தொடர்: 15
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
قال مالكٌ رحمه الله:
مَنْ تَصَوَّفَ وَلَمْ يَتَفَقَّهْ فَقَدْ تَزَنْدَقْ،
وَمَنْ تَفَقَّهَ وَلَمْ يَتَصَوَّفْ فَقَدْ تَفَسَّقْ،
وَمَنْ جَمَعَ بَيْنَهُمَا فَقَدْ تَحَقَّقْ،
تَزَنْدَقَ الأوّلُ لأنّه قائل بالجَبر الموجب لِنَفْيِ الحِكمة والأحكام، وتفسَّقَ الثاني لِخُلُوِّ علمِه عن صدق التّوجُّه الحاجزِ عن معصية الله وعن الإخلاص المشـروط فى الأعمال، وتحقَّقَ الثالث لقِيامه بالحقيقة فى عين تمسُّكِه بالحقّ، فاعرف ذلك، إذْ لا وجودَ لها إلّا فيها، كَمَا لا كمالَ له إلا به،
ஸூபிஸ ஞானம் மட்டும் அறிந்து “பிக்ஹ்” – “ஷரீஆ”வின் சட்டக்கலை அறியாதவன் “சிந்தீக்” زنديق ஆகிவிட்டான்.
“பிக்ஹ்” – “ஷரீஆ”வின் சட்டக்கலை அறிந்து ஸூபிஸம் அறியாதவன் “பாஸிக்” கெட்டவனாகிவிட்டான்.
இவ்விரண்டையும் அறிந்து கொண்டவன் திட்டமானவனாகிவிட்டான்.
மொழியாக்கத்தின் சுருக்கம்:
“ஸூபிஸம்” அறிந்து “ஷரீஆ” சட்டம் அறியாதவன் “சிந்தீக்” ஆனதற்கான காரணம் அவன் திருக்குர்ஆன், ஹதீதுகள் மூலம் தரிபடுத்தப்பட்ட الأحكام الشـرعيّة “ஷரீஆ”வின் சட்டங்களை மறுப்பதாகும். ஏனெனில் ஸூபிஸம் மட்டும் கற்று “ஷரீஆ” கற்றுக் கொள்ளாதவன் மலசலம் கழித்த பின் சுத்தம் செய்வதை மறுக்கத்தான் செய்வான். இதேபோல் ஏனைய “ஷரீஆ”வின் சட்டங்களையும் மறுக்கவே செய்வான். இதனால் ஸூபிஸம் கற்பது பிழையென்று எவரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. அவ்வாறு மறுப்பவன் மனமுரண்டுள்ளவனாவான். அல்லது வழி கெட்டவனாவான்.
இத்தகையோர் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர். இதற்குப் பிரதான காரணம் இவர்கள் “ஷரீஆ” தெரியாத ஞானம் மட்டும் பேசுகின்ற போலிக் குருமாரிடம் “பைஅத்” செய்து அவர்களின் வழிகாட்டலில் செல்வதேயாகும்.
ஒரு றமழான் மாதம் இத்தகைய ஒருவரை ஒரு வேலை காரணமாக நான் சந்திக்கச் சென்றேன். அவர் எனது தூரத்து உறவினரும் கூட. இருவரும் பேசிக் கொண்டிருந்த பகற் பொழுதில் தேனீர் “கப்” இரண்டு வந்தன. அவரிடம் நான் நோன்பு நோற்றுள்ளேன் என்றேன். அதற்கு அவர் நோன்பு என்றால் அதென்ன சாமான்? ஒரு கிலோ என்ன விலை? என்று கேட்டார். நான் அவருக்கு வாயால் பதில் சொல்லாமல் கையால் அல்லது காலால் தான் பதில் சொல்லியிருக்க வேண்டும். அவரின் நல்ல காலம் அவ்வேளை நான் “ஜமால்” நிலையில் இருந்தேன் போலும்.
இவர்தான் “சிந்தீக்”. சிந்தீக் என்பவன் هُوَ الَّذِيْ يُظْهِرُ الْإِيْمَانَ وَيُضْمِرُ الْكُفْرَ “ஈமான்” விசுவாசத்தை வெளியில் காட்டி “குப்ர்”ஐ மறைத்துக் கொண்டிருப்பவனாவான். இவன்தான் “ஸூபிஸம்” கற்று “ஷரீஆ” கற்காதவனுமாவான்.
இரண்டாம் நபர் “ஷரீஆ” கற்று ஸூபிஸம் கற்காதவர். இவர் “பாஸிக்” கெட்டவர் ஆவார். ஏனெனில் இவரின் அறிவு வணக்கத்திற்கு வழி காட்டுமேயன்றி அவ்வணக்கத்திற்கு உயிர் கொடுக்க வழி காட்டாது. வணக்கத்தின் பிரதான நிபந்தனை அதில் “இக்லாஸ்” எனும் உயிர் இருக்க வேண்டும். வணக்கத்திற்கு உயிர் கொடுக்கும் முறையும், பயிற்சியும் ஸூபிஸத்தில்தான் உள்ளதேயன்றி “ஷரீஆ”வில் இல்லை. இவர் செய்யும் எந்தவொரு வணக்கமாயினும் உயிரற்ற வெறும் பொம்மை போன்றதாகவே இருக்கும்.
மூன்றாம் நபர் இரண்டையும் கற்று இரு விழிகளும் உள்ளவர் போன்றவராவார். இதனால்தான் இவர் “முஹக்கிக்” திட்டமானவர் என்று அழைக்கப்படுகின்றார்.
வஹ்ஹாபிஸ வழிகேடு தலை நீட்டுமுன் முஸ்லிம்கள் ஓரளவேனும் ஸூபிஸ வழி செல்பவர்களாயிருந்தார்கள். அவர்களின் வணக்க வழிபாடுகள் உயிருள்ளவையாகவும் அமைந்தன. ஆயினும் “முஸீபத்” தலை தூக்கிய பின் ஸூபிஸ வாடையே இல்லாமற் போய்விட்டது.
ஸூபிஸத்தை மறுக்கும் வஹ்ஹாபிகளில் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் பேசும் போது தொழுகையில் யாவையும் மறந்து பக்திப் பரவசத்தோடு தொழ வேண்டுமென்பது பிழையான கருத்தென்று ஸூபிஸத்துவத்தை கிண்டல் செய்தார். இவருக்கு பதில் கூறி நேரத்தை வீணாக்குவதை விட இவரின் நல்வழிக்காக “துஆ” செய்வதே சிறந்ததென்று நான் கருதுகிறேன். ஏனெனில் உறங்குபவனையே விழிப்பூட்டலாம். நடிப்பவனை என்ன செய்வது?
اللهم اهده إلى صراطك المستقيم، صراط الّذين أنعمت عليهم من النبيّين والصدّيقين والشهداء والصالحين، إن كان له نصيب وسعادة فى علمك يا قادر يا مقتدر بقدرتك القيوميّة،
ஒவ்வொரு கலைக்கும் 10 அடிப்படை அம்சங்கள் இருப்பதாக ஆரம்பித்த நான் அவ் அம்சங்களில் தஸவ்வுப் – ஸூபிஸக் கலைக்கான 10 அடிப்படை அம்சங்களில் முதலாவது அம்சமான அதன் اَلْحَدُّ – “அல்ஹத்து” எனும் வரைவிலக்கணம் தொடர்பில் பல தொடர்களில் எழுதி வந்துள்ளேன். இத் தொடரோடு வரைவிலக்கணத்துக்கான விளக்கம் நிறைவு பெறுகிறது.
இரண்டாவது அம்சம் பற்றி எழுதுகிறேன். இரண்டாவது அம்சம் اَلْمَوْضُوْعُ “அல்மவ்ழூஉ” ஆகும். அதாவது ஸூபிஸம் என்பது எது பற்றிப் பேசப்படுகின்ற கலையோ அதற்கு مَوْضُوْعٌ எனப்படும்.
வானவியற் கலையில் வானம் பற்றிப் பேசப்படும். புவியியற் கலையில் பூமி பற்றிப் பேசப்படும். விலங்கியற் கலையில் விலங்குகள் பற்றிப் பேசப்படும். இவைபோல் ஸூபிஸக் கலையில் எது பற்றிப் பேசப்படுமோ அது அதன் موضوع எனப்படும்.
موضوعُ التصوّفِ ذاتُ الله العليّة، لأنّه يُبْحَثُ عنها باعتبار معرفتها، إمأ بالبرهان أو بالشُّهودِ والعِيَانِ، فالأوّلُ للطالبين والثاني للواصلين،
وقيل موضوعُه النُّفُوسُ والقلوب والأرواح، لأنّه يُبحثُ عن تَصْفِيَتِها وتَهْذِيبِها، وهو قريبٌ من الأوّل، لأنّ من عرف نفسَه عرف ربّه،
அறபு வரிகளின் விளக்கம்:
ஸூபிஸக் கலையின் கரு அல்லாஹ்வின் உயர் மிகு “தாத்” ஆகும். அதாவது ஸூபிஸக் கலையில் அல்லாஹ்வின் “தாத்”தை எந்த வகையில் அறிய முடியும். எந்த வகையில் அறிய முடியாது என்பது தொடர்பாக ஆராயப்படும். ஆதாரங்கள் கொண்டு ஆராயப்படுமா? அல்லது கண்ணால் காண்பது கொண்டு ஆராயப்படுமா? என்பன போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்படும். முந்தினது ஆதாரங்கள் மூலம் அவனின் “தாத்” ஐ அறிவது ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கானதாகும். பிந்தினது இறைவனை அறிந்த இறை ஞானிகளுக்கானதாகும்.
ஸூபிஸத்தின் கரு “நப்ஸ்”கள், உள்ளங்கள், உயிர்கள் என்றும் ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது. அதாவது ஸூபிஸக் கலையில் மேற்கண்ட (“நப்ஸ்”கள், உள்ளங்கள், உயிர்கள்) என்பவற்றை சுத்தம் செய்வது தொடர்பாக ஆராயப்படும் என்பதாகும்.
ஏனெனில் அல்லாஹ்வின் “தாத்”தை ஆரம்ப வகுப்பு மாணவர்களால் நேரடியாக அறிய முடியாது. இறைஞானிகளால் மட்டுமே அதை அறிய முடியும். ஒருவன் தன்னால் சுமக்க முடியுமான சுமையையே அவன் சுமக்க வேண்டும். முடியாத சுமையை சுமக்க முயன்றானாயின் அவன் தனது இடுப்பொடிந்து செத்து விடுவான்.
இறைஞானத் தாகமுள்ள ஒருவன் இறைஞானி ஷிப்லீ அவர்கள் காட்டில் வாழ்கிறார் என்று கேள்விப்பட்டு அவர்களைத் தரிசித்து வருவதற்காக அங்கு சென்றான். அங்கு அவர்கள் தன்னைப் புலித் தோலால் போர்த்தி முகம் மறைத்தவர்களாக இருந்தார்கள். அவன் அவர்களுக்கு முன்னால் நின்று ஸலாம் சொன்னான். அவனின் ஸலாம் சத்தம் ஷிப்லீயின் செவியினுட் சென்றதும் ஷிப்லீ திரையை நீக்கினார்கள். அவ்வளவுதான். அக்கணமே அவர்களின் முகம் கண்ட அவன் அல்லாஹ் என்ற இடியோசையோடு உயிர் துறந்தான்.
அல்லாஹ்வின் “தாத்”தை எவராலும் அறிய முடியாதென்பதினால்தான் எம்பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் تَفَكَّرُوْا فِى خَلْقِ اللهِ، وَلَا تَتَفَكَّرُوْا فِى ذَاتِ اللهِ அல்லாஹ்வின் படைப்பு பற்றிச் சிந்தியுங்கள். அவனின் “தாத்” பற்றிச் சிந்திக்காதீர்கள் என்று அருளினார்கள்.
இதே கருத்தை நபீ பெருமானாரின் “கலீபா”க்களிற் சிலரும் கூறியுள்ளார்கள்.
اَلْعَجْزُ عَنْ إِدْرَاكِهِ إِدْرَاكٌ
“அல்லாஹ்வை முழுமையாக எட்டிக் கொள்ள முடியாது என்பதே அவனை எட்டிக் கொள்வதாகும்” என்று.
إِدْرَاكْ
– “இத்றாகுன்” என்ற சொல் திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் இடம் பெற்றுள்ளது. இதற்கு எட்டிக் கொள்ளுதல் என்று பொருள் கூறுப்பட்டாலும், இதன் சரியான பொருள் சூழ்ந்து கொள்தல் என்பதாகும்.
ஒரு பொருளை சூழ்ந்து கொள்தல் என்பது அதில் ஒரு அணுவளவேனும் விடுபடாமல் அதை ஒரே நேரத்தில் முழுமையாக காண்பதைக் குறிக்கும்.
لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ
என்ற திரு வசனத்திற்கு பார்வைகள் அவனை எட்டிக் கொள்ளாது, அவன் பார்வைகளை எட்டிக் கொள்வான் என்று பொருள் சொன்னாலும் கூட நான் மேலே எழுதிக்காட்டிய விளக்கத்தின் படி பார்வைகள் அவனை சூழ்ந்து கொள்ளாது என்றும், அவன் பார்வைகளை சூழ்ந்து கொள்வான் என்றுமே விளக்கம் கூற வேண்டும்.
படைப்புக்களில் எந்தவொரு படைப்பை எடுத்துக் கொண்டாலும் அதைக் கூட ஒரே நேரத்தில் ஓர் அணு அளவும் விடுபடாமல் சூழ முடியாதிருக்கும் நிலையில் படைத்தவனை சூழ்தல் எங்கனம் சாத்தியம்?! والله واسع عليم அல்லாஹ் மிக விசாலமானவனும் அறிவுள்ளவனுமாவான். (அறியப்பட்டவனுமாவான்)
இக்கட்டுரையின் வடித்த சாறு, அல்லாஹ்வை அறிவதற்கும், அவனை அடைவதற்கும் “ஷரீஆ”, “தரீகா” இரு வழிகளும் அவசியம் என்பதேயாகும்.
ஷரீஆ, தரீகா இரு வழிகள்
இறைவன் தந்த நல் வழிகள்
இரண்டும் விட்டோன் இரு விழிகள்
இழந்தோன் யா ஹூ யா அல்லாஹ்!
தொடரும்…