Monday, May 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர், செயலாளர், மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர், செயலாளர், மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு!

“தஸவ்வுப்” எனும் ஸூபிஸம் பேசிய எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்ட இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற பல மில்லியன் முஸ்லிம்களுக்கும் நீங்கள் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கினீர்கள். இது நடந்து 42 வருடங்கள் கடந்து விட்டன.

நீங்கள் மேற்கண்டவாறு தீர்வு வழங்கியது “ஷரீஆ”வின் சட்டத்துக்கு முற்றிலும் முரணானதாகும். “பத்வா” வழங்குவதற்கு “ஷரீஆ” சட்டத்தில் பல விதிகள் உள்ளன. அவற்றைப் பேணி நீங்கள் தீர்ப்பு வழங்கவில்லை. அதோடு ஒருவரை மதம் மாற்றி “பத்வா” வழங்குவதற்கு அரசாங்கம் உங்களுக்கு அனுமதி தரவுமில்லை. அரசின் அனுமதியில்லாமலேயே பல மில்லியன் மக்களை கொலை செய்துள்ளீர்கள்.

என்னையும், மற்றவர்களையும் “முர்தத்” என்று “பத்வா” வழங்குவதற்கு நீங்கள் கூறியுள்ள ஆதாரங்களில் ஒன்று கூட நான் குற்றவாளி என்று நிறுவுவதற்கான ஆதாரமில்லை.

நீங்கள் கூறியுள்ள ஆதாரங்கள் யாவும் “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகெட்ட கொள்கை பிழையென்பதற்கான ஆதாரங்களேயாகும். இந்த வகையில் மட்டும் உங்களின் “பத்வா” சரியானதே! நானும் சுமார் 50 ஆண்டுகளாக குறித்த “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்றே பேசியும், எழுதியும் வந்துள்ளேன். வழிகெட்ட கொள்கையை நீங்கள் பகிரங்கமாக ஆதாரங்களுடன் மறுத்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

எனினும் வழிகேட்டிற்கு எதிராக நீங்கள் வழங்கிய தீர்ப்பில் “வஹ்ததுல் வுஜூத்” எனும் ஸூபீ மகான்கள் கூறிய இறைஞானம் பேசிய எனது பெயரைக் குறிப்பிட்டது முற்றிலும் பிழையாகும்.

நான் பேசிய, பேசியும் வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பிழையென்று நீங்கள் சொல்வீர்களாயின், இதுதான் உங்களின் கொள்கையுமாயின் அதற்கான ஆதாரங்களுடன் ஒரு “பத்வா” வெளியிட்டு அதில் என் பெயரைக் குறிப்பிடுங்கள். உங்கள் “பத்வா” சரியானதாயின் நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

நீங்கள் அவ்வாறு ஒரு “பத்வா” வழங்க விரும்பினால் “பத்வா” எழுதும் குழுவில் உங்களின் “முப்தீ”களுடன் நான் தருகின்ற மார்க்க அறிஞர்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆய்வு செய்து எடுக்கும் முடிவை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஒரு நிபந்தனை நான் கூறுவதற்கான காரணம் என்னவெனில் நான் தருகின்ற மார்க்க அறிஞர்கள் பல்கலைக் கழகங்கள் செல்லாத பண்டிதர்களும், பல்கலை கற்றவர்களும், சுமார் 35 வருடங்களுக்கு மேலாக “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மிக ஆழமாக ஆய்வு செய்த அறிஞர்களுமாவர்.

உங்களின் “பத்வா” குழுவில் திறமையுள்ளவர்கள் இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை. எனினும் நான் அறிந்த வகையில் உங்களின் “பத்வா” குழுவில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பான அறிவு ஞானமுள்ள ஒருவர் கூட இல்லை என்பதே எனது கணிப்பும், அபிப்பிராயமுமாகும். இதற்கு ஆதாரம் உங்களின் “பத்வா”தான்.

ஆகையால் அவர்களுடன் நான் தருகின்ற மார்க்க அறிஞர்களும் இணைந்து எடுக்கும் முடிவு نُوْرٌ عَلَى نُوْرٍ “நூறுன் அலா நூர்” ஒளிக்கு மேல் ஒளியாக அமையுமென்று நான் கருதுகிறேன்.

நீங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று “பத்வா” தீர்ப்பு வழங்கி, அத்தீர்ப்பில் அதே கொள்கை பிழையென்று 50 ஆண்டுகளாக பேசியும், எழுதியும் வருகின்ற எனது பெயரைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதனால் படிப்பறிவில்லாத, அது இருந்தும் கூட விபரம் தெரியாத பொது மக்கள் எதைச் சரி காண்பது? எதைப் பிழை காண்பது? என்று தெரியாமல் தடுமாறுகின்றார்கள். அதோடு சமூக நடைமுறைச் சிக்கல்களையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். பொது மக்களில் நூறு வீதமானோர் உங்கள் “பத்வா”வை சரி கண்டவர்களுமில்லை, அதேபோல் எனது கருத்தைச் சரி கண்டவர்களுமில்லை. ஆயினும் பொது மக்களிலும், படித்தவர்களிலும் ஸூபிஸ தத்துவத்திற்கு ஆதரவானவர்களும், அதை அறிய வேண்டுமென்ற தாகம் உள்ளவர்களும் கணிசமான அளவு இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இதை நீங்களும் அறிவீர்கள். ஏற்றும் கொள்வீர்கள்.

மேற்குறித்த இத்தகையோர் ஸூபிஸ தத்துவத்தை அறிந்து கொள்வதற்கு உங்கள் “பத்வா” தடையாக உள்ளது. பொது மக்கள் என்னைச் சந்திப்பதற்கும் தடையாக உள்ளது. பொது மக்களின் சுதந்திரம் உங்கள் “பத்வா”வினால் பாதிக்கப்படுகின்றது. திருமண வீட்டில் குழப்பம் ஏற்படுகிறது. “மையித்” வீட்டில் பிரச்சினை தலை தூக்குகிறது. எத்தனையோ திருமணங்கள் விவாகரத்தில் முடிந்துள்ளன. இன்னும் சில திருமணங்கள் “காழீ” நீதி மன்றில் தவணையில் உள்ளன.

இத்தகைய சீர்கேடுகளுக்கெல்லாம் உங்கள் “பத்வா”தான் காரணமாக உள்ளது. உங்கள் போன்ற அறிவிலிகளை இவ் இலங்கை நாட்டில் தவமிருந்து தேடினாற் கூட எடுக்க முடியாது. உங்களின் “பத்வா”வினால் சங்கடத்திற்குள்ளான பலர் இன்றுவரை கவலைக் கண்ணீர் வடித்து இறை வணக்கத்தின் போது உங்களைத் திட்டித் தீர்க்கின்றார்கள். என்றாவதொரு நாள் அவர்களின் சாபம் பலிக்கும் என்பதை எதிர்பார்த்திருங்கள்.

அவசரப்பட்டு தவறாக “பத்வா” வழங்கி தடுமாறும் உங்களுக்கும், உங்களின் தன்மானத்திற்கும் பங்கம் ஏற்படாத வகையில் “பத்வா”வை நீங்கள் வாபஸ் பெற நான் வழி சொல்லித்தருகிறேன். வாருங்கள் என்று உங்களை அழைத்தேன். நீங்கள் வரவில்லை. என் அழைப்பு உங்களின் செவிகளுட் செல்லவில்லை.

உங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் தெரியாது. உங்களின் வாழ்நாளை நீங்கள் வீணாக்கிவிட்டீர்கள். என்னிடம் வந்து சில நாட்கள் தங்கியிருங்கள். ஸூபிஸ ஞானம் நான் சொல்லித் தருகிறேன். உங்களுக்கு தங்குமிட வசதியும், மூன்று வேளை உணவும், தேவையானால் போக்குவரத்துச் செலவும் தருகிறேன் என்று கூறி உங்களை அழைத்தேன். எனது இவ் அழைப்பும் கூட உங்கள் செவிகளுட் செல்லவில்லை.

நீங்கள் என் மூலம் இவ் அறிவைக் கற்றுக் கொள்ள விரும்பவில்லையானால் உங்களின் “பத்வா”வுக்கு நீங்கள் ஆதாரமாக எடுத்த கிதாபுகள் – நூல்களை உங்களிடமே நான் தந்து அவற்றைப் பொது மக்கள் மத்தியில் நீங்களே வாசித்து விளக்கம் சொல்லுங்கள் என்றும் கூறியிருந்தேன். எனது எந்த ஓர் அழைப்பும் உங்களின் செவிகளுட் செல்லவில்லை. ختم الله على قلوبكم وعلى سمعكم وعلى أبصاركم غشاوة

தலைவர் ரிஸ்வி அவர்கள், “நாங்கள் கொடுத்த எந்த ஒரு “பத்வா”வும் வாபஸ் பெறப்பட்டதற்கு வரலாறே இல்லை” என்று மார்தட்டினாரேயன்றி ஸூபிஸ ஞானம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று அவரும் விரும்பவில்லை. நீங்களும் விரும்பவில்லை.
قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا، فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا،
நான் எனது கூட்டத்தாரை இரவு பகலாக அழைத்தேன். என் அழைப்பு அவர்களை விரண்டோடச் செய்ததேயன்றி வேறில்லை. (திருமறை 71 – 5, 6)

ஸூபிஸ ஞானத்தில் “நஸீப்” நற்பாக்கியம் இல்லாதவர்கள் தேடியலைந்து பெற வேண்டிய ஸூபிஸ ஞானத்தை சகல வசதிகளும் செய்து தந்து சொல்லித் தருகிறேன் என்று நான் அழைத்தும் கூட நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில் உங்கள் போல் நற்பாக்கியமற்றவர்கள் இந் நாட்டில் இருக்கவேமாட்டார்கள்.

உலமா சபைகளின் தாய்ச் சங்க உறுப்பினர்களே!

சில நாட்களாக உங்களின் சத்தமே இல்லாமலிருக்கின்றது. ஆயினும் புதிதாக இரு மகான்கள் தோன்றியுள்ளார்கள். ஒருவர் “பத்தாஹீ”, மற்றவர் “ஹஸனீ”. இவ்விரு மகான்களும் உங்களால் நியமிக்கப்பட்டவர்கள் என்று பொது மக்கள் பேசிக் கொள்கின்றார்கள். இவர்கள் இருவரும் பல கலைகளில் திறமையுள்ளவர்களாக இருக்கலாம். ஆயினுமிவர்கள் இருவரும் “தஸவ்வுப்” ஸூபிஸக் கலையில் பேசப்படுகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தில் “சீறோ”வாகவே உள்ளனர். ஒன்றுமே தெரியாத சிறு பிள்ளைகள் போல் பேசுகிறார்கள். இதுகால வரை நீங்கள் சொல்லாத, ஸூபிஸத்துக்கு மாறான கருத்துக்கள் கூறி மக்களை வழிகேட்டின் பக்கம் திசை திருப்புகிறார்கள். இவர்களை உடனே நிறுத்துங்கள். இவர்களின் முரணான கருத்துக்களுக்கு பின்னால் நான் விளக்கம் எழுதியுள்ளேன். இவர்கள் தமது வழிகேட்டைத் தொடர்ந்தால் இன்னும் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!

‘ஜீலீ’ மகானை தூக்கியெறிந்துள்ளார்.

ஸூபிஸ மகான்களில் ஒருவரும், ஸூபிஸ வானில் மறையாத் தாரகையும், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் பெண் மக்கள் வழி வந்த பேரரும்,
الإنسان الكامل، النادرات العينيّة، المناظر الإلهيّة، الكَهْفُ والرَّقِيْمُ، جنّة المعارف، القاموسُ الأقدَم، قطبُ العجائب، مراتب الوجود، الكمالات الإلهيّة، لوامعُ الفرق،
முதலான நூல்களின் ஆசிரியருமான அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் (ஹிஜ்ரீ 767 – 826) அவர்கள் தங்களின் நூல்களில் “தஷ்பீஹ்” என்ற தனித் தலைப்பிலேயே அது பற்றி எழுதியிருக்கும் நிலையில் அவர்களைத் தூக்கியெறிந்து பேசுகிறார் உங்களால் நியமிக்கப்பட்ட “ஷரீஆ கவுன்ஸில்” ஐ சேர்ந்த இந்த மகான். அந்த மகானைத் தூக்கியெறிய இந்த மகான் யார்?

அந்த மகானின் கொள்கை குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதை இந்த மகான் அறிந்து அவருக்கு உரிய இடம் கொடுத்துப் பேச வேண்டும்.
يرى الجيلي أنّه لا موجودَ فى الكَون لِغَيْر الله تعالى، والإنسانُ جزءٌ منه، أو هو صورةٌ من صُوَرِ الله، واللهُ عينُ الموجودات، وكلُّ ما يفعله الإنسانُ هو فعلُ الله،
ஜீலீ அவர்களின் கொள்கை என்னவெனில் அல்லாஹ்வின் படைப்பில் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளமை உண்டு. வேறு எவருக்கும் “வுஜூத்” உள்ளமை கிடையாது. மனிதனும் அந்தப் படைப்புக்களில் ஓர் அங்கமாவான். அல்லது அல்லாஹ்வின் உருவங்களில் ஓர் உருவமாவான். அல்லாஹ் படைப்புக்கள் தானானவனாகவே உள்ளான். மனிதன் செய்கின்ற எச் செயலாயினும் அது அல்லாஹ்வின் செயலே.

உங்களால் நியமிக்கப்பட்ட மகான், அப்துல் கரீம் அல் ஜீலீ அவர்களை தூக்கியெறிந்ததோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் 900க்கும் மேற்பட்ட ஞானக் களஞ்சியங்களையும், அல்புதூஹாதுல் மக்கிய்யா, புஸூஸுல் ஹிகம் முதலான உலக அறிஞர்களையே வியக்க வைத்த நூல்களையும் எழுதியவரும், “அத்தஷ்பீஹ்” என்ற தலைப்பில் பல நூல்களில் எழுதியவருமான அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு (560 – 638 ஹிஜ்ரீ) அவர்களை நீங்கள் நியமித்த மகான் குத்பு, வலீ, சித்தீக் என்றெல்லாம் ஏற்றுக் கொள்வதுடன் அவர்களின் நூல்களில் ஈமானைப் பறிக்கும் கருத்துக்கள் இருப்பதாக எழுதியுள்ளார். இவர்களும் ஏனைய ஸூபீ மகான்கள் போல் தன்ஸீஹ் – தஷ்பீஹ் இரண்டையும் பேசியவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

“தஷ்பீஹ்” என்று ஒன்றில்லை என்றும், அது தவறானதென்றும் கூறுகின்ற உலமா சபையின் வலது கையான “ஷரீஆ கவுன்ஸில்” ஐ சேர்ந்த மகான் அவர்களுக்கு மகான் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” தொடர்பாகக் கூறியுள்ள கருத்தை இங்கு எழுதிக் காட்டுகிறேன்.

فَإِنْ قُلْتَ بِالتَّنْزِيْهِ كُنْتَ مُقَيِّدًا – وَإِنْ قُلْتَ بِالتَّشْبِيْهِ كُنْتَ مُحَدِّدًا
فَإِنْ قُلْتَ بِالْأَمْرَيْنِ كُنْتَ مُسَدِّدًا – وَكُنْتَ إِمَامًا فِى الْمَعَارِفِ سَيِّدًا
فَمَنْ قَالَ بِالْإِشْفَاعِ قَدْ كَانَ مُشْرِكًا – وَمَنْ قَالَ بِالْإِفْرَادِ كَانَ مُوَحِّدًا
وَإِيَّاكَ وَالتَّشْبِيْهَ إِنْ كُنْتَ ثَانِيًا – وَإِيَّاكَ وَالتَّنْزِيْهَ إِنْ كُنْتَ مُفْرِدًا

“தன்ஸீஹ்” என்பதை மறுத்த மகான் இந்தப் பாடலைக் கவனத்திற் கொண்டு செயல்பட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன். ஆழமறியாமற் கால் வைப்பதையும் தவிர்க்க வேண்டுமென்றும் அவருக்கு ஆலோசனை வழங்குகிறேன்.

ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்கண்ட பாடலில் சொல்வதை நாம் கவனிப்போம். குறிப்பாக ஷரீஆ கவுன்ஸில் மகான் கவனிக்க வேண்டும்.

“தன்ஸீஹ்” மட்டும்தான் உண்டு என்று நீ சொன்னால் “முத்லக்” கட்டுப்பாடில்லாத பொதுவான நாயனை “தன்ஸீஹ்” என்பதில் நீ மட்டுப் படுத்திவிட்டாய்.

“தஷ்பீஹ்” மட்டும்தான் உண்டு என்று நீ சொன்னாலும் அவனை “தஷ்பீஹ்” என்பதில் மட்டுப் படுத்திவிட்டாய்.

தன்ஸீஹ் – தஷ்பீஹ் இரண்டும் அவனுக்கு உண்டு என்று நீ சொன்னால் நீ சரியாகச் சொல்லிவிட்டாய். அதோடு ஞானத்தின் தலைவனாகவும் ஆகிவிட்டாய்.

இரண்டு என்று சொன்னவன் – அதாவது துவிதம் பேசினவன் “முஷ்ரிக்” இணை வைத்தவனாகிவிட்டான். ஒன்று என்று சொன்வன் அதாவது அத்வைதம் பேசினவன் “தவ்ஹீத்” வாதியாகிவிட்டான்.

எனவே, நீ “தன்ஸீஹ்” என்பதில் மட்டும் நின்றுவிடவும் வேண்டாம். “தஷ்பீஹ்” என்பதில் மட்டும் நின்றுவிடவும் வேண்டாம். இரண்டையும் எடுத்து நட. இரண்டையும் நம்பி வாழ்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாகிகளே!

உங்கள் “பத்வா”வினால் முஸ்லிம்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையும், மனக் கசப்புக்களையும், சண்டை சச்சரவுகளையும் களைந்து அவர்களுக்கிடையில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நன் நோக்கத்தில் உங்களைப் பல வழிகளைக் கூறி பல முறை அழைத்தேன். என்னிடம் சில நாட்கள் மட்டும் தங்கியிருந்து ஸூபிஸ ஞானத்தைக் கற்றுக் கொள்ள வாருங்கள் என்றும், நீங்கள் என்னுடன் தங்கியிருக்கும் நாட்களில் தங்குவதற்கான வசதிகளும், மூன்று வேளை உணவும், மற்றும் தேனீர், குடிபானங்களும் தருகிறேன் என்றும், உங்களுக்குத் தேவையாயின் போக்குவரத்துக்கான பணமும் தருகிறேன் என்றும் கூறியும் அழைத்தேன். நீங்கள் என் அழைப்பிற்கு செவிசாய்க்காமல் அதைப் புறக்கணித்தீர்கள்.

எனவே, நான் கூறி வரும் இறைஞானத்தில் – ஸூபிஸ தத்துவத்தில் உங்களுக்கு “நஸீப்” நற்பாக்கியம் இல்லையென்று நான் திட்டமாக அறிந்து கொண்டதால் எனது நேர காலத்தை வீணாக்க விரும்பாத நான் இதன் பிறகு உங்களை அழைப்பதில்லை என்று இன்று முடிவு செய்து விட்டேன். இதன் பிறகு நீங்களாக என் காலடி வந்தாலும் கூட உங்களுக்காக என் கதவு திறக்கப்பட மாட்டாதென்பதையும், நீங்கள் ஸூபிஸத்திற்கும், ஸூபிஸ சமூகத்திற்கும் செய்த அநீதிக்கும், அட்டூழியத்திற்கும் அல்லாஹ்விடம் நியாயம் வேண்டியவனாக முடிக்கிறேன்.

குறிப்பு: ஜீலீ அவர்களையும், இப்னு அறபீ அவர்களையும் தரக் குறைவாகக் கணித்த இருவரும் மிக விரைவில் இறைவனின் தண்டனைக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றும்.
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
14.03.2022

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments