தொடர் – 1
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இராகம்: கேதார கௌளம், ஆதிதணம்.
(பல்லவி)
சூத்திரப் பாவை கயிறற்று விழுமுன்
சூக்ஷக் கயிற்றினைப் பாரடா – அதி
சூக்ஷக் கயிற்றினைப் பாரடா
(அனு பல்லவி)
நேத்திரம் ரண்டினும் நேரேயிலங்கிய
நீடொளி போன்றது தேடரிதாகிய
காத்திரமுள்ளது யாவும் பொதிந்தது
கையிலுங் காலிலு மெட்டப் படாததோர் (சூத்திரப்)
(சரணங்கள்)
சாத்திரவேதஞ் சதகோடி கற்றாலும்
சமயநெறிகளி னாசாரம் பெற்றாலும்
பாத்திரமேந்திப் புறத்திலலைந்தாலும்
பாவனை யாலுட லுள்ளமுலைந்தாலும்
மாத்திரையேனு மெமன்வரு மப்போது
மற்றொன் றுதவா துதவாதுதவாது
சூத்திரமாகிய தோணி கவிழுமுன்
சுக்கானை நேர் படுத் திக்கணமே சொன்னேன் (சூத்திரப்)
உற்றுற வின்முறை யார் சூழ்ந்திருந்தென்ன
ஊருட் சனங்களெல் லாரும் பணிந்தென்ன
பெற்றாரும் பெண்டீரும் பிள்ளையிருந்தென்ன
பேணும் பெருஞ்செவ்வ வாணவத் தாலென்ன
கத்தன் பிரிந்திடிற் செத்த சவமாச்சு
காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
எத்தனை பேர் நின்று கூக்குரலிட்டாலும்
எட்டாமற் போய்விடுங் கட்டையல்லோ விந்தச் (சூத்திரப்)
மாயாப் பிறவி வளையை யடைந்திட
மாறாத்தியான மனத்தி னினைத்திடக்
காயா புரிக்கோட்டை கைக்கு ளகப்படக்
காணு மணிச்சுடர் தானே விளங்கிட
ஆயுமறிவுடன் யோகத்தினா லெளும்
ஆனந்தத் தேனையுண் டன் புடனே தொழும்
தாயா யுலகத்தை யீன்ற குணங்குடித்
தற்பரனைக் கொண்டு வப்புடனே சென்று (சூத்திரப்)
குணங்குடி மஸ்தான் ஸாஹிப் (1792 – 1838: சென்னை) ஓர் இஸ்லாமிய தமிழ் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
குணங்குடி மஸ்தான் ஸாஹிப் இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் “சுல்தான் அப்துல் காதிர்” என்பதாகும். இளமையிலேயே குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சமய சாத்திரங்களைக் கற்றுணர்ந்து “ஆலிம்” (சமயக் கல்வி அறிஞர்) என்னும் பட்டம் பெற்றார்.
பற்றறுத்த உள்ளத்துடனும், தந்தையின் ஆசியுடனும் தம்முடைய பதினேழாவது வயதில் ஞானபூமியாகத் திகழ்ந்த கீழக்கரை சென்று அங்கு “தைக்காசாஹிபு” என்று அழைக்கப்பட்ட ஷெய்கு அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ஞானியிடம் மாணாக்கராக இருந்து சமய ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் கற்றுத் தெளிந்தார். 1813 ஆம் ஆண்டில் அவர் திரிசிரபுரம் சென்று அங்கே மௌலவி ஷாம் சாஹிப் என்பவரிடம் தீட்சை பெற்று ஞானயோக நெறியில் ஆழ்ந்தார். பின்னர் சிக்கந்தர் மலையென அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சென்று அங்கே நாற்பது நாட்கள் “கல்வத்” எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்தார். பின்னர் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்களும், தொண்டியில் அவருடைய தாய் மாமனாரின் ஊரான வாழைத்தோப்பில் நான்கு மாதங்களும் தங்கி நிட்டை புரிந்தார். இவ்வாறே சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் தங்கித் தவம் புரிந்தார்.
இறைகாதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகக் காதல் போதையில் வெறியேறியவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கி பித்தநடை கொண்டார். குப்பைமேடுகள் கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்தநடையையும் அற்புத சித்துகளையும் கண்ட மக்கள் அவரை “மஸ்தான்” என அழைக்கலாயினர். அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. (மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு போதைவெறி என்று பொருள். இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை “மஸ்தான்” என அழைப்பது மரபு)
ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, பின்னர் வடநாடு சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார். இறுதியில் சென்னையை அடைந்து இராயபுரத்தில் பாவாலெப்பை என்பவருக்கு உரிமையான, முட்புதர்களும் மூங்கிற் காடும் சப்பாத்திக்கள்ளியும் மண்டிக் கிடந்த இடத்தில் தங்கலாயினார். பாவாலெப்பை குணங்குடியாரின் மகிமை உணர்ந்து அவ்விடத்திலேயே அவருக்கு ஆச்சிரமம் அமைத்துக் கொடுத்தார். இங்கே வாழ்ந்தபோது யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து யோகநிட்டையில் ஆழ்ந்திருந்தார். சில வேளைகளில் தாம் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வதுமுண்டாம். அப்படிச் செல்லும்போது ஒருமுறை அங்கப்பநாயக்கன் தெருவிலுள்ள “மஸ்ஜிதே மஃமூர்” என்ற பள்ளிவாசலுக்கும் வந்து சென்றதாகக் கூறுவர்.
குணங்குடியாரின் துறவு நிலையில் ஐயுற்ற சிலர் அவரது அரிய சித்துக்களைக் கண்ட பின்னர் அவரை மதித்துப் போற்றினர். அவரிடம் தீட்சை பெற்று பக்குவமடைந்தனர். அவ்வாறு தீட்சை பெற்றவர்களுள் அக்காலத்தில் சென்னையிலிருந்த ஆற்காடு நவாபும் ஒருவர். அவருடைய சீடர்களாக இஸ்லாமியர் மட்டுமன்றி இந்துக்களும் இருந்தனர். அவர்களில் மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் மிகப் பிரதானமானவர்களாக இருந்தனர்.
மஸ்தான் ஸாஹிப் 1838 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1254, ஜுமாதல் ஊலா 14ம் நாள் திங்கட்கிழமை வைகறை நேரம்) இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது அவருக்கு வயது நாற்பத்து ஏழு. அவர் தங்கியிருந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரை மக்கள் தொண்டியார் என்று அழைத்து வந்ததால் அவரிருந்த இடம் தொண்டியார்பேட்டை ஆயிற்று.
அவரின் அடக்கத்தலம் சென்றபோது…..
தொடரும்….