Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்المُنْكِرَ لوحدةِ الوجود مُثبِتٌ لكثرة الوجود “வுஜூத்” ஒன்று என்பதை...

المُنْكِرَ لوحدةِ الوجود مُثبِتٌ لكثرة الوجود “வுஜூத்” ஒன்று என்பதை மறுப்பவன் “வுஜூத்” அதிகம் என்று நம்புகிறான்.

தொடர் 01

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான “ஸிபாத்” தன்மைகள் இருபது உள்ளன. இதேபோல் “முஸ்தஹீல்” ஆன “ஸிபாத்” தன்மைகளும் உள்ளன. அவனுக்கு “ஜாயிஸ்” ஆன “ஸிபத்” ஒன்று மட்டும் உள்ளது.

அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான தன்மை என்பது – அதாவது கடமை என்பது எமக்கு தொழுகை கடமை என்று சொல்வது போன்ற கடமையல்ல. நாம் தொழாமல் விட்டால் கடமையை விட்டதற்காக தண்டனை உண்டு. அல்லாஹ்வுக்கு கடமை என்பது இது போன்ற கடமையல்ல. அதை அவன் செய்ய வேண்டுமென்ற கருத்தைக் கொண்டதல்ல அவனைப் பொறுத்து கடமை என்ற சொல்.

அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான “ஸிபத்” தன்மை என்றால் அவனில் – அதாவது அவனின் “தாத்”தில் அவசியம் இருக்க வேண்டிய தன்மை என்பதையே குறிக்கும்.

இதன்படி “வுஜூத்” உள்ளமை என்பது அவனுக்கு “வாஜிப்” ஆன தன்மை என்றால் அவனில் அவசியம் இருக்க லேண்டிய தன்மையையே குறிக்கும்.

“வுஜூத்”என்ற சொல்லுக்கு அறபுக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகின்ற பொருள் உள்ளமை என்பதாகும்.

உள்ளமை என்று சொல்லிக் கொடுக்கும் போது மாணவர்களுக்கு அது என்னவென்று எளிதில் விளங்குவதில்லை. இதனால் மாணவர்களிற் சிலர் ஆசிரியரிடம் உள்ளமை என்றால் என்ன என்று கேட்பதுமுண்டு. இத்தகைய கேள்விக்கு ஆசிரியர் விடயம் விளங்கியவராயிருந்தால்தான் விளங்கிய விளக்கத்தை மாணவனுக்கு சொல்லிக் கொடுப்பார். “வுஜூத்” என்றால் என்னவென்று அவருக்கே தெரியாதிருந்தால் அவர் என்ன சொல்வார்? தெரியாதென்றா சொல்வார்? இல்லை. தெரியாதென்று சொல்லமாட்டார். அது அவருக்கு அவமானம். ஆகையால் ஏதோ ஒன்றைச் சொல்லி சமாளித்து விடுவார்.

எனக்கு கற்றுத் தந்த “உஸ்தாத்” ஆசிரியர் என்ன சொன்னார் என்பதை இங்கு எழுதுகிறேன். எனது வகுப்பில் ஏழு மாணவர்கள் இருந்தனர். அவர்களில் மிகத் திறமையுள்ளவராக மூதூரைச் சேர்ந்த அன்வர்தீன் என்பவர் இருந்தார். இரண்டாம் இடத்திலேயே நான் இருந்தேன்.

“அகீதா” – கொள்கை தொடர்பான نُوْرُ الظَّلَامِ – “நூறுள்ளலாம்” எனும் நூலை ஆசிரியரிடம் கற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஒரு நாள் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன “ஸிபாத்” தன்மைகள் இருபது என்று பாடத்தில் ஒரு செய்தி வந்தது. ஹழ்றத் அவர்கள் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான தன்மைகள் இருபது என்று செல்லி அவற்றில் பிரதானமானதும், முந்தினதும் “வுஜூத்” உள்ளமையென்று கூறினார்.

அப்போது மாணவர் அன்வர் தீன் உள்ளமை என்றால் என்ன என்று கேட்டார். ஆசிரியர் அவரைச் சற்று கோபத்தோடு பார்த்தார். ஆனால் பதில் சொல்லவில்லை. மீண்டும் அதே மாணவர் அதே கேள்வியை கேட்டார். ஆசிரியர் கோபத்தோடு “உள்ளமை என்றால் உள்ளமைதான்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

மறு நாள் அதே பாடத்தில் மீண்டும் அந்தக் கேள்வி வந்தது. ஆசிரியர் அனைவரையும் பார்த்து (“வுஜூத்” என்றால் உள்ளமை என்று நீங்கள் பாடமாக்கிக் கொள்ளுங்கள்) என்று கூறிய பின் தொடர்ந்து மறு பாடத்தை ஆரம்பித்தார். உள்ளமை என்பதற்கான விளக்கம் எவருக்கும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு நான் இந்தியா சென்று அங்கு தொடர்ந்து மூன்றாண்டுகள் கல்வி கற்றேன். நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அறபுக் கல்லூரியில் தொடராக இரண்டு வருடங்களும், வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாத் அறபுக் கல்லூரியில் ஒரு வருடமும் கற்றேன்.

அக்கால கட்டங்களில் ஆசிரியர்களில் இறைஞானத்தோடும், ஸூபிஸ அறிவோடும் தொடர்புள்ளவர்கள் பலர் இருந்தனர். அவர்களிடமும் குறித்த ஞான அறிவுகளை கற்றுத் தெரிந்து கொண்டேன். இதேபோல் இந்தியா தமிழ் நாட்டில் அக்கால கட்டத்தில் பிரசித்தி பெற்ற தரீகாவின் ஷெய்குமார்களில் பலரைச் சந்தித்து அவர்களிடமும் இறைஞான விளக்கங்களைக் கற்றேன்.

1965ம் ஆண்டு நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அறபுக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் அங்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த மாங்குடியைச் சேர்ந்த மதிப்பிற்குரிய எனது ஆசிரியர் மர்ஹூம் மௌலவீ SRS ஹுதா – ஷம்ஸுல் ஹுதா றஹிமஹுல்லாஹ் அவர்கள் என்னிடம், “சிலோன் பாய்! அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய “அல் இன்ஸானுல் காமில்” எனும் ஞானக் களஞ்சியத்தை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் நெடுங்காலமாக எனக்கு இருந்து வருகின்றது. அதை தனியே வாசித்து முடிப்பதை விட உங்களுக்குக் கற்றுத் தந்தால் அது இருவருக்கும் பயனுள்ளதாகிவிடும். ஆகையால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் அதை நான் கற்றுத் தருகிறேன். உங்களின் விருப்பமென்ன என்று கேட்டார்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.

அடுத்த வாரத்திலிருந்து சொன்னது போல் பணி ஆரம்பமானது. குறித்த நூலில் இரண்டு வரிகள் கூட வாசிக்கவில்லை. ஹழ்றத் அவர்கள் உடல் குலுங்க சிரித்து விட்டு இந்த முயற்சியில் நாம் வெற்றி பெறுவதாயின் நானும் உங்கள் போல் மாணவனாகி ஸூபிஸக் கலையிலும், “தவ்ஹீத்” ஏகத்துவக் கலையிலும் திறமையும், அனுபவமும் உள்ள ஒருவரிடம் கற்பது கொண்டே இதில் வெற்றி பெறலாம். விளங்கலாம் என்று கூறி கிதாபை மூடி விட்டார்கள்.

ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்று கேட்ட போது, “பாம்பும் நானே, பாம்பாட்டும் குறவனும் நானே, அவன் கையிலுள்ள மகுடி ஊது குழலும் நானே” என்று “இன்ஸான் காமில்” நூலாசிரியர் கூறுகின்றார்கள் இதை எவ்வாறு விளங்க முடியும்? என்று கூறினார்கள்.

சுருக்கமாகச் சொல்வதாயின் நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான முழு விளக்கமும் எனது ஆன்மிக வழிகாட்டிகளான அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ சித்தீகீ காதிரீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடமிருந்தும், அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா அவர்களிடமிருந்தும் மற்றும் நான் இந்தியாவில் சந்தித்த ஞான மகான்களிடமிருந்தும், மற்றும் அவர்களிடமிருந்து நான் கற்ற “உஸூல்” அடிப்படைகளை ஆதாரங்களாகக் கொண்டும் ஞான மகான்களால் எழுதப்பட்ட நூல்களை வாசித்ததன் மூலம் நான் பெற்ற அறிவேயாகும். கொள்கை விளக்கமேயாகும்.

நான் கூறிவருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” என்ற தத்துவம் அல்லது “எல்லாம் அவனே” என்ற தத்துவம் சரியானதென்பதற்கு என்னிடம் தெளிவான எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன.

என்னிடமுள்ள ஆதாரங்கள் யாவும் திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும், ஞான மகான்களின் “அக்வால்” சொற்கள் – பேச்சுக்களையும் அடிப்படையாகக் கொண்டவைகளேயாகும். நான் பேசி வருகின்ற கொள்கையில் எனக்கு ஓர் அணுவளவேனும் சந்தேகம் கிடையாது. நான் இவ்விடயத்தில் மிகத் தெளிவாகவே உள்ளேன்.

நான் பெற்ற செல்வம் பிறரும் பெற வேண்டும், நான் பெற்ற இன்பம் பிறரும் பெற வேண்டுமென்ற பரந்த நோக்கத்தினால்தான் “பத்வா” வழங்கிய உலமாஉகளையும், எதார்த்தம் புரியாமலிருக்கின்ற உலமாஉகளையும் என்னிடம் வந்து என்னிடமுள்ள ஸூபிஸ ஞான விளக்கங்களை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைத்துக் கொண்டிருக்கிறேன்.

உலமாஉகள் என்னிடம் வந்தால் அவர்களைக் கண்ணியப்படுத்தி அவர்களின் அறிவுத்தாகம் தீரும் வரை அவர்களுக்கு ஞானத் தேன் கொடுத்தும், ஸூபிஸப் பால் கொடுத்தும் அவர்களைச் சுவைக்க வைத்துப் பார்ப்பதற்கு மிக ஆவலோடும், விருப்பத்தோடும் இருக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரை உலமாஉகளுடன் விவாதம் செய்ய நான் விரும்பவில்லை. ஏனெனில் மார்க்க விடயத்தில் விவாதம் செய்வதை, ஸூபிஸ வழி வரவேற்கவுமில்லை, அத்துடன் “பத்வா” வழங்கிய உலமாஉகளைப் பொறுத்த வரை என்னுடன் இக்கலை தொடர்பாக விவாதம் செய்ய குறித்த உலமாஉகள் தகுதியானவர்களுமல்ல.

ஏனெனில் எக்கரு பற்றி விவாதிக்கப்படுமோ அக்கரு தொடர்பான முழு விபரமும் வாதி, பிரதி வாதி இருவரும் அறிந்தவர்களாயிருப்பது விவாதத்தின் நிபந்தனையும், பிரதான அம்சமுமாகும். கரு என்று நான் தலைப்பையே குறிப்பிட்டுள்ளேன்.

“வஹ்ததுல் வுஜூத்” என்ற கரு – தலைப்பில் விவாதிப்பதாயின் அது தொடர்பான முழு விபரமும் வாதி, பிரதிவாதி இருவரும் தெரிந்தவர்களாயிருத்தல் வேண்டும். ஒருவர் தெரிந்தவராயும், மற்றவர் தெரியாதவராயுமிருந்தால் விவாதிக்கவும் முடியாது. அந்த விவாதத்தால் பலனும் கிட்டாது. நேரமும், பணமும்தான் வீணாகும். இறுதியில் இருவரில் ஒவ்வொருவரும் நான்தான் வெற்றி பெற்றேன் என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வார்கள். இவ்வாறு நடப்பதை நாம் நிதர்சனமாக இன்று காண்கிறோம்.

நான் விவாதத்தை விரும்பாததற்கான காரணம் இதுவேயன்றி பயமுமில்லை. தயக்கமுமில்லை.

முல்லாக்களே! நீங்கள் கடந்த நாட்களில் “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்தீர்கள். இதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். ஆயினும் கடந்த சில நாட்களாக அச் சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் எல்லாம் அவனே என்ற வசனத்தையே பயன்படுத்தி வருகிறீர்கள். இதிலுள்ள இரகசியம் எங்களுக்குத் தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? وَفَوْقَ كُلِّ ذِيْ عِلْمٍ عَلِيْمٌ எந்த ஓர் அறிஞனாயினும் அவனுக்கு மேலாக இன்னொரு அறிஞன் இருப்பான். (12-76) என்ற இறைமறை வசனம் உங்களின் கண்களுக்குத் தெரியாமற் போனதேனோ?

“வஹ்ததுல் வுஜூத்” “உள்ளமை ஒன்று” என்பதை ஏற்றுக் கொண்டால் உங்களின் எல்லாத் திட்டமும் தவிடு பொடியாகி காற்றில் பறந்து காடு சென்றுவிடுமென்று பயந்து “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல்லில் இருந்து كَثْرَةُ الْوُجُوْدِ “கத்றதுல் வுஜூத்” “வுஜூத்” ஒன்றல்ல அது இரண்டு என்ற இடத்திற்கு இறங்கிவிட்டீர்கள். சுருங்கச் சொன்னால் இரண்டு என்ற நரகத்திற்கு இறங்கிவிட்டீர்கள். இதை இன்னும் விளக்கமாகச் சொல்வதாயின் இரண்டென்ற “குப்ர்” நிராகரிப்புக்கு இறங்கிவிட்டீர்கள். விளக்கம் தொடர்ந்து வரும்.

முல்லாக்களே! நீங்கள் இதுவரை முழுமையாக எங்கள் வலையில் மாட்டவில்லை. இப்போதுதான் வசமாக மாட்டிக் கொண்டீர்கள். எந்த ஒரு பயில்வானாலும் உடைக்க முடியாத கை விலங்கொன்றை நீங்களாக போட்டுக் கொண்டீர்கள்.


தொடரும்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments