முப்தீகளும், முல்லாக்களும், அதிதிகளும், எதிரிகளும் வழி தெரியாமல் ஓடி ஒழிந்தனர்.
தயாரிக்கப்பட்ட சோறும், கறிகளும் நாய்களுக்கும், பூனைகளுக்கும் விருந்தாயின.
கல்முனையிலிருந்து கடலோர வழியாக காத்தான்குடி வந்த சிலர்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அன்புப் பொது மக்களே!
உங்களுக்குத் தெரியுமா? இது கல்முனையில் நடந்த உன்மைச் சம்பவம்!
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த சங்கைக்குணமும், சற்குணமும் நிறைந்த முப்தீகளும், முல்லாக்களிற் சிலரும் எனக்கும், எனது கருத்தைச் சரி கண்ட பல்லாயிரம் மக்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்களென்றும், எம்மைக் கொலை செய்ய வேண்டும் என்றும் “பத்வா” வழங்கிவிட்டு அவர்கள் ஓய்வு எடுக்கவில்லை.
செய்த கொடுமையும், அட்டூழியமும் போதாதென்று எனக்கு ஆதரவான மௌலவீமார்களில் அரசாங்க உத்தியோகத்தர் அனைவரையும் பதவியிலிருந்து நிறுத்துவதற்காகவும், எனது ஆதரவாளர்களை முஸ்லிம் சமுகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்காகவும் மா பெரும் மாநாடொன்றை கல்முனையில் ஏற்பாடு செய்தார்கள். இந்த மா மாநாடு 16.07.1979 அன்று நடைபெற்றது. அதே வருடம் 06ம் மாதம்தான் (ஜூன்) “பத்வா” வழங்கப்பட்டது. “பத்வா” வழங்கி ஒரு மாதத்தினுள் இந்த மா நாடு நடைபெற்றது.
கல்முனைக் கடைத் தெருவில் மாடிக் கட்டிடமொன்றின் “பெல்கனி”யில் மேடை அமைக்கப்பட்டு அதில் முப்தீகளும், முல்லாக்களும், பிரதம அதிதிகளும் அமர்ந்திருந்தனர். கீழே பாதையிலும், பாதையோரங்களிலும் பொது மக்கள் நின்றிருந்தனர்.
மாநாட்டுக்குப் பிரதம அதிதிகளாக முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் மர்ஹூம் MH முஹம்மத் அவர்களும், முன்னாள் பிரதி அமைச்சர் டொக்டர் மர்ஹூம் பரீத் மீராலெப்பை அவர்களும், இன்னும் சில அரசியல்வாதிகளும், உலமாஉகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
கல்முனைக்கு “ஹெலி”யில் வந்த முன்னாள் அமைச்சர் MH முஹம்மத் அவர்களுக்கு கூட்டத்தில் குழப்பம் ஏற்பட சாத்தியமுண்டு என்று இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அவர் கூட்டம் துவங்குமுன்னே கொழும்பு சென்றுவிட்டார்.
அங்கு உரையாற்றிய முல்லாக்களிற் சிலர் – ஐயோ பாவம் இறைஞானமே தெரியாத, அதன் வாடையைக் கூட நுகராதவர்களும் கோபத்தோடும், ஆக்ரோஷத்தோடும் என்னையும், எனது ஆதரவாளர்களையும் துண்டு துண்டாக வெட்டி அரிய வேண்டுமென்ற அளவு பேசினார்கள். அவர்களில் எவரும் தற்போது உயிரோடு இல்லை. போகுமிடம் போய் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதி அமைச்சர் டொக்டர் பரீத் மீராலெப்பை அவர்கள் பேசத் தொடங்கினார். அவர் தனது பேச்சில்,
(இந்த விவகாரம் படித்தவர்கள் மத்தியில், பல்கலைக்கழக மட்டத்தில் ஆராயப்பட வேண்டிய விடயமாகும். இத்தகைய ஒரு விடயத்தை கடைத் தெருவில் “பேமண்ட்” வியாபாரம் போல் ஆக்கப்பட்டிருப்பது கவலைக்கும், வேதனைக்குமுரிய விடயமாகும் என்றும், இந்த “பத்வா” புத்தகத்தின் அட்டை CTB பஸ்ஸின் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருப்பதும் வேதனைக்குரியதென்றும், இந்த “பத்வா”வில் “பத்வா” வழங்கியவர்களின் கையெழுத்து, மற்றும் அவர்களின் முகவரிகள், பட்டம் பதவிகள் எதுவுமில்லை என்றும், இது கையெழுத்தில்லாத மொட்டை “பத்வா”வாகும் என்றும், “பத்வா” வழங்கத் தெரிந்தவர்களுக்கு கையெழுத்துப் போடத் தெரியாமற் போனதேன்? என்றும், இவர்கள் முதுகெலும்பில்லாத உலமாஉகள் என்றும் “பத்வா”வில் இன்னோரைக் கொலை செய்ய வேண்டுமென்று குறிப்பிட்டிருப்பது சட்ட விரோதமென்றும்) தீப் பொறி பறக்கப் பேசினார்.
கூட்டத்தில் முன் வரிசையிலிருந்த யாரோ ஒரு மௌலவீ அல்லது “முல்லா” எழுந்து டொக்டர் பரீத் மேடையில் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவரின் “மைக்” ஒலிவாங்கியை பறித்து எறிந்து அட்டூழியம் செய்யத் தொடங்கினார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பிரதி அமைச்சர் டொக்டர் பரீத் தனது றவ்சரிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்து சத்த வெடில் வைத்தார். அதை தொடர்ந்து பாதுகாப்பலிருந்த பொலீஸார் சத்த வெடில் வைத்தும், கண்ணீர் புகையடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.
மேலே – மாடியில் கூட்டத்திலிருந்த அதிதிகள் ஒரு பக்கமும், முல்லாக்கள் இன்னொரு பக்கமும், பொது மக்கள் வேறொரு பக்கமும் ஓடத் தொடங்கினர். கீழே இறங்குவதற்கு ஒரேயொரு ஏணிப்படி மட்டும் இருந்ததால் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு இறங்க முற்பட்டவர்களில் பலர் காயத்திற்குள்ளாயினர். கல்முனை கடைத் தெரு வெறிச்சோடிப் போயிற்று.
இரண்டு கறிச் சட்டிகளும், ஒரு சோற்றுச் சட்டியும் கவனிப்பாரற்றுக் கிடந்து காலையில் காகங்களுக்கும், நாய்களுக்கும், பூனைகளுக்கும் விருந்தாகிவிட்டன.
சிதறி ஓடியவர்களிற் சிலர் கடற்கரை சென்று காத்தான்குடி வரை கடலோரமாக கால் நடையாக வந்துள்ளனர். காத்தான்குடி வந்த சிலர் கொழும்பிலிருந்து வந்தவர்களாவர். இவர்களுடன் அங்கிருந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ஹஸ்றத் ஒருவரும் மாட்டிக் கொண்டார். அவர் மர்ஹூம் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்றத் அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்புள்ளவராயிருந்ததால் வந்தவர்கள் அனைவரையும் மத்றஸாவிலேயே தங்க வைத்து அன்றுக் காலை அவர்களுக்கு “நாஸ்த்தா” காலைச் சாப்பாடும் ஒழுங்கு செய்து கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
மாநாட்டில் கலந்து கொண்ட ஏனையோர் அனைவரும் குடலும், தொடையும் நடுங்கிய நிலையில் ஓடித்தப்பினர்.
பல கோடி ரூபாய் செலவிட்டும் கூட கலைக்க முடியாத மாநாடு அல்லாஹ்வின் கோபப் பார்வையால் ஒரு பைசா கூட செலவின்றிக் கலைக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!
உண்மை முஸ்லிம்களையும், முஃமின்களையும் சட்ட விரோதமாகவும், அநீதியாகவும் “முர்தத்” என்று “பத்வா” வழங்கியது போதாதென்று அன்று முதல் இன்று வரை எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக அநீதியும், அட்டூழியமும் செய்து கொண்டே இருக்கின்றார்கள். இவ்வாறு செய்வோர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த, பொறாமைக்கு வரை விலக்கணமான தலைவர் ரிஸ்வி முப்தியும், அவருக்கு வால் பிடிக்கும் வஹ்ஹாபிகளுமேயாவர். குறிப்பாக வஹ்ஹாபிஸ உலமாஉகளேயாவர்.
இலங்கையிலுளன்ள ஜம்இய்யதுல் உலமா அமைப்புக்களில் – சபைகளில் இன்றுவரை எமக்கு கடும் அநீதி செய்தவர்களும், செய்து கொண்டிருப்பவர்களும் கொழும்பு உலமா சபையும், காத்தான்குடி உலமா சபையும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமுமேயாகும். இவர்கள் எமக்குச் செய்த அநீதிகளையும், அட்டூழியங்களையும், அடக்குமுறைகளையும் பட்டியலிட்டு காட்டுவதாயின் பல மாதங்கள் வாசித்தறிய வேண்டிய புத்தகம் ஒன்றுதான் எழுத வேண்டும். உலகில் வாழும் பல்லின, பல் மதங்களிலின் குருமாரில் இஸ்லாமிய மத குருக்களில் பொறாமை கொண்டவர்கள் போன்று எவரையும் எந்த மதத்தவர்களிலும், இனத்தவர்களிலும் காண முடியாது.
இந்நாடு அனைத்து அம்சங்களிலும் பின்தங்கிச் செல்வதற்குப் பிரதான காரணம் வஹ்ஹாபீகளும், பொறாமையே உருவான ஸுன்னீ, வஹ்ஹாபீ உலமாஉகளுமேயாவர்.
ஸுன்னீ உலமாஉகளுமா ஸூபிஸ சமுகத்திற்கு எதிராக இயங்குகிறார்கள் என்று சிலர் வியப்படையலாம். ஆம், அவர்களின் பொறாமை உணர்வு ஸுன்னிஸத்தையும் தூக்கியெறிந்து விட்டது. அதை வென்று விட்டது.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
என்று கூறியுள்ளான். இத்திரு வசனத்தை இரண்டு விதமாக ஓதுவதற்குச் சட்டத்தில் இடமுண்டு. இரண்டுமே சரிதான். இத்திரு வசனத்தில் வந்துள்ள அல்லாஹ் என்ற சொல்லை يَخْشَى என்ற வினைச் சொல்லுக்கு “பாஇல்” செய் பெயராக வைத்தும், “அல் உலமாஉ” என்ற சொல்லை “மப்ஊல்” செயப்படு பொருளாக வைத்தும் சொல்ல முடியும். இது இலக்கண விதி. இவ்வாறு அமைத்தால் “அல்லாஹ் தனதடியார்களில் உலமாஉகளைப் பயப்படுகின்றான்” என்று பொருள் வரும். இது ஒரு விதம். ஒரு முறை. இவ்வாறு அமைத்தால் إِنَّمَا يَخْشَى اللَّهُ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءَ என்று اللهُ என்ற சொல்லில் உள்ள “ஹே” என்ற எழுத்துக்கு “ழம்மு” செய்து ஓத வேண்டும்.
இத்திருவசனத்தில் வந்துள்ள “அல்லாஹ்” என்ற சொல்லை يَخْشَى என்ற சொல்லுக்கு “மப்ஊல்” ஆக வைத்தும், “அல்உலமாஉ” என்ற சொல்லை “பாஇல்” ஆக வைத்தும் சொல்ல முடியும். இவ்வாறு அமைத்தால் “அல்லாஹ்வின் அடியார்களில் அவனைப் பயப்படுபவர்கள் உலமாஉகள்” என்று கருத்து வரும்.
ஸூபிஸ உலமாஉகளான நாங்கள் இரண்டு விதமாகவும் ஓதுவோம். முதலில் கூறப்பட்ட விதமாக ஓதும் போது உலமா சபையின் தலைவரையும், “பத்வா” வழங்கிய மகான்களையும் எமது கருத்திற் கொள்வோம்.
இரண்டாவது கூறப்பட்ட விதமாக ஓதும் போது ஸூபிஸ மகான்களை எமது கருத்திற் கொள்வோம்.
“துன்யா” உடைய உலமாஉகள் எத்தகையோர் என்பதை பின்வரும் நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.
أنّ عيسى عليه السلام لَقِيَ إبليسَ، وهو يَسُوق خمسةَ أحمُرٍ، عليها أحمالٌ، فسئله عن الأحمال، فقال تجارةٌ، أطلبُ لها مُشْتَرِين، قال وما هي التّجارةُ؟ قال أحدُها الجُوْرُ، قال ومَن يشْتَريْهِ؟ قال السَّلَاطِينُ، والثاني الْكِبْرُ، قال ومن يشتريه؟ قال الدَّهَاقِينُ، والثالث الحَسَدُ، قال ومن يشتريه؟ قال العُلماء، والرابعُ الخِيانةُ، قال ومن يشتريها؟ قال عُمَّالُ التُّجّارِ، والخامس الكَيْدُ ، قال ومَن يشتريه؟ قال النِّساءُ. (كتاب ابتلاء الأخيار)
இப்லீஸ் என்பவன் ஐந்து கழுதைகள் மீது ஐந்து வகையான சாமான்களை ஏற்றிக் கொண்டு சென்றதைக் கண்ட நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனிடம் இவை என்ன சாமான்கள் என்று கேட்டார்கள். அதற்கவன் இவை வியாபாரப் பொருட்கள். வாங்குவோருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வருகிறேன் என்றான்.
அவை என்ன சாமான்கள் என்று நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனிடம் கேட்டார்கள். அதற்கவன் ஒன்று “அநீதி” என்றான். அதை யார் வாங்குவார்? என்று அவர்கள் கேட்டார்கள். அரசர்கள் என்றான். இரண்டாவது பெருமை என்றான். அதை யார் வாங்குவார்கள் என்று அவர்கள் கேட்டார்கள். தலைவர்கள் – ஊர் பிரமுகர்கள் என்றான். மூன்றாவது பொறாமை என்றான். அதை யார் வாங்குவார்கள் என்று கேட்டார்கள். உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள் என்றான். நாலாவது துரோகம் என்றான். அதை யார் வாங்குவார்கள் என்று கேட்டார்கள். வியாபாரிகளின் வேலையாட்கள் என்றான். ஐந்தாவது சூட்சி என்றான். அதை யார் வாங்குவார்கள் என்று கேட்டார்கள். பெண்கள் என்றான்.
(ஆதாரம்: கிதாபு இப்திலாஇல் அக்யார்)
மேற்கண்ட ஐந்து தீய பண்புகளின் “ஹோல்சல்” மொத்த வியாபாரிதான் இப்லீஸ். அவனின் ஐந்து வியாபாரச் சரக்குகளும் மனிதனைப் படுகுழியில் தள்ளி அவர்களை நரகவாதிகளாக்கும். அவற்றில் பொறாமையை வாங்குபவர்களில் அநேகர் மார்க்க அறிஞர்கள் என்பது இந்த வரலாறின் மூலம் தெரிகிறது.
இதுமட்டுமல்ல. اَلْفِتْنَةُ نَائِمَةٌ، لَعَنَ اللهُ مَنْ أَيْقَظَهَا “குழப்பம் உறங்குகிறது. அதை எழுப்பியவனை அல்லாஹ் சபித்துவிடுவானாக!” என்று எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
உறங்குகின்ற குழப்பத்தை தட்டியெழுப்பி அதைப் பெரும் போராக ஆக்கி விட்டு – யுத்தமாக மாற்றிவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்பவர்களும், வேடிக்கை பார்ப்பவர்களும் மார்க்கம் கற்ற உலமாஉகளேயாவர்.
இவ் உண்மையை நான் நிதர்சனமாக கண்டுமுள்ளேன். சுருக்கமாக சுட்டிக் காட்டுகிறேன்…