Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

தொடர்: 05

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

“இல்முத் தஸவ்வுப்” ஸூபிஸ ஞானக் கலைக்கான பத்து அடிப்படைகள்! அம்சங்கள்!

மேற்கண்ட தலைப்பில் தொடராக எழுதுகிறேன். ஸூபிஸ கருத்துக்களையும், தத்துவங்களையும் அறிய விரும்பும் வாசகர்கள் எனது ஆக்கங்களைத் தவறாமல் தொடர்ந்து வாசிக்க வேண்டும். எந்த ஒரு ஆக்கமாயினும் அதை “ப்றிண்ட்” எடுத்து பக்குவமாக சேமித்தும் வர வேண்டுமென்று அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த தொடர்களில் “தஸவ்வுப்” ஸூபிஸத்தின் வரைவிலக்கணங்களில் சிலதை மட்டும் எழுதியுள்ளேன். அதோடு இன்னும் சிலதை எழுதுகிறேன். நான் ஏற்கனவே எழுதியவையும், இப்போது எழுதப் போகின்றவையும் ஸூபிஸத்திற்குரிய வரைவிலக்கணங்களேயாகும்.
اَلتَّصَوُّفُ هُوَ الْأَخْذُ بِالْحَقَائِقِ، وَالْإِيَاسُ مِمَّا فِى أَيْدِي الْخَلَائِقِ،

ஸூபிஸம் என்பது எதார்த்தங்களை எடுப்பதும், படைப்புக்களின் – மனிதர்களின் கைகளிலிருப்பவற்றில் ஆசை கொள்ளாமல் இருப்பதுமாகும்.

இதன் சுருக்கம் என்னவெனில் “ஹகீகத்” எனப்படும் எதார்த்தம் எவர் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை எடுத்து நடக்கவும் வேண்டும். அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று சொன்னவனைக் கருத்திற் கொள்ளாமல் அவன் சொன்னதை ஏற்று எடுத்து நடக்க வேண்டும்.
قال سيدنا علي كرم الله وجهه اُنْظُرْ إِلَى مَا قَالَ وَلَا تَنْظُرْ إِلَى مَنْ قَالَ،
ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். “யாராவதொருவன் என்ன சொன்னானோ அதையே நீ பார். சொன்னவன் யாரென்று பார்க்காதே”

இதன் சுருக்கம் என்னவெனில் காபிரோ, முஸ்லிமோ, உயர் குலத்தைச் சேர்ந்தவனோ, இழி குலத்தைச் சேர்ந்தவனோ, நல்லவனோ, கெட்டவனோ எவன் எதைச் சொன்னாலும் அவன் சொன்னதைக் கவனி. அவன் யாரென்று பார்க்காதே என்பதாகும்.

“எல்லாம் அவன்” எனும் தத்துவத்தை மறுக்கும் உலமாஉகளே! உங்களுக்கு ஸூபிஸ தத்துவம் புரியவில்லையா என்னிடம் வந்து கற்றுக் கொள்ளுங்கள். நான் கூறுகின்ற கருத்துக்களை அல்குர்ஆன், அல்ஹதீது எனும் தராசில் நிறுத்துப் பாருங்கள். சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். பிழையாக இருந்தால் விட்டு விடுங்கள் என்று உலமா சபைக்கு கடிதம் அனுப்பி வைத்தேன். அவர்களிற் சிலர் ஒன்று கூடி அதை வாசித்த போது அவர்களில் ஒருவர் (இவர் கற்றுத்தருவாராம். நாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமாம். இவர் கற்றுத் தருவாராம். இவரிடம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமாம். இவர் யார் எங்களுக்கு மார்க்கம் சொல்லித் தருவதற்கு) என்று கர்வத்தோடு நெஞ்சில் அடித்துக் கூறினாராம்.

இவ்வாறு சொன்ன இவர் யார்? இவர் ஒரு மௌலவீயா? ஓர் ஆலிமா? இவரை “ஆலிம்” என்று சொன்னவனே “ளாலிம்” அநீதியாளனாகிவிடுவான். تَعْلِيْمْ கற்றுக் கொடுத்தல் மூலமே تَعَلُّمْ கற்றுக் கொள்ள முடியும் என்ற உண்மையை இவர் உணர்ந்து செயல்பட வேண்டும். وَفَوْقَ كُلِّ ذِيْ عِلْمٍ عَلِيْمٌ அறிவாளிக்கு மேல் ஒரு அறிவாளி இருப்பான் என்பதையும் இவர் புரிந்து கொள்ளவும் வேண்டும். இவர் திருக்குர்ஆனை ஓதினால் உண்மை புரியும்.

மேலும் ஸூபிஸம் என்பதற்கு பின்வருமாறும் ஒரு வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது.
اَلْإِنَاخَةُ عَلَى بَابِ الْحَبِيْبِ، وَإِنْ طَرَدَ
ஒரு மனிதன் தன்னை காதலியின் வாயலில் – கதவடியில் கட்டிப் போடுவதாகும். அவள் இவனை விரட்டினாலும் சரியே.

ஒருவன் தன்னை அல்லாஹ் எனும் வீட்டின் வாசற் படியில் கட்டிப் போட வேண்டும். அவன் துரத்துகிறான் – விரட்டுகிறான் என்பதற்காக அவனுடன் கோபித்துக் கொண்டு ஓடிவிடலாகாது.

ஒருவன் அவனின் அல்லாஹ்வின் வாசற்படியில் தன்னைக் கட்டிப் போடுதல் என்பது அவன் தன்னை பள்ளிவாயல் படியில் கயிற்றால் கட்டிப் போடுதலைக் குறிக்காது.

ஆயினும் ஒரு மனிதன் தன்னை அல்லாஹ்வின் அடிமையென்று உணர்ந்தும், தனக்கென்று ஒன்றுமில்லை என்றும், அதேபோல் தானுமில்லையென்றும், அல்லாஹ் அல்லாத வேறொன்றுமே இல்லையென்றும் நம்பி அரசனின் வீட்டில் வளரும் நாய் அவனைக் கண்டால் வாலாட்டித் தனது பணிவை வெளிப்படுத்துவது போன்ற மனநிலையில் வாழ்வதே அவன் தன்னை அல்லாஹ்வின் வாயலில் கட்டிப் போடுவதாகும்.

இவ்வாறு மனிதன் தன்னை அவன் வாயலில் கட்டிப் போடும் போது இவனை அவன் விரட்டினாலும், துரத்தினாலும் கூட இவன் அவனின் வாசற்படியிலேயே தன்னை அவனுக்கு அர்ப்பணித்து கிடக்க வேண்டும்.

அவன் உன்னை விரட்டுதல், துரத்துதல் என்பன உன் தேவைகளை அவன் நிறைவேற்றித்தராமல் இருப்பதாகும். அவனின் வாசற்படியை பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் நீ அவனிடம் பல தேவைகளை முன் வைத்து அவற்றை முடித்துத் தருமாறு கேட்பாய். அவன் முடித்துத் தரவில்லையானால் நீ மனம் சடைந்து போவதற்கும் சாத்தியமுண்டு. அக்கட்டம் அடியானுக்கு சோதனைக்குரிய கட்டமாகும். இவ்வாறான கட்டத்தில் அவன் பொறுமை செய்ய வேண்டும். தளர்ந்துவிடலாகாது. அல்லாஹ்வின் அருளில் ஆதரவிழந்து போகலாகாது.

மேலும் ஸூபிம் என்பதற்கு பின்வருமாறும் ஒரு வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது.
اَلتَّصَوُّفُ هُوَ صَفْوَةُ الْقُرْبِ بَعْدَ كَدْرَةِ الْبُعْدِ،

“ஸூபிஸம் என்பது தூரமெனும் கலக்கத்தின் பின் ஏற்படுகின்ற நெருக்கமெனும் தெளிவாகும்”

இதன் தெளிவென்னவெனில் ஒருவன் அல்லாஹ்வை அறியாமலிருப்பது கலக்கமென்றும், அவனை அறிதல் தெளிவென்றும் ஸூபீ மகான்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்வை அறியாமலிருப்பவன் அவனை விட்டும் தூரமானவன் என்றும், அவனை அறிந்தவன் அவனுக்கு நெருங்கியவன் என்றும் ஸூபீகள் சொல்வார்கள்.

அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமிடையில் தூரம், நெருக்கம் என்று சொல்லப்படுவது கருத்தைக் கவனிப்பது கொண்டேயன்றி இடத்தைக் கவனிப்பது கொண்டல்ல. ஏனெனில் அல்லாஹ்வுக்கு இடமுமில்லை, தலமுமில்லை. அவனே இடமாயும், தலமாயும் இருக்கும் நிலையில் அவ்விரண்டும் அவனுக்கு இருப்பதென்பது எவ்வாறு? எனவே, அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமுள்ள தூரம், நெருக்கம் என்பன கருத்தைப் பொறுத்தவையென்றே கொள்ள வேண்டும். இடத்தைப் பொறுத்தவை என்று கொள்ள முடியாது.

ஒருவனையெருவன் அறிந்து கொள்ளாத இருவர் ஓர் இடத்தில் ஒருவரின் உடல் மற்றவரின் உடலில் படுமளவு நெருங்கியிருந்தாலும் கூட அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தூரமானவரேயாவர். இதற்கு மாறாக இருவரில் ஒருவர் மற்றவரை விட ஒரு கோடி மைல் தூரப்பட்டிருந்தாலும் ஒருவரையொருவர் அறிந்தவர்களாயின் அவர்கள் தூரப்பட்டவர்களல்ல. நெருங்கியவர்கள்தான்.

வஹ்ஹாபிகள் அல்லாஹ் “அர்ஷ்” இல் இருக்கின்றான் என்று நம்புவர்களாதலால் அவர்கள் அல்லாஹ்வை அறிவதாயின் “அர்ஷ்” என்ற இடம் சென்றுதான் அறியலாம். பூமியிலிருந்து அவர்களால் அறிய முடியாது. அவர்கள் அவனுக்கு “அர்ஷ்” என்ற குறித்த ஓர் இடத்தை தரிபடுத்தியதால் அவர்கள் அங்கு சென்றுதான் அவனை அறிய வேண்டும். செல்வார்களா? ஆனால் ஸூபீகளோ எங்கிருந்தாலும் அவனை அறிந்து கொள்வார்கள். ஏனெனில் அவனே எல்லாமாயிருக்கும் நிலையில் அவனை அறியமுடியாமலிருக்க முடியாதல்லவா?

மேலும் ஸூபிஸம் என்பதற்கு பின்வருமாறும் வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது.
وَقِيْلَ اَلتَّصَوُّفُ هُوَ اِسْتِرْسَالُ النَّفْسِ مَعَ اللهِ عَلَى مَا يُرِيْدُ
ஒருவன் தனது “நப்ஸ்” – தன்னை – அல்லாஹ் நாடியபடி செய்யட்டும் என்று அவனிடம் முழுமையாக ஒப்படைத்துவிடுவதாகும்.

இதன் சுருக்கம் என்னவெனில் ஒருவன் தனக்கென்று ஒரு சுயம் இல்லாமல் – விருப்பமில்லாமல் தன்னை அவனிடமே ஒப்படைத்துவிட்டு தன்மீது அல்லாஹ் நடத்துகின்றவற்றை பொருந்திக் கொண்டிருப்பதாகும். இவனே ஸூபீ என்று சொல்லத் தகுதியுள்ளவனாவான்.

மேலும் ஒரு வரைவிலக்கணம்.
اَلتَّصَوُّفُ هُوَ الْجُلُوْسُ مَعَ اللهِ بِلَا هَمٍّ،

அடியான் எந்தவொரு கவலையுமின்றி அல்லாஹ்வுடன் இருத்தலாகும். இதுவே ஸூபிஸம் என்று சொல்லப்படும்.

அல்லாஹ்வுடன் இருப்பதென்பது எவ்வாறு? அவனை நினைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்குமா? அல்லது அதற்கு வேறு விளக்கம் உண்டா? வாசகர்களுக்கு மேற்கண்டவாறு ஒரு சந்தேகம் ஏற்படலாம்.

இக் கேள்விக்கு நான் அறிந்த விளக்கம் என்னவெனில், ஒருவன் தன்னை அவனாக அறிந்திருப்பதேயாகும். இவ்வாறு அவன் அறிந்தானாயின் அவனுக்கு கவலை வர இடமில்லாமற் போய்விடும். ஏனெனில் அல்லாஹ்வுக்கு கவலையில்லை என்பதினாலாகும்.

இங்கு அஷ்ஷெய்கு அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் அவர்களை நினைவு படுத்துகிறேன். அவர்கள் தங்களின் பாடலில் (நான் என்றிருந்தேனே நாளும் கழிந்தேனே தானாயிருந்த தன்மையறியேனே) என்று கூறியுள்ளார்கள்.

பின்வரும் இறை மறை வசனம் மேற்கண்ட கருத்துக்குப் பொருத்தமான வசனமாகும்.

قال الله تعالى أَلَا بِذِكْرِ اللهِ تَطْمَئِنُّ الْقُلُوْبُ،

அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைப்பதன் மூலம் உள்ளங்கள் சாந்தியடையும். (திருக்குர்ஆன் 13-28)

ஒருவனை கவலைகள் சூழ்ந்து கொள்ளும் போது அவன் அல்லாஹ் – அல்லாஹ் என்று “திக்ர்” நினைப்பதால் அவனின் கவலை நீங்கி மனதுக்கு அமைதியும், நிம்மதியும் ஏற்படுமென்று அல்லாஹ் கூறியுள்ளான்.

அல்லாஹ்வின் கூற்றை பரீட்சித்துப் பார்ப்பதற்காக – இது சரியா? என்று அறிவதற்காக ஒருவன் தனித்திருந்து பக்தியுடன் ஓர் இலட்சம் தரம் அல்லாஹ்வை நினைத்தான். அவனுக்கு மன நிம்மதி கிடைக்கவில்லை.

அவன் ஒரு ஸூபீ மகானிடம் சென்று விடயத்தைக் கூறினான். அதற்கவர் நீ எவ்வாறு அல்லாஹ்வை நினைத்தாயென்று கேட்டார். அல்லாஹ் அல்லாஹ் என்று வாயால் சொல்லி மனதாலும் நினைத்தேன் என்றான். அதற்கவர் நீ அவனின் வெளிப்பாடு, அதாவது நீ அவன்தான் என்ற நினைவோடு நினைத்தாயா? அலல்து நீ வேறு, அவன் வேறு என்ற எண்ணத்தில் நினைத்தாயா? என்று கேட்டார்.அவன் ஸூபிஸ ஞானம் தெரியாதவனாயிருந்ததால் அவன் வேறு, நான் வேறு என்ற நினைவோடுதான் நினைத்தேன் என்றான். அதற்கவர் நீ இந்த நம்பிக்கையோடும், நினைப்போடும் ஓர் இலட்சம் தரமல்ல ஒரு கோடித் தரம் நினைத்தாலும் அவனை நினைத்தவனாகமாட்டாய். அவ்வாறு நினைப்பதால் நீ எப்பயனையும் அடையவுமாட்டாய். ஆகையால் “நானென்றிருந்தேனே நாளும் கழிந்தேனே தானாயிருந்த தன்மையறியேனே” என்ற அடிப்படையில் “அவனே உள்ளான் நான் இல்லை” என்ற எண்ணத்தோடு அவனை நினைத்தால் மட்டும்தான் நீ அவனை நினைத்தவனாயும் ஆவாய். உன் தேவையும் நிறைவேறும்” என்று கூறினார்.

மறுநாளிரவு அவன் அந்த மகான் சொன்னது போன்று இஷாத் தொழுகையை தொடர்ந்து “ஸுப்ஹ்” தொழுகை வரை செயல்பட்டான். “ஸுப்ஹ்” தொழுதுவிட்டு வீட்டுக்கு வந்தான். அவன் மனைவி தன் கையில் ஒரு பொதியோடு அவனை வரவேற்று பின்வருமாறு கூறினாள்.

“நீங்கள் இரவு பள்ளிவாயலுக்கு போனீர்கள். நள்ளிரவு வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. நீங்கள் தட்டுகிறீர்கள் என்று கதவைத் திறந்தேன். வீட்டின் முன் அழகிய தோற்றமுள்ள ஒரு வயோதிபர் நின்றிருந்தார். என்னைக் கண்டதும் இதை உன் கணவனிடம் கொடுத்து விடு என்று கூறி மறைந்து விட்டார் என்று சொல்லி பொதியை கணவனிடம் ஒப்படைத்தாள். அவன் பொதியைத் திறந்தான். பணமிருந்தது. எண்ணினான். ஓர் இலட்சத்து இருபத்து நான்காயிரம் ரூபாய் இருந்தது கண்டு வியந்து அந்தப் பணத்துடன் தனக்கு வழி காட்டிய மகானிடம் சென்று விபரத்தைக் கூறி அவரிடமே பணத்தை ஒப்படைத்தான். அவர் இது உனக்குரியது. நீயே வைத்துக் கொள் என்று கூறி அனுப்பி வைத்தார்.

அல்லாஹ்வை நினைப்பதாயின் இவ்வாறுதான் நினைக்க வேண்டும் என்ற தத்துவத்தையும் அவன் உணர்ந்து கொண்டான்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments