தொடர் 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இந்நிகழ்வு இற்றைக்கு சுமார் 448 வருடங்களுக்கு முன் நடந்ததாகும்.
தலைப்பு: அல்லாஹ் “தாத்” கொண்டு படைப்பாக வெளியானானா? “ஸிபாத்” தன்மைகள் கொண்டு வெளியானானா?
அஷ் ஷெய்கு பத்றுத்தீன் அல் அலாயீ அல் ஹனபீ அவர்களும், அஷ் ஷெய்கு சகரிய்யா, அஷ் ஷெய்கு புர்ஹானுத்தீன் றஹிமஹுமுல்லாஹ் மூவரும் ஒரு குழு.
இக்குழு அல்லாஹ் தனது “ஸிபாத்” தன்மைகள் கொண்டுதான் படைப்பாக வெளியானானேயன்றி தனது “தாத்” கொண்டு வெளியாகவில்லை என்ற கருத்துள்ளவர்களாவர்.
எதிர்த்தரப்பில் ஒருவர் மட்டும். அவர் அஷ் ஷெய்கு இப்றாஹீம் அல் மவாஹிபுஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்.
இவர் அல்லாஹ் தனது “தாத்”, “ஸிபாத்” அனைத்தைக் கொண்டுமே படைப்பாக வெளியானான் என்ற கருத்துள்ளவராவார். நாம் கூறும் கொள்கைவழி நடந்தவராவார்.
மூவர் கொண்ட குழு முதலில் பேசினார்கள். அவர்கள்,
إن الله معنا بأسمائه وصفاتِه لا بذاتِه
அல்லாஹ் எங்களுடன் அவனின் “அஸ்மா” திரு நாமங்கள், “ஸிபாத்” தன்மைகள் கொண்டு மட்டுமே எங்களுடன் இருக்கிறான் என்று கூறினார்கள். அதாவது தனது “தாத்” கொண்டு வெளியாகவில்லை என்று கூறினார்கள்.
قال الشيخ إبراهيم بَلْ هُوَ مَعَنَا بِذَاتِهِ
அப்போது அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் அல்லாஹ் எங்களுடன் அவனின் “தாத்” கொண்டே இருக்கின்றான் என்றார்கள். அதாவது அவன் தனது “தாத்” கொண்டும், “ஸிபாத்” தன்மைகள் கொண்டுமே எம்மாக வெளியாகியுள்ளான் என்று கூறினார்கள்.
அப்போது எதிர் தரப்பினர் அவர்களிடம் உங்களின் ஆதாரம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் وَاللهُ مَعَكُمْ அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். (47-35) என்ற திரு வசனத்தையும், وَهُوَ مَعَكُمْ அவன் உங்களுடன் இருக்கிறான் (57-4) என்ற திருவசனத்தையும் கூறினார்கள்.
அப்போது எதிர் தரப்பினர் சற்று விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டார்கள்.
அதற்கு ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் எதிர் தரப்பினருக்கு விளக்கம் கூறினார்கள்.
அவர்கள் கூறிய விளக்கத்தை அவர்கள் கூறியவாறே அறபியில் எழுதி அதற்கான சுருக்கத்தையும் எழுதுகிறேன்.
ومعلوم أنّ الله عَلَمٌ على الذّات. فيجب اعتقاد المعيّة الذّاتيّة ذوقا وعقلا ، لثبوتها نقلا وعقلا، فقالوا له أوضح لنا ذلك،
فقال حقيقة المعيّة مُصاحَبَةُ شيئٍ لآخَرَ، سواءٌ أكَانَا واجبَين كذات الله تعالى مع صفاته، أو جائزين، كالإنسان مع مِثلِه، أو واجبا وجائزا، وهو معيّةُ الله تعالى مع خلقه بذاته وصفاته، المفهومةِ من قوله تعالى والله معكم، ومِن نحو إنّ الله مع المحسنين، إنّ الله مع الصابرين، وذلك لِمَا قدّمناه، مِن أنّ مَدلولَ الإسم الكريم الله إنّما هو الذّاتُ اللّازمةُ لها الصفاتُ المُتعيّنةُ لتعقُّلِها بجميع الممكنات، وليستْ كمعيّةِ مُتحيِّزَيْنِ لِعَدَمِ مُماثلتِه تعالى لخلقِه الموصوفين بالجسميّةِ المفتقرةِ للوازِمِها الضّرورِيّة كالحلول فى الجهة الأينيّةِ الزّمانيّة والمكانيّة، فتعالت معيّتُه تعالى عن الشّبيه والنّظير، لكمالِه تعالى وارتِفَاعِه عن صفات خلقه، ليس كمثله شيئ وهو السميع البصير،
அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் தனியாகவும், எதிர் தரப்பினர் ஒரு குழுவாகவும் இருந்து கலந்தரையாடியதன் மூலமும், அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் மற்றவர்களுக்கு விளக்கம் கொடுப்பதன் மூலமும், அவர்களில் அல்லாஹ் “தாத்”, “ஸிபாத்” அனைத்தைக் கொண்டுமே வெளியாகியுள்ளான் என்பதைச் சரிகண்டு பேசுவதன் மூலமும் அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள்தான் அவர்களில் அறிவில் சிறந்தவர்கள் என்பது விளங்குகிறது.
அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் எதிர் தரப்புக்கு கொடுத்த விளக்கத்தை எந்த ஒரு மாற்றமுமின்றி மேலே அறபியில் எழுதியுள்ளேன்.
நான் அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் போன்ற பெரிய அறிஞனல்ல. ஆழமான தத்துவங்களை அறிந்தவனுமல்ல. அவர்கள் அறபியில் விளக்கம் சொன்னது போல் தமிழில் விளக்கம் சொல்ல நான் தகுதியுள்ளவனுமல்ல, எனினும் அவர்களின் கூற்றின் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன்.
சுருக்கம்:
அல்லாஹ் எனும் திரு நாமம் அவனின் “தாத்”தின் திரு நாமமாகும். இது தவிரவுள்ள அனைத்தும் “ஸிபாத்” தன்மைகளின் திரு நாமங்களாகும். “அர் றஹ்மான்”, “அர் றஹீம்”, “அர் றஸ்ஸாக்” என்பன போன்று.
இப்றாஹீம் என்று ஒருவரின் பெயர் இருந்தால் அது அவரின் “தாத்” உடலுக்குரிய பெயர்தான். அப் பெயரை அவரின் உடலை விட்டும் பிரித்தெடுக்க முடியாது.
இதேபோல் அல்லாஹ் என்பது அவனின் “தாத்”தின் பெயராயிருப்பதால் அவனின் “தாத்”தை விட்டும் அப் பெயரை மட்டும் பிரிக்க முடியாது.
அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் அல்லாஹ் “தாத்” கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்பதற்கு கூறிய ஆதாரங்கள் இரண்டும் அல்லாஹ் அவனின் படைப்போடுதான் – அவனாகத்தான் இருக்கிறான் என்பதை உறுதி செய்கின்றன.
“அல் மஇய்யத்” – المعيّة உடனிருத்தல் என்று சொல்வதற்கு குறைந்தது இரண்டு வஸ்த்துக்கள் தேவைப்படும். ஒரேயொரு வஸ்த்தை வைத்துக் கொண்டு “உடன்” என்று பேச வழியே இல்லை. உடன் என்பதற்கு இரண்டு பொருட்கள் தேவை. ஆனால் அல்லாஹ் மட்டும் இருக்கும் நிலையில் அவன் உங்களுடன் இருக்கிறான், அல்லது அவர்களுடன் இருக்கிறான் என்று எவ்வாறு சொல்ல முடியும்?
“அல்மஇய்யத்” என்ற சொல் உடன் என்பதைக் குறிக்கும் சொல்லாகும். அவர் இவருடன் இருக்கிறார், இவர் அவருடன் இருக்கிறார் என்பதற்கு இரண்டு வஸ்த்துக்கள் அவசியம். ஒரேயொரு பொருளை வைத்துக் கொண்டு “மஇய்யத்” உடன் என்று பேச முடியாது. எவ்வாறு பேச முடியும்?
“அல் மஇய்யத்” உடன் என்ற கருத்துக்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவை என்று சொன்னோம். இரண்டில்லை என்றால் உடன் என்பதுமில்லை.
ஆகையால் وَهُوَ مَعَكُمْ அவன் உங்களுடன் இருக்கின்றான் என்றாலும், وَاللهُ مَعَكُمْ அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான் என்றாலும் அவன் உங்களாக இருக்கிறான் என்று முடிவு செய்வதே சரியானதாகும். இவ்வாறு கருத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே اَلْمَعِيَّةُ الذّاتِيَّةُ – “அல் மஇய்யதுத் தாதிய்யா” “தாத்”தோடு சம்பந்தப்பட்ட “உடன்” என்று ஸூபீ மகான்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த அடிப்படையிலேயே அவன் உங்களுடன் இருக்கிறான், அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான், அல்லாஹ் உபகாரம் செய்பவர்களுடன் இருக்கிறான் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் விளக்கம் கூறினார்கள். அவர்கள் கூறிய விளக்கத்தை நான் சுருக்கித்தான் எழுதியுள்ளேன். தவிர முழு விளக்கமும் எழுதவில்லை. அறபு வரிகளின் முழு விளக்கமும் தேவையானோர் எம்மை நேரில் கண்டு பெற்றுக் கொள்ள முடியும். இன்றேல் தரமான அறிஞர்களிடம் கேட்டும் தெரிந்து கொள்ள முடியும்.
ஏனெனில் இறைஞானத்தோடு தொடர்புள்ள சில விடயங்களை எவ்வளவு விளக்கமாக எழுதினாலும் கூட அதைக் கொண்டு தெளிவான விளக்கம் பெற முடியாது. விஷயம் தெரிந்த ஒருவர் நேரில் முகம் பார்த்து விளக்கம் கூறினால் மட்டும்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்.
இதனால்தான் இறையியலுக்கு “இல்முல் கலாம்” பேச்சு ஞானம் என்றும் ஒரு பெயர் கூறப்பட்டுள்ளது.
ஆகையால் அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் கொடுத்த விளக்கத்தை எந்தவொரு மாற்றமுமின்றி அறபியிலே எழுதியுள்ளேன். இறையியல் துறையில் நல்ல அனுபவமுள்ள ஒருவரிடம் அறபு வசனங்களைக் கொடுத்து மேலதிக விளக்கம் பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகிறேன்.
மேற்கண்டவாறு விளக்கம் கூறிய அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் அல்லாஹ் “தாத்” கொண்டுதான் படைப்புக்களாக வெளியாகியுள்ளான் என்று நிறுவுவதற்கு மேலும் பல ஆதாரங்கள் கூறினார்கள். அவை பின்வருமாறு.
قال العلّامة الغزويني في شرح عقائد النّسفي ‘ أنّ قول المعتزلة وجمهور البخاريّة أنّ الحقّ تعالى بكلّ مكان بعلمه وقدرته وتدبيره دون ذاته باطلٌ ، (وقوله باطل خبرٌ لقوله أنّ قول المعتزلة)
அல்லாமா ஙஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் அகாயிதுன் நஸபீ என்ற நூலின் விரிவுரையில், முஃதஸிலாக்களும், புகாறாவைச் சேர்ந்த அநேகரும் அல்லாஹ் ஒவ்வோர் இடத்திலும் தனது அறிவைக் கொண்டும், சக்தியைக் கொண்டும் மட்டுமே இருக்கிறானேயன்றி “தாத்”தோடு இல்லை என்ற பேச்சு வீணான பேச்சு என்று கூறியுள்ளார்கள்.
“முஃதஸிலா” என்ற பெயரில் உலகில் பிரசித்தி பெற்ற ஒரு கூட்டம் உள்ளது. இக்கூட்டம் நமது நாட்டில் மிகவும் குறைவு. இவர்களும், இவர்களுடன் சேர்ந்து கொண்ட “புஹாறா” நாட்டைச் சேர்ந்தவர்களும் அல்லாஹ் தனது அறிவைக் கொண்டும், சக்தியைக் கொண்டும் மட்டுமே எல்லா இடத்திலும் உள்ளானே தவிர தனது “தாத்” கொண்டு இருக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.
இந்தக் கூட்டத்தின் பேச்சை இமாம் அல்லாமா ஙஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் மறுத்துள்ளார்கள்.
தொடரும்…