தொடர்: 02
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“இல்முத் தஸவ்வுப்” ஸூபிஸ ஞானக் கலைக்கான பத்து அடிப்படைகள்! அம்சங்கள்!
எந்த ஒரு கலையாயினும் அதற்கு பத்து அடிப்படைகள் – அம்சங்கள் அவசியமென்று கடந்த தொடரில் எழுதியிருந்தேன். இத் தொடரில் அவை எவையென்றும், அவற்றுக்கான விபரங்களையும் சுருக்கமாக எழுதுகிறேன்.
01. حَدُّ التَّصَوُّفِ ஸூபிஸ ஞானத்தின் வரைவிலக்கணம் பற்றிய விபரம்.
ஸூபிஸ ஞானம் என்றால் என்ன? எதற்கு அவ்வாறு சொல்லப்படும் என்ற விபரங்கள் இத் தொடரில் எழுதப்படும்.
“ஸூபிஸம்” என்பதற்கு நான் கூறும் விபரங்களும், விளக்கங்களும் என்னுடைய கற்பனைகளோ, விளக்கங்களோ அல்ல. எனினும் முன்னோர்களான ஸூபீ மகான்கள் தமது நூல்களில் எழுதிய கருத்துக்களையே நானும் எழுதுகிறேன்.
“தஸவ்வுப்” ஸூபிஸம் என்பதற்கு ஸூபீகள் சமுகத்தின் அகில உலகத் தலைவர் “ஸெய்யிதுத் தாயிபதிஸ் ஸூபிய்யா” ஜுனைத் அல் பக்தாதீ (215-298 ஹிஜ்ரீ) றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ள வரைவிலக்கணத்தை முதலில் இங்கு எழுதுகிறேன்.
هُوَ أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ وَيُحْيِيَكَ بِهِ
ஸூபிஸம் என்பது, அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்து அவனைக் கொண்டு உன்னை உயிராக்குவதாகும் – வாழ வைப்பதாகும் என்று ஸூபீகளின் தலைவர் ஜுனைத் அல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். இது ஸூபிஸத்திற்கு அவர்கள் கூறிய வரைவிலக்கணமாகும்.
இவ் வரைவிலக்கணம் மூலம் “பனா”, “பகா” எனும் இரு ஆன்மிக நிலைகள் குறித்து அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள் என்றும், “மவ்து ஹகீகீ” இயற்கை மரணம், “மவ்து மஜாஸீ” ஆன்மிக மரணம் பற்றியும் சுட்டிக் காட்டுகிறார்கள் என்றும் விளங்கலாம்.
அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்தல் என்றால் உன்னிடமுள்ள أَنَا – “அன” நான் என்ற உணர்வை நீ துண்டித்து அதை அழிக்க வேண்டும் என்பதாகும்.
இதை இன்னும் சற்றுத் தெளிவாகச் சொல்வதாயின் ஒரு மனிதனிடம் “நான்” எனும் உணர்வு நிச்சயமாக இருக்கும். இதற்கு அறபியில் أنِّنِّيَّةٌ – “அன்னிய்யத்” என்று சொல்லப்படும். இச் சொல் போன்று இன்னுமொரு சொல் உண்டு. அது أَنَانِيَّةٌ “அனானிய்யத்” என்ற சொல்லாகும். இதற்கு “நான் எனும் கர்வம், நான் எனும் அகங்காரம்” என்ற பொருள்கள் உண்டு. எனினும் அது வேறு, இது வேறு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டுக்குமுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை:
(அறபு மொழி தெரியாத, தமிழில் ஞானம் கற்ற சிலர் இவ்விரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் “அன்னிய்யத்” என்ற சொல்லுக்கு “நான் என்ற மமதை” என்றும், “அனானிய்யத்” என்ற சொல்லுக்கு “நான் எனும் உணர்வு” என்றும் தலைகீழாய் மாற்றி பொருள் கூறியுள்ளார்கள். இது தவறு) வாசகர்கள் வேறுபாட்டை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். புதிதாக “ஸூபீ” என்று முகக்கவசம் போட்டுக் கொண்ட நடிகர்களுக்கு இத்தகைய நுட்பம் தெரியாது.
“அன்னிய்யத்” என்ற “நான்” எனும் உணர்வு ஒவ்வொரு மனிதனிடமும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆன்மிக வழி நடந்து அதில் முதிர்ச்சி பெற்றவர்கள் தவிர. இன்னோர் தெளிவு கண்டவர்களாவர். அவர்கள் தொடர்பாக நான் ஒன்றும் குறையாக கூறவில்லை.
“நான்” எனும் இந்த உணர்வை மனதிலிருந்து அகற்றுவது மிகவும் கடினம். அப்துல்லாஹ் என்பவனுக்கு “தான்” அப்துல்லாஹ் என்ற உணர்வு இருப்பது இயற்கையே. ஆயினும் இந்த உணர்வு ஒரு மனிதன் இறைவனை அடைவதற்கு என்றுமே தடைதான். ஆகவே, இறை வழி நடக்க விரும்புகின்ற ஒருவன் முதலில் செய்ய வேண்டிய கடமை “நான்” என்ற தன்னுணர்வை நீக்குவதேயாகும். இவ் உணர்வு நீங்காதவரை இறைவனை அடைதல் அசாத்தியமேதான்.
இவ் உணர்வை அகற்றுவதற்குப் பல வழிகள் உள்ளன. அவ் வழிகளை இங்கு கூறத் தொடங்கின் தொடங்கிய தலைப்பை முடிக்க இயலாமற் போய்விடும். அதற்கு உரிய இடத்தில் விளக்கம் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!
இறைவழி நடக்க விரும்பும் ஒருவன் “அன்னிய்யத்” தான் என்ற உணர்வு அல்லது நான் என்ற உணர்வை தன்னை விட்டும் அகற்றுவது போல் “அனானிய்யத்” தான் என்ற அல்லது “நான்” என்ற மமதையையும் அகற்ற வேண்டும்.
மேற்கண்ட இவ்விரண்டும் ஒரு மனிதன் அல்லாஹ்வை அடைய விடாமல் தடுக்கும் இரு பெரும் தடை கற்களாகும்.
இவ்வாறு நான் எழுதுவதால் ஒருவன் “நான்” என்ற உணர்வை நீக்கினால் அவன் என்ன உணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஒரு கேள்விக்கு விடை தேவை.
அந்த விடை இதுதான். முசம்மில் ஆகிய நானில்லையாயினும் அல்லாஹ்தான் என்னாக உள்ளான் என்ற உணர்வை அவன் நெஞ்சில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்து அட்டாளைச்சேனையில் அடக்கம் பெற்றுள்ள ஞான மகான் அஹ்மத் மீரான் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் மஹ்பூபு மனோன்மணிக் கீதம் 13ம் பக்கத்தில்
நான் என்றிருந்தேனே நாளும் கழிந்னே
தானாயிருந்த தன்மையறியேனே!
என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இன்னுமொரு இறைஞானி,
قُلْتُ وَمَا ذَنْبِيْ فَقَالَتْ مُجِيْبَةٌ
وُجُوْدُكَ ذَنْبٌ لَا يُقَاسُ بِهِ ذَنْبٌ
நான் செய்த பாவமென்னவென்று ஒருவர் கேட்டாராம். யாரோ ஒரு பெண் “நீ” என்று நீ உணர்வதே நிகரற்ற பாவம் என்று பதில் கூறினாராம்.
இப்பாடலின் இரண்டாம் அடியில் وُجُوْدُكَ ذَنْبٌ உனது “வுஜூத்” பாவம் என்று ஒரு வசனம் வந்துள்ளது. இவ்வசனத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல் உனக்கு “வுஜூத்” இருப்பதாக நீ உணர்வதே பாவம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஒருவன் பொய் சொல்லாமலும், விபச்சாரம் செய்யாமலும், களவு செய்யாமலும், மற்றும் எந்தவொரு பாவமும் செய்யாமலும் இருந்தாலும் கூட அவன் தனக்கு அல்லது எந்த ஒரு படைப்புக்காவது அல்லாஹ்வின் “வுஜூத்” தவிர வேறு தனியான, சுயமான “வுஜூத்” உண்டு என்று நம்புவானாயின் அவன் எந்தவொரு இரண்டாம் கருத்துக்குமிடமின்றி “காபிர்”தான். அல்லாஹ்வின் அருளாலும், வலீமாரின் அகமியத்தாலும் இவ் உண்மையை நிறுவ நான் ஆயித்தமாயுள்ளேன். விளக்கம் தேவையானோர் மாணவர்களாக மட்டும் வந்தால் மனம் குளிர்ந்த நிலையில் திரும்பிச் செல்வார்கள்.
இன்று உலகில் குறிப்பாக நமது இலங்கை நாட்டில் “ஷரீஆ”வை நூறு வீதம் அல்லது தம்மால் முடிந்தவரை பேணி வாழும் உலமாஉகளும், பொது மக்களும் பல இலட்சம் பேர் வாழ்கின்றார்கள். இவர்கள் நல்லவர்கள். நேர்மை உள்ளவர்கள். நியாயவாதிகள். இவர்களில் மார்க்கத்திற்காக அள்ளி வழங்கும் மனப் பக்குவமுள்ளவர்களும் உள்ளனர். இவர்களைப் பாராட்டாமலிருக்க முடியவில்லை.
எனினும் இன்னோர் “ஷரீஆ”வோடு மட்டும் நின்று கொண்டு தரீகா, ஹகீகா, மஃரிபா, ஸூபிஸம் போன்ற உயர் தத்துவங்களை மறுப்பதும் அவற்றின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் இருப்பதும், இன்னும் இறைஞானம் பேசுவோரை எதிர்ப்பதும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும் இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய விடயங்களாகும்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் ஸூபிஸத்துக்கு இமாம் ஜுனைதுல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ள حَدُّ التَّصَوُّفِ ஸூபிஸத்தின் வரைவிலக்கணம் தொடர்பாக நான் அவர்கள் கூறிய வரைவிலக்கணம் “பனா”, “பகா”, “மவ்து ஹகீகீ”, “மவ்து மஜாஸீ” போன்ற அம்சங்களை உள்வாங்கிய வரைவிலக்கணம் எனக் கூறி, ஒருவன் அல்லாஹ்வில் “பனா” ஆகுவதாயின் அவன் முதலில் தன்னில் குடி கொண்டுள்ள இரு வகை அசுத்தங்களான “அன்னிய்யத் – அனானிய்யத்” இரண்டையும் முழுமையாகக் களைந்தெறிய வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…