தொடர்: 04
“இல்முத் தஸவ்வுப்” ஸூபிஸ ஞானக் கலைக்கான பத்து அடிப்படைகள்! அம்சங்கள்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
மேற்கண்ட தலைப்பில் عِلْمُ التَّصَوُّفِ – ஸூபிஸ ஞானத்தின் பத்து அடிப்படைகளில் முதலாவது அடிப்படை அதன் வரைவிலக்கணம் حدّ التصوّف என்ற சிறிய தலைப்பில் எழுதினேன்.
“அன்னிய்யத்”, “அனானிய்யத்” பற்றியும், “மவ்து ஹகீகீ”, “மவ்து மஜாஸீ” பற்றியும் எழுதினேன்.
ஸூபீகளின் தலைவர் “ஸெய்யிதுத் தாயிபா” ஜுனைத் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஸூபிஸம்” என்பதற்கு கூறிய هُوَ أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ وَيُحْيِيَكَ بِهِ “ஸூபிஸம் என்பது அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்து அவனைக் கொண்டு உன்னை உயிராக்குவதாகும்” என்ற வரைவிலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு சுருக்கமாக விளக்கம் எழுதினேன். இவை பற்றி கடந்த தொடர்களில் குறிப்பிட்டிருந்தேன்.
வாசித்தவர்கள் பலன் பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஜுனைத் பக்தாதீ தவிர இன்னும் பலர் ஸூபிஸம் என்பதற்கு வரைவிலக்கணம் கூறியுள்ளார்கள். அவற்றில் பிரதான வரைவிலக்கணங்களை மட்டும் தொடர்ந்து எழுதுகிறேன்.
இதற்கு முன்னுள்ள தொடரையும் இதோடு சேர்த்து வாசிக்குமாறு வாசக நேயர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஸூபிஸம் என்பதற்கு இரண்டாவது வரைவிலக்கணம் பின்வருமாறு. இதுவும் இமாம் ஜுனைத் பக்தாதீ அவர்கள் கூறியதேயாகும்.
اَلتَّصَوُّفُ أَنْ تَكُوْنَ مَعَ اللهِ بِلَا عَلَاقَةٍ
நீ அல்லாஹ்வுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாகும்.
இதன் கருத்து என்னவெனில் அல்லாஹ்வின் நினைவோடிருப்பதாயின் “துன்யா” இவ்வுலகின் தொடர்புகளையும், மனைவி மக்களின் தொடர்புகளையும், மற்றும் ஏனைய விவகாரங்களையும் துண்டிப்பதாகும். இவ்வாறிருப்பது மிகவும் கடினம். ஆகையால் எல்லாமாயுமுள்ளவன் அல்லாஹ்தான் என்ற இறை தத்துவத்தின் படி “துன்யா”வின் சிந்தனைகளையும், நடவடிக்கைகளையும் அல்லாஹ்வின் சிந்தனையாகவும், அல்லாஹ்வுடனான நடவடிக்கையாகவும் ஆக்கிக் கொண்டால், மனதில் “நிய்யத்” வைத்துக் கொண்டால் – நாடினால் இச்சிக்கல் தீர்ந்து விடும்.
இவ்வாறு செய்தல் அல்லாஹ்வின் நினைவில் தொழுதல் போன்றதாகும். ஒருவன் தொழுகைக்காக “தக்பீர்” சொன்னதிலிருந்து – அதாவது தொழத் தொடங்கியதிலிருந்து தொழுகை முடியும் வரை “துன்யா” இவ்வுலகு தொடர்பான எந்த ஓர் எண்ணம் குறுக்கிட்டாலும் அவ் எண்ணத்தை அல்லாஹ்வுடன் தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிக்கல் தீர்ந்து விடும்.
இதைப் பின்வரும் உதாரணம் தெளிவாக்கும். ஒருவன், ஒரு துறவி இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் பாரப்பதற்காகச் சென்றான். அவ்வாறு அவன் செல்லும் போது துறவி எவ்வாறிருப்பார் என்று தனது அறிவுக்கேற்றவாறு கற்பனை செய்து கொண்டும் சென்றான். அவனின் கற்பனை தவிடு பொடியாகத் தொடங்கியது.
அவரின் இல்லமோ அரச மாளிகை போன்றது. ஆடம்பரமான இல்லம். வீட்டின் முன்னால் பெரும் பூந்தோட்டம். அதில் இல்லாத மலரின் பெயர் சொல்பவனுக்கு ஒரு பவுண் தங்க நகை பரிசு. அவர் உள்ளூரில் பாவிப்பதற்கென்று மட்டும் ஒரு வாகனம். வெளியூர் செல்வதற்கென்று இன்னொரு வாகனம். இவ்வாறு சொகுசான வாழ்க்கை.
போனவன் இவற்றைக் கண்டதும் இவரா துறவி? என்று அவனுள்ளத்தை கேள்விகள் துளைத்தன. இவற்றைக் கடந்து துறவியின் படுக்கை அறைக்குச் சென்றான் அவன். அது சுவர்க்கமாகவே அவனுக்குத் தோற்றியது.
துறவியைக் கண்டான். அவரிடம், துறவியே! நீங்கள் முற்றும் துறந்தவர் என்று உங்களைப் பார்த்து அருள் பெற வந்தேன். உங்கள் போன்ற ஒரு துறவியாவதற்கே நானும் வந்தேன். ஆனால் உங்களின் வீட்டைப் பார்த்ததும் என் மனம் மாறி விட்டது. இதன் விபரமென்னவென்று கேட்டான். அதற்கு அந்த துறவி أَرَى رَبِّيْ فِى كُلِّ شَيْءٍ وَفِى كُلِّ وَرْدٍ எனது இறைவனை எதிலும் காண்கிறேன், ஒவ்வொரு மலரிலும் காண்கிறேன். அவனல்லாத எதுவுமில்லை என்றும், நான் அல்லாஹ்வுடனேயே இருக்கிறேன் என்றும் கூறினார். பாடம் கற்றுக் கொண்டான் போனவன்.
இவ்வாறுதான் தொழுகையின் போது படைப்புகளுடன் தொடர்பான எண்ணம் – நினைவு வந்தால் அதையும் இறை நினைவாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தொழுகையில் مَالِكِ يَوْمُ الدِّيْنِ – தீர்ப்பு நாளின் அரசன் என்று ஓதும் போது தீர்ப்பு நாள் நினைவுக்கு வருகிறது. اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ நேரான வழியைக் காட்டுவாயாக! என்று ஓதும் போது நேரான வழி பற்றிய சிந்தனை வருகிறது. أَنْعَمْتَ عَلَيْهِمْ நீ அருள் செய்தவர்கள் என்று ஓதும் போது நபீமார், சித்தீகீன்கள், ஷுஹதாஉகள், ஸாலிஹீன் ஆகியோரை நினைவு படுத்த வேண்டி வருகிறது.
ஏனெனில்
أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ
என்ற திரு வசனத்தில் அல்லாஹ் அருள் செய்த நான்கு கூட்டங்களையும் நினைக்க வேண்டி வருகிறது. غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ என்று ஓதும் போது யஹூதிகளையும், وَلَا الضَّالِّيْنَ என்று ஓதும்போது நாஸாறாக்களையும் நினைக்க வேண்டி வருகிறது.
இன்னுமிதேபோல் أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيْلِ யானைப் படையினருக்கு அல்லாஹ் எவ்வாறு செய்தான் என்று நீங்கள் காணவில்லையா என்று ஓதும்போது யானையையும், காபிர்களின் படையையும் நினைக்க வேண்டி வருகிறது. وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيْلَ அபாபீல் பறவைகளை அவர்களுக்குப் பாதகமாக அனுப்பி வைத்தான் என்று ஓதும்போது அபாபீல் பறவையின் சிந்தனையும், அந்தப் போரும் நினைவுக்கு வருகிறது. “பகறா” அத்தியாயத்தில் مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு வெங்காயம் என்ற சொற்கள் வருகின்றன. இவ்வசனத்தை ஓதும்போது இவற்றின் சிந்தனைகள் வருகின்றன. இவை போன்று ஏனைய படைப்புகளின் பெயர்களை ஓதும்போது அவற்றின் சிந்தனைகள் வருகின்றன. இவற்றின் பெயர்களை மொழியும் போது இவற்றின் எண்ணம் மனதில் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இஸ்லாமிய “பிக்ஹ்” சட்டக்கலை இது தொடர்பாக என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.
தொழுகையில் திருக்குர்ஆன் வசனங்களை ஓதும் போது அவற்றின் பொருளை அவதானிக்க வேண்டும் என்று “ஷரீஆ”வின் “பிக்ஹ்” சட்டம் கூறுகின்றது. இச்சட்டத்தின் படி திரு வசனங்களை அவதானிப்பது அல்லாஹ்வின் நினைவோடு தொழுததாகுமா? ஏனெனில் திரு வசனங்களின் பொருள் படைப்பேயன்றி திரு வசனங்கள் போல் “கதீம்” பூர்வீகமானதல்ல. ஆகையால் அதை அவதானிப்பது அல்லாஹ்வின் நினைவாகாது. இது “ஷரீஆ”வின் “பிக்ஹ்” சட்டக்கலையில் கூறப்பட்ட விடயமாயினும் தொழுகின்றவன் ஓதும் திரு வசனங்களின் பொருளை அவதானிப்பது அல்லாஹ்வின் நினைவில் இருத்தலாகாது. ஆகுமென்று வைத்துக் கொண்டாலும் கூட பொருளைக் கவனிப்பது எல்லோராலும் முடியுமான ஒன்றுமல்ல. அது அறபு மொழியறிந்தவர்களால் மட்டுமே முடிந்ததாகும். அறபு மொழி தெரியாதவர்கள் அதைக் கூட அவதானிக்க முடியாது. அவர்கள் தொழுகையில் அல்லாஹ்வின் நினைவோடு இருப்பது எவ்வாறு?
ஆகையால் அல்லாஹ்வின் நினைவோடு தொழுவதென்றால் எவ்வாறு என்ற கேள்விகளுக்கான பதிலை உலமா சபையிடமும், “ஷரீஆ” கவுன்ஸிலிடமுமே கேட்டறிய வேண்டும். பொது மக்கள் இக்கேள்விகளுக்கான பதிலை அவர்களிடமே கேட்டறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சரியான பதில் தர தவறினால் அதற்கான பதிலை ஸூபிஸ கொள்கைவாதிகளான நாங்கள் தருவோம்.
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ،الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
தமது தொழுகையில் உள்ளச்சத்தோடு தொழுதவர்கள் வெற்றி பெற்று விட்டனர் என்ற திருமறை வசனத்தின் படி தொழும்போது பக்தி நிலையில் தொழுவதென்றால் எவ்வாறு தொழ வேண்டுமென்று அவர்களிடமே கேட்டுப் பார்க்க வேண்டும். அவர்களும் பொது மக்களின் கேள்விகளுக்கு உரிய பதில் கூறி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
எனவே, ஸூபிஸம் என்பதற்கு இமாம் ஜுனைத் பக்தாதீ அவர்கள் சொன்ன இரண்டாவது வரைவிலக்கணத்தின்படி أَنْ تَكُوْنَ مَعَ اللهِ بِلَا عَلَاقَةٍ நீ அல்லாஹ்வுடன் நேரடித் தொடர்பில் இருப்பதே ஸூபிஸமாகும்.
وَقِيْلَ – اَلتَّصَوُّفُ هُوَ الدُّخُوْلُ فِى كُلِّ خُلُقٍ سَنِيٍّ وَالْخُرُوْجُ مِنْ كُلِّ خُلُقٍ دَنِيٍّ
“ஸூபிஸம் என்றால் எதுவெல்லாம் நற்குணங்கள் என்று இஸ்லாம் சொல்கின்றதோ அக்குணங்களை எடுத்து நடப்பதும், எவை தீக்குணங்கள் என்று சொல்கின்றதோ அவற்றைத் தவிர்ந்து நடப்பதுமாகும்” என்றும் ஒரு வரைவிலக்கணம் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வரைவிலக்கணம் ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டும் ஒரு வரைவிலக்கணமாகும்.
தீக்குணங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை உள்ளன. அவற்றை ஒரே நேரத்தில் முத்தலாக் – விவாகரத்துச் சொல்லிவிட வேண்டும். இதுபோல் நற்குணங்கள் அனைத்தையும் எடுத்து நடக்கவும் வேண்டும்.
وَقِيْلَ اَلتَّصَوُّفُ هُوَ أَخْلَاقٌ كَرِيْمَةٌ، ظَهَرَتْ فِى زَمَانٍ كَرِيْمٍ، مَعَ قَوْمٍ كِرَامٍ،
இன்னும் ஸூபிஸத்திற்குப் பின்வருமாறும் ஒரு வரைவிலக்கணம் உண்டு. ஸூபிஸம் என்றால் அது சங்கையான நற்குணங்கள். சங்கையான ஒரு காலத்தில் சங்கையான ஒரு கூட்டத்துடன் வெளியாகியிருந்ததாகும் என்று ஒரு வரைவிலக்கணம் சொல்லப்பட்டுள்ளது.
இவ் வரைவிலக்கணத்தின் படி ஸூபிஸம் என்பது முன்னொரு காலத்தில் இருந்து பின்னர் அது மறைந்து விட்டதென்ற கருத்து விளங்கப்படுகின்றது. உண்மைதான். இக்காலத்தில் ஸூபீ மகானைக் காண்பது கூட அரிதாக உள்ளது.
இக்காலத்தில் ஸூபீ என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொள்பவர்களே அதிகமாக உள்ளனர். இப்பட்டம் ஒருவரின் நற் பண்புகளைக் கண்டு மற்றவர்கள் அவருக்கு சூட்டும் பட்டமாகவே இது காலவரை இருந்து வந்துள்ளது.
சஹ்றானின் தற்கொலைக் குண்டு வெடிப்பின் பின் இந்நாட்டில் ஸூபீ என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் அதிகமாகிவிட்டனர். வஹ்ஹாபீகள் கூட ஸூபீ என்று நடிக்கத் துணிந்து விட்டனர். இதற்கான காரணம் அரசாங்கத்தால் தமக்கு எந்த ஒரு இன்னலும் வரக் கூடாதென்பதேயாகும். வியப்பென்னவென்றால் சமீபத்தில் தமக்குத் தாமே ஸூபீ பட்டம் சூட்டிக் கொண்டவர்களிற் சிலர் ஸூபிஸம் தெரியாதவர்களாகவும், அதற்கு எதிரானவர்களாகவும் இருப்பதுமேயாகும்.
وَقِيْلَ – اَلتَّصَوُّفُ هُوَ أَنْ لَا تَمْلِكَ شَيْئًا وَلَا يَمْلِكَكَ شَيْءٌ،
ஸூபிஸம் என்றால் ஒருவனுக்கு எதுவும் – ஒன்றும் சொந்தமில்லாமல் இருப்பதும், அவனை எதுவும், எவரும் சொந்தமாக்காமலும் இருப்பதுமாகும்.
இதன் சுருக்கம் என்னவெனில் “ஸூபீ” என்பவன் – இறைவழி நடப்பவன் – தனக்கென்று எதையும் சொந்தமாக்காதவனாயும், தன்னை எதற்கும், எவருக்கும் சொந்தமாக்காதவனாயும் இருப்பதாகும். அடிமையாக்காதவனாயும் இருப்பதாகும்.
இவ்வரைவிலக்கணம் ஸூபீ என்பவன் இவ்வுலகப் பற்று இல்லாதவனாயும், மண்ணாசை, பணவாசை, பொருளாசை, பொன்னாசையற்றவனாகவும் இருக்க வேண்டுமென்று உணர்த்துகிறது.
எனினும் ஸூபிஸ மகான்களிற் சிலருளர். அவர்கள் பிறரின் வெளிப்பார்வையில் “துன்யா” இவ்வுலகப் பற்றுள்ளவர்கள் போல் தோற்றுவார்கள். அழகாக உடுப்பார்கள். தரமாகச் சாப்பிடுவார்கள். பெரும் மாளிகையில் வசிப்பார்கள். தரமான வாகனத்தில் பயணிப்பார்கள். ஆயினுமவர்களின் உள்ளத்தில் அணு அளவேனும் இவ்வுலகப் பற்று இருக்காது. இத்தகையோரும் ஸூபீகளில் உள்ளனர். இவர்கள் ஸூபீகளாயிருந்தும் கூட எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்ற விபரம் அடுத்த தொடரில் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்!
தொடரும்…