தொடர் 03
அல்லாஹ்வுக்கு மட்டுமே சுயமான “வுஜூத்” உண்டு.
“வுஜூத்” என்பது ஒன்றேதான். அது இரண்டில்லை.
“ஷரீஆ”வின் புதிய குரல் “வுஜூத்” இரண்டு என்று கூறுகிறது.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
உலமா சபை நான் விரித்த நூல் வலையில்தான் மாட்டியது. ஆயினும் புதிதாக ஒலித்த ஷரீஆவின் குரல் எனது இரும்பு வலையில் மாட்டிக் கொண்டது!
உலகில் தோன்றிய ஸூபீ மகான்கள், மற்றும் ஞான மகான்கள் யாவரும் “வுஜூத்” என்பது ஒன்றுதான் அது இரண்டோ பலதோ இல்லை என்றும், படைப்பு என்பது عَدَمٌ مَحْضٌ அறவே இல்லாதது என்றும் பரம்பரை பரம்பரையாக சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் “ஸ்ரீ லங்கா ஷரீஆ”வின் ஞான வள்ளல்கள் ஸூபீ மகான்களின் கருத்துக்கு முரணாக கூறியிருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். நரக நெருப்பின் உணவு மனித சடலங்களே!
“ஷரீஆ”வின் புதுக்குரல் ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ அவர்களையும், ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் முஹம்மத் அல் ஙஸ்ஸாலீ அவர்களையும், அஷ்ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹும் அவர்களையும் தொட்டுக் காட்டியுள்ளது.
அதாவது இவர்கள் அனைவரும் “வுஜூத்” இரண்டு என்றும், படைப்புக்கு ஒன்றும், படைத்தவனுக்கு ஒன்று என்றும் சொன்னவர்களாவர் என்றும் குறித்த குரல் சுட்டிக் காட்டியுள்ளது.
ஷாதுலீ நாயகம்:
இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பார்ப்போம்.
قال القطب الأكبر أبو الحسن علي الشّاذلي قُدِّس سرّه: قد مَحَقَ الحقُّ تعالى جميعَ الأغيار بقوله هو الأوّل والآخر والظاهر والباطن، فقيل له فأين الخلقُ؟ فقال موجودون، ولكن حُكمهم مع الحقِّ تعالى كَالْأَنَابِيْبِ الّتي فى كوّة الشمس، تراها صاعدةً هابطةً فإذا قَبَضْتَ عليها لا تراها، فهي موجودة فى الشّهود مفقودةٌ فى الوجود، (اليواقيت والجواهر، الجزء الأول، ص65)
மொழியாக்கம்:
இமாம் அபுல் ஹஸன் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(அல்லாஹ் – தனக்கு வேறானவை என்று மக்களால் கருதப்படுகின்ற யாவையும் தனது முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற சொல் கொண்டு அழித்துவிட்டான் – இல்லாமலாக்கிவிட்டான் என்று கூறினார்கள். அவ்வாறாயின் படைப்புக்கள் எங்கே என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது படைப்புக்கள் உள்ளன. எனினுமவை கண் பார்வைக்கு மட்டும் தெரியும், எதார்த்தத்தில் இருக்காது. அதாவது எதார்த்தத்தில் அது “அதம்” இல்லாததாகும். இது எது போலென்றால் வீட்டின் ஓலைக் கூரையிலுள்ள துவாரத்தின் வழியாக சூரிய வெளிச்சம் “பைப்” வடிவத்தில் வீட்டினுள்ளே தெரியும் போது அதில் அணு அளவிலான தூசிகள் ஏறுவது போலும், இறங்குவது போலும் தெரியும். அதை கையால் பிடித்தால் பிடிக்க முடியாமற் போய்விடும். அது பார்வையில் மட்டும் தோற்றுமே தவிர எதார்த்தத்தில் இருக்காது. وَهِيَ مَوْجُوْدَةٌ فِى الشُّهُوْدِ مَفْقُوْدَةٌ فِى الْوُجُوْدِ இது பார்வையில் மட்டும் தெரியுமே தவிர எதார்த்தத்தில் இருக்காது. ஏனெனில் இதற்கு “வுஜூத்” உள்ளமை இல்லை. எதார்த்தத்தில் உள்ளமை இல்லாத ஒன்று பார்வைக்குத் தெரியாதென்பதல்ல. பார்வைக்குத் தெரிவதால் மட்டும் அதற்கு “வுஜூத்” உள்ளமை உண்டு என்று சொல்ல முடியாது. மேற்கண்ட உதாரணம் கூறி உள்ளமையில்லாத ஒன்றை காண முடியுமென்றும், அது எதார்த்தத்தில் இருக்காதென்றும் விளக்கியுள்ளார்கள் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் ஷாதுலீ நாயகம் அவர்கள்.
ஷாதுலீ நாயகம் அவர்களைத் தமது வாதத்திற்கு ஆதாரமாக தொட்டுக் காட்டிய “ஷரீஆ”வின் குரல் இப்போது என்ன சொல்லுமோ!? சரியான விடை சொல்லுமா? அல்லது கொப்பு விட்டு கொப்புத் தாவுமா? அல்லது விடை சொல்ல வழியின்றித் திசை மாறிப் பறக்குமா?
“ஷரீஆ”வின் குரல் இமாம் அபுல் ஹஸன் ஷாதுலீ நாயகமவர்களைத் தொட்டுக் காட்டியதால்தான் அவர்கள் என்ன கொள்கையில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை அந்தக் குரலுக்கும், மக்களுக்கும் விளக்கி வைக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. இதனால்தான் அவர்களின் கொள்கை பற்றி எழுதினேன். இன்னும் எழுதுகிறேன்.
ஷாதுலிய்யா தரீகாவை பிற்பற்றும் சகோதரர்கள் தினமும் “வளீபா” ஓதுவது வழக்கம். நானும் காலியில் (ஓர் ஊரின் பெயர்) கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் “வளீபா” ஓதியே வந்துள்ளேன்.
“வளீபா”வின் பல இடங்களில் “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்கள் இடம் பெற்றிருப்பது “ஷரீஆ”வின் குரலுக்குத் தெரியாமற் போனதேனோ? குரலின் நல்வழியை விரும்பாத “வளீபா” தன்னை அவர்களை விட்டும் மறைத்துக் கொண்டது போலும். ஒரு பேரழகி தனது அழகை வம்பர்களுக்கு காட்டமாட்டாள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. “வளீபா” தரும் பின்வரும் விளக்கங்களை உலமாஉகள் நிதான நிலையிலிருந்து கவனிக்க வேண்டும்.
“வளீபா”வின் வசனங்கள்:
وَانْشُلْنِيْ مِنْ أَوْحَالِ التَّوْحِيْدِ، إِلَى فَضَاءِ التَّفْرِيْدِ، الْمُنَزَّهِ عَنِ الْإِطْلَاقِ وَالتَّقْيِيْدِ، وَأَغْرِقْنِيْ فِى عَيْنِ بَحْرِ الْوَحْدَةِ شُهُوْدًا، حَتَّى لَا أَرَى، وَلَا أَسْمَعَ، وَلَا أَجِدَ، وَلَا أُحِسَّ إِلَّا بِهَا نُزُوْلًا وَصُعُوْدًا،
என்றும், இன்னுமோர் இடத்தில்
يَا أَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، يَا آخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، يَا ظَاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، يَا بَاطِنُ فَلَيْسَ دُوْنَكَ شَيْءٌ،
என்றும், இன்னுமோர் இடத்தில்
وَاجْمَعْ بَيْنِيْ وَبَيْنَكَ، وَأَزِلْ عَنِ الْعَيْنِ غَيْنَكَ، وَحُلْ بَيْنِيْ وَبَيْنَ غَيْرِكَ،
என்றும். இன்னுமோர் இடத்தில்
اَللهُ وَاجِبُ الْوُجُوْدِ، وَمَا سِوَاهُ مَفْقُوْدٌ،
என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட வசனங்களுக்கு நான் சுருக்கமாக விளக்கம் எழுதுவதாயினும் அதிக பக்கங்களே எழுத வேண்டும். விரிவான விளக்கமும் கூற வேண்டும். இதற்கு இங்கு சாத்தியமில்லையாதலால் பிந்திய மூன்று வசனங்களின் சாராம்சத்தை மட்டும் சுருக்கமாக எழுதுகிறேன்.
வசனம் ஒன்று: “முந்தினவனே! உனக்கு முன்னர் எதுவுமே இல்லை, பிந்தினவனே! உனக்குப் பிறகு எதுவுமே இல்லை, வெளியானவனே! உனக்கு மேல் எதுவுமே இல்லை, உள்ளானவனே! உனையன்றி வேறெதுவுமே இல்லை.
வசனம் இரண்டு: எனக்கும், உனக்குமிடையில் ஒன்று சேர்த்து வைப்பாயாக! அதாவது என்னையும், உன்னையும் ஒன்றாக்கி வைப்பாயாக! அதாவது நீயும், நானும் ஒன்றுதான் எனும் உணர்வைத் தருவாயாக! ஐனை விட்டும் ஙெய்னை நீக்கி வைப்பாயாக! எனக்கும், உன்னல்லாதவற்றுக்குமிடையில் திரை போட்டு விடுவாயாக!
வசனம் மூன்று: அல்லாஹ் உள்ளமை கடமையானவனாக உள்ளான். அவன் தவிர வேறு எதுவுமே இல்லை. அதாவது “வாஜிபுல் வுஜூத்” ஆன அல்லாஹ் மட்டுமே உள்ளான். அவன் தவிர மற்ற எதுவுமே இல்லை.
இம் மூன்று வசனங்களையும் ஆழமாகவும், விபரமாகவும் ஆய்வு செய்தால் இம் மூன்று வசனங்களின் சாரமும் அல்லாஹ் தவிர வேறொன்றுமில்லை என்பதையே தெளிவு படுத்தும்.
وَأَزِلْ عَنِ الْعَيْنِ غَيْنَكَ
“ஐன்”ஐ விட்டும், “ஙெய்ன்”ஐ நீக்கி வைப்பாயாக என்ற வசனம் “ஐனிய்யத்”, “ஙெய்ரிய்யத்” இரண்டையும் சுட்டிக் காட்டுகிறது. “ஐனிய்யத்” எனும் அல்லாஹ்வும், படைப்பும் ஒன்றேயன்றி வேறு வேறானதல்ல என்ற நற்பாக்கியத்தை எனக்குத் தருவானாக! “ஙெய்ரிய்யத்” எனும் அல்லாஹ்வும், படைப்பும் வேறு வேறானவை என்ற துற்பாக்கியத்தை எனக்குத் தந்து விடாதே! என்பதாகும்.
மேற்கண்ட இம் மூன்று வசனமும், முதல் வசனமும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை முழுமையாக விளக்குகின்றன. இதையே ஷாதுலிய்யா “தரீகா”வை பின்பற்றுவோர் தினமும் ஓதி வருகிறார்கள்.
“வளீபா” என்ற இந்த “ஸலவாத்” ஷாதுலீ நாயகம் அவர்களின் ஞான குரு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களின் “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” என்ற ஸலவாத்தின் சுருக்கமாகும்.
இதன் மூலம் ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அபுல் ஹஸன் ஷாதுலீ நாயகம் அவர்களின் தரீகாவில் தினமும் ஓதப்பட்டு வருகின்ற “வளீபா” என்ற ஸலவாத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சுருக்கமாக பொருள் எழுதப்பட்ட மூன்று வசனங்களில் இறுதி வசனமான اللهُ وَاجِبُ الْوُجُوْدِ، وَمَا سِوَاهُ مَفْقُوْدٌ அல்லாஹ் “வுஜூத்” உள்ளமை கடமையானவனாயுள்ளான், அவனல்லாத எதற்கும் உள்ளமை கிடையாது என்ற வசனம் “வஹ்ததுல் வுஜூத்” கருத்தை தெளிவாகக் கூறுவது “நஸீப்” நற்பாக்கியமுள்ளவர்களுக்கு எளிதில் விளங்கிவிடும். “ஷரீஆ”வின் குரல் ஷாதுலீ நாயகம் அவர்களைத் தொட்டுச் சென்றதினால்தான் அவர்களின் கொள்கை பற்றி எழுதினேன். அதே குரல் இப்னு அறபீ நாயகம் அவர்களையும் தொட்டுச் சென்றதினால் அவர்களின் கொள்கை எவ்வாறிருருந்தது என்பது தொடர்பாகவும் சில வரிகள் எழுதுகிறேன்.
قال الشّيخ الأكبر محي الدين ابن عربي رحمه الله فى أكثر كتبه،
إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – فَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةِ
كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةِ
படைப்பு என்பது “கயால்” ஆகும். அது எதார்த்தத்தில் அல்லாஹ்தான். இதை அறிந்த அனைவரும் “தரீகா”வின் இரகசியத்தைப் புரிந்து கொண்டவர்களாவர்.
ஷெய்குல் அக்பர் நாயகம் அவர்களின் மேற்கண்ட இப்பாடலுக்கு ஹைதறாபாத் அஷ்ஷெய்கு முஹம்மத் அப்துல் காதிர் ஸூபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்ஹகீகா” என்ற பெயரில் அறபு மொழியில் ஒரு விரிவுரை நூல் எழுதியுள்ளார்கள். இந் நூலின் கையெழுத்துப் பிரதி என்னிடமுள்ளது. தேவையானோர் என்னிடம் வந்து பார்த்துக் கொள்ளலாம். குறித்த பாடல் வரிகள் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை கூறுவது குரல் விளங்காமற் போனாலும் அறிவுள்ளவர்கள் நிச்சயமாக விளங்குவார்கள்.
இப்பாடலுக்கான விளக்கமும், அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யித் செய்னீ தஹ்லான் அவர்களின்
اَلْكَوْنُ كُلُّهُ ظُلْمَةٌ، وَإِنَّمَا أَنَارَهُ وُجُوْدُ الْحَقِّ فِيْهِ،
என்ற பேச்சுக்கான விளக்கமும் அடுத்த தொடரில் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்!
“ஷரீஆ”வின் குரல் கண் விழிக்குமா?
அல்லது உறக்கத்திலேதான் இருக்குமா?
தொடரும்….