தொடர்: 07
“இல்முத் தஸவ்வுப்” ஸூபிஸ ஞானக் கலைக்கான பத்து அடிப்படைகள்! அம்சங்கள்!
எந்தக் கலையாயினும் அதற்கு பத்து அடிப்படை அம்சங்கள் உண்டு!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
மேற்கண்ட தலைப்பில் அதன் முதல் அம்சமான, “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானக் கலையின் வரைவிலக்கணம் பற்றி தொடராக எழுதி வந்தேன். விதியுள்ளோர் விளங்கியிருப்பர். இது இறை நியதி.
அதே தொடரில் “ஸூபீ” என்றால் யார்? அவருக்கான அடயாளம் என்ன? என்பது தொடர்பாக சில வரிகள் எழுதுகிறேன்.
وَالصُّوْفِيُّ الصَّادِقُ عَلَامَتُهُ أَنْ يَفْتَقِرَ بَعْدَ الْغِنَى، وَيَذِلَّ بَعْدَ الْعِزِّ، وَيَخْفَى بَعْدَ الشُّهْرَةِ، وَعَلَامَةُ الصُّوْفِيِّ الْكَاذِبِ أَنْ يَسْتَغْنِيَ بَعْدَ الْفَقْرِ، وَيَعِزَّ بَعْدَ الذُّلِّ، وَيَشْتَهِرَ بَعْدَ الْخَفَاءِ،
ஸூபிஸத்தின் வரைவிலக்கணத்தை அறிந்து கொண்ட நாம் “ஸூபீ” என்பவர் யார் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சஹ்றான் வெடித்த பிறகும், வஹ்ஹாபிஸ அமைப்புகளிற் சிலதை அரசு தடை செய்த பிறகும் நமது இலங்கைத் திரு நாட்டில் பல புதிய “ஸூபீகள்” தலை நீட்டியுள்ளார்கள். “ஸூபீ” லேபல் குத்திக் கொண்டு முஸ்லிம்கள் மத்தியில் அறிமுகமாகி வருகின்றார்கள். இவர்கள் “ஸூபீ”களாக நடிக்கின்றார்களா? அல்லது உண்மையில் ஸூபீகள் தானா? என்பதை பொது மக்கள் இனங்கண்டு கொள்வதற்காக “ஸூபீ”களுக்கான அடையாளங்களை இங்கு எழுதுகிறேன்.
மேற்கண்ட வசனத்தின் சுருக்கம்:
“உண்மையான “ஸூபீ”க்குரிய அடையாளம் அவன் பணச் செல்வத்தின் பின் வறுமையாவதாகும். கௌரவத்தின் பின் இழிவடைவதாகும். பிரசித்தி பெற்ற பின் மறைந்துவிடுவதாகும்”
“பொய் ஸூபீக்குரிய அடையாளம் வறுமைக்குப் பின் அவன் செல்வந்தனாவதாகும். இழிவுக்குப் பின் கௌரவமடைவதாகும். மறைந்த பின் பிரசித்தி பெறுவதாகும்”
ஒருவன் பணச் செல்வமுள்ளவனாயிருந்து தனது செல்வத்தை மார்க்க வழியில் அள்ளி வழங்கி அவன் வறுமை நிலை அடைவதாகும். இது உண்மையான ஸூபீக்குரிய அடையாளங்களில் ஒன்று. இதற்கு ஆதாரமாக சிறிய வரலாறொன்றை இங்கு குறிப்பிடுகிறேன்.
இந்தியா – தமிழ் நாடு கீழக்கரை நகருக்கு அண்மையில் ஏர்வாடி செல்லும் வழியில் “மத்ரஸதுல் மவாலீ” என்ற பெயரில் ஓர் அறபுக் கல்லூரி உண்டு. அங்கு சுமார் பத்து நாட்கள் நான் தங்கியிருந்துள்ளேன். அக்காலத்தில் அங்கு ஒரு “உஸ்தாத்” ஓதிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஸூபீ போல் எனக்குத் தோற்றினார். நான் அவர் பற்றி ஏனைய உஸ்தாதுமார்களிடம் வினவியபோது அவர் ஒரு செல்வந்தர் என்றும், சொற்ப சம்பளமாயினும் கல்விக்காக தன்னை அர்ப்பணித்தவர் என்றும், மாதாந்தம் பெறும் சம்பளத்தைக் கூட ஏழை மாணவர்களுக்கு கொடுத்துவிடுவார் என்றும் கூறினார்கள்.
சில வருடங்களின் பின் மீண்டும் அவ்வழியால் பயணித்த நான் அங்கு சென்று சில மணி நேரம் தங்கியிருந்தேன். அப்போது குறித்த ஹஸ்றத் இருக்கவில்லை. அது பற்றி வினவிய போது அவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் பள்ளிவாயல், மற்றும் கல்விக் கூடங்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு துறவி போலாகி தற்போது ஒரு கடையில் சிறிய சம்பளத்திற்கு வேலை செய்கிறார் என்றும், அவர் ஸூபீ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.
இவர்தான் ஸூபீ ஆவார். ஏனெனில் இவர் செல்வத்தின் பின் “பகீர்” ஆனவர். இது ஓர் அடையாளம்.
இரண்டாவது அடையாளம் கௌரவத்தின் பின் அவன் இழிவடைவதாகும். அதாவது ஒருவன் கௌரவமானவனாக வாழ்ந்து அவ்வாழ்வு தனக்குப் பிடிக்காமல் அதன் பின் அவனே தன்னை இழிவு படுத்திக் கொள்வதாகும். அல்லது பிறரால் அவன் இழிவு நிலைக்கு தள்ளப்படுவதாகும்.
பெருமை, அகங்காரம், ஆணவம், பதவி மோகம், புகழ் போன்ற தீக்குணங்களை விரும்பாத. ஸாலிஹான ஒரு நல்ல மனிதன் பொது மக்களால் கௌரவிக்கப்படும் போதும், அவரின் கை, கால்களை முத்தமிடும் போதும், வேறு வகையில் அவர் கண்ணியம் செய்யப்படும் போதும் அவர் விரும்பாமலேயே அவருக்குத் தான் பெரியவன் என்ற உணர்வு ஏற்படுவதற்குச் சாத்தியம் உண்டு. இது ஷெய்த்தான் அவரைக் கெடுப்பதற்குச் செய்கின்ற சூட்சியாகும். இந்நிலையில் அவனின் சூட்சியில் மாட்டிக் கொள்பவர்களும் உள்ளனர். அவனை வென்று ஜெயம் பெறுபவர்களும் உள்ளனர்.
இவ்வாறான கட்டத்தில் அவர் தானாகவே தன்னை இழிவு படுத்திக் கொள்வார். அதாவது தன்னைப் பிறர் கௌரவிக்காத வகையில் நடித்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வார். இதற்காக அவர் சில தந்திரமான வழிகளைக் கையாள்வார். அவரின் பிரதான நோக்கம் தன்னை இழிவு படுத்திக் கொள்வதேயாகும். ஒருவர் தன்னைத் தானே இழிவு படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் சில தந்திரங்களை அவர் கையாள்வது குற்றமாகாது.
உதாரணமாக அவர் கள்ளுக் கடையில் இருந்து கொண்டு பால் குடிப்பது போன்றும், கிழிந்த, அழுக்கான உடைகளுடன் நடை பாதைகளில் இருப்பது போன்றும், மூளை கெட்ட பைத்தியம் போல் நடிப்பதும், தீயவர்களுடன் நட்பு வைத்திருப்பது போன்றுமாகும்.
ஓர் ஊரில் அவ் ஊர் மக்களால் மதிக்கப்படுகின்ற ஒருவர் இருந்து, மக்களின் அன்புத் தொல்லை அவருக்கு அதிகமாகி அவர் அத்தொல்லையிலிருந்து விடுபட விரும்பினால் அவர் மக்களின் வெறுப்பிற்குரியவராக வேண்டும். அதற்காக அவர் ஏதாவதொரு காரியத்தைச் செய்வது போன்றாகும். இவ்வாறு செய்தாராயின் அவர் இரண்டாம் அடையாளத்திற்குரியவரான ஸூபீ ஆவார்.
சுமார் 100 வருடங்களுக்கு முன் கல்முனைப் பிரதேசத்தில் ஒரு ஞான மகான் வாழ்ந்துள்ளார். அவரின் ஆதரவாளர்கள், நேயர்கள் அவருக்கு அன்புத் தொல்லை கொடுத்து வந்தார்கள். அவரின் கை, கால்களை முத்தமிடுதல், அவருக்கு சன்மானங்கள் வழங்குதல், அவரின் கை, கால்களை அமுக்கிவிடுதல் போன்ற அன்பின் வெளிப்பாடுகள் செய்து அவர் அன்பர்களைத் தடுத்தும் கூட அவர்கள் அவருக்கு கட்டுப்படவில்லை. அவர் மீது பொறாமை கொண்ட அரை வேக்காடு ஆலிம்கள் அவர் கஞ்சா குடிப்பதாகவும், மது அருந்தவதாகவும் பொய்யான வதந்திகளைப் பரப்பி அவரை யாரும் சந்திக்கலாகாதென்று மக்களைத் தடுத்தார்கள். மீறுபவர்களைத் தண்டிக்கவும் செய்தார்கள். இதனால் அவரை நெருங்குவதை மக்களும் நிறுத்திக் கொண்டனர்.
ஞான மகான் தன்னை இழிவு படுத்த நினைத்ததை அல்லாஹ் அரை வேக்காடு உலமாஉகள் மூலம் நிறைவேற்றி வைத்தான். அவர் தனது இலட்சியத்தில் வெற்றி பெற்று மக்களை விட்டும் ஒதுங்கி வாழத் தொடங்கிவிட்டார்.
இவ்வாறு கௌரவத்தின் பின் இழி நிலையடைதல் உண்மையான ஸூபீக்குரிய அடையாளமாகும்.
எனக்கும், நான் கூறிய ஸூபிஸ ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் அரை வேக்காடுகள் “முர்தத்” பட்டம் வழங்கி எம்மை அவமானப்படுத்தியதும் இவ்வடிப்படையிலுள்ளதேயாகும்.
உண்மையான ஸூபீக்குரிய மூன்றாவது அடையாளம் وَيَخْفَى بَعْدَ الشُّهْرَةِ – பிரசித்தி பெற்றிருந்து பின்னர் மறைந்து விடுதலாகும்.
ஸூபீ மகான்களிற் பலர் பிரசித்தி பெற்றிருப்பார்கள். மக்களின் அன்புத் தொல்லை பொறுக்க முடியாமல் அவர்கள் இலைமறை காய் போல் மறைந்து வாழ்வார்கள்.
மேற்கண்ட அடையாளங்கள் உண்மையான ஸூபீக்குரிய அடையாளங்களாகும்.
ஆனால் போலி ஸூபீக்குரிய அடையாளங்கள் மேற்கண்ட அடையாளங்களுக்கு முரணானவையாகும். அதாவது வறுமைக்குப் பிறகு செல்வந்தனாவார். இழி நிலைக்குப் பின் கௌரவ நிலையடைவார். மறைவிற்குப் பின் பிரசித்தி பெறுவார். இம் மூன்று அடையாளங்களும் பொய் ஸூபீக்குரிய அடையாளங்களாகும்.
மேற்கண்ட கருத்துக்களை ஸூபீ மகான் அபூ ஹம்ஸா அல் பக்தாதீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
இன்னும் ஸூபீக்குரிய வரைவிலக்கணம் பின்வருமாறும் சொல்லப்பட்டுள்ளது.
اَلصُّوْفِيُّ كَالْأَرْضِ، يُطْرَحُ عَلَيْهِ كُلُّ قَبِيْحٍ، وَلَا يَخْرُجُ مِنْهُ إِلَّا كُلُّ مَلِيْحٍ، وَيَطَئُهَا الْبَرُّ وَالْفَاجِرُ،
“ஸூபீ என்பவர் பூமி போன்றவர். அசுத்தம் – அழுக்கு யாவும் அதில் கொட்டப்படும். ஆனால் அதிலிருந்து நல்லவைதான் வெளியாகும். அதோடு பூமியில் நல்லவன் மட்டுமன்றி கெட்டவனும் நடப்பான்”
அல்லாஹ்வின் படைப்புக்களில் பூமி போல் பொறுமையுள்ள வேறொரு படைப்பும் கிடையாது. மனிதன் மட்டுமன்றி மிருகங்களும் அதில் நடக்கின்றன. சுத்தமான உயிரினங்களும் நடக்கின்றன. அசுத்தமான உயிரினங்களும் நடக்கின்றன. உயிரினங்கள் அதன் மீது மல சலம் கழிக்கின்றன. மனிதன் அதில் உமிழ்கிறான். குப்பை முதலான அசுத்தங்களையும் கொட்டுகிறான். இவை அனைத்தையும் பூமி பொறுமையுடன் ஏற்றுக் கொள்வதை நாம் நிதர்சனமாக காண்கிறோம்.
மனிதர்களும், மற்றுமுள்ள உயிரினங்களும் பூமிக்குச் செய்கின்ற தரக் குறைவான, கீழ்த்தரமான விடயங்களுக்காக அவர்களைப் பூமி தண்டிப்பதாயின் இன்று உலகில் வாழ்கின்ற உயிரினங்களில் 90 வீதமானவற்றை பூமி விழுங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதன் மூலம் – பூமி தருகின்ற பாடத்தின் மூலம் – யாரால் எது நடந்தாலும் அதை நாம் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். பூமிக்குள்ள பொறுமை போன்ற பொறுமை ஸூபீ மகான்களுக்கு மட்டுமே இருக்கும். இதனால்தான் “ஸூபீ” என்பவர் பூமி போன்றவர் என்று ஆரிபீன்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
தொடரும்…