Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

தொடர்: 06

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

“இல்முத் தஸவ்வுப்” ஸூபிஸ ஞானக் கலைக்கான பத்து அடிப்படைகள்! அம்சங்கள்!

“தஸவ்வுப்” ஸூபிஸமெனும் கலையின் பத்து அம்சங்களில் முதலாவது அம்சம் அதன் வரைவிலக்கணமாகும். இது தொடர்பாக கடந்த பதிவுகளில் ஸூபிஸத்திற்கு கூறப்பட்டுள்ள வரைவிலக்கணங்களில் பலதை எழுதியுள்ளேன். இன்னும் பல வரைவிலக்கணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் எழுதி “ஸூபீ” என்பவர் யார்? அவருக்கான வரைவிலக்கணம் என்ன? என்பது தொடர்பாக எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!

اَلتَّصَوُّفُ هُوَ الْعِصْمَةُ عَنْ رُؤْيَةِ الْكَوْنِ،
“ஸூபிஸம்” என்றால் படைப்பைக் காணாமல் இருப்பதாகும்”

இவ்வரைவிலக்கணமும், முதலாவதாகக் கூறிய ஸெய்யிதுத் தாயிபா ஸூபீகளின் தலைவர் ஜுனைத் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ وَيُحْيِيَكَ بِهِ அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்து அவனைக் கொண்டு உன்னை உயிராக்குவதாகும் என்ற வரைவிலக்கணமும் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே எனும் கொள்கைக்கு 100 வீதமும் பொருத்தமான வரைவிலக்கணங்களாகும்.

இவ்விரு வரைவிலக்கணங்களையும், அவற்றுக்கான சுருக்கமான விளக்கத்தையும் தெரிந்து கொள்ளாதவர்கள் மேற்கண்ட தலைப்பில் நான் பதிவிட்ட முதலாவது தொடரிலிருந்து வாசிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

குறித்த தொடர் பதிவுகள் கிடைக்காதவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேற்கண்ட “ஸூபிஸம் என்றால் படைப்பை காணாமல் இருப்பதாகும்” என்ற வரைவிலக்கணம் பற்றி ஆய்வு செய்வோம்.

படைப்பை காணாமல் இருப்பது எவ்வாறு?

படைப்பைக் காணாமலிருக்க முடியாது. கண்ணைத் திறந்தால் தெரிவது படைப்பன்றி வேறெதுவாக இருக்கலாம்?! கண்ணைத் திறந்தால் அதற்குத் தெரிவதெல்லாமே படைப்பாக இருக்கும் நிலையில் அதைக் காணாமலிருப்பது எவ்வாறு? இது எவ்வாறு சாத்தியமாகும்? ஏன் சாத்தியமாகாது?

சாத்தியமாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் படைப்பாக மனிதனின் கண்களுக்குத் தோற்றுவது அல்லாஹ்தான் என்று தெளிவாகக் கூறியுள்ளான். (திருக்குரு;ஆன் 2-115)

நீங்கள் எங்கு நோக்கினாலும் – மேலே பார்த்தாலும், கீழே பார்த்தாலும், முன்னால் பார்த்தாலும், பின்னால் பார்த்தாலும், வலதில் பார்த்தாலும், இடதில் பார்த்தாலும் – அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளான்.

இத்திரு வசனத்தின் நேரடிப் பொருள் அவனின் முகம் உள்ளது என்பதேயாகும்.

அவனுக்கு முகம் இல்லாதிருக்கும் நிலையில் முகம் என்று ஏன் சொல்லப்பட்டதென்று ஆய்வு மேற்கொண்ட “றயீஸுல் முபஸ்ஸிரீன்” திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், “வஜ்ஹ்” என்ற சொல்லுக்கு முகம் என்று பொருள் கொள்ளாமல் அவனின் “தாத்” என்று தங்களின் விரிவுரை நூலில் விளக்கம் எழுதியுள்ளார்கள்.

இடைக்குறிப்பு:

“தப்ஸீர்” திருக்குர்ஆன் விரிவுரைக் கலையின் தலைவர் என்று உலக மார்க்க அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இப்னு அப்பாஸ் – அப்துல்லாஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்களும், இன்னும் பல “முபஸ்ஸிரீன்”களும் “முகம்” என்பது அல்லாஹ்வின் “தாத்”தையே குறிக்கும் என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் திருமறையில் “வஜ்ஹ்” முகம் என்று சொல்லியிருக்கும் நிலையில் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதற்கு “தாத்” என்று எந்த வகையில், எந்த ஆதாரம் கொண்டு அவ்வாறு விளக்கம் எழுதினார்கள் என்று நாம் ஆய்வு செய்யத் தேவையில்லை. அவர்கள் ஆதாரமின்றி அவ்வாறு சொல்லியிருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பெருமானார் அவர்களின் “துஆ”வைப் பெற்றவர்களாவர். எனினும் ஆய்வாளர்களுக்கு ஒரு விருந்தாக அமையட்டுமென்று சிறிய விளக்கம் தருகிறேன்.

அவர்கள் “முகம்” என்ற சொல்லுக்கு முகம் என்றே பொருள் கொண்டிருந்தால் அறிவு ஞானமில்லாதவர்கள் அல்லாஹ்வுக்கு படைப்புகளின் முகம் போன்ற முகம் இருப்பதாக எண்ணிவிடக் கூடுமென்பதை தவிர்ப்பதற்காக அவ்வாறு சொல்லியிருக்கலாம். அல்லாஹ்வுக்கு முகம் இருப்பதாக நம்புதல் “அகீதா” கொள்கைக்கு முரணானதாகும். ஆயினும் அவனுக்கு “தாத்” உண்டு என்று நம்ப வேண்டும். இவ்வாறு நம்புதல் அவசியமென்று கொள்கை விளக்க நூல்கள் கூறுகின்றன. இஸ்லாமிய “அகீதா” கொள்கை இதுவேயாகும்.

“வஜ்ஹ்” முகம் என்ற சொல்லுக்கு “தாத்” என்று விளக்கம் சொல்வது பிழையாகாது. பின்வரும் விளக்கத்தை தெரிந்து கொண்டால் இது சரி என்பது தெளிவாகும்.

அதாவது إِطْلَاقُ الْجُزْءِ وَإِرَادَةُ الْكُلِّ என்று “பஸாஹத்” நாகரிக நடைமுறையொன்று அறபு மொழியில் உண்டு. இந்த விடயம் “இல்முல் மஆனீ”, “இல்முல் பலாஙா” போன்ற கலை கற்றவர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. புதிதான ஒன்றுமல்ல. இக்கலைகளின் அடிப்படையில் திருக்குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பதையும் நாம் காண்கிறோம்.

இதன் விபரமென்னவெனில், ஒன்றின் ஒரு பகுதியைக் கூறி கூறப்பட்ட அப்பகுதியை மட்டும் கருத்திற் கொள்ளாமல் அந்த ஒன்றையே முழுமையாக கருத்திற் கொள்தலாகும்.

இதை ஓர் உதாரணம் மூலம் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஓர் ஊரிலுள்ள ஒருவன் கடன் தொல்லை காரணமாக ஒருவருக்கும் தெரியாமல் ஊரை விட்டும் மறைந்து விடுவானாயின் – மக்களுக்குத் தெரியாமல் எங்காவது போய்விடுவானாயின் “அவன் தலைமறைவாகிவிட்டான்” என்று ஊர் மக்கள் சொல்வார்கள். இதன் கருத்து அவன் ஆளே இல்லை என்பதாகும். தலை மட்டும்தான் இல்லை – தலை மட்டும்தான் மறைந்ததேயன்றி தலையின் கீழுள்ள பகுதி ஊரில் இருக்கிறது என்பது கருத்தல்ல. இக்கருத்தில் மேற்கண்ட வசனத்தை எவரும் பாவிப்பதில்லை.

தலை என்பது அவனின் உடலுறுப்புக்களில் ஒன்று. அவ் உறுப்பைக் கூறி அதை மட்டும் கருத்திற் கொள்ளாமல் அவனையே முழுமையாக கருத்திற் கொள்வது சாதாரணமாக மனிதர்களின் பேச்சு வழக்கில் உள்ளதேயாகும். இவ்வாறு சொல்வதால் அவனின் தலை மட்டுமே மறைவானதேயன்றி அதற்குக் கீழுள்ள உறுப்புகள் தலைமறைவாகவில்லை என்று கருத்துக் கொள்ள முடியாது.

இப்பாணியிலேயே அல்லாஹ் மேற்கண்ட வசனத்தைக் கூறியுள்ளான் என்று புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு என்றால் முகம் மட்டும் என்பது கருத்தல்ல. அவனே உள்ளான் என்றுதான் விளங்க வேண்டும். அதாவது அவனின் “தாத்” அல்லது உள்ளமை உண்டென்பதே விளக்கமாகும்.

இங்கு இப்படியும் ஒரு விளக்கம் உண்டு. அதாவது ஒரு மனிதனில் எத்தனையோ உறுப்புக்கள் இருக்கும் நிலையில் முகம் மட்டும் குறிப்பாகச் சொல்லப்பட்டதேன்? இதுவே கேள்வி.

மனித உறுப்புக்களில் மிகவும் விஷேடமானதும், பிரதானமானதும் முகமேயாகும். முகம் என்று சொல்லப்பட்டாலும் கழுத்துக்கு மேற்பட்ட எல்லா உறுப்புக்களையும் இச் சொல் உள் வாங்கியதேயாகும். இது தலை, மூளை முதலானவற்றையும் எடுத்துக்கொள்ளும் சொல்லாகும். முதியவர்கள் “என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்று சொல்வார்கள். இவ்வடிப்படையில் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டதாகும்.

நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்றால் அவனே உள்ளான் என்பதே இதன் சுருக்கமாகும்.

அல்லாஹ்வுக்கு “தாத்” உண்டா?

ஆம் உண்டு. “ஈமான்” நம்ப வேண்டிய அம்சங்களில் இதுவும் ஒன்றுதான். ஒருவன் “முஃமின்” விசுவாசியாவதாயின் அல்லாஹ்வுக்கு “தாத்” உண்டு என்று நம்பத்தான் வேண்டும். இது மட்டுமல்ல. அந்த “தாத்”திற்கு “ஸிபாத்” தன்மைகளும் உண்டு என்றும், செயல்கள் உண்டு என்றும் நம்ப வேண்டும்.

ஆயினும் அந்த “தாத்” எப்படியானதென்று எந்த ஒரு மகானாலும் கூற முடியாது. “தாத்” என்று ஒன்று உண்டு என்று மட்டும் அனைவரும் நம்ப வேண்டும். நம்பாதவன் விசுவாசியாக இருக்கமாட்டான்.

இவ்வாறு மட்டும் நம்புதல் போதாது. அவனுக்கு “தாத்” இருப்பது போல் அந்த “தாத்”திற்கு கட்டாயம் இருக்க வேண்டிய தன்மைகள் 20 என்றும், அறவே அவனில் இருக்க முடியாத தன்மைகள் 20 என்றும், இதேபோல் இருப்பதும், இல்லாதிருப்பதும் சமமான தன்மை ஒன்று என்றும் ஒருவன் அவசியம் நம்ப வேண்டும்.

“ஸிபாத்” என்னும் தன்மைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றை விபரமாக அறிந்து நம்ப வேண்டும். இவ்வாறு நம்புதல் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் மேற்கண்டதுபோல் அல்லாஹ்வுக்கு “தாத்” உண்டு என்றும், அதேபோல் மேற்கண்டதுபோல் மொத்தம் 41 “ஸிபாத்” தன்மைகளையும் நம்பினவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

மார்க்கம் கற்ற மார்க்க அறிஞர்கள், அறபுக் கல்லூரிகளில் மார்க்க அறிவு கற்பவர்கள் தவிர ஏனையோரில் நூற்றுக்கு பத்து வீதமானோர் கூட மேலே நான் எழுதியதுபோல் அல்லாஹ்வை அறிந்திருக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

நான் கூறுவது உண்மையா? இல்லையா? என்பதை யாராவது அறிய விரும்பினால் அவர் ஆய்வு செய்து பார்த்தால் உண்மை புரியும்.

“தாயீ” அல்லாஹ்வின் பால் மக்களை அழைப்பவர்கள் முதலில் மக்களின் “ஈமான்” இறை நம்பிக்கையை பலப்படுத்த வேண்டும். இஸ்லாமிய “அகீதா” கொள்கையையும், ஸூபிஸ ஞான தத்துவங்களையும், அகமியங்களையும் மக்களுக்குப் போதிக்கவேண்டும். “தரீகா” வழிக்கு அவர்களை அழைக்க வேண்டும். வலீமாரின் மீது பாசத்தையும், நம்பிக்கையையும் அவர்களின் கல்புகளில் பாய்ச்ச வேண்டும்.

“ஷரீஆ”வை பேணி நடக்குமாறு அவர்களைப் பணிக்க வேண்டும். ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா முதலான நான்கு அம்சங்களையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments