தொடர் 04
அல்லாஹ்வுக்கு மட்டுமே சுயமான “வுஜூத்” உண்டு.
“வுஜூத்” என்பது ஒன்றேதான். அது இரண்டில்லை.
“ஷரீஆ”வின் புதிய குரல் “வுஜூத்” இரண்டு என்று கூறுகிறது.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“ஷரீஆ”வின் குரல் தனது கையெழுத்து வேட்டையில் வெற்றி பெறுவதற்காக பிரசுரித்து வெளியிட்ட பிரசுரத்தில் ஸூபீ மகான்களில் மூவரைத் தொட்டிருந்ததால் அவர்கள் மூவரும் யார் என்பதை பொது மக்களுக்கு விளக்கி வைப்பதற்காக முந்தின தொடரில் இமாம் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ நாயகம் அவர்களின் கொள்கை பற்றிக் கூறி குரலின் குரல்வளையை உடைத்தேன்.
இப்போது அஷ்ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் அவர்களின் கொள்கை பற்றிக் கூறி குரலின் இடுப்பையும் உடைக்கிறேன்.
முதலில் ஒரு வரலாறைக் கூறி விடயத்தை எழுதினால் சுவையாக இருக்குமென்று அதை எழுதுகிறேன்.
இற்றைக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் ஹைதறாபாதில் ஒரு “குத்பு” இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்ட இந்தியா – தமிழ் நாட்டு உலமாஉகளிற் சிலர் கலந்தாலோசித்து அவர்களை சென்னைக்கு அழைப்பதென்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்தார்கள்.
மகான் அவர்கள் சென்னைக்கு வந்த பின் அங்கு உலமாஉகள் மாநாடொன்று நடந்தது. அந்த மா நாட்டில் அவர்களிடம் உலமாஉகளால் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டு அதற்கு விளக்கம் கோரப்பட்டது.
கேள்வி இதுதான். அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அவர்கள்,
إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – فَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةِ
كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةِ
(படைப்பு என்பது இல்லாத ஒன்றாகும். அது பொய்த் தோற்றமென்றும், இவ் உண்மையை அறிந்த அனைவரும் “தரீகா”வின் இரகசியத்தை பெற்றுக் கொண்டனர்) என்றும் கூறியுள்ளார்கள். இதற்கு விளக்கம் தரவேண்டுமென்று கேட்கப்பட்டது.
ஹைதறாபாத் நாயகம் அவர்கள் கேள்வி கேட்டவர்களிடம் இது தொடர்பாக விளக்கம் தருவதுடன் அறபியில் ஒரு சிறிய நூல் எழுதித் தருகிறேன் என்று கூறி அவ்வாறே செய்தார்கள். அந்த நூலின் கையெழுத்துப் பிரதியொன்று என்னிடமும் உள்ளது. தேவையானோர் நேரில் வந்து பார்த்துக் கொள்ள முடியும். அதன் பெயர் “அல்ஹகீகா”.
ஞான உலகின் தத்துவத் தந்தை இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – சர்வமும், சகல படைப்பும் “கயால்” என்று கூறினார்கள். “கயால்” என்ற அறபுச் சொல்லுக்கு சரியான, உரிய கலைச் சொல் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அதைப் பயன்படுத்த வேண்டும். எனினும் “கயால்” என்றால் என்னவென்று இங்கு நான் எழுதுகிறேன்.
ஸூபீ மகான்கள் இச் சொல்லுக்கு
كُلُّ مَا يُرَى وَلَا يُوْجَدُ فِى الْخَارِجِ بِالذَّاتِ فَهُوَ خَيَالٌ،
“எதுவெல்லாம் கண்ணுக்கு – பார்வைப் புலனுக்குத் தோற்றி எதார்த்தத்தில் தோற்றிய பொருளாக – வஸ்த்துவாக இல்லையோ அதெல்லாம் “கயால்” என்று சொல்லப்படும்” என்று வரைவிலக்கணம் கூறியுள்ளார்கள்.
இதன் சுருக்கம் என்னவெனில் ஒருவனின் கண் பார்வைக்கு ஒரு வஸ்த்து தெரிகிறதென்று வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தோற்றிய – தெரிந்த அவ் வஸ்த்து அங்கு இல்லையானால் அது “கயால்” என்று அறபியில் சொல்லப்படும். இவ்விளக்கத்தை கருத்திற் கொண்டு தமிழிலோ, வேறு மொழியிலோ என்ன சொல்லைப் பாவிப்பது பொருத்தமானதென்று பரந்து விரிந்த அறிவு ஞானமுள்ளவர்கள் முடிவு செய்து அச் சொல்லைப் பயன்படுத்துவார்கள். சொல்லர்த்தம் எதுவாயினும் விடயத்தைப் புரிந்து கொள்வதே முக்கியம்.
மேற்கண்ட வரைவிலக்கணத்திற்கு நீர்க்குமிழி, கானல் நீர், கடலலை போன்றவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம். ஸூபிஸ மகான்கள் இத் தத்துவத்தை பிறருக்குப் புரிய வைப்பதற்காக மேற்கண்ட உதாரணங்களையே பயன்படுத்துகிறார்கள். அவர்களின் கொள்கை வழியில் நானும் அவ் உதாரணங்களைச் சரி கண்டு அவற்றையே பயன்படுத்துகிறேன்.
“கயால்” என்பதற்கு கூறப்பட்ட மூன்று உதாரணங்கள் தொடர்பாக ஆய்வை சற்று விரித்துப் பார்ப்போம்.
நீரின் மேல் எழும் குமிழி “நீர்க் குமிழி” என்று சொல்லப்படும். இக்குமிழி நீரேயன்றி நீருக்கு வேறான, தனியான, சுயமான “வுஜூத்” உள்ளமையுள்ளதல்ல. குமிழிக்கு அத்தகைய தன்மைகள் கிடையாது. குமிழி என்பது எதார்த்தத்தில் – வாஸ்த்துவத்தில் நீரின் தோற்றமேயாகும். அதற்கு “வுஜூத்” உள்ளமை நீரேதான். அது நீர் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. அதற்கு غَيْرْ – “ஙெய்ர்” அல்ல.
எனினுமது கண் பார்வையில் நீருக்கு வேறான, தனியான உள்ளமை உள்ளதாக, குமிழி என்ற பெயரில் தோற்றுகிறது. குமிழியானது பெயரிலும், தோற்றத்திலும் – உருவத்திலும் நீருக்கு வேறானதுபோல் தோற்றினாலுங்கூட அது அவ்வாறான ஒன்றல்ல.
ஒரு வஸ்த்தை இன்னொரு வஸ்த்தாக காண்பதும், அறிவதும்தான் “கயால்” எனப்படுகிறது. இது “மாயை” என்றும் சுருக்கமாகச் சொல்லப்படும். எதார்த்தத்தில் நீர் மட்டும்தான் உள்ளதே அன்றி குமிழி என்பது இல்லவே இல்லை.
இதே கருத்தை ஒரு ஞானி பின்வருமாறு பாடுகிறார்.
நீரின் மேல் எழும் குமிழி
நீரேதான் இதை அறி நீ
நீருக்கு குமிழி வேறில்லை
இலாஹீ எனக்கருள் சொரிவாய்!
குமிழி போன்றதே “ஸறாப்” கானல் நீருமாகும். கானல் நீர் என்பது வெப்பத்தின் ஒரு தோற்றமாகும். இதை பாலைவனம் போன்ற சூடான, வெப்பமான பிரதேசங்களில் காண முடியும். நீர் போன்று தோற்றும். தெரியும். يَحْسَبُهُ الظَّمْآنُ مَاءً தாகமுள்ளவன் அதைக் கண்டு நீர் என்று நினைத்துக் கொள்வான் என்று திருமறை கூறுகிற்னது.
வெப்பத்தின் தோற்றமே கானல் நீர் என்று சொல்லப்படும். இந்த நீர் வெப்பமேயன்றி வெப்பத்திற்கு வேறான, தனியான, சுயமான “வுஜூத்” உள்ளமையுள்ளதல்ல. கானல் நீருக்கு அத்தகைய தன்மைகள் கிடையாது. கானல் நீர் என்பது எதார்த்தத்தில் வெப்பத்தின் தோற்றமேயாகும். இதற்கு “வுஜூத்” உள்ளமை வெப்பம்தான். அந்த உள்ளமை கானல் நீர் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல.
குமிழி, கானல் நீர் போன்றதே கடல் அலையுமாகும். ஆகையால் குமிழிக்கும், கானல் நீருக்கும் கூறப்பட்ட விளக்கம் யாவும் கடல் அலைக்கும் பொருத்தமானவையே. அதற்கு விளக்கம் எழுதத் தேவையில்லை.
மேற்கண்ட குமிழி, கானல் நீர், கடல் அலை மூன்று உதாரணங்களும் படைப்புக்கு உதாரணங்களாக கொள்ளலாம். அதேபோல் இம் மூன்றின் உள்ளமைகளான நீர், வெப்பம், கடல் நீர் மூன்றையும் படைத்தவனுக்கு உதாரணங்களாக கொள்ளலாம். கொள்ளலாம் என்று நான் கூறவில்லை. ஸூபீ மகான்கள் அவ்வாறே கொள்கிறார்கள். “அத்துஹ்பதுல் முர்ஸலா” நூல் இதற்கு ஆதாரமாகும்.
இவ்வாறு இவற்றை உதாரணங்களாகக் கொண்டு படைத்தவனையும், படைப்பையும் ஆய்வு செய்தால் படைப்பு என்பது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல என்பதும், படைப்புக்கு எதார்த்தத்தில் சுயமான “வுஜூத்” இல்லை என்பதும், படைப்பு இறைவனின் உள்ளமையின் வெளிப்பாடு – அவனின் தோற்றம் அல்லது “தஜல்லீ” என்பதும் தெளிவாகும்.
மேற்கண்ட இப்னு அறபீ நாயகம் அவர்களின் إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ படைப்பு என்பது “கயால்” ஒரு மாயை என்ற எதார்த்த அகமியமும் தெளிவாகும்.
அப்படியானால் அல்லாஹ்தான் – அவனின் உள்ளமைதான் படைப்பாகத் தோற்றுகிறது என்ற உண்மை விளங்கும்.
“நீர்” என்ற ஒரே உள்ளமை குமிழியாகவும், வெப்பம் என்ற ஒரே உள்ளமை கானல் நீராகவும், கடல் நீர் என்ற ஒரே உள்ளமை அலையாகவும் தோற்றுவது போல் அல்லாஹ்வின் ஒரேயொரு உள்ளமைதான் சர்வ பிரபஞ்சமாகவும் தோற்றுகின்றதென்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் – “மூலம் ஒன்று கோலங்கள் பல” என்ற தத்துவம், “எல்லாம் அவனே” என்ற தத்துவம் உள்ளங்கை நெல்லிக் கனி போலும், குன்றின் மேல் தீபம் போலும், வெள்ளிடை மலைபோலும் துலங்கும்.
“ஷரீஆ”வின் குரல் தொட்டுச் சென்ற, “வுஜூத்” இரண்டு என்ற தனது வாதத்தையும், “வஹ்ததுல் வுஜூத்” எல்லாமவனே என்ற ஞானத்தையும் பொய்யாக்குவதற்கு உறுதுணையாக பயன்படுத்திய மூன்று ஸூபிஸ மகான்களில் அபுல் ஹஸன் ஷாதுலீ நாயகம் அவர்களின் கொள்கை பற்றியும், இப்னு அறபீ நாயகம் அவர்களின் கொள்கை பற்றியும் எழுதினேன். இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் கொள்கை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். بَلْ هُوَ الْكُلُّ “எல்லாம் அவனே” என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றும் எழுதியிருந்தேன். இதற்கு மேல் எழுத வந்தாலும் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்! ஆயினும் இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் “இஹ்யா”வில் சொல்லியுள்ள بَلْ هُوَ الْكُلُّ என்ற வசனம் எல்லாம் அவன்தான் என்ற கருத்தை வெளிப்படையாகக் காட்டி நிற்கும் நிலையில் அதற்கு வேறு பொருள் என்று மட்டும் கூறிவிட்டு விளக்கம் கூறாமல் யாரோ ஒரு ஹஸ்றத் மழுப்பியது முறையல்ல.
முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை எங்களை “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எங்களை விட்டு வைக்காமல் கொலை செய்ய வேண்டுமென்றும் “பத்வா” எழுத்தில் தீர்ப்பு வழங்கிய அறிவிலிகளும், அநீதியாளர்களுமாவர்.
தற்போது அவர்களின் கையைப் பலப்படுத்தும் பாணியில் எங்களுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளவர்கள் நமது நாட்டிலுள்ள “ஷரீஆ கவுன்ஸில்” நிர்வாகிகளும், அதன் தலைவர், செயலாளரான மரியாதைக்குரிய உலமாஉகளே யாவர். இவர்கள் “றுகுனு குமாரி” வேகத்தில் தற்போது எனக்கு எதிராக பிரசுரம் அடித்து அதை உலமாஉகளிடமும், அறபுக் கல்லூரி அதிபர்களிடமும், தரீகாவின் ஷெய்குமார்களிடமும் காட்டி எனக்கு எதிராக கையெழுத்து எடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
என்னைப் பொறுத்து இவர்கள் வெளிரங்கத்தில் எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் “ஹகீகத்” எதார்த்தத்தில் அல்லாஹ்வுக்கும், றஸூலுக்கும், ஸூபிஸ மகான்களுக்கும், அவ்லியாஉகளுக்கும் எதிராகவே நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இவர்கள் எடுத்துள்ள கையெழுத்து விவகாரத்தில் தில்லு முல்லும், இருட்டடிப்பும் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக நாங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தால் பலர் நீதிப் பிடிக்குள் மாட்டிக் கொள்ள நேரிடும். மேலுமவர்கள் நீதிவானால் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதற்கும் சாத்தியமுண்டு. விபரம் பின்னர் எழுதப்படும்.
தொடரும்…