Monday, May 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சட்டக்கலையறிவு சற்றுமில்லாத “முர்தத் பத்வா” வழங்கிய முல்லாக்கள்!

சட்டக்கலையறிவு சற்றுமில்லாத “முர்தத் பத்வா” வழங்கிய முல்லாக்கள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஓர் ஊரில் யாராவதொரு முஸ்லிம் “ஷரீஆ”வுக்கு முரணாகப் பேசினால், அல்லது எழுதினால், அல்லது இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கு முரணாகப் பேசினால் அல்லது எழுதினால் அவ் ஊரிலுள்ள உலமாஉகள் அவனை அழைத்து அவனிடம் நேரில் விளக்கம் கேட்க வேண்டும். இது உலமாஉகளின் முதற் கடமையாகும்.

அவன் கூறும் விளக்கம் “ஷரீஆ” சட்டத்திற்கும், இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கும் முரணில்லாதிருந்தால் அவனைக் குற்றவாளியாக்கி விடாமல் விட்டு விட வேண்டும். அவன் கூறும் விளக்கம் “ஷரீஆ”வின் சட்டங்களுக்கு அல்லது இஸ்லாமிய கொள்கைக்கு முரணானதாயிருந்தால் “ஷரீஆ”வில் அவனுக்கு என்ன சட்டம் கூறப்பட்டுள்ளதோ அதே சட்டம் நிறை வேற்ற வேண்டும்.

ஒருவரை மதம் மாற்றி “பத்வா” வழங்கும் விடயத்தில் மிகக் கவனமாகவும், எச்சரிக்கையாகவும், பேணுதலாகவும் இருத்தல் வேண்டும்.

وفى الصفحة الثالثة والثلاثين بعد المأة، من الجزء الرابع مِن إعانة الطالبين، أَنّ من قال لأخيه المسلم يا كافر! فقد رجع القائل بقوله، فالمعنى أنّ من دعا أخاه المسلم يا كافر! فقد كان الداعي كافرا بقوله إن لم يكن المدعوُّ كافرا، وينبغي للمفتى أن يحتاط فى التكفير ما أمكنه لِعِظَم خَطَرِه وغَلَبَةِ عدم قصده سيّما من العوام، وما زال أئمّتنا على ذلك قديما وحديثا،
சுருக்கமான தமிழாக்கம்.

“இஆனதுத் தாலிபீன்” எனும் நூல் நாலாம் பாகம் 133ம் பக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“ஒரு முஸ்லிம் தனது முஸ்லிம் சகோதரருக்கு “காபிர்” என்று சொன்னால் சொன்னவன்தான் “காபிர்” ஆகிவிடுவான்”. இது இறை தூதரின் வாக்கு.

இதன் சுருக்கமான விளக்கம் என்னவெனில், ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை “காபிர்” என்று சொன்னால் அவ்வாறு சொல்லப்பட்டவன் எதார்த்தத்தில் “காபிர்” ஆக இல்லையானால் சொன்னவன் “காபிர்” ஆகிவிடுவான் என்பதாகும்.

எனவே “பத்வா” வழங்குகின்ற ஒருவர் தன்னால் முடிந்த அளவு “பத்வா” கொடுக்கும் விடயத்தில் பேணுதலாக இருக்க வேண்டும். குறிப்பாக ஒருவரை “காபிர்” என்று “பத்வா” வழங்கும் விடயத்தில் பேணுதலாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் “காபிர்” என்று “பத்வா” வழங்குதல் மிகப் பாவமான காரியமாகும்.

இவ்வாறு “பத்வா” கொடுக்கும் விடயத்தில் மட்டும் மிகப் பேணுதலாக இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒருவனுக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்குவது மிகப் பயங்கர பாவமாகும். மார்க்கம் படிக்காத சாதாரண மக்கள் மத மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அம்சங்களை பெரும்பாலும் அறியாதவர்களேயாவர். இவ்வாறு “பத்வா” வழங்கும் விடயத்தில் முன்னோர்களான இமாம்கள் மிகப் பேணுதலாகவே இருந்துள்ளார்கள்.


பொது மக்களே! நமது நாட்டு உலமாஉகள் எவ்வாறு “பத்வா” வழங்கினார்கள் தெரியுமா? இதோ கூறுகின்றேன். எனது கூற்றுக்கு சாட்சிகள் உண்டு.

உலமாஉகளிற் சிலர் மருதானை சாஹிறாக் கல்லூரியில் ஒரு நாள் ஒன்று சேர்ந்தார்கள். சிலர் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகள். பலர் வஹ்ஹாபிஸ வழிகேடர்கள்.

காத்தான்குடியில் நடைபெற்ற மீலாத் விழாவில் நான் பேசிய பேச்சுள்ள ஒலி நாடா அங்கு இயக்கப்பட்டது. ஒரு சிலர் பேசிக் கொண்டிருந்தாலும் ஏனையோர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிலும் சிலர் அன்றிரவு வணக்க வழிபாட்டில் கண் விழித்திருந்தார்கள் போலும் “திக்ர்” அடித்துக் கொண்டே இருந்தார்கள்.

அவர்களில் ஒருவர், தொடர்ந்து இவன் பேச்சைக் கேட்பதாயின் இரண்டு மணி நேரங்கள் தேவைப்படும். எமக்கு இதைவிட முக்கிய வேலைகள் இருப்பதால் தொடராகக் கேட்காமல் பிரச்சினைக்குரிய விடயத்தை மட்டும் கட்டம் கட்டமாக கேட்போம் என்றார். ஆம், நல்லது அப்படியே செய்வோம் என்றார்கள் ஏனையோர்.

கட்டம் கட்டமாகக் கேட்ட பின் சிலர் இவனுக்கு “முர்தத்” என்றுதான் “பத்வா” கொடுக்க வேண்டும் என்றனர்.

பகல் சாப்பாடு நேரமாகியது. அதற்குப் பொறுப்பானவர் மருதானை புகாரீ ஹோட்டல் புரியாணி கொண்டு வந்தார். அனைவரும் சாப்பிட்டு வட்டிலப்பமும் சாப்பிட்ட பின் ஒரு சிலரை தூக்கம் ஆட் கொண்டது. கல்லூரி பங்குகளில் அவர்கள் சாய்ந்தனர். சிலர் குறட்டையடித்து உறங்கினார்கள். இறுதியில் “ஸலவாத்” இன்றி கூட்டம் கலைந்தது.

“பத்வா” எழுதுவதற்கான “முப்தீ”கள் குழு சில நாட்களின் பின் எழுதலாயினர். அவர்களில் ஒருவர் நான் சொல்வதையும் எழுதுங்கள் என்றார்.

مَنْ زَعَمَ أَنَّ اللهَ عَلَى شَيْءٍ أَوْ فِيْ شَيْءٍ أَوْ مِنْ شَيْءٍ فَقَدْ كَفَرَ

“எவனாவது அல்லாஹ் ஒரு வஸ்த்தின் மீது உள்ளான் என்றோ, ஒரு வஸ்த்திலே உள்ளான் என்றோ, ஒரு வஸ்த்தில் நின்றுமுள்ளவன் என்றோ சொல்வானாயின் – நம்பினானாயின் அவன் “காபிர்” ஆகிவிட்டான்” என்று சொன்னார்.

இந்தச் செய்தி “பத்வா”வில் வெளியாவதற்குப் பல நாட்களுக்கு முன் இரு பக்கமும் முகம் காட்டிக் கொண்டு எனக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கிய எனது நண்பர் ஒருவர் (இவர் மரணித்துவிட்டார்) என்னிடம் வந்து மேற்கண்ட அறபு வசனத்தைச் சொல்லிக் காட்டி மச்சான்! உனக்கு “முர்தத்” என்று “பத்வா” கொடுக்கப் போறானுகள் என்று சொல்லி மேற்கண்ட ஆதாரத்தையும் கூறினார்.

கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது. ஏன் தெரியுமா? இந்த ஆதாரம் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பேசுகின்றவனை மறுப்பதற்கான ஆதாரமேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” பேசுகின்றவனை மறுப்பதற்கான ஆதாரமல்ல. உலமா சபை துறை தெரியாமல் தோணி தொடுக்கிறது. இதன் மூலம் நான் வெளியிட்ட “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களை உலமா சபையின் “பத்வா” குழு “ஹுலூல் – இத்திஹாத்” கருத்துக்கள் என்று விளங்கிக் கொண்டதென்று தெளிவாகிறது.

உலமா சபையின் “பத்வா” குழுவுக்கு மேற்கண்ட இரண்டு கொள்கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இந்த “பத்வா” குழுவினருக்கு இவற்றுக்கிடையிலுள்ள வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். அவர்கள் விரும்பி என்னிடம் கற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு வந்தால் சில மணி நேரங்களில் அவ்விரண்டுக்குமுள்ள வேறுபாட்டை விளக்கி வைக்க அல்லாஹ்வின் அருளாலும், ஸூபிஸ மகான்களின் “பறகத்”தாலும் என்னால் முடியும்.

ரிஸ்வீ முப்தீ அவர்களே!

பன்றி இறைச்சி சாப்பிடுவதுதான் கூடாதென்று இஸ்லாம் கூறியிருக்கின்றதேயன்றி குதிரை இறைச்சி சாப்பிடக் கூடாதென்று அது சொல்லவில்லை. நான் குதிரை இறைச்சி சாப்பிடலாமென்று சொன்னதை பன்றி இறைச்சி சாப்பிடலாமென்று நான் சொன்னதாக நீங்களும், உங்களின் முப்தீகளும் விளங்கிக் கொண்டதற்கு நான் பலியா? நீங்களும், அவர்களும் கேள்விப் புலனை சீர் படுத்திக் கொள்ளுங்கள். கி.பி என்றால் கிப்லாவுக்குப் பின்னால் என்று மாணவர்களுக்கு கூறிய மௌலவீ போல் இருந்து விடாதீர்கள்.

ரிஸ்வீ முப்தீ அவர்களே!

காத்தான்குடி உலமாஉகள் என்னுடன் பேச்சுவார்ததை நடத்தி நல்ல முடிவுக்கு வந்திருக்கலாம். அவர்கள் அதை விரும்பாமலேயே இப்பிரச்சினையை கொழும்புக்கு அள்ளிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் வரும் வழியில் உடுகொட றுக்கவில பிரதேசங்களில் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த மர்ஹூம் மதிப்புக்குரிய அப்துஸ்ஸமத் பஹ்ஜீ அவர்களைச் சந்தித்து இவ்விவகாரம் தொடர்பாக அவர்களுடன் பேசிய போது அவர்கள் காத்தான்குடி உலமாஉகளுக்கு கூறிய ஆலோசனையை இங்கு எழுதுகிறேன்.

(றஊப் மௌலவீ என்னிடம் ஓதிய எனது மாணவர்தான். நான் ஊருக்குப் போகும் போதெல்லாம் கல்லூரியின் பொறுப்பை அவரிடமே கொடுத்துவிட்டுச் செல்வேன். அவர் என்னிடம் ஓதிக் கொண்டிருந்த நேரம் நல்ல திறமையுள்ளவராகவே இருந்தார். அவர் இப்போது “எல்லாம் அல்லாஹ்” என்று பேசுவதாக கூறுகிறீர்கள். அவர் அவ்வாறு ஏன் பேசினார் என்று எனக்கு விளங்கவில்லை. அவர் விடயத்தில் நீங்கள் அவசரப்பட்டு “பத்வா” ஒன்றும் கொடுத்துவிடாமல் ஒரு மாத காலம் இவ்விவகாரத்தை பின்போட்டு ஆராய்ந்த பின் ஒரு முடிவு செய்யலாம்) என்று ஆலோசனையும், அறிவுரையும் வழங்கினார்கள்.

காத்தான்குடி உலமா சபையைச் சேர்ந்தவர்கள் ஹஸ்றத் அவர்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளாமலேயே கொழும்பு சென்று “பத்வா” கொடுக்கும் பணியில் இறங்கினார்கள்.

அவ்வேளை உலமா சபையின் உறுப்பினர்களாக இருந்த வஹ்ஹாபீகளும், “வஹ்ததுல் வுஜூத்” புரியாத ஸுன்னீகளும் இணைந்தே அவசரமாக “பத்வா” கொடுத்தார்கள்.

இதுவே நடந்த உண்மை. ஆனால் நீங்கள் இப்போது உலமா சபையின் தலைவராகியுள்ளீர்கள். “பத்வா” வழங்கிய நேரம் நான் இருக்கவில்லை என்று சொல்கிறீர்கள். இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்று சொல்லவில்லை. சரி அது போகட்டும். இப்போது நீங்கள்தானே தலைவராயுள்ளீர்கள். இதுவரை என்ன செய்தீர்கள்? நீங்கள் செய்து தோல்வி கண்ட விஷயம் இரண்டு. ஒன்று வட்டிலப்பம். மற்றது சாம்பல். ஆயினும் நீங்கள் செய்து வெற்றி கண்ட விஷயம் ஒன்றுமில்லை. இவ்விடயத்தில் – “பத்வா” வாபஸ் பெறும் விடயத்தில் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள். “பத்வா” வழங்கிய போது நான் இருக்கவில்லை என்ற உங்களின் பேச்சு வீணானது. படித்தவர்கள் இது அர்த்தமற்ற பேச்சென்று உங்களை இழித்துரைக்கின்றனர்.

தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு முன் அல்லது உங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுமுன் “வாபஸ்” பெறுங்கள். இன்றேல் உங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இலங்கையில் மட்டுமன்றி தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற நாடுகள் எங்கும் நடைபெறும். இறுதியில் இவ்விவகாரம் ஐ. நா சபை வரை செல்லுமென்பதை முன்கூட்டியே உங்களின் கவனத்திற்கு தருகிறேன். வழக்குத் தாக்கல் செய்யும் வரை நீங்கள் வாபஸ் பெறவில்லையானால் வழக்கின் மூலம் உங்களை வாபஸ் பெறச் செய்து அதற்குப்பின் மான நஷ்ட வழக்கொன்றும் தாக்கல் செய்து அதிலும் வெற்றி பெறுவோம். இன்ஷா அல்லாஹ்! நீங்கள் பல கோடி ரூபாய் நட்டப்பட நேரிடும். அல்லது கஷ்டங்களை அனுபவிக்க நேரிடலாம். وَاللهُ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ

முற்றும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments