Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

தொடர்: 16

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

எந்தவொரு கலையாயினும் அதற்கு அடிப்படை அம்சங்கள் 10 இருக்க வேண்டும். “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ கலைக்கும் இவை உண்டு. அவற்றில் கடந்த பதிவுகளில் இரண்டு அம்சங்கள் தொடர்பாக எழுதியுள்ளேன்.

இத்தொடரில் وَاضِعُ عِلْمِ التَّصَوُّفِ ஸூபிஸத்தின் தாபகர் தொடர்பாக எழுதுகிறேன்.
وأمّا واضِعُ هذا العلم فهو النّبي صلّى الله عليه وسلّم، علّمَهُ اللهُ له بالوحي والإلهام، فنزَل جبريلُ عليه السّلام أوّلا بالشّريعة، فلمّا تَقَرَّرَتْ نزلَ ثانيا بالحقيقة، فخصَّ بها بعضا دون بعض، أوّلُ من تكلّم فيه وأظهره سيّدُنا عليٌّ كرّم الله وجهه، وأخذه عنه الحسنُ البصري، وأمُّه اسمُها خَيْرَةُ مولاةٌ لأمِّ سَلَمَةَ زوج النّبي صلّى الله عليه وسلّم، وأبوه مَولَى زيد بن ثابت، تُوُفِّيَ الحسن سنة عشر ومأةٍ،

ஸூபிஸ கலையின் தாபகர் ஸெய்யிதுனா முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான். வேறு யாருமில்லை. அல்லாஹ் அவர்களுக்கு இந்த ஞானத்தை வஹீ மூலமும், “இல்ஹாம்” மூலமும் கற்றுக் கொடுத்தான்.

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதலில் “ஷரீஆ”வைச் சொல்லிக் கொடுத்தார்கள். அது உறுதியான பின் இரண்டாவதாக “ஹகீகா” ஞானம் சொல்லிக் கொடுத்தார்கள். பெருமானார் அவர்கள் அந்த ஞான அறிவை சிலருக்கு சொல்லிக் கொடுத்தார்கள். சிலருக்கு சொல்லிக் கொடுக்கவில்லை.

அவர்கள் சொல்லிக் கொடுத்தவர்களில் ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் முதன்மையானவர்களாவர். அவர்கள்தான் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமிருந்து இவ்வறிவைப் பெற்றவர்களில் முதலில் பேசியவர்களுமாவர்.

ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து இந்த ஞானத்தை முதலில் பெற்றவர்கள் ஸெய்யிதுனா இறைஞானி ஹஸனுல் பஸரீ றழியல்லாஹு அன்ஹு அவர்களாவர். இன்னும் அவர்களின் அருமைத் தாயார் நபீ பெருமானார் அவர்களின் மனைவி ஸெய்யிததுனா உம்மு ஸலமா அவர்களின் அடிமைப் பெண் “கைறா” அவர்களாவர். இன்னும் அவர்களின் தந்தை செய்த் இப்னு தாபித் அவர்களின் அடிமையுமாவார்கள். அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிமிருந்து இறைஞான அறிவை முதலில் பெற்றவர்களான ஹஸனுல் பஸரீ அவர்கள் ஹிஜ்ரீ 110ம் வருடம் “வபாத்” மரணித்தார்கள்.

பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து முதலில் அலீ அவர்கள் பெற்றது போல் இன்னும் பலரும் பெற்றிருந்தார்களாயினும் அலீ அவர்களே முதலில் வெளிப்படுத்தினார்கள் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. ஏனையோரில் யார் சொன்னார்கள் என்ற விபரமும், அவர்கள் யார் யார் என்ற விபரமும் கிடைக்கவில்லை.

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அலீ நாயகம் அவர்களுக்கு “ஹகீகா”வை சொல்லிக் கொடுத்தார்கள் என்றால் நாம் இன்று பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தை சொல்லிக் கொடுத்தார்கள் என்பது கருத்தல்ல.

ஏனெனில் இத் தத்துவம் “லா இலாஹ இல்லல்லாஹ்” – “அல்லாஹ் அல்லாத எதுவுமே இல்லை – எல்லாம் அவனே” என்ற தத்துவம் அலீ நாயகம் அவர்களுக்கும், இன்னும் சிலருக்கும் மட்டும் நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொல்லிக் கொடுத்த தத்துவம் அல்ல.

திருக்கலிமா தருகின்ற இத் தத்துவம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திரு மக்கா நகரிலுள்ள “அபூ குபைஸ்” மலைக்கு மக்கா வாசிகள் அனைவரையும் அழைத்து பகிரங்கமாகச் சொல்லிக் கொடுத்த தத்துவமேயன்றி சிலருக்கு மட்டும் இரகசியமாக சொல்லிக் கொடுத்த தத்துவமல்ல. இது பகிரங்கமாக சொல்ல வேண்டிய தத்துவமாகும்.

அவ்வாறாயின் நபீ பெருமான் பகிரங்கமாக எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்காமல் ஒரு சிலருக்கு மட்டும் சொல்லிக் கொடுத்த “ஹகீகத்” தத்துவம் என்ன? இதுவே பகிரங்கமாகவும், பலர் மத்தியிலும் சொல்லக் கூடாத மறைக்க வேண்டிய தத்துவமாகும்.

இதே தத்துவத்தையே அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த பின்வரும் ஹதீது – நபீ மொழி கூறுகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: ‘ حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وِعَاءَيْنِ: فَأَمَّا أَحَدُهُمَا فَبَثَثْتُهُ، وَأَمَّا الآخَرُ فَلَوْ بَثَثْتُهُ قُطِعَ هَذَا البُلْعُومُ ‘ – الحُلْقُومُ،

ஸெய்யிதுனா அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

(நான் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமிருந்து இரண்டு தோல் துருத்தியளவு அறிவைப் பெற்றேன். அவற்றில் ஒன்றை மக்களிடம் பரப்பிவிட்டேன். மற்றதை நான் பரப்பவில்லை. நான் அதை பரப்பினால் எனது இந்த கழுத்து வெட்டப்பட்டு விடும்) என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரீ

நபீ தோழர் அபூ ஹுறைறா அவர்கள் திருமணம் செய்யாமலும், பெருமானார் அவர்களை விட்டுப் பிரியாமலும் அவர்களுடனேயே இரவு பகலாக மதீனா பள்ளிவாயலில் வாழ்ந்த “அஹ்லுஸ் ஸுப்பா” திண்ணைத் தோழர்களில் ஒருவராவார்கள். இவர்கள் திருமணம் செய்யவுமில்லை. இவர்களுக்கு திரு மதீனா நகரில் குந்திக் கொள்ளக் கூடிய அளவிலேனும் ஓர் ஓலைக் குடிசையேனும் இருந்ததுமில்லை.

மேற்கண்ட நபீ மொழி மூலம் அறிவில் இரண்டு வகையான அறிவு உண்டு என்பதும், அவற்றில் ஒன்று மக்களிடம் பகிரங்கமாகச் சொல்ல வேண்டியது என்பதும், மற்றது அவர்கள் மத்தியில் சொன்னால் சொன்னவனின் கழுத்து வெட்டப்படும். அதாவது அவர் கொலை செய்யப்படுவார் என்பதும் விளங்கப்படுகின்றன.

நபீ தோழர் அபூ ஹுறைறா அவர்கள் சொல்ல வேண்டியதைச் சொன்னார்கள். மற்ற அறிவை சொல்லவில்லை. சொன்னால் சொன்னவர் கொலை செய்யப்படுவார் என்று அவர்கள் சுட்டிய அறிவு என்ன அறிவு என்று அவர்கள் தெளிவாகச் சொல்லவில்லை.

நபீ தோழர் அபூ ஹுறைறா அவர்கள் அறிவித்துள்ள இந்த நபீ மொழி தருகின்ற கருத்து போன்ற கருத்தை நாலாவது கலீபா ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் திருப் பேரர் ஸெய்யிதுனா செய்னுல் ஆபிதீன் றழியல்லாஹு அன்ஹு அவர்களும் பின்வரும் பாடல் மூலம் கூறியுள்ளார்கள்.

وَرُبَّ جَوْهَرِ عِلْمٍ لَوْ أَبُوْحُ بِهِ – لَقِيْلَ لِيْ أَنْتَ مِمَّنْ يَعْبُدُ الْوَثَنَا
وَلَا اسْتَحَلَّ رِجَالٌ مُسْلِمُوْنَ دَمِيْ – يَرَوْنَ أَقْبَحَ مَا يَأْتُوْنَهُ حَسَنًا
إِنِّيْ لَأَكْتُمُ مِنْ عِلْمِيْ جَوَاهِرَهُ – كَيْ لَا يَرَى الْحَقَّ ذُوْ جَهْلٍ فَيُفْتِنَنَا

மாணிக்கம் போன்ற எத்தனையோ அறிவை நான் வெளிப்படுத்தினால் நீ விக்கிரக வணக்கமுள்ளவன் என்று எனக்குச் சொல்லப்படும்.

இது மட்டுமல்ல. முஸ்லிம்கள் எனது இரத்தத்தை “ஹலால்” என்றும் கருதிவிடுவார்கள். அதாவது என்னைக் கொலை செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள். ஆயினும் அவர்கள் செய்யும் மோஷமான – இழிவான வேலைகளை நல்லவை என்று அவர்கள் சொல்வார்கள் – நினைப்பார்கள்.

நான் என்னிடமுள்ள மாணிக்கம் போன்ற அறிவை மறைத்து வைத்துள்ளேன். அறிவிலி சத்தியத்தை தவறாக விளங்கி அல்லது பொறாமையினால் எங்களை “பித்னா” குழப்பத்தில் தள்ளாமல் இருப்பதற்காக!

அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த மேற்கண்ட நபீ மொழியும், “அஹ்லுல் பைத்” பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தவர்களில் ஒருவருமான ஸெய்யித் செய்னுல் ஆபிதீன் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மேற்கண்ட பாடலும் ஓர் உண்மையை உணர்த்துவது அறிவுள்ளவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மறைவானதன்று. இதேபோல் இப்படி ஒரு அறிவு உண்டு என்பதை மறுப்பவர்களும் அறிவிலிகளாக, அல்லது பொறாமைக் காரர்களாக, அல்லது மணமுரண்டு உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதும் அறிஞர்களுக்கும், அகத் தெளிவு பெற்றவர்களுக்கும் மறைவானதுமல்ல.

அவர்கள் சொல்லப் பயந்த, சொல்வதால் ஏற்படுகின்ற விபரீதம் கொலை தவிர வேறொன்றுமில்லை என்று அவர்கள் கூறிய அறிவு எது என்பதை அலசி ஆராய்ந்து அறிதல் அவசியம்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments