Saturday, April 27, 2024
Homeஎழுத்தாக்கங்கள்49 பிள்ளைகளின் தந்தையும், வலீகட்கரசருமான குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம்...

49 பிள்ளைகளின் தந்தையும், வலீகட்கரசருமான குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசிய மகான் ஆவார்கள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்
ளடக்கி விளையாட வல்லீர்
அகிலமீரேழினையும் ஆடுங்கறங்குபோ
லாட்டி விளையாட வல்லீர்

மண்டலத்தண்டரையழைத்தரு கிருத்தியே
வைத்து விளையாட வல்லீர்
மண்ணகமும், விண்ணகமும் அணுவைத்துளைத்தின்
மாட்டி விளையாட வல்லீர்
கண்டித்த கடுகிலெழு கடலைப் புகட்டிக்
கலக்கி விளையாட வல்லீர்
கருதரிய சித்தெலாம் வல்லநீரடிமையென்
கண்முன் வருசித்தில்லையோ
நண்டளந்திடு நாழியாவனோ தேவரீர்
நல்லடிக்களாக்கியும்
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹ்யித்தீனே!
 
குணங்குடி மஸ்தான் ஆலிம் புலவர் அவர்கள் தங்களின் ஆன்மிகக் குரு முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களை மேற்கண்டவாறு புகழ்ந்து பாடியுள்ளார்கள்.
 
“அண்ட கோடிகள்” என்ற வசனம் சர்வ படைப்புகளையும் உள்வாங்கிய சொல்லாகும். அல்லாஹ் பதினான்கு உலகங்களைப் படைத்திருப்பதாகவும், பதினெட்டாயிரம் உலகங்களைப் படைத்திருப்பதாகவும் மனக்கண் திறந்த இறைஞானிகள் கூறுகின்றார்கள். இவையாவையும் பந்து போல் கைக்குள் வைத்து விளையாடும் வல்லமை பெற்றவர்கள் என்று முஹ்யித்தீன் ஆண்டகையை வர்ணித்துள்ளார்கள் மஸ்தான்.
 
அகிலம் ஈரேழினையும் – பதினான்கு உலகங்களையும் ஆடும் விசிறி “பேன்” போல் ஆட்டி விளையாடும் வல்லமை பெற்றவர்கள் நீங்கள் என்று குத்பு நாயகம் அவர்களை வர்ணித்துள்ளார்கள் மஸ்தான்.
 
மண்டலங்களையும், அவற்றில் உள்ளவற்றையும் அழைத்து அவர்களுடன் விளையாடும் தகுதி பெற்றவர் நீங்கள் என்று குத்பு நாயகம் அவர்களை வர்ணித்துள்ளார்கள் மஸ்தான்.
மண்ணகத்தையும் – பூமிகளையும், விண்ணில் உள்ளவற்றையும் அழைத்து அணுவை எடுத்து அதில் ஓட்டை போட்டு அதன் வழியால் அவற்றை உட்செலுத்தி விளையாட வல்லமை வழங்கப்பட்டவர்கள் நீங்கள் என்று குத்பு நாயகம் அவர்களை வர்ணித்துள்ளார்கள் மஸ்தான்.
 
சிறிய கடுகில் ஏழு கடல்களையும் உட்செலுத்தி, கலக்கி விளையாடும் வல்லமை பெற்றவர்கள் நீங்கள் என்று குத்பு நாயகம் அவர்களை வர்ணித்தள்ளார்கள் மஸ்தான்.
எல்லாச் சித்து விளையாட்டிற்கும் வல்லமை பெற்ற நீங்கள் அடிமையின் கண்முன் தோன்றி காட்சியளிக்கமாட்டீர்களா? மகானே என்று கேட்கிறார்கள் மஸ்தான்.
இறுதியில் இப்பாக்கியங்களை நண்டளந்திடும் நேரமாகாமல் எனக்குத் தரவேண்டும் என்று கேட்கிறார்கள் மஸ்தான்.
நண்டளந்திடு நாளியாவனோ! என்று கைசேதப்படுகிறார்கள் மஸ்தான்.
 
நண்டை அளக்க முடியாது. சிறு தொகை நண்டாயிருந்தாலும் அதை அளந்து முடிப்பதற்கு பல மணி நேரம் தேவையாகும். இதேபோல் என் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தாமதிக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள் மஸ்தான்.
ஒரு வலீ தனது “விலாயத்” எனும் ஒலித்தனம் மூலம் மேற்கண்டவாறெல்லாம் செய்ய முடியுமா? என்ற கேள்வி இதை வாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏற்படலாம். ஆம். முடியும் என்று நான் எவருக்கும் பயப்படாமல் நான் அறிந்த அறிவின் ஆதாரத்தைக் கொண்டு சொல்வேன். பொதுவாகச் சொல்வதாயின் அல்லாஹ்வினால் எதெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் ஒரு வலீயாலும் செய்ய முடியும். இவ்வாறு சொல்வதால் – அதாவது அல்லாஹ்வால் செய்ய முடிந்ததெல்லாம் ஒரு வலீயினாலும் செய்ய முடியுமென்பவன் அல்லாஹ்வுக்கு “நிகர்” வைத்த – நிகர் சொன்ன “முர்தத்” ஆகிவிட்டான் என்று சிலர் சொல்ல இடமுண்டு. இவ்வாறு யாராவது சொன்னால் பாம்பின் உடலில் அடிக்காமல் தலையில் அடித்து ஒரே அடியில் அதைக் கொல்வது போல் ஒரே பதிலில் அவரின் வாய்க்குப் பூட்டுப் போட்டு விடலாம். அந்தப் பூட்டு பின்வருமாறு.
 
அல்லாஹ்வின் எச்செயலாயினும் அது ذَاتِيٌّ – أَزَلِيٌّ “தாதீ – அசலீ” எனப்படும். அது அவனுக்கு தனக்குத்தானான செயலேயன்றி அது இன்னொருவனால் அவனுக்கு வழங்கப்பட்டதல்ல. படைப்பின் எச் செயலாயினும் அது عَطَائِيْ – وَهْبِيْ எனப்படும். அது அந்தப் படைப்புக்கு அவனால் வழங்கப்பட்டதாயிருக்கும். தனக்குத் தானான செயலுக்கும், இன்னொருவனால் வழங்கப்பட்ட செயலுக்கும் வேறுபாடு உண்டு. இந்த விபரம் தெரியாதவர்கள்தான் தடுமாறுவார்கள். நடுச் சந்தியில் நின்று யோசிப்பார்கள். “தவ்ஹீத்” விபரத்தைச் சரியாக அறிந்த எவரும் தடுமாறமாட்டார்கள். தடம்புரளவும்மாட்டார்கள்.
இன்று தன்னைச் சமூகத்துக்கு காட்டிக் கொள்ளாத சிலர் பற்றை மறைவில் குந்திக் கொண்டு இலங்கையில் தமக்கு ஆதரவானவர்களுக்கும், இந்தியாவில் தமக்கு ஆதரவானவர்களுக்கும் என்னை எதிர்த்து எழுதுவதற்கு வசனம் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்றால் இவர்கள் அல்லாஹ்வின் நல்லடியார்களாக இருப்பார்களா? “நிபாக்” எனும் நயவஞ்சகம் எங்கிருந்து எவ்வாறு வெளியாகிறதென்பது எனக்கு மறைவானதல்ல. இவர்களுக்கு எதிராக நானும் முகம் கொடுத்தால் நானும் அவர்கள் போலாகிவிட நேரிடலாம். அல்ஹம்துலில்லாஹ்! பொறுத்தோர் அரசாள்வார் என்பது பழமொழி.
 
இற்றைக்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் இஸ்லாமிய ஞான தத்துவமாகவும், கண்ணியத்திற்குரிய அறிவாகவும் நமது இலங்கைத் திரு நாட்டில் மதிக்கப்பட்டு வந்தது. அதைத் தேடிப் படிப்பவர்களும் இருந்தார்கள். இதை “இக்லாஸ்” உடன் சொல்லிக் கொடுப்பவர்களும் இருந்தார்கள். அவர்கள் – “ஷெய்கு”மார் கண்ணிப்படுத்தப்பட்டும் வந்தார்கள்.
நான் பேசி வருகின்ற இந்த ஞானம் பற்றி ஞான மகான்கள் அனைவரும் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.
 
اعلم أنّ هذا العلم الّذي ذكرنا ليس هو اللّقلقةَ باللِّسان، وإنّما هو ذوقٌ ووِجدانٌ، ولا يُؤخذ من الأوراق، وإنّما يُؤخذ مِن أهلِ الأذواق، وليس يُنالُ بالقيل والقال، وإنّما يُؤخذ من خِدْمَةِ الرِّجال، وصُحبةِ أهل الكمال، (شرح الحكم، ص 8، للإمام عجيبة الحسني)
நாங்கள் பேசி வருகின்ற இந்த அறிவு – ஸுபிஸ ஞானம் வாயால் – நாவால் வளவளவென்று பேசுவதல்ல. நிச்சயமாக இந்த ஞானம் “தவ்கீ” அனுபவித்தறியும் ஞானமாகும். இதை ஏடுகளிலிருந்து – நூல்களிலிருந்து பெற முடியாது. மாறாக அனுபவித்தவர்கள் மூலமே பெற முடியும். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று சொல்லப்படும் ஞானமுமல்ல. இந்த ஞானம் “ரிஜால்” ஆண்களுக்குப் பணி செய்வதன் மூலம் பெறப்படும் ஞானமாகும். (இங்கு “ரிஜால்” ஆண்கள் என்று சொல்லப்பட்டுள்ளது ஸூபீ மகான்களையே குறிக்கும்) இன்னும் பூரணத்துவம் பெற்றவர்கள் மூலமும் கிடைக்கின்ற அறிவாகும்.
ஆதாரம்: ஷர்ஹுல் ஹிகம்.
பக்கம்: 08, ஆசிரியர்: இமாம் அஜீபதுல் ஹஸனீ.
 
قال الجنيد: سيّد الطائفة الصوفيّة – لَوْ نَعْلَمُ أَنَّ تَحْتَ أَدِيْمِ السَّمَاءِ أَشْرَفُ مِنْ هَذَا الْعِلْمِ الَّذِيْ نَتَكَلَّمُ فِيْهِ مَعَ أَصْحَابِنَا لَسَعَيْتُ إِلَيْهِ،
ஸூபீகளின் தலைவர் ஜுனைத் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். “வானத்திற்குக் கீழ் உள்ளவற்றில் நாங்கள் எங்களின் தோழர்களுடன் பேசி வருகின்ற அறிவை விடச் சிறந்த அறிவொன்று இருக்குமானால் அதைப் பெறுவதற்காக நான் முயற்சித்திருப்பேன்”.
 
‎قال الشّيخ الصقلي رحمه الله فى كتابه المسمّى بـ ‘أنوار القلوب فى العلم الموهوب ‘ (وَكُلُّ مَنْ صَدَّقَ بِهَذَا الْعِلْمِ فَهُوَ مِنَ الْخَاصَّةِ، وَكُلُّ مَنْ فَهِمَهُ فَهُوَ مِنْ خَاصَّةِ الْخَاصَّةِ، وَكُلُّ مَنْ عَبَّرَ عَنْهُ وَتَكَلَّمَ فِيْهِ فَهُوَ النَّجْمُ الَّذِيْ لَا يُدْرَكُ وَالْبَحْرُ الَّذِيْ لَا يُنْزَفُ)
இமாம் ஸகலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அன்வாறுல் குலூப் பில் இல்மில் மவ்ஹூப்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(இந்த அறிவை – ஸூபிஸ ஞானத்தை உண்மையென்று மெய்யாக்கியவன் விஷேடமானவன். அதை விளங்கியவன் அதி விஷேடமானவன். இந்த உயர் ஞானத்தை பேசுகின்றவன் எட்டிக் கொள்ளப்படாத நட்சத்திரமும், இறைத்துக் கரை காண முடியாத கடலுமாவான்)
ஷர்ஹுல் ஹிகம்,
பக்கம் 08, ஆசிரியர்: இமாம் அஜீபதுல் ஹஸனீ
 
இன்னுமொரு இறைஞானி பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.
إذا رأيت من فُتح له فى التصديق بهذه الطريقة فبشِّره، وإذا رأيتَ من فُتح له فى الفهم فيه فاغتبطْهُ، وإذا رأيت من فُتح له بالنُّطقِ فيه فعظّمه، وإذا رأيت مُنتقدا عليه ففِرَّ منه فرارَكَ من الأسد واهجره،
இந்த அறிவு வழியை உண்மையாக்கி வைக்கும் விடயத்தில் அல்லாஹ் ஒருவனுக்கு நற்பாக்கியம் வழங்கியிருந்தானாயின் அவனுக்கு சுபச் செய்தி சொல். இந்த அறிவை விளங்கிக் கொள்வதற்கு அல்லாஹ் ஒருவனுக்கு நற்பாக்கியம் வழங்கியிருந்தானாயின் அவன் போல் நீயும் வர வேண்டுமென்று ஆசைப்படு. யாராவது இந்த அறிவைப் பேசினால் அவரைக் கண்ணியப் படுத்து. யாராவது இந்த அறிவை எதிர்த்தால் நீ அவனை விட்டும் சிங்கத்தைக் கண்டு ஓடுவது போல் ஓடு. அவனை வெறுத்துவிடு.
ஆதாரம்: ஷர்ஹுல் ஹிகம்,
பக்கம் 08, ஆசிரியர்: அஜீபதுல் ஹஸனீ
 
மேலே நான் எழுதியுள்ள ஸூபிஸ ஞானத்தின் சிறப்பை வாசித்தறிந்த நீங்கள் வாசித்ததோடு மட்டும் நின்று விடாமல் “தஸவ்வுப்” ஸூபிஸ ஞாதனத்தை தேடிப் படிக்குமாறும், அவ்வழியில் பேணுதலாய் நடக்குமாறும் உங்களுக்கு “நஸீஹத்” செய்கிறேன்.
 
يُرْفَعُ الْعِلْمُ وَيَظْهَرُ الْجَهْلُ،
அறிவு உயர்த்தப்படுவதும், அறியாமை வெளியாவதும் மறுமை நாளின் அடையாளங்கள் என்று நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
 
நபீ பெருமானார் அவர்கள் “உயர்த்தப்படும்” என்று குறிப்பிட்ட அறிவு எந்த அறிவு என்பதில் ஆய்வாளர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் அது عِلْمُ الْفَرَائِضِ பாகப் பிரிவினை தொடர்பான அறிவென்று கூறுகின்றார்கள். இன்னும் பலர் இது “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் என்று குறிப்பிடுகிறார்கள். இவ்விரு அறிவுகளிலும் ஸூபிஸ ஞானம் என்பதே இக்காலத்தைப் பொறுத்தவரை உயர்த்தப்பட்ட அறிவென்று சொல்ல வேண்டியதாயுள்ளது. இக்காலத்தில் இவ் அறிவு தெரிந்தவர்கள் அரிதினுமரிது. தெரிந்தவர்கள் சிலர் இருந்தாலும் கூட உலமாஉகளின் “பத்வா”வைப் பயந்து அவர்கள் காட்டிக் கொள்ளாமல் உள்ளார்கள்.
 
என்னைப் பொறுத்த வரை நான் அல்லாஹ்வையும், அவன் தந்த வேதமான அல்குர்ஆனையும், கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வலஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் அருள் மொழிகளையும், அவ்லியாஉகளையும் நம்பினவனாகவே ஸூபிஸ ஞானமான “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தைக் கூறினேன். கூறிக் கொண்டுமிருக்கிறேன். எனது இறுதி மூச்சு வரை கூறிக் கொண்டுமே இருப்பேன்.
 
அல்லாஹ் தனது ஞானத்தை பாதுகாப்பான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
 
முற்றும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments