Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்المُنْكِرَ لوحدةِ الوجود مُثبِتٌ لكثرة الوجود “வுஜூத்” ஒன்று என்பதை...

المُنْكِرَ لوحدةِ الوجود مُثبِتٌ لكثرة الوجود “வுஜூத்” ஒன்று என்பதை மறுப்பவன் “வுஜூத்” அதிகம் என்று நம்புகிறான்.

தொடர் 06

அல்லாஹ்வுக்கு மட்டுமே சுயமான “வுஜூத்” உண்டு.

“வுஜூத்” என்பது ஒன்றேதான். அது இரண்டில்லை.

படைப்பு என்பது இருள் போன்று இல்லாததே!

“ஷரீஆ”வின் புதிய குரல் “வுஜூத்” இரண்டு என்று கூறுகிறது.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

மேற்கண்ட தலைப்பில் கடந்த தொடரில் பல குறிப்புக்கள் எழுதியிருந்தேன். எழுதிய குறிப்புக்கள் யாவும் இமாம் ஸெய்னீ தஹ்லான் அவர்களின் “தக்ரீபுல் உஸூல்” என்ற நூல் 145ம் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இவர்கள் எழுதிய விளக்கம் இப்னு அதாயில்லாஹ் அவர்களின் “ஹிகம்” என்ற நூலில் வந்துள்ள

اَلْكَوْنُ كُلُّهُ ظُلْمَةٌ، وَإِنَّمَا أَنَارَهُ ظُهُوْرُ الْحَقِّ فِيْهِ،
“படைப்பு யாவும் இருள் – இல்லாதவை, அவற்றை ஒளிரச் செய்தது அவற்றில் அல்லாஹ் வெளியாகியிருப்பதேயாகும்” என்ற வசனத்திற்குரிய விளக்கமாகும்.

எனினும் இமாம் ஸெய்னீ தஹ்லான் அவர்களின் மேற்கண்ட அறபு வசனங்களுக்குரிய முழு விளக்கமும் நான் எழுதவில்லை. அவற்றுக்கான விளக்கத்தை தனித் தலைப்பில் வேறு விபரங்களுடன் சேர்த்து எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!

செய்னீ தஹ்லான் அவர்கள் மேலும் எழுதியுள்ள ஒரு விளக்கத்தையும் இத் தொடரில் எழுதுகிறேன்.

கடந்த தொடரில் நான் எழுதிய நபீ மொழியொன்றில் فَبِيْ عَرَفُوْنِيْ என்னைக் கொண்டே என்னை அறிந்தனர் என்று ஒரு வசனம் வந்துள்ளது. இது மேற்கண்ட ஹதீதுக் குத்ஸியின் இறுதி வசனமாகும்.
قال بعضهم فى عددِه اثنان وتسعون، وعددُ اسمِ محمد صلّى الله عليه وسلّم أي بمحمد صلى الله عليه وسلّم عرفوني، فهو أوّل مظهرٍ ظهرَ فيه،
“முஹம்மத் என்ற பெயரில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. “மீம்”, “ஹே”, “மீம்”, “தால்”. இவற்றில் “அப்ஜத்” கணக்கின் படி “மீம்” என்பதற்கு 40 உம், “ஹே” என்பதற்கு 08 உம், “மீம்” என்பதற்கு 40உம், “தால்” என்பதற்கு 04 உம் மொத்தமாக 92 ஆகும்.

ஹதீதில் வந்தள்ள فَبِيْ என்ற சொல்லில் மூன்று எழுத்துக்கள் உள்ளன. “பே”F, “பே”B, “யே” இவற்றில் “அப்ஜத்” கணக்கின்படி “பேF” என்பதற்கு 80 உம், “பேB” என்பதற்கு 02 உம், “யே” என்பதற்கு 10 உம் மொத்தம் 92 ஆகும்.

இதன்படி فَبِيْ என்பதற்கு முஹம்மதைக் கொண்டு என்னை அறிந்தனர் என்று விளக்கம் வரும்.
(தக்ரீப்: 145ம் பக்கம்)

இது ஒரு தத்துவமாகும்.

என்னைக் கொண்டு என்னை அறிந்தனர் என்றால் நான் படைப்பாக “தஜல்லீ” வெளியானதினால்தான் எனது படைப்பான வெளிப்பாட்டைக் கொண்டும், கண்டும் மக்கள் என்னை அறிந்து கொண்டனர் என்பதாகும். இவ்வாறு சொன்னவன் அல்லாஹ்தான். இது ஹதீது குத்ஸீ வசனமாகும்.

மண்ணால் செய்த பானையில் மண்ணைக் காணாமல் வேறெதைக் காணலாம்? தங்கத்தினாலான நகையில் தங்கத்தைக் காணாமல் வேறெதைக் காணலாம்? பஞ்சாலான துணியில் பஞ்சைக் காணாமல் வேறெதைக் காணலாம்?

“வுஜூத்” உள்ளமை என்பது ஒன்றுதான். அது இரண்டுமல்ல, பலதுமல்ல. அது ஒன்றுக்கு மேற்பட்ட பலதென்றால் கணனிக்கும் அடங்காத கோடான கோடி “வுஜூத்”கள் இருக்க வேண்டும். சிற்றெறும்பிலிருந்து டைனோஸர் மற்றும் யானை வரை ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வொரு “வுஜூத்” வேண்டும்.

“வுஜூத்” என்ற “ஸிபத்” அல்லாஹ்வில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்றாகும். இது அவனுக்குரிய – அவனில் அவசியம் இருக்க வேண்டிய இருபது அம்சங்களில் மிகப் பிரதான அம்சமாகும். இதனால்தான் وَاجِبُ الْوُجُوْدِ என்று இதற்கு பெயர் வரலாயிற்று. எது அந்த உள்ளமைக்கு அவசியமானதோ அது படைப்பில் இருக்க முடியாது. ஆயினும் அதற்கு எதிரானது – அந்த உள்ளமைக்கு எதிரானது நிச்சயமாக படைப்பில் இருக்கும். “வுஜூத்” என்ற உள்ளமைக்கு எதிரானது “அதம்” எனும் இல்லாமையேயன்றி வேறொன்றுமில்லை. ஆகையால் “அதம்” இல்லாமை படைப்புக்கு அவசியமாயிற்று. இதனால்தான் “முதகல்லிமீன்” என்போர் படைப்புக்கு “வாஜிபுல் வுஜூத்” என்று சொல்லாமல், “மும்கினுல் வுஜூத்” “வுஜூத்” சாத்தியமானதென்று பெயர் சொல்கிறார்கள்.

“முதகல்லிமீன்”களும், “ஸூபீ”களும்.

“முதகல்லிமீன்” என்பவர்களுக்கும், “முதஸவ்விபீன்” என்பவர்களுக்கும் இறை கொள்கை தொடர்பாக சிறிய அளவிலான வித்தியாசம் சில விடயங்களைப் பொறுத்து மட்டும் உள்ளது.

உதாரணமாக ஸூபீ மகான்களில் உச்சக்கட்ட “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைவாதிகள் “தாத்”தும், “வுஜூத்” உம் ஒன்றென்றே சொல்வர். அது வேறு இது வேறென்று சொல்வதில்லை. இவர்களல்லாத ஏனையோர் “தாத்” வேறு, “வுஜூத்” வேறு என்று சொல்வர். இதன்படி “தாத்”திற்கு “வுஜூத்” உள்ளமை என்பது “ஸிபத்” என்று கூறுவர்.

இதனால்தான் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான “ஸிபத்” தன்மைகளில் ஒன்றாக “வுஜூத்” உள்ளமையை சேர்த்துள்ளார்கள். “முதகல்லிமீன்”கள் “வுஜூத்” உள்ளமை என்பதை “தாத்”திற்குரிய “ஸிபத்” தன்மையென்று சொல்வார்கள். கவுன்ஸில் பிரசுரத்தில் எழுதிக் காட்டிய ஐந்து நூல்களும் முதகல்லிமீன்களின் நூல்களேயாகும்.

நான் அறிந்தவரை, எனது ஆய்வுக்கு எட்டிய வரை “தாத்” என்பதும், “வுஜூத்” என்பதும் இரண்டும் ஒன்று என்பதேயாகும். “வுஜூத்” உள்ளமை என்பது صِفَةٌ نَفْسِيَّةٌ என்று அழைக்கப்படுவதற்கான காரணம் இதில் மறைந்துள்ளது. இதை ஒருவன் விளங்கிக் கொண்டால் எது சரி? எது பிழை? என்பதை அறிந்து கொள்வான். இந்த விபரத்தை மகான்களிடம் கேட்டால் புரியும். என்னைப் பொறுத்த வரையும், நான் அறிந்த வரையும் இரண்டும் ஒன்றென்பதே பொருத்தமானதென்று நான் நினைக்கிறேன். எனினும் இக்கருத்து வேறுபாட்டைக் கருத்திற் கொண்டும், கருவாகக் கொண்டும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை வாதிகளுக்கிடையில் எந்த ஒரு பிரிவினையும் ஏற்படக் கூடாதென்று அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இது சிறிய கருத்து வேறுபாடுதான்.

இன்று “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை வாதிகளிடமும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகளிடமும், “தரீகா”வாதிகளிடமும் சின்னச் சின்ன அற்ப விடயங்களால் கருத்து வேறுபாடு ஏற்படும் போது அவர்கள் பல கூட்டங்களாகப் பிரிந்து பலமிழந்து போய்விடுகிறார்கள். இதனால் பல குழுக்களாகப் பிரியும் ஒவ்வொரு குழுவும் பலமிழந்து போய் விடுகின்றன. இவ்வாறு நாம் பிரியும் போது இச்சந்தர்ப்பத்தை எதிரிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதை நாம் தவிர்க்க வேண்டும். சங்கைக்குரிய ஷெய்குனா அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் (பத்வா வழங்கப்பட்ட பின்) என்னுடன் மிக நெருங்கியிருந்தார்கள். எனக்கே எழுந்து நின்று கண்ணியம் செய்வார்கள் என்றால் அவர்களின் உயர் பண்பு பற்றி நான் சொல்ல வேண்டுமா?

அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் கண்டியிலுள்ள முரீதுகளுக்கும், காத்தான்குடியிலுள்ள முரீதுகளுக்கும் எனது மறைவுக்குப் பிறகு மார்க்க விடயமாகவோ, இறைஞான விடயமாகவோ உங்களுக்கு ஏதாவது விளக்கம் தேவையென்றால் றஊப் மௌலவீயிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிய போது உயிருடன் இருந்த முரீதுகள் இப்போதும் இருக்கிறார்கள்.

மார்க்கப் பிரச்சினை வெடித்த பின் மௌலானா வாப்பா என்னை முதலாவதாகச் சந்தித்த போது அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான். மகன்! நீங்கள் “தஜல்லீ” பற்றியா பேசினீர்கள்? என்று மட்டுமே கேட்டார்கள். ஆம், என்றேன். அவ்வளவுதான். வேறொரு விபரமும் அவர்கள் கேட்கவில்லை.

மார்க்கப் பிரச்சினை ஆரம்பித்த காலத்தில் ஒரு நாள் என்னை முஹ்யித்தீன் தைக்காவுக்கு அழைத்து அதற்கு எதிரில் உள்ள மௌலவீ பத்றுஸ்ஸமான் அவர்களின் வீட்டிற்குச் செல்லும் ஒழுங்கைக்கு என் கை பிடித்தவர்களாக அழைத்துச் சென்று மகன்! நான் காத்தான்குடி வருவதால் எனக்கு ஒரு பைஸா கூட கிடைக்காது போனாலும் உண்மைக்கு மாறாக சொல்லமாட்டேன் என்பதை நீங்கள் நம்புங்கள் என்று கூறினார்கள்.

மௌலானா வாப்பா அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் அவர்களின் முரீதுகளில் ஒருவர் கூட எனக்கு எதிராகவோ, கொள்கைக்கு எதிராகவோ இயங்கியது கிடையாது.

எனினும் தற்போது அந்தக் கட்டுக் கோப்பு சிதறி சின்னாபின்னமாகியிருப்பது இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய ஒன்றாகிவிட்டது. இந்தப் பிளவுக்கு எவர் காரணமோ அவர்தான் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும்.

வுஜூத் – உள்ளமை

“வுஜூத்” ஒன்றா இரண்டா என்ற விவகாரத்தில் எந்த ஒரு ஸூபீயும் இரண்டென்றோ, பலதென்றோ சொன்னதற்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை. எனினும் இலங்கையிலுள்ள ஷரீஆ கவுன்சில் மட்டுமே “வுஜூத்” உள்ளமையை இரண்டாகப் பிரித்து அல்லாஹ்வுக்கு ஒன்று என்றும், படைப்புக்கு ஒன்று என்றும் குரங்குப் பிடி அல்லது உடும்புப் பிடி பிடித்து நிற்கிறது. உலக வரலாற்றில் பல “வுஜூத்” என்று சொன்னது “ஷரீஆ” கவுன்சில் மட்டுமேயாகும். இக் கவுன்சிலை வழி நடாத்தும் மகான்கள் “முதகல்லிமீன்”களால் எழுதப்பட்ட நூல்களையும் பார்க்க வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நூறுள்ளலாம், ஸனூஸீ பாஜூரீ, ஜவ்ஹறதுத் தவ்ஹீத், அகாயிதுன் நஸபீ போன்ற முதகல்லிமீன்களின் நூல்களை மட்டும் பார்த்து விட்டு “பத்வா” கொடுக்க முன் வராமல் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, அப்துல் கரீம் அல் ஜீலீ, இப்றாஹீம் தஸூகீ, ஷெய்கு அஹ்மதல் பதவீ, ஷுஐப் அபூ மத்யன் அல் மக்ரிபீ, அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ, ஹாரிதுல் முஹாஸபீ போன்ற ஸூபீ மகான்களின் நூல்களையும் வாசிக்க வேண்டுமென்றும் அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஷரீஆ கவுன்ஸில் கையெழுத்து வேட்டைக்காக விஷேட துண்டுப் பிரசுரமொன்று அச்சிட்டு வினியோகித்து நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை அஷ்அரிய்யா கொள்கைக்கு முரணானதென்று பொய்ப் பிரச்சாரம் செய்து உலமாஉகளையும், ஷெய்குமார்களையும் ஏமாற்றி கையெழுத்துப் பெற்று வருகிறார்கள்.

ஷரீஆ கவுன்ஸில் கையெழுத்து வேட்டைக்காக இல்லாத, பிழையான செய்திகளை எழுதி விஷேடமாகத் தயாரித்து வெளியிட்ட பிரசுரத்தில் “எங்களுடைய இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ” என்று கூறியுள்ளது. இமாம் அஷ்அரீ அவர்களை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். இந்த உண்மையை மறைத்து, அவர்களுக்கு மட்டும்தான் அஷ்அரீ இமாம் சொந்தம், எங்களுக்கு அவர்கள் இமாம் இல்லை என்ற பாணியில் மக்களை எங்களுக்கு எதிராக திருப்புவதற்காக எங்களுடைய இமாம் என்ற வசனத்தைப் பயன்படுத்தியிருப்பது இவர்களின் உள்ளத்தை விட்டும் பொறாமையென்ற மலம் இதுவரை வெளியேறவில்லை என்பதற்கு ஓர் ஆதாரமாகும்.

பொறாமை எனும் அசூசியை உள்ளத்தில் சுமந்து கொண்டு ஷரீஆ கவுன்சில் என்ற பெயரில் ஆட்சி புரிபவர்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கிறேன். இவ்விரண்டுக்கும் இவர்கள் தெளிவான பதில் கூற வேண்டும். பதில் சொல்ல முடியாமற் போனால் திசை மாறி அல்லது மாற்றிப் பறக்க முற்படாமல் لَا أَدْرِىْ எனக்குத் தெரியாதெனக் கூறி தனது இயலாமையை ஏற்றுக் கொண்டால் போதும்.

கேள்வி ஒன்று: இமாம் அஷ்அரீ அவர்கள் எங்களுடைய இமாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வாறாயின் நீங்களும், உலமா சபையும் ஏன் அவர்களைப் பின்பற்றவில்லை. அவர்கள் உங்கள் போல் யாருக்காவது “முர்தத்” என்று “பத்வா” வழங்கியதற்கு ஆதாரம் உண்டா?

அவர்கள் சொல்வதைப் பாருங்கள் தங்களின் வாழ்வில் ஒருவருக்குக் கூட “முர்தத்” பத்வா கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
نقل الشّيخ أبو طاهر القزويني رحمه الله فى كتابه سراج العقول عن أحمد بن زاهر السَّرخسي اَجَلِّ أصحابِ الشّيخ أبى الحسن الأشعريّ رحمه الله قال (لمّا حضـرتِ الشّيخَ أبا الحسن الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لي اِجمعْ أصحابي، فجمعتُهم، فقال لنا ، اِشْهدُوا أنِّيْ لا أقولُ بِتَكْفِيْرِ أحدٍ من أهلِ القِبلة، لِأَنِّيْ رأيتُهم كلَّهم يشيرون إلى معبودٍ واحد، والإسلام يشملُهم ويعمُّهم، (اليواقيت، ج أوّل، ص 21(

கேள்வி இரண்டு: எந்த ஒரு வஸ்த்து உண்டாவதாயினும் அது இன்னொன்றிலிருந்தே உண்டாக வேண்டும். இது ஸூபிஸ தத்துவம் மட்டுமல்ல. உலகின் பொது தத்துவமுமாகும்.

இன்னொன்றிலிருந்து உண்டாகாமல் தனக்குத் தானாய் உண்டான ஒன்றிருக்குமாயின் அது இறைவன் – கடவுளாக மட்டுமே அது இருக்க வேண்டும். அவன் மாத்திரமே இன்னொன்றிலிருந்து உண்டாகாமல் தனக்குத் தானாய் உண்டானவனாவான். இவ்வாறு தத்துவம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இறைவனுக்கு ஒரு உள்ளமையும், படைப்புக்கு ஒரு உள்ளமையும் உண்டு என்று சொல்வது மிகப் பயங்கரமான முடிவாகும். அதாவது இந்த முடிவு “ஷிர்க்” இணை வைத்தலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

அது எவ்வாறெனில் உள்ளமை இரண்டு என்று சொல்லும் கவுன்ஸிலிடம் நான் கேட்க விரும்புவது என்னவெனில் படைப்புக்கு உள்ளமை உண்டு என்றால் அந்த உள்ளமை அல்லாஹ்வின் உள்ளமை போல் தனக்குத் தானாய் உண்டான, தனியான, சுயமான உள்ளமையா? இல்லையா? என்று அந்த கவுன்ஸில் மகான்களிடம் கேட்போம். அது அல்லாஹ்வின் உள்ளமை போன்றதே என்று அவர்கள் பதில் கூறினால் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களே! அவர்கள் திருக்கலிமாவை மொழிந்து முஸ்லிம் ஆக வேண்டும்.

ஏனெனில் அல்லாஹ்வின் உள்ளமை போன்ற சுயமான உள்ளமை படைப்புக்கு உண்டு என்பது “ஷிர்க்” அல்லாஹ்வுக்கு இணை வைத்தலை ஏற்படுத்திவிடும்.

அல்லாஹ்வுக்கு மட்டுமுள்ள ஒரு தன்மை படைப்புக்கு உண்டு என்று ஒருவன் சொன்னால் அவன் அல்லாஹ்வுக்கு அப்படைப்பை ஒப்பாக்கி விட்டான். இச் செயல் “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்திவிடும்.

அந்தக் கவுன்ஸிலின் மகான்கள் படைப்பின் “வுஜூத்” – உள்ளமை அல்லாஹ்வின் உள்ளமை போன்றதல்ல என்று அவர்கள் சொன்னால் அந்த உள்ளமைக்கு கரு எது? அந்த உள்ளமை எதிலிருந்து வந்ததென்று அந்த மகான்களிடமே கேட்க வேண்டும். அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பதை அறிந்து அவர்கள் யாரென்று சொல்வோம்.

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments