தொடர் 02
அல்லாஹ்வுக்கு மட்டுமே சுயமான “வுஜூத்” உண்டு.
“வுஜூத்” என்பது ஒன்றேதான். அது இரண்டில்லை.
“ஷரீஆ”வின் புதிய குரல் “வுஜூத்” இரண்டு என்று கூறுகிறது.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அல்லாஹ்வுக்கு “வாஜிப்”ஆன கடமையான “ஸிபாத்” தன்மைகள் இருபது. அவற்றில் மிக முக்கியமானது “வுஜூத்” ஆகும். “வுஜூத்” என்றால் உள்ளமை எனப்படும். உள்ளமை என்றால் ஒரு வஸ்த்து உளதாக இருப்பதைக் குறிக்கும். “வுஜூதிய்யத்” என்றால் உளதாக இருத்தல் என்று பொருள்வரும்.
அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்வது அவனின் “வுஜூதிய்யத்” அவன் உளதாக இருப்பதையே குறிக்கும். அல்லாஹ் என்று ஒருவன் இருக்கின்றானா என்று ஒருவன் கேட்டால் ஆம், இருக்கின்றான் என்று பதில் சொல்வோம். இக் கேள்வியை அல்லாஹ் ஒருவன் உள்ளானா என்ற கேள்வியாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இக்கேள்வியிலுள்ள இருக்கின்றானா என்ற வசனம் அவன் நிற்கின்றானா? அமர்ந்திருக்கிறானா? சாய்ந்திருக்கிறானா? படுத்திருக்கிறானா? என்பதை அறிவதற்காக கேட்கப்பட்ட கேள்வியல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
“வுஜூத்” உள்ளமை என்ற சொல்லின் எதிர்ச் சொல் عَدَمٌ – “அதம்” என்பதேயாகும். அதாவது இல்லாமை என்பதேயாகும். பொது மக்கள் “உண்மை” என்ற பொருளுக்கும் உள்ளமை என்ற சொல்லை பாவிப்பார்கள். இது இங்கு நோக்கமல்ல. உண்மை என்பதற்கு எதிர்ச் சொல் كَذِبٌ – “கதிப்” பொய் என்றுதான் வரும். உள்ளமை என்பதற்கு எதிர்ச் சொல்தான் “அதம்” இல்லாமை என்று வரும்.
ஒருவன் கால் சறுக்கி விழுமிடங்களில் இவ்விடமும் ஒன்றுதான். சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன “ஸிபத்” தன்மை என்றால் அது அவனில் அவசியம் இருக்க வேண்டிய அம்சத்தை அது குறிக்கும். அந்த அம்சம் அவனில் மட்டுமே இருக்க வேண்டும். வேறொன்றில் இருக்க முடியாது. உள்ளமை அவனுக்கு அவசியமும், அவனுக்குச் சொந்தமானதுமென்றால் அதன் எதிர்ச் சொல்லான “அதம்” என்பது அவனில் இருக்க முடியவே முடியாது. அது மட்டுமல்ல அது அவனில் இருப்பது அசாத்திமுமாகும்.
இவ்விபரத்தின் படி அதாவது உள்ளமை என்பது அவனில் இருக்க வேண்டியது அவசியம், அது வேறொன்றில் இருக்க முடியாது என்ற முடிவின்படி “வுஜூத்” உள்ளமை என்ற சொல்லின் எதிர்ச் சொல்லான “அதம்” இல்லாமை என்ற சொல் படைப்பில் அவசியம் இருக்க வேண்டுமென்பது விளங்கப்படுகின்றது. இதன்படி அல்லாஹ்வின் “தாத்”திற்கு “வுஜூத்” உள்ளமை அவசியமென்றால் படைப்புக்கு “வுஜூத்” உள்ளமை இருக்க முடியாதென்றும், அதற்கு “அதம்” இல்லாமை அவசியமென்றும் விளங்கப்படுகின்றது.
அப்படியென்றால் – அதாவது படைப்புக்கு “அதம்” அவசியமென்றால் அதன் கருத்து அது இல்லை என்பதேயாகும்.
எனவே, “வுஜூத்” உள்ளமை என்பது ஒன்றேயொன்றுதான் என்றும், அது இரண்டுமில்லை, பலதுமில்லை என்றும், அது அல்லாஹ்வுக்கு மட்டுமே அவசியம் இருக்க வேண்டிய ஒன்றாயிருப்பதால் அந்த உள்ளமை வேறெதற்கும் இல்லை என்றும் “ஈமான்” நம்ப வேண்டும்.
வுஜூத் ஒன்றே இரண்டில்லை
வுஜூத் இன்றேல் படைப்பில்லை
வுஜூதும், “தாத்”தும் வேறில்லை
இலாஹீ எனக்கருள் செய்வாய்!
(ஒரு ஞானி)
கடந்த நாட்களில் உலமா சபையின் குரல் மட்டும்தான் எமது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆயனும் புதிதாக ஒரு குரல் எமது காதில் நுழைந்து கிசு கிசு என்றது.
அந்தக் குரல் இதுகால வரை நாம் கேட்காத குரலாகும். அந்தக் குரல் இதுகாலவரை ஸூபீ மகான்களில் எந்த ஒரு ஸூபீ மகானும் சொல்லாத, எந்த ஒரு நூலிலும் எழுதாத அதிசயக் குரலாகும்.
அதுதான் “வுஜூத்” இரண்டு என்ற “ஷிர்க்” எனும் இணை கலந்த குரலாகும். அந்தக் குரல் அல்லாஹ்வுக்கு “வுஜூத்” இருப்பது போல் படைப்புக்கும் “வுஜூத்” உண்டு என்று சொல்கிறது.
அத்துடன் அந்தக் குரல் ஸூபீ மகான்களில் மூன்று மகான்களின் பெயர்களையும் சுட்டிக் காட்டி அவர்கள் “எல்லாம் அவனே” என்று சொல்லவில்லை என்றும், படைத்தவனுக்கு “வுஜூத்” இருப்பது போல் படைப்புக்கும் “வுஜூத்” உண்டு என்றும், ஆகையால் “வுஜூத்” இரண்டுதான் என்று சொன்னதாகவும் அக்குரல் சொல்கிறது.
இந்தக் குரல் கூறுவது முற்றிலும் பிழையானதாகும். ஏனெனில் இதுகாலவரை தோன்றிய ஸூபீ மகான்களில் எவரும் “வுஜூத்” இரண்டு என்று சொன்னதாக எந்த ஒரு நூலிலும் கிடையாது. இக்குரல் பொய் சொல்கிறது. அது சொல்வது சரியென்றால் அதற்கான ஆதாரத்தை அக்குரல் முன்வைக்க வேண்டும். எமது கேள்விக்கு பதிலும் கூறவும் வேண்டும்.
அல்லாஹ்வில் அவசியம் இருக்க வேண்டிய அம்சம் “வுஜூத்” என்ற உள்ளமையாயின் அந்த உள்ளமை படைப்பில் இருக்க முடியாது. ஏனெனில் உள்ளமைக்கு எதிர்ச் சொல் “அதம்” என்ற இல்லாமையாக இருப்பதால் அல்லாஹ்வுக்கு “வுஜூத்” அவசியமென்றால் படைப்புக்கு “அதம்” இல்லாமை அவசியமென்பது சொல்லாமலேயே புரிந்து விடும்.
இச்சட்டம் “வுஜூத்” என்ற உள்ளமைக்கு மட்டுமல்ல. அல்லாஹ்வில் இருப்பது அவசியமான இருபது தன்மைகளுக்கும் – அம்சங்களுக்கும் உள்ளதேயாகும். அவனில் அவசியம் இருக்க வேண்டிய அம்சங்களில் ஒன்று கூட படைப்பில் இருக்க முடியாது. அது அசாத்தியம். இதுவே பொதுவான சட்டமாகும்.
சட்டம் இவ்வாறிருக்கும் நிலையில் புதிய குரல் “வுஜூத்” இரண்டு என்றும், ஒன்று அல்லாஹ்வுக்குரியது, மற்றது படைப்புக்குரியதென்றும் சொல்வது விந்தையானதாயும், விசித்திரமானதாயும் உள்ளது.
ஸூபீ மகான்களின் தீர்க்கமான முடிவு என்னவெனில் அல்லாஹ்வுக்கு மட்டுமே சுயமான “வுஜூத்” உள்ளமை உண்டு என்பதாகும். அதாவது அவன் மட்டுமே உள்ளான். வேறொன்றுமில்லை என்பதாகும்.
படைப்பு என்பது அந்த “வுஜூத்” உடைய “தஜல்லீ” வெளிப்பாடு என்றும், அந்த “வுஜூத்” தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல என்றும், படைப்பாகத் தோற்றுவது அந்த “வுஜூத்” உடைய “தஜல்லீ” வெளிப்பாடு என்றும் விளங்கி நம்ப வேண்டும்.
அந்தக் குரல் சொல்வது போல் “வுஜூத்” என்பது இரண்டு என்றும், ஒன்று அல்லாஹ்வின் “வுஜூத்” என்றும், மற்றது படைப்பின் “வுஜூத்” என்றும் வைத்துக் கொண்டால் இவ்விரு “வுஜூத்”களில் சுயமான “வுஜூத்” ஒன்றுதான் இருக்க வேண்டும். இரண்டு இருக்க முடியாது. முடியுமென்று நம்புதல் “ஷிர்க்” எனும் இணை வைத்தலாகிவிடும். அது எது? அல்லாஹ்வின் வுஜூதா? படைப்பின் வுஜூதா? என்ற கேள்விக்கு அந்தக் குரல் பதில் தர வேண்டும்.
அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமைதான் சுயமானதென்று அந்தக் குரல் கூறுமாயின் படைப்பின் “வுஜூத்” உள்ளமையின் நிலை என்ன? அது எதிலிருந்து வந்தது? அதன் கரு எது? என்ற கேள்விகளுக்கு அக்குரல் பதில் கூற வேண்டும். அக்குரல் பதில் சொல்வதாயின் பின்வரும் இரு பதில்களில் ஒன்றையே சொல்ல வேண்டும்.
அல்லாஹ்வின் “வுஜூத்” சுயமானதுபோல் படைப்பின் “வுஜூத்” உள்ளமை அல்லாஹ்வின் உள்ளமையின் வெளிப்பாடு என்று சொல்லுமாயின் அங்கு அல்லாஹ்வின் உள்ளமைதான் படைப்பாக ஆனது என்பதை ஏற்றுக் கொள்கிறதென்று பொருளாகும். அவ்வாறாயின் அல்லாஹ்வின் “வுஜூத்” தான் படைப்பாக வெளியானதென்றால் “வுஜூத்” ஒன்று என்றுதான் முடிவு செய்ய வேண்டுமேயன்றி இரண்டு என்று முடிவு செய்ய இயலாது.
“வுஜூத்” – உள்ளமை இரண்டு என்ற புதிய குரலுக்கு மிகச் சுருக்கமான சிறிய விளக்கம் கூறினேன். இதை விட விரிவான விளக்கம் சொல்வதாயின் தாகமுள்ளவர்களுக்கு நேரில்தான் சொல்ல வேண்டும்.
படைப்புக்கு “வுஜூத்” உள்ளமை இல்லை என்ற ஸூபீ மகான்களின் கருத்தை அந்தக் குரல் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆகையால் படைப்புக்கு “வுஜூத்” இல்லையென்று ஸூபீ மகான்கள் ஆதாரங்களோடு சொல்லியுள்ளதை அடுத்த தொடரில் காணலாம்.
தொடரும்…