தொடர்: 11
“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை!
ஸூபிஸம் என்றால் என்ன?
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
எந்தவொரு கலையாயினும் அதற்கு அடிப்படை அம்சங்கள் 10 இருக்க வேண்டும். “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ கலைக்கும் இவை உண்டு.
10 அடிப்படைகளையும் ஒரு கவிஞர் பின்வருமாறு தனது கவியில் கூறியுள்ளார்.
إِنَّ مَبَادِيْ كُلِّ فَنٍّ عَشَرَةْ – اَلْحَدُّ وَالْمَوْضُوْعُ ثُمَّ الثَّمَرَةْ
وَنِسْبَةٌ وَفَضْلُهُ وَالْوَاضِعُ – اَلْإِسْمُ الْإِسْتِمْدَادُ حُكْمُ الشَّارِعِ
مَسَائِلُ وَالْبَعْضُ بِالْبَعْضِ اِكْتَفَى – وَمَنْ دَرَى الْجَمِيْعَ حَازَ الشَّرَفَا
10 அடிப்படை அம்சங்களில் முந்தினது اَلْحَدُّ “அல்ஹத்து” அதாவது “தஸவ்வுப்” எனும் ஸூபிஸக் கலையின் “தஃரீப்” வரைவிலக்கணமாகும்.
இது வரைவிலக்கணம் பற்றியும், “ஸூபீ” என்பவருக்கான வரைவிலக்கணம், மற்றும் அடையாளங்கள் பற்றியும் தொடர் ஒன்றிலிருந்து தொடர் 10 முடியும் வரை விளக்கம் எழுதியுள்ளேன்.
தொடர் 12 ஐத் தொடுமுன் சில அறிவுரைகள் தருகிறேன்.
“ஷரீஆ” மட்டும் போதாதா? ஸூபீஸ வழி செல்லத்தான் வேண்டுமா?
ஒரு முஸ்லிம் “ஷரீஆ” வழியில் மட்டும் நடந்தால் அவன் வெற்றி பெற முடியாது. அவன் “தரீகா” வழியிலும் நடக்கவே வேண்டும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا
உங்களில் ஒவ்வொருவருக்கும் “ஷரீஆ”வையும், “தரீகா”வையும் நாங்கள் ஆக்கி வைத்துள்ளோம்.
(திருமறை: 5-48)
திரு வசனத்தில் வந்துள்ள شِرْعَةً என்பது “ஷரீஆ”வையும், مِنْهَاجًا என்பது “தரீகா”வையும் குறிக்கும்.
“தரீகா”, “மின்ஹாஜ்” எனும் சொற்கள் பொதுவாக “தரீகா” வழி, ஸூபிஸ வழி, ஆன்மிக வழி, ஞான வழி என்பவற்றைக் குறிக்கும் சொற்களாகும்.
ஷரீஆ, தரீகா இரண்டையும் எடுத்து நடக்க வேண்டும் என்பதற்கு மேற்கண்ட வசனத்தில் ஆதாரம் உண்டா என்று ஒருவர் கேட்டால் ஆம் என்று விடை கூறி நான் பின்னால் எழுதவுள்ள விளக்கத்தை அவருக்கு விளக்கி வைக்க வேண்டும்.
மேற்கண்ட திரு வசனத்தில் “ஷரீஆ”, “தரீகா” எனும் இரண்டையும் அல்லாஹ் “வாவு” என்ற எழுத்து கொண்டு “அத்ப்” இணைத்துக் கூறியுள்ளான். “வாவு” எனும் எழுத்து இரண்டு பொருட்களைக் கூறி அவ்விரண்டும் அவசியமானதென்ற கருத்தைக் காட்டுவதற்குரியதேயன்றி இரண்டில் ஒன்று போதும் என்ற கருத்தைக் காட்டுவதற்குரியதல்ல. இதற்கு – இரண்டில் ஒன்று போதும் என்ற கருத்தைக் காட்டுவதற்கு “அவ்” என்ற எழுத்தே பயன்படுத்தப்படும். அது இங்கு வரவில்லை.
உதாரணமாக خُذِ الْقَلَمَ وَالْكِتَابَ – எழுதுகோலையும், புத்தகத்தையும் எடு என்பது போன்று. இவ்வாறு இரண்டு பொருட்களைக் கூறி அவ் இரண்டும் “வாவு” என்ற எழுத்து கொண்டு இணைக்கப்பட்டிருப்பதால் மேற்கண்ட விபரப்படி இரண்டையும் எடுக்க வேண்டும் என்றே கருத்திற் கொள்ள வேண்டும். இரண்டில் ஒன்றை மட்டும் எடுத்தாற் போதும் என்ற கருத்து வராது.
இக்கருத்து வருவதாயின் மேற்கண்ட விபரப்படி உதாரணம் خُذِ الْقَلَمَ أَوِ الْكِتَابَ எழுதுகோலை அல்லது புத்தகத்தை எடு என்று வந்திருக்க வேண்டும். இவ்வாறு வராமல் இரண்டையும் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டுமென்ற கருத்தின்படி لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا என்றே வந்துள்ளது. இதற்கு மாறாக இரண்டில் ஒன்றை மட்டும் எடுக்க வேண்டுமென்ற கருத்தின்படி لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً أَوْ مِنْهَاجًا உங்களில் ஒவ்வொருவருக்கும் “ஷரீஆ”வை அல்லது “தரீகா”வை நாங்கள் ஆக்கித் தந்துள்ளோம் என்று திரு வசனம் அருளப்பட்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ள விபரப்படி ஷரீஆவும், தரீகாவும் இரண்டுமே மனிதனுக்கு அவசியமானதென்ற உண்மை தெளிவாகிறது.
இரு வஸ்த்துக்களை இணைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற “வாவு” என்ற எழுத்து இன்னுமொரு உண்மையையும் உணர்த்துகிறது. இவ் உண்மையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது இரண்டு வஸ்த்துக்கள் “வாவு” கொண்டு இணைக்கப்பட்டு வரும் வசனத்தில் முதலில் சொல்லப்படும் வஸ்த்துக்கு முதலிடமும், இரண்டாவதாகச் சொல்லப்படும் வஸ்த்துக்கு இரண்டாமிடமும் கொடுக்கப்பட வேண்டுமென்பது விதியில்லை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதை தெரிந்து கொள்ளாமலிருப்பது சில சிக்கலை ஏற்படுத்தும்.
இதை விளக்கி வைப்பதற்கு மேலே சொன்ன அதே உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம்.
خُذِ الْقَلَمَ وَالْكِتَابَ
எழுதுகோலையும், புத்தகத்தையும் எடு என்ற உதாரணத்தில் முதலில் எழுது கோலும், இரண்டாவதாக புத்தகமும் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு சொன்னவனின் நோக்கம் மற்றவன் இரண்டையும் எடுக்க வேண்டுமென்பதேயன்றி முந்தினதை முதலிலும், பிந்தினதை இரண்டாவதாகவும் எடுக்க வேண்டுமென்பதல்ல. இந்நோக்கத்தில் வசனம் சொல்வதாயின் خُذِ الْقَلَمَ ثُمَّ الْكِتَابَ எழுதுகொலை எடு பிறகு புத்தகத்தை எடு என்று சொல்ல வேண்டும்.
இரண்டு விடயங்களை “வாவு” என்ற எழுத்து கொண்டு இணைத்து خُذِ الْقَلَمَ وَالْكِتَابَ எழுதுகோலையும், புத்தகத்தையும் எடு என்று சொன்னால் இவ்வசனத்தின் மூலம் இரண்டையும் எடுக்க வேண்டுமென்ற கருத்துதான் விளங்குமேயன்றி முந்திக் கூறியதை முதலிலும், பிந்திக் கூறியதை இரண்டாவதாகவும் எடுக்க வேண்டுமென்ற கருத்து விளங்கப்படமாட்டாது.
இங்கு எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அதை எழுதுவது வாசக நேயர்களுக்கு பயன் தருமென்று நம்புகிறேன்.
(நானும், நண்பனும் சென்னையில்….)
தமிழ் நாட்டின் தலை நகர் சென்னையில் எனது நண்பர் ஒருவர் இருந்தார். அவர் அஷ்ஷெய்கு நூரிஷாஹ் அவர்களின் கலீபாக்களில் ஒருவர். நான் அவருடன் பேசிக் கொண்டிருந்த வேளை அவர் என்னிடம் “ஷரீஆ”வை முதலில் சொல்லி அதில் மக்களைப் பக்குவப்படுத்திய பிறகுதான் இறைஞானம் சொல்லிக் கொடுக்க வேண்டும், நீங்களோ ஒரே நேரத்திலேயே இரண்டையும் சொல்லிக் கொடுக்கிறீர்கள். இது தவறு என்றார். நான் அவரிடம் உங்கள் வாதத்திற்கு ஆதாரம் உண்டா? என்று கேட்டேன். அதற்கவர் பின்வரும் திரு வசனத்தை ஓதிக் காட்டினார்.
رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
எங்கள் இரட்சகனே! என் சந்ததியினரான அவர்களிலிருந்து அவர்களில் ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர்களுக்கு அவர் உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கியும் வைப்பார். நிச்சயமாக நீயே மிகைத்தவன். தீர்க்கமான அறிவுடையவன் என்றும் பிரார்த்தித்தார்.
ஆத்தியாயம்: அல்பகறா, வசனம்: 129
மேற்கண்ட திரு வசனத்தை ஓதிக் காட்டிய அவர், وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ அல்லாஹ் முதலில் “கிதாப்” குர்ஆனைக் கற்றுக் கொடுக்குமாறும், அதன் பின் ஞானத்தைக் கற்றுக் கொடுக்குமாறுமே கூறியுள்ளான் என்று விளக்கம் சொன்னார்.
அவரின் விளக்கத்தை செவியேற்ற நாள் நீங்கள் மொழியிலக்கணத்தில் “பாபுல் அத்ப்” – بَابُ الْعَطْفِ என்ற பாடத்தை ஓதியுள்ளீர்களா? என்று கேட்டேன். ஆம் என்றார். நீங்கள் ஓதியுள்ளீர்கள் என்பதை நான் நம்புகிறேன். எனினும் உறக்கம் மிகைத்த நேரம் ஓதியுள்ளீர்கள் என்று கூறி மீண்டும் ஒரு முறை அதே பாடத்தை வாசித்துப் பாருங்கள். நான் இலங்கை சென்ற பின் ஒரு கடிதம் அனுப்புகிறேன். அதை நீங்களும் வாசியுங்கள். உங்களின் குரு – ஷெய்கு அவர்களுக்கும் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு நாட்டுக்கு வந்த நான் அறபியில் 06 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதம் அனுப்பி வைத்தேன். அக்கடிதத்தை அவர் வாசித்து விட்டு ஹைதறாபாதில் வசித்த அவரின் குருவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குரு மகான் அக்கடிதத்தை பார்த்துவிட்டு அது சரியென்றோ பிழையென்றோ கூறாமல் இவரை நான் ஒரு தரம் பார்க்க வேண்டுமென்றும், இவர் “ஐனிய்யத்” பேசுவதுபோல் “ஙெய்ரிய்யத்”தும் பேச வேண்டும் என்றும் சொன்னராம். ஆயினும் என்னைக் காணாமலேயே அவர் “வபாத்” ஆகிவிட்டார்.
எனது கடிதம் பார்த்த எனது சென்னை நண்பர் “ஷரீஆ”வை மக்களுக்கு கற்றுக் கொடுத்த பிறகுதான் அவர்களுக்கு ஞானம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தனது கொள்கையிலிருந்து திரும்பிவிட்டார்.
குறித்த குரு நாதர் எத்தகையவர் என்பது எனக்குத் தெரியாது. அவரை நான் இகழவோ, புகழவோ விரும்பவில்லை. எனினும் அவர் “வஹ்ததுஷ் ஷுஹூத்” கொள்கையுள்ளவர் என்று மட்டும் அறிந்திருக்கிறேன்.
“வஹ்ததுஷ் ஷுஹூத்” கொள்கை பிழையென்று நான் கூறவில்லை. ஆயினும் அதை ஏற்றுக் கொண்டவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும். உள்ளமை ஒன்று என்பதையும், காட்சி ஒன்று என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவன் காட்சி ஒன்று என்றும், “வுஜூத்” என்பது பல என்றும் சொன்னால் அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். “வஹ்தத்” என்ற சொல்லை “வுஜூத்” என்பதோடும், “ஷுஹூத்” என்பதோடும் சேர்த்து “வஹ்ததுல் வுஜூத்” என்றும், “வஹ்ததுஷ் ஷுஹூத்” என்றும் இரண்டையும் எவன் நம்புகிறானோ அவனை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்வோம். “வஹ்ததுல் வுஜூத்” பிழை, “வஹ்ததுஷ் ஷுஹூத்” மட்டும்தான் சரியென்போரை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இவ்விடயத்தில் இறைஞானம் பேசுகின்றவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்து வருவது தவிர்க்கப்பட வேண்டும். இவர்களுக்கிடையில் இவ்விடயத்தில் கருத்து வேறுபாடு இருந்து வருவது ஒரு தாய் தகப்பனுக்குப் பிறந்த சகோதரர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருப்பது போன்றதாகும்.
“வஹ்தத்” என்பதில் ஒன்று பட்டவர்கள் “வுஜூத் – ஷுஹூத்” என்பதிலும் ஒன்று பட வேண்டும். இறை வழி நடப்பவர்களும், ஸூபிஸ வழி நடப்பவர்களும் தமக்கிடையேயுள்ள சிறிய கருத்து வேறுபாடுகளைப் பெரிது படுத்தி அதைப் பூதாகரமாக்கி ஒரே குடும்பத்தவர்களுக்கிடையில் பகைமையையும், பிளவையும் ஏற்படுத்துவது கூடாது. ஸூபிஸ வழி செல்வோரும், தரீகா வழி செல்வோரும் தமக்கிடையிலுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து “உஸூல்” அடிப்படையில் ஒன்று பட வேண்டும். المسائل الأصوليّة அடிப்படைகளில் மட்டுமாவது ஸூபிஸ வாதிகளும், தரீகாவாதிகளும் ஒன்று பட வேண்டும். இவை தவிர المسائل الفروعيّة ஏனைய கிளைப் பிரச்சினைகளை அவர்கள் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
تَعَصُّبُ الْمَذَاهِبِ
மத்ஹபுகளில் உள்ள பிடிவாதமும், تَعَصُّبُ الطَّرَائِقِ தரீகாக்களில் உள்ள பிடிவாதமும் நீங்க வேண்டும். அதாவது தனது “மத்ஹப்” மட்டும்தான் சரியானதென்றும், தனது தரீகா மட்டும்தான் சரியானதென்றும் பிடிவாதம் செய்யும் தீய பண்பாடுகள் களையப்பட வேண்டும்.
எந்த நாடாயினும் அங்கு வாழும் ஸுன்னீகளும், ஸூபீகளும், தரீகாவாதிகளும் ஒன்று பட்டால் மட்டுமே விஷமிகளின் விஷம் மற்றவர்களுடன் கலக்காமல் பாதுகாக்க முடியும்.
ஸுன்னீகளுக்கிடையிலும், ஸூபீகளுக்கிடையிலும், தரீகாவாதிகளுக்கிடையிலும் ஒற்றுமை ஓங்கினால் மட்டுமே சத்தியத்தை நிலை நாட்ட முடியும். மக்களுக்கு சாந்தி வழியை காட்டவும் முடியும்.
لَوْ زَالَ عَنْكَ أَنَا لَلَاحَ لَكَ مَنْ أَنَا