Saturday, April 27, 2024
Homeஎழுத்தாக்கங்கள்வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் மட்டும்தான். எங்கு வணங்கப்படுகின்றவனும் அவன் தான்.

வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் மட்டும்தான். எங்கு வணங்கப்படுகின்றவனும் அவன் தான்.

தொடர் 01:
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
لا إله إِلَّا اللهُ الْمَعْبُوْدُ بِكُلِّ مَكَانٍ،لَا إله إِلَّا اللهُ الْمَوْجُوْدُ بِكُلِّ زَمَانٍ، لَا إله إِلَّا اللهُ الْمَذْكُوْرُ بِكُلِّ لِسَانٍ، لَا إله إِلَّا اللهُ الْمَعْرُوْفُ بِكُلِّ إِحْسَانٍ، لَا إله إِلَّا اللهُ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ،
அனைத்து இடங்களிலும் வணங்கப்பட்டவன் அல்லாஹ் தான். அனைத்து காலங்களிலும் உள்ளவன் அல்லாஹ் தான். அனைத்து நாவுகளாலும் மொழிகளாலும் கூறப்பட்டவன் அல்லாஹ்தான். அனைத்து உபகாரங்கள் கொண்டும் அறியப்பட்டவன் அல்லாஹ்தான். அல்லாஹ் தவிர ஒன்றுமே இல்லை. அவன் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையில் உள்ளான். (ஒவ்வொரு ”தஜல்லீ” வெளியாதலில் உள்ளான்)
 
மேற்கண்ட அறபு வசனங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி வசனங்கள் – “ஹதீது” என்று பலர் கூறுகின்றார்கள். இல்லை இவை சூபிஸ மகான்கள், வலிமார், மற்றும் குத்புமார் போன்றோரின் வசனம் என்று இன்னும் பலர் கூறுகின்றார்கள்.

என்னை பொறுத்தவரை, நான் அறிந்தவரை நபீ மொழி வசனம் என்று சொல்வதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. எனினும் நான் வாசித்த பல அறபு நூல்களிலும் இறைஞானிகளால் தமிழில் எழுதப்பட்ட பல நூல்களிலும் இவ்வசனங்கள் எழுதப்பட்டிருந்ததை கண்டிருக்கிறேன்.
 
இது தொடர்பாக எனது கருத்து என்னவெனில் இவ்வசனங்களை கூறியவர் யார் என்பது முக்கியமல்ல. ஆயினும் வசனங்கள் தருகின்ற கருத்துக்களும் தத்துவங்களும் திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும், இஸ்லாமிய அறிவுலகில் பிரசித்தி பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களுக்கும் முரணில்லாமல் இருக்குமானால் இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதேயாகும். இதுவே எனது முடிவு. இதற்கு மாறாக பேசுவோருடன் நான் விவாதிக்க விரும்பவில்லை. அவர்களின் கொள்கை அவர்களுடன், எனது எனது கொள்கை என்னுடன்.
 
மேற்கண்ட அறபு வசனங்களை வாசித்து விட்டு இவ்வசனங்கள் தருகின்ற கருத்துக்கள் திருக் குர்ஆனுக்கு அல்லது நபீ மொழிக்கு அல்லது இஸ்லாமிய கொள்கைக்கு முரணானது என்று கூறி என்னுடன் விவாதிக்க வருபவர்களுடன் நான் விவாதிக்கவும் விரும்பவில்லை.
 
எனது கருத்தை சரி காண்பவர்கள் சரிகாணட்டும், பிழை காண்பவர்கள் பிழை காணட்டும் அது அவர்களின் “நசீப்” தலைவிதியை பொறுத்த விடயம். அவர்களின் விருப்பம். விவாதத்தின் மூலம் மார்க்க விடயத்தில் தீர்வு காண முடியாது. தீர்வு காண்பது மிகவும் கடினம் விவாத மாநாடுகளின் முடிவு பூச்சியமே.
 
ஆயினும் யாராவது நான் கூறும் கருத்துக்கள் தொடர்பாக என் மூலம் அறிய விரும்பினால் அவர் என்னிடம் கற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு மட்டும் சந்திக்க வேண்டுமேயன்றி தர்க்கித்து சண்டையிடும் நோக்கத்தில் சந்திப்பது கூடாது. அறிவை மட்டும், ஞானத்தை மட்டும் தேடி வரும் நல்லவர்களுக்கு கற்றுக் கொடுக்க நான் அல்லாஹ்வின் உதவியால் ஆயித்தமாய் உள்ளேன்.
 
சூபிசம், இறைஞானம் தெரியாத உலமாஉகளின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையால் இஸ்லாம் மார்க்கத்தின் ஆணிவேரான சூபிசம் நகைப்பிற்குரியதாயும், இலஞ்சத்திற்குரியதாயும் மாறிவருவது வேதனைக்குரியதாகும்.
இன்று சூபிகளினதும், இஸ்லாம் மார்க்கத்தினதும் அத்திவாரம் அழிந்து போவதற்கும், அதன் ஒளி மங்கிப் போவதற்கும் காரணம் சூபிசம் தெரியாதவர்களின் எதிர் நடவடிக்கையேயாகும்.
 
இஸ்லாமும், திருக்குர்ஆனும், திரு நபியின் அருள்மொழிகளும் கூறும் இறைஞான, மெய்ஞான கருத்தைச் சொன்னவர்களை காபிராக்கி, “முர்தத்” ஆக்கி, முஸ்லிம் சமூகத்தை விட்டும் தூரப்படுத்தினால் முஸ்லிம்கள் இஸ்லாமிய உயிர் நாடியான இஸ்லாமிய தத்துவத்தை அறிவது எவ்வாறு? விளங்காதவர்கள் தமக்கு விளங்கவில்லை என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டும். விளங்க கூடியவர்கள் விளங்குவதற்கு ஏனையோர் வழி செய்து கொடுக்க வேண்டும்.
தலைப்பிற்கு வருகிறேன்.
 
தலைப்பில் நான் எழுதியுள்ள வசனங்கள் யாரால் சொல்லப்பட்டதாயினும் அது பற்றி ஆய்வு செய்து காலத்தை கழிக்காமல் சொல்லப்பட்ட விடயம் சரியானதா? பிழையானதா? என்று தெரிந்து கொள்வதே முக்கியம்.
மேற்கண்ட இவ்வசனங்கள் நமது முன்னோர்கள் ஐங்கால தொழுகையின் பின்னும் பக்தியுடன் ஓதி வந்த வசனங்கள் ஆகும். இவ்வசனங்களை தொழுகையின் பின் ஓதி வந்தால் “ஈமான்” ஸலாமத் – ஈடேற்றம் பெறுமென்று முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்
لَا إله إِلَّا اللهُ الْمَعْبُوْدُ بِكُلِّ مَكَانٍ،
அல்லாஹ் அல்லாத எந்த “இலாஹ்” நாயனுமில்லை, (அல்லாஹ் அல்லாத எதுவுமே இல்லை) எல்லா இடங்களிலும் அவனே வணங்கப்பட்டவன்.
 
அப்துல்லாஹ் எங்கு வணங்குகிறானோ அங்கு வணங்கப்பட்டவனும், அப்புஹாமி எங்கு வணங்குகின்றானோ அங்கு வணங்கப்பட்டவனும், அருணாசலம் எங்கு வணங்குகின்றானோ அங்கு வணங்கப்பட்டவனும். அந்தோனி எங்கு வணங்குகின்றானோ அங்கு வணங்கப்பட்டவனும் இவர்கள் அனைவரையும் படைத்து, உணவளித்து, பரிபாலித்து, பாதுகாக்கும் இறைவனேயாவான்! அல்லாஹ்வேயாவான்..
முஸ்லிம் வணங்குவதும், பௌத்தர்கள் வணங்குவதும், இந்துக்கள் வணங்குவதும், கிறுத்துவர்கள் வணங்குவதும் இறைவனையே – அல்லாஹ்வையேயாகும்.
 
முஸ்லிம்கள் எந்த ஓர் உருவத்தையும் முன்வைத்து வணங்காது போனாலும் பௌத்தர்கள் புத்தர் அவர்களின் உருவ சிலையை முன்வைத்து வணங்கினாலும், இந்துக்கள் முருகன், சரஸ்வதி போன்ற உருவ சிலைகளை முன் வைத்து வணங்கினாலும், கிறித்துவர்கள் நபி ஈசாவின் – இயேசுவின் உருவச் சிலையை முன்வைத்து வணங்கினாலும், அனைவராலும் வணங்கப்படுபவன் இறைவனேதான். அல்லாஹ்வேதான். முஸ்லிம்கள் பள்ளிவாயலில் வணங்கினாலும், பௌத்தர்கள் பன்சலை – விகாரையில் வணங்கினாலும், இந்துக்கள் கோவிலில் வணங்கினாலும், கிறித்துதவர்கள் சேர்ச்சில் வணங்கினாலும் அவர்கள் அனைவரும் எதார்த்தத்தில் வணங்குவது இறைவனைத்தான் – அல்லாஹ் வைத்தான்.
 
وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ(سورة الحج آية – 40)
திருமறை வசனம் அருவியில்
)மேலும் மனிதர்களில் அநீதி செய்யும் சிலரை மற்ற சிலரை கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால் பாதிரிகளின் மடங்களும், கிறித்தவர்களின் வணக்கத்தலங்களும், யூதர்களின் வணக்கத்தலங்களும், மற்றும் மஸ்ஜிதுகளும் – முஸ்லிம்களின் வணக்கத்தலங்களும் – இவற்றில் அல்லாஹ்வின் பெயர் அதிகமாக கூறப்படுபவை யாவும் இடிக்கப்பட்டு போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், யாரையும் மிகைத்தவன். (வசனம் 22 – 40)
 
மேற்கண்ட திருவசனத்தில் நான்கு வழிபாட்டு தலங்கள் கூறப்பட்டுள்ளன. அவை பாதிரிகளின் மடங்கள், கிறிஸ்தவர்களின் வணக்கத்தலங்கள், யூதர்களின் வணக்கத்தலங்கள், மஸ்ஜிதுகள் – முஸ்லிம்களின் வணக்கத்தலங்கள்.
இவற்றை கூறிய அல்லாஹ் يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا அந்த நான்கு இடங்களிலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்படுகின்றது என்று கூறியுள்ளான். குறித்த திருவசனத்தில் فِيهَا என்று ஒரு சொல் வந்துள்ளது. இச்சொல்லுக்கு “அவற்றில்” என்று பொருள் வரும். அவற்றில் என்பது முன்னால் கூறப்பட்ட நான்கு இடங்களையும் குறிக்கும். அவற்றில் ஒன்றை மட்டும் குறிக்காது.
 
முன்னால் கூறப்பட்ட நான்கையும் குறிக்கும் என்று வைத்துக் கொண்டால் பள்ளிவாயில்களில் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படுவது போல் பாதிரிகளின் மடங்களிலும், கிறிஸ்தவர்களின் வணக்கத்தளங்களிலும், யூதர்களின் வணக்கத்தலங்களிலும் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படுகின்றது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.
அவ்வாறு அல்லாஹ் கூறியுள்ளான் என்றால் பள்ளிவாயில்களில் மட்டும் தானே அல்லாஹ் என்ற பெயர் சொல்லப்படுகின்றது. ஏனைய மூன்று இடங்களிலும் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படுவது இல்லையே என்று ஒருவர் கேட்க இடம் உண்டு.
 
இக்கேள்விக்கு மிகச் சுருக்கமாக பதில் கூறுவதாயின் ஏனைய மூன்று இடங்களிலும் வணக்கம் செய்பவர்கள் அல்லாஹ் என்ற பெயர்ச்சொல்லை மொழியாது போனாலும் தமது மொழியில் அல்லாஹ்வுக்கு என்ன சொல் பயன்படுத்துகிறார்களோ அச்சொல் பிறமொழிச் சொல்லாயினும் அது இறைவனை குறிப்பதால் அவர்களும் இறைவனின் பெயரையே தமது மொழியில் கூறுகிறார்கள் என்பதே கருத்தாகும். ஆகையால் மேற்கண்ட ஏனைய மூன்று இடங்களிலும் இறைவனின் பெயரே சொல்லப்படுகிறது என்பது தெளிவாகும். உர்து மொழியில் இறைவனுக்கு “குதா” என்று சொல்லப்படும். உருது மொழி பேசுகின்றவன் “குதா” என்று சொன்னால் அவன் அல்லாஹ் என்றே சொல்கிறான் என்று விளங்க வேண்டும். இதை விடவும் ஒரு விளக்கம் உண்டு. அதை நான் இங்கு எழுதவில்லை. யாராவது என்னிடம் நேரில் கேட்டால் மட்டும் சொல்வேன்
திரு வசனத்தில் வந்துள்ள فيها என்ற சொல்லில் உள்ள “ஹா” என்ற பிரதிப் பெயர் முன்னால் கூறப்பட்ட நான்கு இடங்களையும் குறிக்கும் என்று வைத்துக் கொண்டால் மட்டுமே இவ்வசனம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்திற்கு பொருத்தமாகும். இதற்கு மாறாக “ஹா” என்ற பிரதிப் பெயர் நான்கு இடங்களில் இறுதியாகச் சொல்லப்பட்ட “மஸாஜித்” பள்ளிவாயில்களை மட்டுமே குறிக்கும் என்று சொன்னால் இக்கருத்து “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்திற்கு பொருந்தாது.
 
சூபிஸத்திற்கும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கும் எதிரானவர்கள் “فيها” என்ற சொல்லில் உள்ள “ஹா” என்பது “மஸாஜித்” என்ற பள்ளிவாயில்களை மட்டுமே குறிக்கும் என்றும், இவ் அடிப்படையில் அல்லாஹ்வின் பெயர் பள்ளிவாயலில் மட்டுமே கூறப்படுகின்றதேயன்றி ஏனைய மூன்று இடங்களையும் குறிக்காதென்று கூறி அதற்கு ஆதாரமாக மொழி இலக்கண சட்டம் ஒன்றை முன்வைக்கலாம்.
 
அதாவது மொழி இலக்கணத்தில் اَلضَّمِيْرُ يَعُوْدُ إِلَى الْقَرِيْبِ பிரதி பெயர் என்பது தனக்குப் பக்கத்தில் உள்ளதை மட்டுமே குறிக்கும் என்ற விதியை ஆதாரமாக கூறி தமது வாதத்தை சரி என்று நிறுவ சிலர் முன்வரலாம். அவ்வாறு ஒரு சட்டம் இருந்தால் கூட திருக்குர்ஆன் விரிவுரையாளர்களிற் சிலர் இச்சட்டத்திற்கு மாறாகவும் கூறியுள்ளார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் இதற்கான ஆதாரம் பின்னால் எழுதப்படுகிறது
قَوْلُهُ: يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيراً مُخْتَصٌّ بِالْمَسَاجِدِ أَوْ عَائِدٌ إِلَى الْكُلِّ؟ الْجَوَابُ: قَالَ الْكَلْبِيُّ وَمُقَاتِلٌ عَائِدٌ إِلَى الْكُلِّ لِأَنَّ اللَّه تَعَالَى يُذْكَرُ فِي هَذِهِ الْمَوَاضِعِ كَثِيرًا، وَالْأَقْرَبُ أَنَّهُ مُخْتَصٌّ بِالْمَسَاجِدِ تَشْرِيفًا لَهَا بِأَنَّ ذِكْرَ اللَّه يَحْصُلُ فِيهَا كَثِيرًا. (مفاتيح الغيب، للإمام الرازي)
اى ليذكر في كل واحدة منها اسْمُ اللَّهِ كَثِيراً اى ذكرا كثيرا وحينا كثيرا (تفسير الفواتح الإلهيّة والمفاتح الغيبيّة)
மேற்கண்ட இரண்டு நூல்களின் தகவலின் படி فِيهَا என்ற சொல் முன்னால் கூறப்பட்ட நான்கு இடங்களையும் குறிக்கும் என்பதாகும்.
 
