Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

தொடர்: 12

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

எந்தவொரு கலையாயினும் அதற்கு அடிப்படை அம்சங்கள் 10 இருக்க வேண்டும். “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ கலைக்கும் இவை உண்டு.

இது தொடர்பாக தெளிவு பெற விரும்புவோர் “ஷாதுலிய்யா தரீகா”வின் தாபகரும், “அல்குத்புல் அக்பர்” என்று இறைஞான மகான்களால் வாழ்த்தப்பட்டவருமான அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் முதல் “கலீபா”வின் முதல் “கலீபா”வான தாஜுத்தீன் அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல்ஹிகம்” எனும் நூலை வாசிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அவர்களின் இந்நூலின் ஆழம், அகமியமறிந்த ஆன்மிக ஞான மகான்கள் இந்நூல் பற்றிக் கூறுகையில் كاد الحكم أن يكون قرآنا “ஹிகம்” எனும் நூல் திருக்குர்ஆனுக்கு நெருங்கிவிட்டது என்று கூறியிருப்பது கவனத்திற்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ:
மலர்வு: ஹிஜ்ரீ 571 மறைவு: ஹிஜ்ரீ 656

முதல் கலீபா அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ:
மலர்வு: ஹிஜ்ரீ 616 மறைவு: ஹிஜ்ரீ 686

இமாம் அதாஉல்லாஹ்:
மலர்வு: ஹிஜ்ரீ 658 மறைவு: ஹிஜ்ரீ 709

ஸூபிஸ ஞானத்தின் 10 அடிப்படைகளில் اَلْحَدُّ – “அல்ஹத்து” எனும் அதன் வரைவிலக்கணம் பற்றியும், ஸூபீ என்பவருக்கான வரைவிலக்கணம், மற்றும் அவரின் அடையாளங்கள் பற்றியும் மேற்கண்ட தலைப்பில் கடந்த தொடர்களில் எழுதியுள்ளேன். வாசித்தவர்கள் பயன் பெற்றிருப்பார்கள். வாசிக்காதவர்கள் அத் தொடர்களை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இத் தொடரில் ஞான மகான் அபூ பக்ர் ஷிப்லீ (ஹிஜ்ரீ 247-334) றஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஸூபீ” என்பவரின் கொள்கையும், அவரின் ஆன்மிக நிலையும் எவ்வாறிருக்கும் என்பது பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
قال الشيخ شبلي رحمه الله اَلصُّوْفِيُّ مُنْقَطِعٌ عَنِ الْخَلْقِ مُتَّصِلٌ بِالْحَقِّ
“ஸூபீ” என்பவர் படைப்பைத் துண்டித்து படைத்தவனுடன் சேர்ந்தவராவார்” என்று.

“கல்க்” படைப்பு என்ற சொல் மனிதன் உள்ளிட்ட அனைத்து சிருட்டிகளையும் – படைப்புகளையும் எடுத்துக் கொள்ளும் சொல்லாகும்.

ஷிப்லீ மகான் அவர்கள் “கல்க்” என்று சொல்லாமல் “இன்ஸான்” மனிதன் என்று சொல்லியிருந்தால் “ஸூபீ” என்பவர் மனிதனைத் துண்டித்து வாழ்பவர் என்று கருத்து வரும். அவ்வாறு வைத்துக் கொண்டால் மனிதர்களின் தொடர்பு எதுவுமின்றி தனித்தும், ஒதுங்கியும் வாழ்பவர் என்ற கருத்து வரும். இவ்வாறு வைத்துக் கொண்டால் இது “கல்வத்” இருப்பதைக் குறிக்கும். இது இலகுவானதாயுமிருக்கும். கஷ்டமானதாயிருக்காது.

“ஷிப்லீ” மகான் அவர்கள் “கல்க்” படைப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதால் மனிதன் படைப்பைத் துண்டித்து வாழ்வதென்பது – படைப்பின் தொடர்பின்றியும், எண்ணமின்றியும் வாழ்வதென்பது கஷ்டமானதாகவே இருக்கும்.

ஏனெனில் மனிதன் எங்கு இருந்தாலும் அவன் படைப்புகளோடுதான் இருக்க வேண்டும். உண்ணாமல், பருகாமல் இருக்க முடியாது. ஏனெனில் உணவும் படைப்புதான். குடிபானமும் படைப்புதான். பாயில் இருந்தால் அதுவும் படைப்பு தான். மண்ணில் இருந்தாலும் அதுவும் படைப்புதான். இவற்றைக் கண் முன் வைத்துக் கொண்டு இவற்றைத் துண்டித்து இவற்றின் எண்ணமின்றி வாழ்வதானது மிகக் கடினமான ஒன்றாகும். அசாத்தியம் என்று சொன்னாற் கூட அது மிகையாகாது.

எனவே, இதன் சுருக்கமும், விளக்கமும் என்னவெனில் மனிதன் படைப்பை அல்லாஹ் என்று அறிந்து அதைப் பார்க்கும் போது அவனைப் பார்க்கும் உணர்வோடு பார்க்க வேண்டும் என்பதேயாகும். ஆகையால் படைப்பை படைப்பாக நோக்காமல் படைத்தவனாக நோக்க வேண்டும். இவ்வாறு நோக்குவதுதான் ஸூபிஸமாகும். பின்வரும் திருவசனத்தின் விளக்கம் இதை உறுதி செய்கிறது.
وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
இதன் பொருள்: “ஒளிர்ந்த பிரதேசமும், இருண்ட பிரதேசமும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகும். நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு” (திருக்குர்ஆன் 2-115)

உலமாஉகளில் அநேகர் இத்திரு வசனத்திற்கு “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை” என்றே பொருள் கூறுகின்றார்கள். இவ்வாறு பொருள் கூறுதல் ஒரு கேள்வியை தோற்றுவிக்கிறது.

அதாவது கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்றால் வடக்கும், தெற்கும் யாருக்குச் சொந்தமானவை? என்ற கேள்விதான் அது. இவ்வாறு பொருள் சொல்வோர் இக்கேள்விக்கு பதில் கூற வேண்டும்.

நான் சந்தித்த உலமாஉகளிற் சிலரிடம் இக்கேள்வியை கேட்டிருக்கிறேன். அவர்கள் தெரியாது என்று உண்மை கூறினார்கள். இவரை நான் பாராட்டுகிறேன். இவர் لأا أدري نصف العلم எனக்குத் தெரியாது என்று சொல்வது அறிவின் பாதி என்பதை அறிந்தவராவார். “தப்லீக் ஜமாஅத்”தைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டேன். அதற்கவர் தெரியாது என்று சொல்லாமல் அதற்கு வேறு விளக்கம் உண்டு. அவ்விளக்கம் சொல்வதாயின் அல்லாஹ்வின் அனுமதி வேண்டுமென்று கூறி என்னைச் சமாளித்தார். அவருக்கு ஞான “றூட்”டும் தெரியாது, ஞான “ரோட்”டும் தெரியாது என்பதைப் புரிந்து கொண்ட நான் அவரை அவமானப்படுத்த விரும்பாமல் மௌனியாகிவிட்டேன். இவர் மூன்றில் மூன்றாமவராவார்.
ثَلَاث مُهْلِكَاتٌ، شُحٌّ مُطَاعٌ، وَهَوًى مُتَّبَعٌ، وَإِعْجَابُ الْمَرْإِ بِنَفْسِهِ،
மூன்று விடயங்கள் மனிதனை அழிக்க வல்லது. வழிப்படப்பட்ட உலோபித்தனம், பின்பற்றப்பட்ட மனவாசை, தற்பெருமை.

இன்னும் “பைஅத்” வழங்கும் “ஷெய்கு” ஒருவரிடம் சென்று அவரிடமும் இதே கேள்வி கேட்டேன். அந்நேரம் அவர் தனது சிஷ்யர்களுடன் இருந்ததால் தனக்குத் தெரியாதென்று சொல்ல முடியாமலும், சரியான விளக்கம் சொல்லத் தெரியாமலும் இது இறை ஞானத் தத்துவம். தத்துவத்தில் பல வகையுண்டு. உங்களுக்குத் தோசையின் தத்துவம் தெரியுமா? என்று என்னிடம் கேட்டார். நான் இறை தத்துவத்தின் விளக்கம் பெற இவரிடம் வந்தேன். இவரோ தோசையின் தத்துவம் தெரியுமா என்று என்னிடம் கேட்கிறார் என மனதுள் நினைத்துக் கொண்டு தெரியாது. தாங்களே சொல்லுங்கள் என்றேன். அதற்கவர் தோசையை எண்ணெய் பூசப்பட்ட சூடான கல்லில் ஊற்றும் போது “சை” என்று ஒரு சத்தம் கேட்கிறதல்லவா அது ஒரு “சை”, அதை மறுபக்கம் புரட்டிப் போடும் போது இன்னொரு “சை” கேட்கிறதல்லவா? இரண்டும் சேர்த்து “தோசை”. தத்துவம் எப்படி என்றார். ஸுப்ஹானல்லாஹ்! என்னே தத்துவம். “அல்லாஹு அக்பர்” என்று சொன்னேன். இப்படியும் உலமாஉகள் உள்ளார்கள் என்பதை எண்ணி மனதால் அழுது வாழ்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வதாயின் எனக்கு ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதென்று என்று ஏங்குகிறேன். அல்ஹம்து லில்லாஹ்!

எனவே, ولله المشـرق والمغرب என்ற திரு வசனத்திற்கு எந்தவொரு கேள்விக்கும் இடமின்றி விளக்கம் சொல்வதாயின் கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குச் சொந்தம் என்று சொல்லாமல் ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்று பொருள் கூற வேண்டும்.

இவ்வாறு இவ்வசனத்திற்கு பொருள் சொன்ன மகான் யாரெனில்
خُصِّصْتُ بِعِلْمٍ لَمْ يُخَصَّ بِمِثْلِهِ – سِوَايَ مِنَ الرَّحْمَنِ ذِي الْعَرْشِ وَالْكُرْسِيْ
நான் ஒரு அறிவு கொண்டு சொந்தமாக்கப்பட்டுள்ளேன். அது போன்ற அறிவு கொண்டு என்னைத் தவிர வேறு எவருமே சொந்தமாக்கப்படவில்லை என்று சொன்ன, 95 வால்யூம்கள் அடங்கிய திருக்குர்ஆனின் விரிவுரை நூலை எழுதிய அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களேயாவர்.

மேலே கூறப்பட்ட இரு பிரதேசங்கள் தவிர மூன்றாவது பிரதேசம் உலகில் இல்லையாதலால் இவ்விரு பிரதேசங்கள் மட்டுமன்றி இவற்றிலுள்ள உயிருள்ளவையும், உயிரில்லாதவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்ற உண்மைத் தத்துவம் வெளிச்சமாகிறது.

அது மட்டுமல்ல. குறித்த திரு வசனத்திற்கு கிழக்கும், மேற்கும் மட்டும் அல்லாஹ்வுக்குச் சொந்தமென்று பொருள் கூறுவது பிழையென்பதும் தெளிவாகிறது.

அது மட்டுமல்ல, குறித்த திரு வசனத்திற்கு ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்பதே சரியான பொருள் என்பதும் வெளிச்சமாகிறது.

ஷெய்குல் அக்பர் அவர்கள் இவ்வசனத்திற்கு கூறிய பொருள் மட்டும்தான் சரியான பொருள் என்பதை இவ்வசனத்தை தொடர்ந்து வந்துள்ள فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்ற திரு வசனம் நிறுவுவது ஆய்வாளர்களுக்கு மறையாது. எனினும் அதை நான் இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.

கிழக்கும், மேற்கும் மட்டும் அல்லாஹ்வுக்குச் சொந்தம் என்று பொருள் சொன்னால் பின்னால் வந்துள்ள فأينما تولوا فثم وجه الله நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்ற வசனம் பொருத்தமற்றதாகிவிடும். அது பொருத்தமாவதாயின் நீங்கள் கிழக்கையும், மேற்கையும் நோக்கினால் மட்டும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்று வசனம் வந்திருக்க வேண்டும். அவ்வாறு வரவில்லை. அதற்கு மாறாக நீங்கள் எங்கு நோக்கினாலும் என்றுதான் வசனம் வந்துள்ளது. ஆகையால் பிந்தி வந்துள்ள வசனத்திற்கு பொருத்தமாக முன்னால் வந்துள்ள வசனத்துக்கு பொருள் சொல்வதாயின் கிழக்கையும், மேற்கையும் மட்டும் குறிக்காமல் உலகில் உள்ள அனைத்து திசைகளையும் உள்வாங்கும் வகையிலேயே பொருள் சொல்ல வேண்டும். ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் என்பதே அனைத்துப் திசைகளையும் உள்வாங்கிய பொருளாகும்.

சொந்தம் என்ற பொருளுக்குரிய விளக்கம்:

மேற்கண்ட திருவசனத்தின் தொடக்கத்தில் வந்துள்ள الله என்ற சொல்லில் ஒரு “லாம்” வந்துள்ளது. அதை “லி” என்று நாம் மொழிகிறோம். لِلَّهِ (லில்லாஹி) என்று சொல்கிறோம். இவ் எழுத்துக்கு مِلْكْ “மில்க்” சொந்தம் என்று பொருள் வரும். இது மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ள விளக்கமாகும். இதன் அடிப்படையிலேயே எல்லாம் அல்லாஹ்வுக்குச் சொந்தம் என்று சொல்கிறோம். இதேபோல் الحمد لله – அல்ஹம்து லில்லாஹ் என்று எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குச் சொந்தம் என்றும் சொல்கிறோம். இவ்வசனத்தில் அல்லாஹ் என்ற சொல்லில் வந்துள்ள “லாம்” – “லி” என்பதும் இவ்வாறுதான்.

இந்த “லாம்” என்பதற்கு சொந்தம் என்ற பொருள் படியே ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தம் என்று சொல்கிறோம்.

மேலே சொன்ன திரு வசனங்களை விட பின்னால் வருகின்ற திரு வசனம் அனைத்து படைப்புக்களையும் உள்வாங்கி அவையாவும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்ற கருத்தை தெளிவாகக் கூறுகின்றது.
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவையாகும். (3-109)

இத்திரு வசனம் படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்று கூறுகிறது.

சொந்தம் இரு வகை:

சொந்தம் என்பது இரு வகை. ஒன்று مِلْكٌ مُتَّصِلٌ بِالذَّاتِ சொந்தக் காரனை விட்டுப் பிரியாத சொந்தம். இரண்டு مِلْكٌ مُنْفَصِلٌ عَنِ الذَّاتِ சொந்தக் காரனை விட்டுப் பிரிந்த சொந்தம்.

முந்தின சொந்தம் தமிழ் மொழி இலக்கணத்தில் “தற்கிழமை” என்றும், பிந்தின சொந்தம் “பிறிதின் கிழமை” என்றும் சொல்லப்படும்.

முந்தினது சொந்தக் காரனை விட்டுப் பிரியாத சொந்தமாகும். பிந்தினது அவனை விட்டுப் பிரிந்த சொந்தமாகும். இங்கு “தாத்” என்ற சொல் சொந்தக் காரனைக் குறிக்கும் சொல்லாகும்.

முனாஸ் என்பவனின் கை அவனை விட்டும் பிரியாத அவனின் சொந்தம் என்பது போலும், அவனின் முகம் அவனை விட்டுப் பிரியாத அவனின் சொந்தம் என்பது போலுமாகும். இவ்விரு உதாரணங்களும் விட்டுப் பிரியாத சொந்தம் என்பதற்கான உதாரணங்களாகும்.

முனாஸ் என்பவனின் வீடு அவனை விட்டுப் பிரிந்த அவனின் சொந்தம் என்பதுபோலும், அவனின் கடை அவனை விட்டுப் பிரிந்த அவனின் சொந்தம் என்பது போலுமாகும்.

இவ் இரு வகைச் சொந்தங்களிலும் படைப்புகள் யாவும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்பது مِلْكٌ مُتَّصِلٌ بِالذَّاتِ “தாத்”தை விட்டும் – சொந்தக் காரனை விட்டும் பிரியாத சொந்தம் போன்றதாகும். சுருக்கமாகச் சொல்வதாயின் அவை அவன் தானானவையாகும் என்றே சொல்ல வேண்டும். எது போலென்றால் முனாஸ் என்பவனின் கை அவனை விட்டும் பிரியாத அவனின் சொந்தம் என்பது போலும், அவனின் முகம் அவனை விட்டும் பிரியாத அவனின் சொந்தம் என்பது போலுமாகும்.

அல்லாஹ்வுக்கும், படைப்புக்குமுள்ள சொந்தம் مِلْكٌ مُنْفَصِلٌ عَنِ الذَّاتِ “தாத்”தை விட்டும் பிரிந்த சொந்தமல்ல. பிரியாத சொந்தமாகும். இதுவே சரியானதாகும்.

பிரிந்த சொந்தம் ஏன் தவறாகும்?

படைப்பு அல்லாஹ்வுக்குச் சொந்தமாயினும் அது அவனை விட்டும் பிரிந்த சொந்தமென்பது எந்த வகையில் தவறாகும்? அதனால் ஏற்படுகின்ற கொள்கைக்கு – “அகீதா”வுக்கு முரண் என்ன? என்பது பற்றி அடுத்த தொடரில் ஆய்வு செய்வோம்.

மெய்ஞ்ஞான மகான் ஷிப்லீ அவர்கள் “ஸூபீ” என்பவர் எப்படியானவர் என்பதற்கு ஆரம்பத்தில் கூறிய “அவர் அல்லாஹ்வுடன் சேர்ந்திருப்பாரேயன்றி அவனை விட்டும் பிரிந்திருக்கமாட்டார்” என்ற வரைவிலக்கணத்தின் படி ஒரேயொரு வஸ்த்து இன்னொன்றுடன் சேர்தல் என்பதற்கோ, பிரிதல் என்பதற்கோ முடியாது. சேர்தல் என்பதற்கும், பிரிதல் என்பதற்கும் குறைந்த பட்சம் இரண்டு வஸ்த்துக்களாவது இருக்க வேண்டும். உள்ளது ஒரேயொரு பொருளெனில் அது எதோடு சேர்வது? எது எதை விட்டும் பிரிவது?

ஹுலூல் – இத்திஹாத் கொள்கை பிழையென்றும், வழிகேடு என்றும் சொல்வதற்கு அடிப்படைக் காரணம் இரண்டில்லை என்பதேயாகும். ஏனெனில் “ஹுலூல்” என்றால் இறங்குதல், “இத்திஹாத்” என்றால் ஒன்றாதல். இறங்குவதற்கும் இரண்டு வஸ்த்துக்கள் தேவை. ஒன்றாவதற்கும் இரண்டு வஸ்த்துக்கள் தேவை. “வுஜூத்” அல்லது “தாத்” என்பது ஒன்றுதான் என்றால் அது எங்கே இறங்குவது? அது எதோடு சேர்வது? எனவே மகான் ஷிப்லீ அவர்களின் பேச்சில் ஹுலூலுமில்லை, இத்திஹாதுமில்லை. நான் கூறிவரும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையிலும் ஹுலூலுமில்லை, இத்திஹாதுமில்லை.

தொடரும்…

لا حلول ولا اتّحاد فى وحدة الوجود،
لا حلول ولا اتحاد عندنا،

RELATED ARTICLES

Most Popular

Recent Comments