தொடர்: 03
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“இல்முத் தஸவ்வுப்” ஸூபிஸ ஞானக் கலைக்கான பத்து அடிப்படைகள்! அம்சங்கள்!
அவற்றில் முதலாவது அடிப்படை حَدُّ التَّصَوُّفِ – ஸூபிஸத்தின் வரைவிலக்கணம் என்று கூறி அதற்கு ஜுனைத் அல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய اَلتَّصَوُّفُ أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ وَيُحْيِيَكَ بِهِ “தஸவ்வுப்” என்றால் “அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்து அவனைக் கொண்டு உன்னை உயிராக்குவதாகும்” என்ற வரைவிலக்கணத்தைக் கருவாகக் கொண்டு கடந்த தொடரில் விளக்கம் எழுதியுள்ளேன்.
அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை “மவ்த்” ஆக்குவதென்றால் உன்னிடமுள்ள أَنِّيَّةٌ எனும் “நான்” என்ற உணர்வை நீக்கி வைப்பதாகும்.
இதன் விபரம் என்னவெனில் ஒரு மனிதனிடம் أَنِّيَّةٌ – நான் என்ற உணர்வும், أَنَانِيَّةٌ – நான் என்ற மமதையும் இருக்கும். இவ்விரண்டும் இறைவழி நடப்பவனுக்கு பெரும் தடைகளாகும். பெரும் நஞ்சுகளுமாகும்.
ஆகையால் அவன் இவ்விரண்டையும் வேருடன் அறுத்தெறிய வேண்டும். குறிப்பாக “அன்னிய்யத்” என்ற நானெனும் உணர்வை மட்டுமாவது முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.
நானில்லை என்றும், தனக்கென்று சுயமான, தனியான “வுஜூத்” – இருக்கை – இல்லையென்றும், அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்றும் உறுதியாக நம்ப வேண்டும்.
அத்துடன் “மவ்து ஹகீகீ”, “மவ்து மஜாஸீ” இரண்டையும் விளங்கியறிந்து “மவ்து மஜாஸீ” நிலைக்கு உயர்ந்து மரணிக்க வேண்டும்.
“மவ்து மஜாஸீ” என்ற இடத்தை அடைவதற்கான நிபந்தனைகள்தான் மேற்கண்ட நிபந்தனைகளாகும். “மவ்து ஹகீகீ” நிலையை அடைவதற்கு எந்த ஒரு நிபந்தனையுமில்லை. அது இயற்கை மரணம். இதை உயிரினங்கள் அனைத்தும் சுவாசித்தாகவே வேண்டும். ஆனால் “மவ்து மஜாஸீ” என்பது இதற்கு மாறானது. அவ்விடத்தை அடைவதற்கு கடும் முயற்சியும், பயிற்சியும் அவசியம்.
இறைவழி நடப்பவன் மரணிக்க வேண்டுமென்று சொல்வது இயற்கை மரணத்தைக் குறிக்காது. “மவ்து மஜாஸீ” என்பதை மட்டுமே குறிக்கும். இவ்வகை மரணம் நாமாக ஏற்படுத்திக் கொள்கின்ற மரணமாகும். நாமாக அவ்வாறு ஏற்படுத்திக் கொள்வதற்கு பயிற்சியும், வழியும் உண்டு. தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் வெற்றி காணலாம். தொடரான பயிற்சியும், விடா முயற்சியும் அவசியம்.
இவ்வகை மரணத்தை அடைய இலகுவான வழி உண்டு. அதை சுருக்கி எழுதுகிறேன்.
ஏழு “ஸிபாத்” தன்மைகள்.
அல்லாஹ் மனிதனுக்கு இரவலாக வழங்கியுள்ள ஏழு தன்மைகளில் ஒன்றேனும் தனக்குரியதல்ல – தனக்குச் சொந்தமானதல்ல, அது அல்லாஹ்வுக்கே சொந்தமானதும், அவனுக்கே உரியதுமாகும்.
அவற்றை அல்லாஹ் மனிதனின் மீது கொண்ட அளவற்ற கருணையினாலும், இரக்கத்தினாலும் அவனுக்கு கால எல்லையிட்டு இரவலாகவே வழங்கியுள்ளான். இரவல் பொருளை உரிய தவணை முடியுமுன் கொடுத்துவிடுவதே நியாயமும், மார்க்கமுமாகும்.
மனிதன் தன்னிலுள்ள ஏழு இரவல் பொருட்களையும் அவற்றைத் தந்தவனிடம் ஒப்படைப்பதற்கு ஸூபீகளும், ஞான மகான்களும் ஒரு முறையை – ஒரு வழியைக் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறிய படி அவற்றை ஒப்படைத்துவிடுவது சிறந்ததாகும்.
ஏழு தன்மைகள்.
மனிதனின் நல்வாழ்வு கருதி அல்லாஹ் அவனுக்கு இரவலாக வழங்கிய ஏழு தன்மைகளும் பின்வருமாறு.
குத்றத் – சக்தி.
இறாதத் – நாட்டம்.
ஸம்உ – கேள்வி.
பஸர் – பார்வை.
இல்ம் – அறிவு.
கலாம் – பேச்சு.
ஹயாத் – உயிர்.
இவ் ஏழு தன்மைகளும் அல்லாஹ்வினால் மனிதனுக்கு இரவலாக வழங்கப்பட்டவையாகும். இவற்றை இரவல் தந்தவனிடமே ஒப்படைத்து விட்டு உணர்வு ரீதியாக அவன் தன்னை மரணித்தவனாகக் கருத வேண்டும். கணிக்க வேண்டும். இதுவே “மவ்த் மஜாஸீ” எனப்படும்.
مُوْتُوْا قَبْلَ أَنْ تَمُوْتُوْا
நீங்கள் மரணிக்குமுன் மரணித்துவிடுங்கள் என்று ஸூபீகள் கூறும் தத்துவம் இதையே சுட்டிக் காட்டுகிறது.
இது தவிர இயற்கை மரணம் வருமுன் நீங்களாகத் தற்கொலை செய்து மரணித்து விடுங்கள் என்பது கருத்தல்ல.
ஒருவன் அவ் ஏழு தன்மைகளையும் ஒப்படைத்து உணர்வு ரீதியாக மரணிப்பதற்கு ஸூபீகள் கூறிய வழி என்னவெனில் அவன் தினமும் “ஸுப்ஹ்” தொழுகைக்கு சற்று முன் எழுந்து “தஹஜ்ஜுத்” தொழ வேண்டும். அதன்பின் பின்வரும் “திக்ர்”களை பக்தியுடன் மனத் திருப்தி ஏற்படும் வரை செய்ய வேண்டும்.
01.
لَا قَادِرَ إِلَّا اللهُ
– “லா காதிர இல்லல்லாஹ்” (சக்தியுள்ளவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை) என்ற “திக்ர்” மூலம் தனக்கும், மற்றும் வேறெவருக்கும் எது செய்வதற்கும் சக்தியில்லை என்றும், சக்தி என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமுள்ளதென்றும் உணர்வு ரீதியாக அவன் உணர்ந்து சொல்ல வேண்டும், நம்பவும் வேண்டும். இது சக்தி என்ற இரவலை ஒப்படைப்பதாகும்.
02.
لَا مُرِيْدَ إِلَّا اللهُ
– “லா முரீத இல்லல்லாஹ்” (நாட்டுமுடையவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை) என்ற “திக்ர்” மூலம் தனக்கும், மற்றும் வேறெவருக்கும், எது செய்வதற்கும் நாட்டமில்லை என்றும், நாட்டமென்பது அல்லாஹ்வுக்கு மட்டுமுள்ளதென்றும் உணர்வு ரீதியாக அவன் உணர்ந்து சொல்ல வேண்டும். நம்பவும் வேண்டும்.
03.
لَا سَمِيْعَ إِلَّا اللهُ
– “லா ஸமீஅ இல்லல்லாஹ்” (கேள்வியுடையவன் – கேட்பவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை) என்ற “திக்ர்” மூலம் தனக்கும், மற்றும் வேறு எவருக்கும், எதைக் கேட்பதற்கும் கேள்விப் புலன் இல்லையென்றும், கேள்வி என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமுள்ளதென்றும் உணர்வு ரீதியாக அவன் உணர்ந்து சொல்ல வேண்டும். நம்பவும் வேண்டும்.
04.
لَا بَصِيْرَ إِلَّا اللهُ
– “லா பஸீற இல்லல்லாஹ்” (பார்வையுடையவன் – பார்ப்பவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை) என்ற “திக்ர்” மூலம் தனக்கும். மற்றும் வேறெவருக்கும், எதைப் பார்ப்பதற்கும் பார்வையில்லை என்றும், பார்வை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமுள்ளதென்றும் உணர்வு ரீதியாக அவன் உணர்ந்து சொல்ல வேண்டும். நம்பவும் வேண்டும்.
05.
لَا عَلِيْمَ إِلَّا اللهُ
– “லா அலீம இல்லல்லாஹ்” (அறிவுள்ளவன் – அறிவாளி அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை) என்ற “திக்ர்” மூலம் தனக்கும், மற்றும் வேறெவருக்கும், எதை அறிவதற்கும் அறிவில்லை என்றும், அறிவு என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமுள்ளதென்றும் உணர்வு ரீதியாக அவன் உணர்ந்து சொல்ல வேண்டும். நம்பவும் வேண்டும்.
06.
لَا مُتَكَلِّمَ إِلَّا اللهُ
– “லா முதகல்லிம இல்லல்லாஹ்” (பேசுபவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை) என்ற “திக்ர்” மூலம் தனக்கும், மற்றும் வேறெவருக்கும், எது பேசுவதற்கும் பேச்சு இல்லையென்றும், பேச்சு என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமுள்ளதென்றும் உணர்வு ரீதியாக அவன் உணர்ந்து சொல்ல வேண்டும். நம்பவும் வேண்டும்.
07.
لَا حَيَّ إِلَّا اللهُ
– “லா ஹய்ய இல்லல்லாஹ்” (உயிருள்ளவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை) என்ற “திக்ர்” மூலம் தனக்கும், மற்றும் வேறு எவருக்கும், எந்தவொரு வஸ்த்திற்கும் உயிரில்லை என்றும், உயிர் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமுள்ளதென்றும் உணர்வு ரீதியாக அவன் உணர்ந்து சொல்ல வேண்டும். நம்பவும் வேண்டும்.
மேற்கண்டவாறு ஏழு “திக்ர்”கள் மூலம் ஏழு தன்மைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்றும், அவ்வேழு தன்மைகளில் ஒன்று கூட அல்லாஹ் தவிர வேறெவருக்கும், மற்றும் எதற்கும் சொந்தமானதில்லையென்றும் உணர்வு ரீதியாகச் சொன்னவன் “மவ்த் மஜாஸீ” என்ற அடிப்படையில் மரணித்தவனேயாவான்.
ஒருவன் “மவ்து மஜாஸீ” அடிப்படையில் மரணிப்பது இவ்வாறுதான். ஒருவன் இவ்வாறு தினமும் பயிற்சி செய்து வருவானாயின் அவன் “பனா” நிலையை அடைந்துவிடுவான்.
“ஸூபிஸம்” என்பதற்கு உலகிலுள்ள ஸூபிஸ சமூகத்தின் தலைவரான இமாம் ஜுனைத் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய வரைவிலக்கணம் தொடர்பாக இதுவரை சிறிய அளவிலான விளக்கம் எழுதியுள்ளேன்.
அவர்கள் சொன்னது போல், “ஸூபிஸம் என்பது அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்து அவனைக் கொண்டு உன்னை உயிராக்குவதாகும்” என்ற வரைவிலக்கணத்தின் படி உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்வதென்றால் நீ உன்னிலுள்ள ஏழு இரவல் தன்மைகளையும் அல்லாஹ்விடம் மேற்கண்டவாறு ஒப்படைத்துவிட்டால் நீ மரணித்தவன்தான்.
“அன்னிய்யத்” நான் என்ற உணர்வையும், “அனானிய்யத்” நானென்ற மமதையையும் வெளியேற்றி, குறித்த ஏழு இரவல் தன்மைகளையும் அவற்றுக்குரியவனிடம் ஒப்படைத்து விட்டால் இவ்வாறு செய்தவன் مُوْتُوْا قَبْلَ أَنْ تَمُوْتُوْا மரணிக்குமுன் மரணித்தவனாகிவிடுவான்.
இவ்வாறு மரணித்தவன் பிறர் பார்வையில் உயிருடனிருந்தாலும் கூட அவன் மரணித்தவன்தான். مَنْ مَاتَ فَقَدْ قَامَتْ قِيَامَتُهُ எவன் மரணித்தானோ அதோடு அவனின் மறுமை வாழ்வு தொடங்கிவிட்டது என்ற நபீ மொழியின்படி அவன் மறுமை நிகழ்வுகளில் கலந்து கொள்வான். மறுமையின் இன்ப சுகங்களையும் அனுபவிப்பான். சுவர்க்கத்தைக் கண்டேன் என்பான். அதன் இன்பத்தை ருசித்தேன் என்பான். “ஹூறுல் ஈன்” சுவர்க்கத்து மாது மூலம் பேரின்பம் அனுபவித்தேன் என்பான். இவனுக்கு எவராலும் “பத்வா” கொடுக்க முடியாது. இவன் “மஜ்தூப்” சட்டத்திற்கு உட்பட்டவனாகிவிடுவான்.
இதுவரை நான் எழுதிய விபரம் ஜுனைத் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஸூபிஸம்” என்பதற்கு கூறிய வரைவிலக்கணத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமேயாகும். அதாவது أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ உன்னை விட்டும் உன்னை அல்லாஹ் மரணிக்கச் செய்வதாகும் என்ற பாதி வசனத்திற்கு மட்டுமேயாகும். وَيُحْيِيَكَ بِهِ அவனைக் கொண்டு உன்னை உயிராக்குவதாகும் என்ற மறு பாதிக்கான விளக்கம் அடுத்து வரும்.
தொடரும்….