Saturday, April 27, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பேணப்பட வேண்டிய சாப்பாட்டின் ஒழுக்கங்கள்.

பேணப்பட வேண்டிய சாப்பாட்டின் ஒழுக்கங்கள்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
நமது முன்னோரின் சொற், செயல்கள் எல்லாமே “பித்அத்” அல்ல. அவற்றில் நல்லவையும் உண்டு.
 
(بابُ استحباب قول صاحب الطعام لِضِيْفَانِه عندَ تقديم الطَّعام: كُلوا، أو ما في مَعناه)
விருந்து வழங்கும் வீட்டுக் காரன் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் வந்த பிறகு சாப்பாடு “ஸஹன்” வைத்தபின் வந்தவர்களிடம் “சாப்பிடுங்கள்” என்று சொல்வது, அல்லது இதே கருத்துள்ள வேறு வசனங்கள் பாவிப்பது நல்ல காரியமாகும். அதாவது “ஸுன்னத்” நபீ வழியாகும்.

இந்த நபீ வழி மார்க்கத்தில் வரவேற்கத்தக்கதேயன்றி “பித்அத்” அல்ல.
 
நமது இலங்கைத் திரு நாட்டில் சுமார் 75 வருடங்களுக்கு முன் “ஸுன்னத்”தான இவ்வழக்கம் “பர்ழ்” கடமை போல் பேணப்பட்டு வந்தது. இது மார்க்கம் மட்டுமல்ல. சபை ஒழுங்கும் இதுவேயாகும்.
 
விருந்துக்கு வந்தவர்களுக்கு “ஸஹன்” வைக்கப்பட்டு முடிந்த பின் வீட்டுக் காரன் சபையோர் முன் வந்து “பிஸ்மில்லாஹ்” என்று சத்தமாகச் சொன்ன பிறகுதான் வந்தவர்கள் சாப்பிடத் தொடங்குவார்கள். இதற்கு முன் சாப்பிடமாட்டார்கள். வீட்டுக் காரன் அந்நேரம் அவ்விடத்தில் இல்லாது போனால் அவனைத் தேடிப் பிடித்து அவ்வாறு சொல்ல வைப்பார்கள்.
 
இன்று இவ் வழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. சிலர் இவ்வழக்கம் “பித்அத்” என்று நினைக்கிறார்கள் போலும்.
இது பற்றி “ஷரீஆ”வின் சட்ட மேதை இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இதற்கென்று தனியான தலைப்பிட்டு விளக்கம் கூறியுள்ளார்கள்.
 
صَحْنْ
“ஸஹ்ன்” என்ற அறபுச் சொல் தற்போது “சகன்” என்று மருவியுள்ளது. இதன் பொருள் சாப்பிடும் பெரிய, அல்லது சிறிய பாத்திரம் என்பதாகும். “ஹே” என்ற எழுத்துக்கு “ஸுகூன்” செய்ய வேண்டும்.
 
اعلم أنه يُستحبّ لصاحِب الطعام أن يقولَ لضيفه عند تقديم الطعام: بسم الله، أو كُلوا، أو الصَّلاة، أو نحو ذلك من العبارات المصرِّحة بالإِذن في الشُّـرُوْعِ في الأكل، ولا يجب هذا القول بل يكفي تقديمُ الطعام إليهم، ولهم الأكل بمجرّد ذلك من غير اشتراط لفظٍ، وقال بعض أصحابنا: لا بدّ من لفظ، والصوابُ الأوّل، وما ورد في الأحاديث الصحيحة من لفظ الإِذن في ذلك: محمولٌ على الاستحباب.
நீ அறிந்து கொள்! விருந்து கொடுப்பவன் தனது விருந்தாளிக்கு சாப்பாட்டை வைத்து விட்டு “பிஸ்மில்லாஹ்” என்று, அல்லது சாப்பிடுங்கள் என்று, அல்லது தொழுகை என்று, அல்லது சாப்பிட ஆரம்பியுங்கள் என்ற கருத்தைத் தருகின்ற ஒரு வசனத்தைச் சொல்வது “முஸ்தஹப்பு” நன்மை தரக் கூடியதாகும். இக்கட்டத்தில் தொழுகை என்று சொல்வது சாப்பிடுங்கள் என்று சொல்வதையே குறிக்கும். ஆனால் வீட்டுக் காரன் இவ்வாறு சொல்வது கடமையல்ல. சாப்பாட்டை வைத்தாலே போதும். அவர்கள் சாப்பிடலாம். எனினும் சில இமாம்கள் மேற்கண்டவாறு சொல்லத்தான் வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இவ்வாறு சொல்ல வேண்டும் என்ற கருத்துகளின் படி இது “முஸ்தஹப்பு” நல்ல காரியமாகும்.
இக்காலத்தைப் பொறுத்த வரை இந்த நடைமுறை சாத்தியமற்றதாகும். இருந்தாலும் முடிந்தவரை பேணுவது நல்லதே!
 
(باب التسمية عند الأكلِ والشُّربِ)
சாப்பிடும் போதும், குடிக்கும் போதும் “பிஸ்மில்லாஹ்” சொல்லுதல்.
عن عمر بن أبي سلمة رضي الله عنهما قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: ‘ سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ ‘
நபீ ﷺ அவர்கள், நீங்கள் சாப்பிடுமுன் “பிஸ்மி” சொல்லி வலது கையால் சாப்பிடவும் என்று எனக்குச் சொன்னார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்,
அறிவிப்பு: உமர் இப்னு அபீ ஸலமா
 
عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ‘ إذَا أكَلَ أحَدُكُمْ فَلْيَذْكُرِ اسْمَ اللَّهِ تَعالى في أوَّلِهِ، فإنْ نَسِيَ أنْ يَذْكُر اسْمَ اللَّهِ تَعالى في أوَّلِهِ فليقل: بسم اللَّهِ أوَّلَهُ وآخِرَهُ ‘
உங்களில் ஒருவர் சாப்பிட்டால் ஆரம்பத்தில் “பிஸ்மில்லாஹ்” சொல்லிக் கொள்ளவும். ஆரம்பத்தில் சொல்ல மறந்தால் بسم اللَّهِ أوَّلَهُ وآخِرَهُ என்று சொல்ல வேண்டும்.
ஆதாரம்: அபூ தாஊத் – 3767, துர்முதீ – 1858,
அறிவிப்பு: ஆயிஷா நாயகி
 
ஒருவன் சாப்பிடுமுன் “பிஸ்மில்லாஹ்” என்ற வசனத்தை முழுமையாக சொல்ல வேண்டும். அவன் மறந்து விட்டால் இடையில் بسم اللَّهِ أوَّلَهُ وآخِرَهُ “அல்லாஹ்வின் யரை ஆரம்பத்திலும், இறுதியிலும் சொல்கிறேன்” என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.
ஆதாரம்: அபூ தாஊத், துர்முதீ
 
عن جابر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ‘ إذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ تَعالى عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعامِهِ، قالَ الشِّيْطانُ: لا مَبِيتَ لَكُمْ وَلا عَشاءَ، وَإذا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ تَعالى عنْدَ دُخُولِه، قالَ الشَّيْطانُ: أدْرَكْتُمُ المَبِيتَ، وَإذا لَمْ يَذْكُرِ اللَّهَ تَعالى عِنْدَ طَعامِهِ، قالَ: أدْرَكْتُمُ المَبِيتَ وَالعَشاءَ ‘
பெருமானார் ﷺ அவர்கள் பின்வருமாறு சொல்ல நான் கேட்டேன்.
(ஒருவன் தனது வீட்டில் நுழையும் போதும், சாப்பிடும் போதும் “பிஸ்மில்லாஹ்” என்று சொல்வானாயின் – அல்லாஹ்வை நினைத்தானாயின் ஷெய்தான் நமக்கு இன்றிரவு இங்கு தங்கவும் முடியாது, இராச் சாப்பாடும் கிடையாது என்று சொல்வான். அவன் வீட்டில் நுழையும் போது அல்லாஹ்வை நினைக்கவில்லையானால் இன்றிரவு தங்கலாம் என்று ஷெய்தான் சொல்வான். அவன் சாப்பிடும் போது அல்லாஹ் வை நினைக்கவில்லையானால் இன்றிரவு தங்கவும் முடியும், இராச்சாப்பாடும் கிடைக்கும் என்று ஷெய்தான் சொல்வான் என்று நபீ ﷺ அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 2018, அறிவிப்பு: ஆயிஷா நாயகி
 
وروينا في ‘ صحيح مسلم ‘ أنّ رسولِ الله صلى الله عليه وسلم لمَّا دعاهُ أبو طلحةَ وأُمُّ سُليم للطعام، قال: ثم قال النبيُّ صلى الله عليه وسلم: ‘ ائْذَنْ لِعَشَرَةٍ ‘، فأذن لهم فدخلُوا، فقال النبيّ صلى الله عليه وسلم: ‘ كُلُوا وسَمُّوا اللَّهَ تَعالى، فأكلُوا حتى فعلَ ذلك بثمانين رجلاً ‘
صحيح مسلم 2040 – 143
நபீ தோழர் அபூ தல்ஹா அவர்களும், உம்மு ஸுலைம் அவர்களும் நபீ பெருமானார் ﷺ அவர்களை சாப்பாட்டிற்கு அழைத்த போது அவர்களிடம், பத்து நபர்களுக்கு அனுமதி தாருங்கள் என்றார்கள். அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு பத்துப் பேர்களும் உண்பதற்கு வந்தார்கள். அவர்களிடம் பெருமானார் ﷺ அவர்கள் “பிஸ்மில்லாஹ்” சொல்லிச் சாப்பிடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே செய்தார்கள். மொத்தம் எண்பது பேர் அந்த உணவைச் சாப்பிட்டார்கள்.
ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பு: அனஸ், 2040 – 143
 
மேற்கண்ட இந்த நபீ மொழி “பிஸ்மில்லாஹ்” என்று சொல்லிச் சாப்பிடுவதன் மூலம் ஒருவருக்குரிய சாப்பாட்டை எட்டுப் பேர் சாப்பிட முடியும் என்ற உண்மை தெளிவாகிறது. இது பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “முஃஜிஸத்” என்று சொல்லப்படுகின்றது.
இந்த நபீ மொழி மூலம் ஒரு சமூகத்தின் தலைவர் மீது அன்புள்ளவர்களால் அவர்களின் சமூகத்தவர்கள் அவருக்கு விருந்து கொடுக்க அழைக்கும் போது பத்துப் பேர்களை அழைத்து வர அனுமதி தாருங்கள் என்று விருந்து கொடுப்பவர்களிடம் தலைவர் கேட்பது ஆகும் என்பது விளங்கப்படுகிறது.
 
உதாரணமாக “தரீகா”வின் ஷெய்கு ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் மீது அன்புள்ள மக்கள் அவரை விருந்துக்கு அழைக்கும் போது அவருடனிருக்கும் ஏழைகளில் பத்துப் பேரை அவர் அழைத்துச் செல்ல விரும்பினால் அவர் உரியவர்களிடம் அதற்கு அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி அழைத்துச் செல்வது குற்றமாகும். ஆயினும் அழைத்துச் செல்பவருக்கு விருந்து வழங்குபவன் ஓர் முரீதாக – சிஷ்யனாக இருந்து அவர் எது செய்தாலும் “முரீது” பொருந்திக் கொள்வார் என்று குரு மகான் நிச்சயமாக அறிந்திருந்தால் அவர் வீட்டுக் காரனிடம் கேட்காமலேயே அழைத்துச் செல்லலாம். குற்றமில்லை. நான் அழைத்துச் செல்வது போல்.
 
கொழும்பில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் தரமான ஓர் ஆலிம் ஆவார். அறூஸ் மௌலானா என்று மக்களால் அழைக்கப்படுவார். அவர் ஒரு “மஜ்தூப்” ஆக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
இவர் எங்காவது தனக்கு அறிமுகமான ஒருவரின் வீட்டில் விருந்து இருப்பதாக அறிந்தால் ஏதாவது ஒரு மத்ரஸாவுக்குச் சென்று சில மாணவர்களை அழைத்துக் கொண்டு அவ்வீட்டுக்குச் சாப்பாட்டு நேரம் சென்று வீட்டுக் காரனிடம் சிறுவர்களுக்கு சாப்பாடு கொடு என்று சொல்வார். வீட்டுக் காரன் மனங் கோணாமல் அவர் சொல் கேட்டு நடப்பார். இவர் இந்தியாவைச் சேர்ந்தவராயினும் இலங்கையில் பல்லாண்டுகள் வாழ்ந்து இங்கேயே மரணித்து இங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார். கண்டிப் பகுதியில் அடக்கம் பெற்றுள்ளதாக நான் அறிந்தேன்.
 
نفعنا الله به وبأسراره
மேற்கண்ட ஹதீதுகள் – நபீ மொழிகள் மூலம் சாப்பிடும் போதுள்ள பல ஒழுக்கங்களும், நடைமுறைகளும் விளங்கப்படுகின்றன.
அவற்றிற் சில. ஒருவர் இன்னொருவருக்கு விருந்து வழங்கினால் விருந்துக்கு வந்தவரின் முன் சாப்பாட்டை வைத்து விட்டு “பிஸ்மில்லாஹ்” என்றோ, சாப்பிடுங்கள் என்றோ சொல்வது விரும்பத்தக்கதென்பது விளங்கப்படுகிறது.
 
ஒருவன் சாப்பிடு முன் “பிஸ்மில்லாஹ்” சொல்ல வேண்டும். அதாவது பிஸ்மில்லாஹ்வை முழுமையாகச் சொல்ல வேண்டும் என்பதும், சில வேளை மறந்தால் சாப்பிட்டு முடிவதற்குள் நினைவு வரும்போது “பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிறஹு” بِسْمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ என்று சொல்ல வேண்டும். இதன் கருத்து பிஸ்மில்லாஹ் என்பதை அரம்பத்திற்கும், இறுதிக்கும் சொல்கிறேன் என்பதாகும்.
 
ஒருவன் தனது வீட்டுக்குச் சென்று “பிஸ்மில்லாஹ்” என்று சொல்லி அவன் சாப்பிடும் போதும் “பிஸ்மி” சொன்னால் “ஷெய்தான்” ஷாத்தான் இன்றிரவு இங்க தங்கவும் முடியாது, சாப்பிடவும் முடியாது என்று சொல்லிக் கொண்டு ஓடி விடுவான். வீட்டுக்கு வந்த வீட்டுக் காரன் “பிஸ்மில்லாஹ்” சொல்லாமல் வந்தால் ஷாத்தான் மகிழ்ச்சியுடன் இன்று இங்கு தங்கலாம் என்று சொல்வான். அவன் சாப்பிடும் போதும் “பிஸ்மி” சொல்லாமல் சாப்பிட்டால் எமக்கு சாப்பாடும் கிடைக்கும் என்று சொல்வான் என்ற விடயம் விளங்கப்படுகிறது. யார் தனது வீட்டுக்கு எந்நேரம் போனாலும் “பிஸ்மில்லாஹ்” சொல்ல வேண்டும். இதேபோல் சாப்பிடும் போதும் “பிஸ்மில்லாஹ்” சொல்ல வேண்டும்.
 
“பிஸ்மில்லாஹ்” சொல்லிச் சாப்பிட்டால் அந்தச் சாப்பாட்டில் அருள் கிடைக்கும். ஒருவருக்குப் போதுமான சாப்பாட்டை பலர் சாப்பிட முடியுமென்ற உண்மையும் விளங்கப்படுகிறது.
 
சகோதர, சகோதரிகளே!
 
நீங்கள் சாப்பிடுமுன் இரு கைகளையும், அல்லது வலது கையை மட்டுமாவது கழுவிக் கொள்தல் வேண்டும். வலக் கரத்தால் சாப்பிட வேண்டும். சாப்பிடு முன் உப்பை ருசித்துக் கொள்ள வேண்டும். சாப்பிடு முன் உப்பை ருசிப்பதும், சாப்பிட்ட பின் உப்பை ருசிப்பதும் நோயிலிருந்து உங்களைப் பாது காக்கும். ஏனெனில் ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் اِبْدَأْ طَعَامَكَ بِالْمِلْحِ وَاخْتِمْهُ بِالْمِلْحِ என்று சொல்லியுள்ளார்கள். சாப்பிடும் போது அவசியத் தேவைக்காக மட்டும் பேசுவதால் குற்றமில்லை. வயிறு நிரம்பச் சாப்பிடாமல் வயிற்றை மூன்றாகப் பங்கிட்டு ஒரு பகுதிக்கு உணவும், ஒரு பகுதிக்கு நீரும் கொடுக்க வேண்டும். ஒரு பகுதியை எப்போதும் காலியாக வைத்திருக்க வேண்டும். பெற்றோராயினும், பிள்ளைகளாயினும், எவராயினும் சாப்பிடும் போது தலை மறைத்திருப்பது விரும்பத்தக்கதாகும். சாப்பிட்டு முடிந்த பின் விரல்களில் தேங்கியுள்ள உணவுகளை அவற்றைச் சூப்பிச் சாப்பிட வேண்டும். ஏனெனில் நபீ ﷺ அவர்கள் சாப்பிட்ட பின் விரல்களைச் சுவைப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்கள். இது சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதற்கு உதவி செய்யும். இதற்குக் காரணம் விரல்களில் உள்ள ஒரு வகை அமிலமேயாகும். விரல்களில் ஒரு வகை அமிலம் இருப்பதினால்தான் உணவுப் பண்டங்களில் விரல்களை வைக்க வேண்டாம் என்று தடுக்கப்பட்டுள்ளது.
 
மேற்கண்ட சாப்பாட்டு ஒழுக்கங்களில் அதிகமானவை இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமே உள்ளன.
 
தொடரும்..
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments