وَفِي أَنْفُسِكُمْ أَفَلَا تُبْصِرُونَ
உங்களிலே நீங்கள் பார்க்க வேண்டாமா?
இவ்வசனம் எதை என்று செயப்படு பொருள் கூறப்படாத வசனமாகும்.
لَوْ زَالَ عَنْكَ أَنَا – لَلَاحَ لَكَ مَنْ أَنَا
உன்னை விட்டும் “நான்” நீங்கின் நான் யாரென்று உனக்குப் புரியும்.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அல்லாஹ் திருக்குர்ஆனில் “உங்களிலே நீங்கள் பார்க்க வேண்டாமா?” என்று கேட்கிறான். (51-21)
இத்திரு வசனத்தில் مَفْعُوْلْ “மப்ஊல்” செயப்படு பொருள் கூறப்படவில்லை. ஒரு வசனத்தில் செயப்படு பொருள் கூறப்பட வேண்டும். இதுவே அடிப்படை. அது கூறப்படாவிட்டால் பொருள் பூரணமாகாது. புரியாது. விளங்காது.
உதாரணமாக “முசம்மில் பாம்பை அடித்தான்” என்ற வசனத்தில் முசம்மில் என்பது எழுவாய் என்றும், பாம்பை என்பது செயப்படு பொருள் என்றும், அடித்தான் என்பது பயனிலை என்றும் தமிழ் மொழியிலக்கணத்தில் சொல்லப்படும்.
ஒரு வசனத்தில் இம் மூன்றும் வந்தால் மாத்திரமே அதன் பொருள் பூரணமாகும். இன்றேல் பொருள் பூரணமாகாது. அதாவது கருத்து தெளிவாக விளங்காது.
தமிழில் செயப்படு பொருள் என்றும், அறபியில் “மப்ஊல்” என்றும் சொல்லப்படுகின்ற செயப்படு பொருள் வராமல் விடுவது தொடர்பாக மட்டும் நாம் ஆய்வு செய்தால் “முசம்மில் பாம்பை அடித்தான்” என்ற வசனத்தில் “பாம்பை” என்பது செயப்படு பொருள். இதை நீக்கினால் “முசம்மில் அடித்தான்” என்று மட்டும் பொருள் வருமேயன்றி எதை அடித்தான் என்ற விளக்கம் வராது. இதனால் இவ்வசனம் கேள்விக்குறியோடுதான் இருக்கும்.
இவ்வசனத்தில் செயப்படு பொருள் கூறப்படாவிட்டாலும் முசம்மில் எதையோ அடித்துள்ளான் என்ற பொருள் விளங்கப்படும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு பொருள் விளங்கப்பட்டாலும் இது கூட கேள்விக்குரிய ஒன்றுதான். எதையோ அடித்தான் என்றுதான் விளங்கப்படுமேயன்றி எதை அடித்தான் என்று விளக்கம் வராது.
எனினும் சொல்லப்பட்ட வசனம் ஏதோ ஒரு நிகழ்வுடன் தொடர்புள்ளதாயிருந்து அந்த நிகழ்வின் போது முசம்மில் அடித்தது பாம்பைத்தான் என்று ஆதாரங்கள் மூலம் விளங்கப்பட்டிருந்தால் அவ்வாறான கட்டத்தில் மட்டும் செயப்படு பொருள் கூறப்படாவிட்டாலும் பொருள் பூரணமாகிவிடும். அப் பொருள் பொருத்தமாகவும் அமைந்து விடும்.
ஆயினும் “முசம்மில் அடித்தான்” என்ற வசனம் ஒரு நிகழ்வோடு தொடர்பற்றதாயிருந்தால் செயப்படு பொருள் இதுதான் என்று குறிப்பாக விளங்க முடியாமற் போய்விடும்.
இவ்வாறான கட்டத்தில், அதாவது முசம்மில் எதை அடித்தான் என்பது தெளிவாக விளங்கப்படாத போது, அவ் வசனத்தின் செயப்படு பொருள் பற்றி ஆய்வு செய்வோர் தமக்கு விளங்கும் கருத்தை கூறுவார்கள். அக்கருத்து ஒரே மாதிரி இருக்காது. ஆய்வாளர்களின் தரத்திற்கேற்றவாறு அது இருக்கும். அது சரியாகவும் இருக்கலாம். பிழையாகவும் இருக்கலாம்.
நான் மேலே எழுதிய விளக்கத்தை கருத்தில் வைத்துக் கொண்டு وفى أنفسكم أفلا تبصـرون “உங்களிலே நீங்கள் பார்க்க வேண்டாமா?” என்ற வசனத்தை ஆய்வுக்கு எடுத்து அதில் கூறப்படாத செயப்படு பொருள் எதுவாயிருக்கலாம் என்று ஆராய்ந்தால் ஆய்வு செய்பவர்களின் அறிவுக் கேற்றவாறு செயப்படு பொருள் எழுதப்படும். எவர் எவ்வாறு எழுதினாலும் அவற்றில் ஏதாவதொன்று மட்டுமே சரியாக இருக்கும். அது எது? என்பது தொடர்பாக நான் எழுதுவதாயின் أَفَلَا تُبْصِرُوْنَ என்ற வசனத்தில் வந்துள்ள “துப்ஸிறூன்” என்ற சொல்லுக்கு ஒரு مفعول – செயப்படு பொருள் நிச்சயமாக இருக்க வேண்டும். அது வசனத்தில் கூறப்படவில்லையாதலால் அது எதுவாயிருக்கும் என்பது தொடர்பாக எனது ஆய்வுக்கும், சிந்தனைக்கும் எட்டிய அறிவின்படி أَفَلَا تُبْصِرُوْنَ أَنَّكُمْ إِيَّاهُ அல்லது أَفَلَا تُبْصِرُوْنَ أَنَّكُمْ عَيْنُهُ என்பதே செயப்படு பொருளாகும். இதன் பொருள் நீங்கள் அவன் (அல்லாஹ்) தானானவர்கள்தான் என்பதாகும்.
இவ்வாறு செயப்படு பொருள் அமைத்து ஆய்வு செய்தால் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் வெளிச்சமாகும். இத்திரு வசனமும் “வஹ்ததுல் வுஜூத்” ஆதாரங்களில் ஒன்றென ஞான மகான்கள் கூறுகிறார்கள்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுப்பவர்கள் குறித்த திரு வசனத்தில் கூறப்படாத செயப்படு பொருள் أنكم غيره என்றிருக்கும் என்று கூறக்கூடும். அவர்கள் இவ்வாறு கூறினால் இதன் பொருள் நீங்கள் அவனுக்கு வேறானவர்கள் என்பதை உங்களிலே நீங்கள் பார்க்க வேண்டாமா? என்று வரும். இவ்வாறு பொருள் வருதல் பொருத்தமாகாது. ஏனெனில் இத்திரு வசனத்தின் அமைப்பும், நடையும் இதன் பாணியும் இப் பொருளுக்குப் பொருத்தமற்றவையாகும். நீங்கள் அவனுக்கு வேறானவர்கள் என்பதை நீங்கள் உங்களிலேயே பார்க்க வேண்டாமா? என்ற கேள்வியே பிழையானதாகும். இது மட்டுமல்ல. இதோடு நீங்கள் அவனுக்கு வேறானவர்கள் என்பது அதிசயப்பட்டுச் சொல்லக் கூடிய ஒரு விடயமுமல்ல. ஏனெனில் உலகிலுள்ள முஸ்லிம்களில் அநேகர் அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்றுதான் நம்பியும் உள்ளார்கள். சொல்லியும் வருகிறார்கள். ஆகையால் இது வியந்து சொல்லக் கூடிய ஒரு விடயமுமல்ல. குறித்த திரு வசனத்தின் நடை வியந்து சொல்லப்பட்ட நடையாகும்.
எனவே, உங்களிலே நீங்கள் பார்க்க வேண்டாமா? என்ற வசனத்தின் பொருள் நான் மேலே எழுதியது போல் உங்களிலே நீங்கள் அவன்தான் என்பதை பார்க்க வேண்டாமா? என்பதேயாகும்.
செயப்படு பொருள் தொடர்பான விளக்கம்:
செயப்படு பொருள்: தமிழ் இலக்கணப்படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படு பொருள், பயனிலை. செயப்படு பொருள் என்பது ஒரு வசனத்தில் “யாரை அல்லது எதை, எவற்றை” என்பதின் பதில் ஆகும். எடுத்துக் காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் பந்து செயப்படு பொருளாகும்.
செயப்படு பொருள் குன்றிய வினை:
மொழியிலக்கணத்தில் செயப்படு பொருள் குன்றிய வினை என்பது செயப்படு பொருளை ஏற்காத வினையாகும். இது ஒரு வினைச் சொல் செயப்படு பொருளை ஏற்குமா? ஏற்காதா? என்ற அடிப்படையில் வினைகளை இரண்டாகப் பிரிப்பதால் ஏற்படும் பகுப்புக்களில் ஒன்று. மற்றது செயப்படுபொருள் குன்றா வினையாகும். ஆங்கிலத்தில் இது Intransitive verb எனப்படும்.
செயப்படு பொருள் தொடர்பாக நான் எழுதிய விபரம் எனக்கு படித்த ஒருவர் எழுதித் தந்த விளக்கமாகும். இது பிழையானதாயின் எனக்கு அறிவித்தல் வேண்டும்.
لَوْ زَالَ عَنْكَ أَنَا – لَلَاحَ لَكَ مَنْ أَنَا
“உன்னை விட்டும் “நான்” நீங்கின் நான் யாரென்று உனக்குப் புரியும்”
இது திருக்குர்ஆன் வசனமுமல்ல. “ஹதீது” வசனமுமல்ல. எனினும் இவ் இரு மூலாதாரங்களையும் ஆய்வு செய்த அறிஞர்களும், ஞான மகான்களும் சொன்ன தத்துவமாகும்.
“அன” (أَنَا) என்றால் நான் என்று பொருள். ஒருவர் பேசும் போது நான் கூறினேன் என்று ஒரு வசனம் சொன்னாராயின் அவ்வசனத்தில் வந்துள்ள “நான்” என்பது நான் இப்போது சொல்லப் போகின்ற “நான்” தான்.
இதை சற்று விபரமாக எழுதுகிறேன். أَنَا – “அன” என்ற சொல்லின் வழி வந்த சொற்கள் இரண்டு உள்ளன. ஒன்று أَنِّيَّةْ என்றும், மற்றது أَنَانِيَّةْ என்றும் சொல்லப்படும். (அன்னிய்யத், அனானிய்யத்)
“அன்னிய்யத்” என்றால் நான் என்ற உணர்வைக் குறிக்கும். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் நான் என்ற உணர்வு நிச்சயமாக இருக்கும். இவ் உணர்வையே “நான்” என்ற சொல் குறிக்கும். “நான்” என்ற சொல்லின் எதிர்மறை “அவன்” என்பதாகும். அவன் என்பது இறைவனைக் குறிக்கும்.
“முசம்மில்” என்பவனிடம் “நான் ஒருவன் இருக்கிறேன்” என்ற உணர்வு நிச்சயமாக இருக்கும். இந்த நான் என்ற உணர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும். இவ் உணர்வு “ஷரீஆ”வின் படி இகழப்பட்டதல்ல. எனினும் இது ஸூபிஸத்தில் – இறைஞானத்தில் இகழப்பட்டது மட்டுமன்றி இது “ஷிர்க்” எனும் இணை வைத்தலைக் கூட ஏற்படுத்தும் உணர்வுமாகும்.
ஸூபிஸ வழி வாழ்பவர்களிடம் இவ் உணர்வு கூட இருத்தல் ஆகாது. “ஷரீஆ” வழியில் மட்டும் வாழ்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினை அல்ல.
ஒருவன் இந்த “நான்” என்ற உணர்வை நீக்கி இதன் எதிர் மறையான அவன் – இறைவன் என்ற உணர்வு நிலையை அடைவதாயின் அவன் தனது மனதுடன் – தன்னுடன் கடும் போர் செய்ய வேண்டும். இது குறித்தே அல்லாஹ் திருக்குர்ஆனில்
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
“எங்களில் போர் செய்கின்றவர்களுக்கு எங்களின் வழிகளை நாங்கள் காட்டிக் கொடுப்போம்” என்று கூறியுள்ளான். (29-69)
மேற்கண்ட திரு வசனத்தில் جَاهَدُوْا فِيْنَا எங்களில் போர் செய்தவர்களுக்கு என்று கூறியுள்ளானே தவிர جَاهَدُوْا فِيْ سَبِيْلِنَا எங்களின் வழியில் – மார்க்கத்திற்காக போர் செய்பவர்களுக்கு என்று அல்லாஹ் கூறவில்லை.
அதாவது اَلْجِهَادُ فِى اللهِ அல்லாஹ்வில் போர் செய்தல் பற்றிக் கூறியுள்ளானேயன்றி اَلْجِهَادُ فِيْ سَبِيْلِ اللهِ அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தல் பற்றிக் கூறவில்லை. அல்லாஹ்வில் போர் செய்தல் வேறு. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தல் வேறு.
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தல் என்பது நபீ பெருமானாரின் காலத்தில் முஸ்லிம்களுக்கும், காபிர்களுக்கும் நடைபெற்ற போரைக் குறிக்கும்.
அல்லாஹ்வில் போர் செய்தல் என்பது ஒருவன் தனது “நப்ஸ்” என்ற “காபிர்” உடன் செய்யும் போராகும். அதாவது தனது மனவெழுச்சியுடன் – “நப்ஸ்” உடன் போரிடுவதைக் குறிக்கும்.
ஸூபிஸ ஞானக் கலையில் பேசப்படுகின்ற போர் اَلْجِهَادُ فِى اللهِ அல்லாஹ்வில் போர் செய்தல் பற்றியதாகும்.
ஒரு மனிதன் தன்னிலுள்ள “அன்னிய்யத்” நான் என்ற உணர்வுடன் போர் செய்து அந்த உணர்வை வென்று “நானில்லை” என்ற ஒரு நிலைக்கு வருதலாகும். இது ஒரு வகையானது. இதுவே “அன்னிய்யத்” எனப்படும்.
மற்றது أَنَانِيَّةْ – “அனானிய்யத்” எனப்படும். அடுத்த தொடரில் இதற்கு விளக்கம் வரும். இன்ஷா அல்லாஹ்!
தொடரும்….