தொற்று நோய் இல்லையென்று கூறிய நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பேச்சையும் நம்புவோம்.
பயங்கர நோயாளர்களைக் கண்டால் சிங்கத்தை கண்டு ஓடுவதுபோல் ஓடுங்கள் என்று கூறிய அதே நபீயவர்களின் அறிவுரையின்படியும் செயல்படுவோம்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பல ஹதீதுகளில் – அருள் மொழிகளில் لَا عَدْوَى “லா அத்வா” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
இச் சொல்லுக்கு சுருக்கமாக “தொற்று நோய்” என்று சொல்லப்படுகின்றது.
لَا عَدْوَى – தொற்று நோய் கிடையாதென்று நபீகளார் சொன்னதையும் நம்புவோம்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இன்னும் பல ஹதீதுகளில் – அருள் மொழிகளில் குஷ்டரோகியைக் கண்டால் ஓடிவிடுங்கள், அவனை நெருங்காதீர்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
இன்னும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், உங்களில் யாராவது எங்காவது ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு பயங்கர நோய் ஏற்பட்டால் அந்நோய்க்குப் பயந்து அவ் ஊரை விட்டும் வெளியேறிவிட வேண்டாம் என்றும், எங்காவது ஓர் ஊரில் பயங்கர நோய் இருப்பதாக நீங்கள் அறிந்தால் அந்த ஊருக்குப் போக வேண்டாம் என்றும் கூறியுள்ளார்கள்.
பெருமானார் அவர்களின் அருள் மொழிகளிலிருந்து தொற்று நோய் உண்டு என்ற கருத்தும், அது இல்லை என்ற கருத்தும் விளங்கப்படுகின்றது.
இரண்டுக்கும் விளக்கம் உண்டு. ஆயினும் பயங்கர நோய் தலை விரித்தாடி மனித உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தொற்று நோய் இல்லை என்ற அவர்களின் பேச்சை மனதால் நம்பிக் கொண்டு அதற்கு எதிரான அவர்களின் பேச்சின்படி அரசாங்கமும், சுகாதாரத் துறையினரும், வைத்தியர்களும், வயதில் முதிர்ந்த அனுபவமுள்ளவர்களும் கூறும் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கேட்டுச் செயல்படுவது மக்களின் கடமையாகும்.
இந்த சூழலில் தொற்று நோய் உண்டா? இல்லையா? என்று ஆய்வு செய்வதை பின்போட்டு தற்போது ஏற்பட்டுள்ள பயங்கர நோய் பரவாமலிருப்பதற்கான வழிகளைக் கையாள வேண்டும்.
அவ்வழிகளில் ஒன்று முழு நாளும் “வுழூ” என்ற வெளிச் சுத்தமுள்ளவனாயிருத்தல். “வுழூ” முறிந்தால் மறுகணம் “வுழூ” செய்து கொள்ள வேண்டும். இது ஒரு முஸ்லிமால் மட்டுமே சாத்தியமானது. முஸ்லிமல்லாதவர்கள் முகம், கை, கால் இவற்றை மட்டும் சுத்தமாக கழுவி வைத்திருக்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்தல் வேண்டும். தினமும் கருஞ்சீரகம் கலந்த தேன் ஒரு தேக்கரண்டி காலை, மாலை பாவித்து வர வேண்டும்.
அடிக்கடி பின்வரும் “துஆ” ஓதி கையில் ஊதி தலைமுதல் கால்வரை உடலில் தடவிக் கொள்ள வேண்டும்.
اَللهم اشْفِ أَنْتَ الشَّافِيْ، لَا شِفَاءَ إِلَّا شِفَائُكَ شِفَاءًا لَا يُغَادِرُ سَقَمًا،
மூன்று தரம் அல்லது முடிந்தவரை.
بِسْمِ اللهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْئٌ فِى الْأَرْضِ وَلَا فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمْ،
மூன்று தரம் அல்லது முடிந்தவரை.
கொரோனா என்று வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்ட ஒருவன் மற்றவர்களுடன் கலந்துறவாடுவதை அவனாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவன் பள்ளிக்கு வருவதை விட தனது வீட்டில் தொழுவதே சிறந்தது. அவன் போன்ற இன்னொருவன் பள்ளிவாயலுக்கு வந்தானாயின் அவனை அன்போடு அனுப்பி வைப்பதற்கு தலைவருக்கு அனுமதி உண்டு. வந்தவர் முரண்பட்டு “லோ” பேச முற்பட்டால் அவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் அவருக்கு அதிகாரம் உண்டு.
தொழில் காரணமாக வெளியே சென்று பலருடனும் கலந்துறவாடிவிட்டு வீட்டுக்கு வரும் ஆண்கள் உடல் கழுவி சுத்தமானபின் சுகாதாரம் பேணி வீட்டவர்களுடன் உரையாடவும், உறவாடவும் வேண்டும்.
வீட்டில் உறங்குவோர் ஒருவரின் சுவாசத்தை மற்றவர் சுவாசிக்குமளவு நெருங்கி உறங்காமல் சற்றுத் தள்ளி உறங்க வேண்டும். பெற்றோர் தவிர வீட்டுக்கு வரும் அனைவருக்கும் சிறு குழந்தைகளை முத்தமிடக் கொடுப்பதை தவிரக்க வேண்டும்.
இவற்றை விட மேலாக பயங்கர நோய் அணுகாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்பு “துஆ” கேட்டுக் கொள்ள வேண்டும். தமிழில் கேட்க விரும்பியோர் தமிழில் கேட்கலாம்.
அறபு மொழியில் கேட்க விரும்புவோர் பின்வருமாறு கேட்டுக் கொள்ளலாம்.
اَللهم عَافِنِيْ فِى بَدَنِيْ، اَللهم عَافِنِيْ فِى سَمْعِيْ، اَللهم عَافِنِيْ فِى بَصَرِيْ، اَللهم عَافِنِيْ فِى جَمِيْعِ أَبْدَانِيْ،
எவர் துஆ கேட்பதாயின் என்னையும் நினைத்துக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.