தொடர்: 14
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அவற்றில் முதலாம் அம்சமான அதன் வரைவிலக்கணத்தையும், “ஸூபீ” என்பவருக்கான வரைவிலக்கணத்தையும், அவருக்கான அடையாளங்களையும் தொடர்ந்து எழுதிவருகிறேன்.
இன்றைய தொடரில் “தஸவ்வுப்” ஸூபிஸத்தின் அவசியம் தொடர்பாக சில வரிகள் எழுதுகிறேன்.
لَا تَصَوُّفَ إِلَّا بِفِقْهٍ، إِذْ لَا تُعْرَفُ أَحْكَامُ اللهِ تَعَالَى الظَّاهِرَةُ إِلَّا مِنْهُ، وَلَا فِقْهَ إِلَّا بِتَصَوُّفٍ، إِذْ لَا عَمَلَ إِلَّا بِصِدْقِ تَوَجُّهٍ، وَلَا هُمَا إِلَّا بِإِيْمَانٍ، إِذْ لَا يَصِحُّ وَاحِدٌ مِنْهُمَا بِدُوْنِهِ،
“பிக்ஹ்” எனும் “ஷரீஆ”வின் சட்டமின்றி “ஸூபிஸம்” இல்லை. ஏனெனில் அல்லாஹ்வின் வெளிரங்கமான சட்டங்கள் “பிக்ஹ்” சட்டக்கலையில் இருந்தே அறியப்படும். பெறப்படும். இதேபோல் “ஸூபிஸம்” இன்றேல் “பிக்ஹ்” எனும் சட்டக்கலையால் மட்டும் எந்தப் பலனுமில்லை. ஏனெனில் எந்த ஓர் “அமல்” வணக்கமாயினும் அது உயிருள்ளதாவதாயின் அதற்கு “தஸவ்வுப்” எனும் ஸூபிஸக் கலை அறிவு அவசியமாகும். சட்டம், ஸூபிஸம் இரண்டும் “ஈமான்” எனும் விசுவாசமின்றி சரிவராது.
மேற்கண்ட இவ்விபரம் மூலம் மனிதனின் வாழ்க்கையில் அவன் “ஷரீஆ” எனும் சட்டக்கலை அறிந்திருப்பதும் – அதாவது “பிக்ஹ்” சட்டங்களை அறிந்திருப்பதும், இதேபோல் சட்டப்படி அவன் செய்கின்ற வணக்க வழிபாடுகள் உயிர் பெறுவதற்கு “தஸவ்வுப்” எனும் ஸூபிஸம் அறிந்திருப்பதும் அவசியம். இவ்விரண்டிற்கும் முதல் “ஈமான்” அல்லாஹ் பற்றிய விசுவாசம் தொடர்பான விபரங்களை அவன் அறிந்திருப்பதும் அவசியம். விசுவாசமின்றி அதாவது அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையின்றி “ஷரீஆ” சட்டத்தை கற்றிருந்தும் பயனில்லை. ஸூபிஸம் கற்றிருந்தும் பயனில்லை என்பதும் தெளிவாகிவிட்டன.
இவ்வாறான தெளிவு ஏற்பட்ட பின்னும் ஒருவன் தனது அறியாமையினாலோ, மன முரண்டினாலோ தனக்கு ஸூபிஸமும் தேவையில்லை, தரீகாவும் தேவையில்லை, “ஷரீஆ” மட்டும் இருந்தால் போதுமென்று குரங்குப்பிடி பிடித்து நின்றானாயின் அவன் கலாநிதியாயிருந்தாலும், கலை நதியாக இருந்தாலும் மனக்கண் குருடனாகவே இருப்பான்.
இது குறித்தே இமாம் முஹம்மத் ஙஸ்ஸாலீ அவர்கள் اَلْعِلْمُ حِجَابٌ “அறிவு திரை” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இதன் விளக்கம் என்னவெனில் ஒருவன் பல்கலைக் கழகங்கள் பலதில் கற்று, பல்வேறு பட்டங்களும் பெற்று, அவன் மக்கள் மத்தியில் பல மேடைகளில் அறிமுகமாகி புகழ் மாலை சூட்டப்பட்டானாயின் அவனிடம் “நான்” எனும் உணர்வு தானாகவே வந்து விடும். أنانيّة தானாகவே வளர்ந்துவிடும். இவன் யாரிடமாவது சென்று கால் மடித்து கல்வி கற்பானா? கற்கமாட்டான். இது நடக்காது. இது நடக்கவே நடக்காது.
இது என் கற்பனையல்ல. நான் கண்ட உண்மை. ஒரு கலாநிதியை ஒருவர் பேட்டி காண்கிறார். அவரிடம் அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவுக்கு “அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை” என்றும், “அல்லாஹ் தவிர ஒன்றுமில்லை” என்றும் சிலர் பொருள் சொல்கிறார்களே. இது சரியா? பிழையா? என்று கேட்கிறார்.
அதற்கு கலாநிதி அவர்கள், (أخرج الله من قلبه فرعون أنانيته وغفر الله ذنوبه ) “அவ்வாறு சொல்பவர்கள் எல்லோரும் மடையர்கள்” என்று நாக் கூசாமல் பதிலளிக்கிறார். இவரின் இப்பதிலை மலமாக கற்பனை செய்து அதை ஏழு கடலில் கரைத்தால் ஏழும் நாற்றமெடுத்து விடும் என்று எனக்கு எண்ணத் தோண்றிற்று.
பின்னர் என் மனம் உறுத்தியது. “அடே மடையா! அவரை நீ ஏன் குறை காண்கிறாய்? அவ்வாறு அவரா சொன்னார்? இல்லையே! அவரின் மூளையில் குடி கொண்டிருந்த “இப்லீஸ்” அல்லவா சொன்னான்” என்று. அதன் பிறகு நான் அவருக்காக மேற்கண்டவாறு “துஆ” செய்தேன். அவர் நன்றாகப் படித்தவர். நல்லாயிருக்கட்டும். அவரின் நெஞ்சிலுள்ள பிர்அவ்னை அவர் இறக்கட்டும். அல்லாஹ் அதற்கு அவருக்கு “தவ்பீக்” செய்யட்டும்.
والله على كل شيء شائه قدير
ஒருவன் “ஷரீஆ”வை தனது வணக்க வழிபாடுகளைச் சரியாக செய்து கொள்ளுமளவு அறிந்து கொண்டால் போதும். அவன் குற்றம் செய்தவனாகான். ஆயினும் ஓர் அறிஞன் “ஷரீஆ” தொடர்பாக விரிவான நூல் ஒன்று எழுத விரும்புவானாயின் அவன் மட்டும் சட்டக் கலைக் கடலில் மூழ்க வேண்டும் என்பது அவசியமே.
ஆயினும் ஸூபிஸ ஞானக் கலையில் நூல் எழுத ஒருவன் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் இக்கலையைப் பொறுத்த வரை அவன் வயிறு முட்ட, மூச்சுத் திணறும் வரை குடித்தாலும் அது போதாது என்றே கூற வேண்டும். அவன் குடிக்க குடிக்க பேரின்பம் பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கும்.
قال الإمام القطب الأكبر أبو الحسن علي الشاذلي قدّس سرّه، مَنْ لَمْ يَتَغَلْغَلْ فِى عِلْمِنَا هَذَا مَاتَ مُصِرًّا عَلَى الْكَبَائِرِ مِنْ حَيْثُ لَا يَشْعُرُ،
நாங்கள் பேசி வருகின்ற எங்களின் இந்த அறிவில் எவன் வயிறு நிரம்ப குடிக்கவில்லையோ அவன் தானறியாமலேயே பெரும்பாவத்தில் நிலைத்தவனாக மரணிப்பான் என்று அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.
இங்கு ஒரு வரலாறை எழுதுகிறேன். இது ஸூபிஸம் இன்றேல் ஒருவன் செய்கின்ற எந்த ஓர் “அமல்” வணக்கமாயினும் அது உயிரற்ற வெறும் “பொம்மை” போன்றதும், யானை சாப்பிட்ட விளாங்கனி போன்றதுமாகும் என்பதற்கு ஆதாரம். இதுவே திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும், அவ்லியாஉகளின் பேச்சுக்களையும் வடிகட்டி வடித்தெடுத்த சாரமுமாகும்.
அஷ்ஷெய்கு இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ அவர்களின் “ஹிகம்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
اَلْأَعْمَالُ صُوَرٌ قَائِمَةٌ، وَأَرْوَاحُهَا وُجُوْدُ سِرِّ الْإِخْلَاصِ فِيْهَا
அமல்கள் – வணக்கங்கள் என்பன உயிரற்ற வெறும் பொம்மைகள் – உருவங்களேயாகும். அவ் உருவங்களுக்கான உயிர் அவற்றில் “இக்லாஸ்” எனும் இரகசியம் இருப்பதாகும் என்று.
“இக்லாஸ்” எனும் உயிர் என்றால் என்ன? அது எது? அதை சரியாக விளங்கப்படுத்துவதற்கு இக்கட்டுரை இடம் தராது. ஆயினும் சுருக்கமாக எழுதுகிறேன்.
நபீ பெருமானாரிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவருக்கும் அறிமுகமில்லாத ஒரு மனித உருவத்தில் தோன்றி பல கேள்விகள் கேட்டு அவற்றுக்கான விடைகளைப் பெற்றுக் கொண்டார்.
அவற்றில் ஒரு கேள்வி إحسان “இஹ்ஸான்” என்றால் என்ன? என்பதாகும். (إحسان “இஹ்ஸான்” என்பதும், إخلاص “இக்லாஸ்” என்பதும் ஒரே அர்த்தமுள்ள இரு சொற்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) அதற்கு விடை வழங்கிய எம்பெருமான் அவர்கள்
أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،
என்று கூறினார்கள்.
இதன் பொருள்: “நீங்கள் அல்லாஹ்வைக் காண்பவர் போல் அவனை வணங்குவதாகும். நீங்கள் அவனைக் காணாது போனால் அவன் உங்களைக் காண்கிறான்” என்பதாகும். பெருமானார் அவர்களின் இவ்விடை வெளிப்பார்வையில் மட்டும் பொருத்தமற்றதாகும். பெருமானார் அவர்களின் திருவாயால் வெளியான எந்த ஒரு சொல்லும் பொருத்தமற்றதாயிருக்க வழியே இல்லை. ஏனெனில் அது “வஹீ” இறை அறிவிப்பாகும்.
எந்த வகையில் பொருத்தமற்றதென்று தெளிவாக்குவதாயின் பல பக்கங்கள் எழுத வேண்டும். அல்லது நேரில் பேச்சு மூலம் தெளிவாக்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு இங்கு முடியாதுள்ளது. “ஷர்த் – ஜவாப்” என்று அறபு மொழி இலக்கணத்தில் ஓர் அம்சம் உண்டு. அந்த அம்சம் தொடர்பான விளக்கம் இங்கும் உள்ளது. அதை நான் தொடாமல் நான் சொல்ல விரும்புகின்ற விடயத்தை மட்டும் தொடுகிறேன்.
மேற்கண்ட பெருமானாரின் விடைக்கு மேலே சொல்லப்பட்ட, உலகில் உலமாஉகளால் சொல்லப்பட்டும் வருகின்ற பொருள்தான் பிழையே தவிர பெருமானார் அவர்களின் வசனத்தில் பிழை இல்லை.
குறித்த இவ்வசனத்திற்கு “நீ அல்லாஹ்வை காண்பவன் போல் அவனை வணங்குவதாகும். நீ இல்லை என்றால் அவனைக் காண்பாய். அவன் உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்” என்பதாகும். இதன் பின்னால் வருகின்ற விளக்கம் உலமாஉகளுக்கும், அறபுக் கல்லூரி மாணவர்களுக்கும் மட்டும் விளங்குமென்று நினைக்கிறேன். ஏனையோர் மௌலவீமாருடன் தொடர்பு கொண்டு விளங்கிக் கொள்வது பயனளிக்கும்.
மேற்கண்ட فَإِنْ لَمْ تَكُنْ என்ற வசனத்திற்கு நீ இல்லையென்றால் تَرَاهُ அவனைக் காண்பாய் என்று பொருள் கொள்ள வேண்டும். فإن لم تكن “நீ இல்லையாயின்” என்ற நிபந்தனைக்கு تَرَاهُ நீ அவனைக் காண்பாய் என்ற வசனத்தை பதிலாக கொடுக்க வேண்டும். تَرَاهُ என்ற இந்தப் பதிலுக்கு இதன் பின்னால் வந்துள்ள فَإِنَّهُ يَرَاكَ என்ற வசனத்தை تَعْلِيْلْ காரணமாகவும் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதே சரியானதும், பொருத்தமானதுமாகும்.
ஸூபீகள் தவிர ஏனையோர் அனைவரும் மேலே நான் எழுதிய விளக்கத்துக்கு முரணான பொருத்தமற்ற விளக்கமே சொல்லி வருகிறார்கள். இவ்வாறு சொல்லி வருபவர்கள் சற்று இறங்கி இது தொடர்பாக என்னிடம் நேரில் விளக்கம் கேட்பார்களாயின் அவர்கள் சத்தியத்தை – ஹக்கை சத்தியமாகவே – ஹக்காகவே புரிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
நீ இல்லையெனில் அவனைக் காண்பாய் என்ற விடயம் மேற்கண்ட ஹதீதில் – நபீ மொழியில் மட்டும் சொல்லப்பட்ட கருத்தல்ல. இதே கருத்து திருக்குர்ஆனிலும் கூறுப்பட்டுள்ளது.
وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيتَ
“நீ மறந்தால் உனது “றப்பு” இறைவனை நினைத்துக் கொள்” (திருமறை 18-24)
இத்திரு வசனத்தில் அறபு மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ள விடயம் ஒன்று உள்ளது. அதை முதலில் தெரிந்து கொள்வது பயன் தரும்.
இவ்வசனத்திலுள்ள رَبَّكَ “றப்பக” என்ற சொல் அதற்கு முன்னால் வந்துள்ள اُذْكُرْ – “உத்குர்” என்ற சொல்லின் செயப்படு பொருளாகும். அதாவது مفعول ஆகும். அதற்கு பின்னால் வந்துள்ள نَسِيْتَ நீ மறந்தால் என்ற சொல்லுக்கு ஒரு செயப்படு பொருள் அவசியம். ஆயினும் அது திரு வசனத்தில் கூறப்படவில்லை. ஒரே வசனத்தில் இரண்டு செயப்படு பொருள் வர வேண்டும். ஒன்று வசனத்தில் வந்துள்ளது. மற்றது வரவில்லை.
ஒரு வசனத்தில் செயப்படு பொருள் வராவிட்டால் எவரும் தான் நினைத்தமாதிரி செயப்படு பொருள் அமைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு அமைப்பதாயினும் திருக்குர்ஆன் விரிவுரை நூல்களான “தப்ஸீர்” நூல்களையும் கவனித்து இடத்திற்குப் பொருத்தமாகவே அமைக்க வேண்டும். எவர் அமைப்பதாயினும் முன், பின் தொடருக்கு பொருத்தமாகவே அமைக்கவும் வேண்டும்.
இத்திரு வசனத்தில் “நஸீத்த” என்ற சொல்லுக்கு செயப்படு பொருள் அமைப்பதாயின் இரண்டு வகையாக அமைக்கலாம். அவற்றில் ஒன்று பொருத்தமானது. மற்றது பொருத்தமற்றது.
தொடரும்….