?

ரிஸ்வீ அவர்களே! உங்களின் “பத்வா”வினால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் அடியார்கள் அனைவரின் உள்ளங்களையும் “பத்வா” எனும் கண்மூடித்தனமான தீர்ப்பைக் கொண்டு எரித்துவிட்டீர்கள். அவர்கள் தினமும் உங்களுக்கும், உங்களின் “பத்வா” குழுவினருக்கும் பாதகமாக கேட்கும் “துஆ”க்களின் பலன் நீங்கள் கண் மூடினால்தான் புரியும். உங்களின் சுவாசத்தை அல்லாஹ் தனது “குத்றத்” சக்தியெனும் கை கொண்டு ஒரு சில நொடிகள் இறுக்கினால் போதும். நீங்கள் இழைத்த அநீதிகளுக்குரிய பரிசில்களைக் கண்டு கொள்வீர்கள்.

أيّها الرئيس المعجب بنفسه! كيف تتمنّى دخول الجنّة وأنت لم تتطهّر من جنابة غفلاتك؟ وكيف تلقى وجهَ ربّك الأعلى وأنت منغمس بحر شهواتك؟ وكيف ترى وجه الرسول يوم المعاد وأنت تاركٌ سبيله وصراطه؟ وكيف تريد الغسل من الكوثروأنت متّخذٌ هواك إلهك؟ فارجع عن فتواك قبل يفجئك ملك الموت، واتّق دعوة المظلوم،

– AJAR –

RELATED ARTICLES

Most Popular

Recent Comments