எனவே فِيهَا என்ற சொல் முன்னால் கூறப்பட்ட பள்ளிவாயலையும், மற்றும் ஏனைய மூன்றையும் உள்வாங்கி நான்கு இடங்களையும் குறிக்கும் என்றும் சொல்ல முடியும்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டுமே!
யார் எதை முன்வைத்து வணங்கினாலும் அவன் வணங்குவது எதார்த்தத்தில் இறைவனைத் தான். வணக்கத்திற்குரியவனும், வணங்கப்படுவதற்கு தகுதியானவனும் இறைவன் – அல்லாஹ் ஒருவன் மட்டுமேயாவான். அவன் தான் பல மொழிகளில், பல பெயர்களாக அழைக்கப்படுகிறான்.
ஆங்கிலேயர்கள் “கோட்” என்று சொல்வார்கள். சிங்கள மொழி பேசும் பௌத்தர்கள் “தெய்யோ” என்று சொல்வார்கள். தமிழ் பேசும் இந்துக்கள் கடவுள் இறைவன் என்று சொல்வார்கள். ஹிந்தி மொழி பேசும் முஸ்லிம்கள் “குதா” என்று சொல்வார்கள்.
மொழிகளைப் பொறுத்துச் சொற்கள் வேறுபட்டாலும் அவை யாவும் இறைவனையே குறிக்கும். எவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் அவருக்கு கடவுள் ஒருவன் தான். கடவுள் என்பவனும், இறைவன் என்பவனும், அல்லாஹ் என்பவனும் ஒருவன் தான் அவன் இருவரும் அல்ல, பலரும் அல்ல.
 
 
لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا
வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்கு வேறான – அல்லாஹ் அல்லாத “இலாஹ்” தெய்வம் இருக்குமாயின் வானம் பூமி இரண்டும் – உலகமே அழிந்து போயிருக்கும். (22-21)
ஏனெனில் கடவுள் களில் ஒருவன் இன்னொருவனுடன் சண்டையிட்டு, அவர்கள் யுத்தம் செய்து எல்லாமே அழிந்து போயிருக்கும்.
 
சிலரின் எண்ணப்படி “இலாஹ்” கடவுள்கள் பல இருந்தும் உலகம் அழியாது இருப்பதற்கு காரணம் எல்லா கடவுள்களும் அல்லாஹ் தானான கடவுளாயிருப்பதினால் தான் அழியாமல் உள்ளன. அல்லாஹ்வுக்கு வேறான கடவுள்களாக அவை இருந்தால் எல்லாமே அழிந்திருக்கும்.
 
சிருஷ்டி வணக்கம் – சிலை வணக்கம் இஸ்லாமின் பார்வையில் கூடாது.
நான் மேற்கண்டவாறு கூறியதில் இருந்து சிருஷ்டி வணக்கம், சிலை வணக்கம் கூடும் என்று நான் சொல்வதாக எவரும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. அல்லாஹ் ஒருவன் தான். அவன் மொத்தத்தில் ஒருவன். எண்ணிக்கையில் ஒருவன் அல்ல. அவனே வணக்கத்திற்குரியவன் என்றும், அவனே வணங்கப்பட வேண்டியவன் என்றும், சிலை வணக்கம் – சிருஷ்டி வணக்கம் கூடாது என்றும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நான் கூறுகின்றேன்.
 
தொடரும்…
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments