Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

தொடர்: 13

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

எந்தவொரு கலையாயினும் அதற்கு அடிப்படை அம்சங்கள் 10 இருக்க வேண்டும். “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ கலைக்கும் இவை உண்டு.

அவற்றில் முதல் அம்சமான அதன் “ஹத்து” வரைவிலக்கணம் தொடர்பாகவும், “ஸூபீ” என்பவர் யார்? அவரின் அடையாளங்கள் பற்றியும் கடந்த தொடர்களில் எழுதியுள்ளேன்.

சென்ற தொடரில் ஞான மகான் அபூபக்ர் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய கருத்துக்களையும் எழுதியிருந்தேன்.

இடைக்குறிப்பு:

اَلْعِلْمُ صَيْدٌ وَالْكِتَابَةُ قَيْدٌ،
என்று அறபியில் ஒரு பழமொழி உண்டு. அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். இதன் பொருள், “அறிவு என்பது வேட்டைப் பிராணி போன்றது. அதைக் கட்டி வைத்தால்தான் அது நம்மோடு இருக்கும். அதைக் கட்டி வைத்தல் என்பது அதை எழுதி வைப்பதேயாகும்”. ஏனெனில் நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் ஒன்று போல் இருக்காது. சிலர் ஞாபக சக்தி வலுப்பெற்றவர்களாயிருப்பார்கள். சிலர் நடுத்தரமானவர்களாயிருப்பார்கள். சிலர் அறவே நினைவாற்றல் இல்லாதவர்களாயிருப்பார்கள்.

படிக்கின்ற மாணவர்களுக்கு நினைவாற்றல் அவசியமானதாகும். நினைவாற்றல் குறைந்தவர்கள் அதைக் கூட்டிக் கொள்ளக் கூடிய “அவ்றாத்” ஓதல்களை தினமும் ஓதி வந்தால் பயன் கிடைக்கும்.

தினமும் 989 தரம் நாற்பது நாட்களுக்கு يَا حَافِظْ என்று சொல்லி வந்தால் நினைவாற்றல் வலுப்பெறும். வசதியான நேரம் சொல்லலாம். “இஷா” தொழுகையின் பின் விரும்பத்தக்கது. ஒரு நிமிடத்துக்கு يَا حَافِظْ என்று 60 தரம் சொல்லலாம். சுமார் 16 – 17 நிமிடத்தில் 989 தரம் சொல்லி முடிக்கலாம். 40 நாட்கள் ஓதினால் போதும்.

தினமும் காலையில் தேனீர் குடித்த பின் சிறிய தேக்கரண்டி அளவு சுத்தமான தேன் தொடராக குடித்து வருவதும் நினைவாற்றலைத் தரும். மூக்கு கண்ணாடியின்றி ஆண்குறியை அல்லது பெண் குறியை பார்ப்பது நினைவாற்றலுக்கு நஞ்சாகும். நெருப்பில் வோகாத சின்ன வெங்காயம் சாப்பிடுவதும் நினைவாற்றலைக் குறைக்கும். தேங்கி நிற்கும் நீரில் சலம் கழிப்பதும் நினைவாற்றலைக் குறைக்கும். திருக்குர்ஆன் “தாஹா” அத்தியாயம், 25ம், 26ம், 27ம் வசனங்களை ஓதி வருவதும் நினைவாற்றலை அதிகப்படுத்தும். ஒவ்வொரு தொழுகையின் பின்னும் மூன்று தரம் ஓதினால் போதும். மேற்கண்டவாறு செய்தல் படிக்கின்ற, ஓதுகின்ற மாணவர்களுக்குப் பயன் தரும்.

இந்த விபரங்களை மாணவர்களின் நினைவாற்றல் – ஞாபக சக்தி கருதியே எழுதினேன்.

நினைவாற்றல் உள்ளவர்களோ, இல்லாதவர்களோ அறிவுத் துறையில் விஷேட குறிப்புக்களைக் கண்டால் அதை மனதில் இருத்திக் கொள்வதுடன் மட்டும் நின்று விடாமல் அதைக் கட்டியும் வைக்க வேண்டும். கட்டி வைத்தல் என்பது எழுதி வைத்தலைக் குறிக்கும்.

قال الشيخ زروق رضي الله عنه، قَدْ حُدَّ التَّصَوُّفُ وَرُسِمَ وَفُسِّرَ بِوُجُوْهٍ تَبْلُغُ نَحْوَ الْأَلْفَيْنِ، تَرْجِعُ كُلُّهَا لِصِدْقِ التَّوَجُّهِ إِلَى اللهِ تَعَالَى، وَإِنَّمَا هِيَ وُجُوْهٌ فيه،

அஷ்ஷெய்கு சறூக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். (“தஸவ்வுப்” எனும் ஸூபிஸம் சுமார் இரண்டாயிரம் வரைவிலக்கணம் மூலம் விபரிக்கப்பட்டுள்ளது. இவை யாவும் உள்ளத்தில் ஏற்படுகின்ற “இக்லாஸ்” கலப்பற்ற நிலையையே விளக்குகின்றது) என்று.

ஸூபிஸத்தின் பிரதான நோக்கம், அடிப்படைக் குறிக்கோள் “கல்பு” எனும் உள்ளத்தை பரிசுத்தப் படுத்துவதும், பக்குவப் படுத்துவதுமேயாகும். அதில் அல்லாஹ்வின் நினைவு தவிர வேறு எந்த ஒரு நினைவும் வராமல் பாதுகாப்பதுமேயாகும். இது தவிர ஸூபிஸம் என்பது மந்திரமுமல்ல, மாயா ஜாலமுமல்ல. அது மனிதனைப் புடம் போட்டு அவனை அல்லாஹ் அளவில் இழுத்துச் செல்லும் அற்புத காந்த சக்தியேயாகும்.

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
மனதை சுத்தமாக்கியவன் வெற்றி பெற்றுவிட்டான். அதை அசுத்தமாக்கியவன் தோல்வியடைந்து விட்டான்.
திருக்குர்ஆன் (91 – 9, 10)

“நப்ஸ்” என்பது ஏழு வகைப்படும். அவை: أَمَّارَةْ அம்மாறஹ், لَوَّامَةْ – லவ்வாமஹ், مُلْهِمَةْ – முல்ஹிமஹ், مُطْمَئِنَّةْ – முத்மஇன்னஹ், رَاضِيَةْ – றாழியஹ், مَرْضِيَّةْ – மர்ழியஹ், كَامِلَةْ – காமிலஹ் என்பனவாகும்.

இவற்றில் மிக மோஷமானதும், இழிவானதும் “அம்மாறஹ்” என்ற “நப்ஸ்”தான். إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوْءِ “நப்ஸ்” என்பது தீமையை அதிகமாகத் தூண்டும் தன்மையுள்ளதாகும். (திருமறை 12:53)

எந்த ஒரு மனிதனாயினும் அவன் முதலில் கடக்க வேண்டிய படி “அம்மாறஹ்” என்ற படியாகும். இதை முதலில் கடந்த பிறகுதான் ஏனைய படிகளைக் கடக்க வேண்டும்.

“நப்ஸ்” என்பது ஏழல்ல. அது ஒன்றே ஒன்றுதான். ஆயினும் அதில் – மனதில் ஏற்படுகின்ற தன்மைகளைக் கவனித்தே அது ஏழு என்று சொல்லப்படுகின்றது.

முதற்படியான “அம்மாறஹ்” என்ற படிதான் மிகக் கீழ்த்தரமானதும், கொடியதுமாகும். இதை வெல்வது ஆயிரம் புலிகளுடன் போர் செய்து வெல்வது போன்ற மிகச் சிரமமான காரியமாகும்.

“நப்ஸ் அம்மாறஹ்” என்ற இடத்தில் – இந்தப் படியில் இருப்பவனைத் திருத்துவதும் மிகக் கடினமேயாகும்.

“நப்ஸ் அம்மாறா”வில் இருப்பவனுக்கு அது அவனைத் தீமை செய்யுமாறு ஏவிக் கொண்டே இருக்கும். நீ பாவம் செய்வதற்குப் பயப்படாதே! நீ செய்வது சிறிய பாவம்தான். அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பதாகவும், இணை வைத்தலை மட்டும் மன்னிப்பதில்லை என்றும் கூறியுள்ளான். நீ இப்போது செய்யப்போவது விபச்சாரம், களவு, கொள்ளை போன்ற சிறிய பாவங்களேயாகும். இணை வைத்தலோ, கொலையோ அல்ல. அல்லாஹ் இவற்றை மிக இலகுவாக மன்னித்துக் கொள்வான். நீ பயப்படாமல் செய் என்று அவனுக்கு பாவத்தின்பால் ஆசையை ஊட்டிக் கொண்டே இருக்கும்.

“நப்ஸ் அம்மாறஹ்”வில் இருப்பவன் ஓர் “ஆலிம்”, மௌலவீ போன்ற திருக்குர்ஆன், ஹதீது தெரிந்தவனாயின் அவனுக்கு அந்த “நப்ஸ்” திருக்குர்ஆனையும், ஹதீதுகளையும் சொல்லிக் காட்டியே அவனை வழி கெடுத்துவிடும். பாவத்தில் தள்ளிவிடும்.

அவனில் உள்ள “நப்ஸ் அம்மாறஹ்” என்பது அவனிடம் غَفَّارْ “ஙப்பார்” என்றால் பொருள் என்ன என்று கேட்கும். அவன் பாவங்களை மன்னிப்பவன் என்று பதில் கூறுவான். அதற்கு அந்த “நப்ஸ்”, பாவம் செய்தால்தானே அவன் மன்னிப்பான். நீ பாவம் செய்யாதிருந்தால் அவன் உன்னை மன்னிப்பது எவ்வாறு? என்று அவனை பாவம் செய்யுமாறு தூண்டும். அவன் ஆன்மிக வலிமை பெற்றவனாயின் அதற்குப் பதில் கூறி அதை துரத்திவிடுவான். அதற்கு வழிப்பட மாட்டான். அவன் ஆன்மிக வலிமை இல்லாதவனாயின், “நப்ஸ்” என்ற விரோதிக்கு பதிலடி கொடுக்கத் தெரியாதவனாயின் அதன் வலையில் விழுந்து பாவியாகிவிடுவான்.

ஒருவன் “ஸக்றாத்” வருத்தத்தில் – மரணப்படுக்கையில் இருக்கும் வேளை “நப்ஸ்” அவனுடன் பேசும். அது அவனிடம் இறைவன் ஒருவன் என்று நம்பியுள்ளாயா? பலர் என்று நம்பியுள்ளாயா? என்று கேட்கும். அதற்கு அவன் ஒருவன் என்று பதில் கூறினால் அதற்கு உன்னால் விளக்கம் தர முடியுமா? அவன் ஒருவன்தான் என்று உன்னால் நிறுவ முடியுமா? என்று கேட்கும். அவன் ஆன்மிக வலிமை உள்ளவனாயின் உரிய பதில் கூறுவான். அது தோல்வியடைந்து போய் விடும்.

அவன் ஆன்மிக சக்தியற்றவனாயிருந்தால் முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ் ஒருவன் என்றே சொன்னார்கள். அதனால் நானும் அவ்வாறே சொன்னேன் என்று கூறுவான். அது அவனுக்கு அவர்கள் அனைவரும் விஷயம் விளங்காத பைத்தியக் காரர்கள். அவர்கள் போல் நீயும் பைத்தியக்காரனாயிருக்க விரும்புகிறாயா? என்று அந்த “நப்ஸ்” அவனிடம் கேட்டு அவனை மடக்கி அவனை வென்று விடும். “நப்ஸ்” என்பது ஷெய்தான் – ஷாத்தானின் மறு பெயர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வேளை எவன் உலகில் ஆதாரங்களோடு அல்லாஹ்வை அறியாமல் அந்த ஆலிம் அவ்வாறு சொன்னார், இந்த ஆலிம் இவ்வாறு சொன்னார் என்று நம்பியிருந்தானோ அவனை அல்லாஹ் சோதிப்பான். அவனின் “ஈமான்” நம்பிக்கையின் பலத்தை பார்ப்பதற்காக அவனுக்கு கடுமையான தாகத்தை அவன் ஏற்படுத்துவான். அவன் தாகம் தாங்க முடியாமல் வேதனைப்படுவான்.

அவ்வேளை அந்த “நப்ஸ்” அதாவது ஷெய்தான் இரண்டு போத்தலில் தண்ணீர் கொண்டு வந்து قُلْ إِلَهَيْنِ اثْنَيْنِ இறைவன் இருவர் என்று சொல் தண்ணீர் தருவேன். இன்றேல் அவன் ஒருவன்தான் என்று ஆதாரங்களுடன் நிரூபி என்று அடம் பிடித்து நிற்பான். மரணப் பிடியிலுள்ள மனிதன் தாகம் தாங்க முடியாமலும், அல்லாஹ் ஒருவன்தான் என்று நிறுவ முடியாமலும் தடுமாறி நிற்கும் வேளை அவனின் விதி கெட்டதாயின் தாகத்தை தீர்ப்பதற்காக அவன் அல்லாஹ் இரண்டு என்று சொல்லிவிடுவான். “ஷெய்தான்” அவனுக்கு முன்னாலேயே அவ்விரு போத்தல்களையும் தரையில் எறிந்து உடைத்துவிட்டு உனக்குத் தண்ணீர் தருவது எனது நோக்கமில்லை. உன்னை வழி கெடுக்க வேண்டும் என்பதே எனது இலட்சியம். இதில் நான் வென்றுவிட்டேன் எனக் கூறிவிட்டு போய் விடுவான்.

இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுருக்கம் என்னவெனில் நம்மிலுள்ள “நப்ஸ்” என்ற விரோதியை நாம் அடக்கியொடுக்கி அவனை வெல்ல வேண்டும். அவனை நமக்கு அடிமையாக்கிக் கொள்ள வேண்டுமேயன்றி நாம் அவனுக்கு அடிமையாகி விடக் கூடாது.

இவ்வுலகில் எவ்வாறு வாழ்ந்தாலும் எமது இவ் உலகின் வாழ்வு முடியும் கட்டம் மிக பயங்கரமான கட்டமாகும். உலகில் எம்மை வெல்ல முடியாமற் போன ஷெய்தான் “ஸக்றாத்” எனும் மரண வேளை வந்து எமது “ஈமான்” நம்பிக்கையில் விளையாடி அவன் வெல்வதற்கு அவனால் முடிந்த தந்திரங்களை கையாள்வான். ஆகையால் நமது ஈமானைப் பலப்படுத்துவதற்கும், அல்லாஹ் ஒருவன்தான் என்று ஆதாரங்கள் மூலம் நிறுவி அவனைத் தோற்கடித்து நாம் வெல்வதற்கும் ஆதாரங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ஏழு “நப்ஸ்” களில் குறைந்த பட்சம் அம்மாறா, லவ்வாமா, முல்ஹிமா முதலான மூன்று “நப்ஸ்”களையும் கடந்து நாலாவது “நப்ஸ்” ஆன “முத்மஇன்னா” எனும் இடத்தை அடைவதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

ஏனெனில் அல்லாஹ் ஏழு “நப்ஸ்” உள்ளவர்களில் தன் பக்கம் அழைப்பதற்குப் பொருத்தமானவர்களாக நாலாம் படியான “முத்மஇன்னா”வை அடைந்தவர்களையே தெரிவு செய்துள்ளான். இதன் விபரம் அடுத்த தொடரில் இடம் பெறும்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments