தொடர்: 08
“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை!
ஸூபிஸம் என்றால் என்ன?
எந்தவொரு கலையாயினும் அதற்கு அடிப்படை அம்சங்கள் 10 இருக்க வேண்டும். அவற்றில் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸமும் ஒன்றாகும்.
“இல்முத் தஸவ்வுப்” ஸூபிஸ ஞானக் கலைக்கான பத்து அடிப்படைகள்! அம்சங்கள்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அவற்றில் இத்தலைப்பில் கடந்த பதிவுகளில் ஸூபிஸத்தின் வரைவிலக்கணம் பற்றியும், “ஸூபீ” என்பவருக்கான வரைவிலக்கணம் பற்றியும் எழுதினேன். அதைத் தொடர்ந்து இப்பதிவில் எழுதுகிறேன்.
“ஸூபீ” என்பவருக்கு பின்வருமாறும் ஒரு வரைவிலக்கணம் உண்டு.
اَلصُّوْفِيُّ وَاحِدٌ فِى الذَّاتِ، لَا يَقْبَلُهُ أَحَدٌ وَلَا يَقْبَلُ أَحَدًا،
“ஸூபீ” என்பவர் “தாத்”தில் ஒருவர். அவரை எவரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார். அவர் எவரையும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்.
ஒவ்வொரு மனிதனும் “தாத்”தில் ஒருவர்தான். இருவரோ பலரோ அல்ல. இவ்வாறிருக்கும் நிலையில் ஸூபீ என்பவர் மட்டும் “தாத்”தில் ஒருவர் என்று எந்த வகையில் சொல்வது என ஒருவர் என்னிடம் கேட்டால் அவர் ஒருவர்தான். ஆயினும் அவர் தனிப் போக்குள்ளவர் என்பதை தெரிவிப்பதற்காக அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று சொல்வேன்.
இன்று கூட மக்களிடையே ஸூபீ ஒருவர் பற்றிப் பேசப்படும் போது அவரை யாருக்கும் பிடிக்காது. அவருக்கும் யாரையும் பிடிக்காது என்று சொல்வதுண்டு. ஆயினும் அவர் சரி காண்பதாயின் அவர் போன்ற ஸூபீ ஒருவரையே சரி காண்பார். மற்றவர்களை அவர் சரி காண மாட்டார். இதேபோல் ஸூபீ அல்லாத மற்றவர்களுக்கும் “ஸூபீ”யைப் பிடிக்காது. ஏனெனில் “ஸூபீ” என்பவர் எல்லாக் காரியங்களிலும் மற்றவர்களுடன் இணங்கிச் செல்லமாட்டார். செயல்படவும் மாட்டார். ஏனெனில் அவர் மார்க்க விடயத்தில் மற்றவர்களைவிட மென்மையான, பேணுதலுள்ளவராகவே இருப்பார். ஆயினும் ஸூபீகளுக்கு “ஸூபீ”யைப் பிடிக்கும். اَلْجِنْسُ مَعَ الْجِنْسِ இனம் இனத்தோடு சேர்ந்து கொள்ளும்.
இன்னும் ஸூபீ என்பவருக்கு பின்வருமாறும் ஓர் வரைவிலக்கணம் உண்டு.
اَلصُّوْفِيُّ كَالْأَرْضِ، يُطْرَحُ عَلَيْهِ كُلُّ قَبِيْحٍ وَلَا يَخْرُجُ مِنْهُ إِلَّا كُلُّ مَلِيْحٍ، وَيَطَئُهُ الْبَرُّ وَالْفَاجِرُ،
“ஸூபீ” என்பவர் பூமி போன்றவர். அதில் அழுக்குகளும், அசுத்தங்களும் கொட்டப்படுகின்றன. அவ்வாறிருந்தும் அது நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் நல்லதே செய்கிறது. நன்மையே செய்கிறது. அதை நல்லவனும் காலால் மிதிக்கிறான். கெட்டவனும் காலால் மிதிக்கிறான். அது எவருக்கும் எந்த ஒரு தீமையும், அநீதியும் செய்வதில்லை.
பூமியும் அல்லாஹ்வின் ஏனைய படைப்புக்கள் போல் ஒரு படைப்புத்தான். மனிதன் பூமியில் துப்புகிறான். மலசலம் கழிக்கிறான். அசுத்தங்களை குழி தோண்டி புதைக்கிறான். மூக்குச் சிந்துகிறான். இன்னுமிவை போல் எத்தனையெத்தனை வேலைகள் செய்கிறான். ஆயினும் பூமி எதையும் கண்டு கொள்வதில்லை. பொறுமையோடு அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது.
நல்லவன் மட்டும்தான் என்மேல் நடக்க வேண்டும் என்றும், நல்லவை மட்டும்தான் என்மீது செய்ய வேண்டுமென்றும் பூமிக்கு ஓர் உணர்வு இருக்குமாயின் அதில் ஒருவர் கூட நடக்க முடியாமல் நடப்பவர்கள் அனைவரையும், மற்றும் அதில் மல சலம் கழித்து அதை அசுத்தப்படுத்துவோர் அனைவரையும் அது அவ்வப்போதே விழுங்கியிருக்கும். பூமியின் பொறுமையை என்னென்று சொல்வது? இவ்வாறு மனிதன் இருந்தால் “கோட்”டும் தேவையில்லை, பொலீஸும் தேவையில்லை.
قال النبي صلّى الله عليه وسلّم: لَا تَسُبُّوا الدَّهْرَ فَإِنَّ اللهَ هُوَ الدَّهْرُ،
“காலத்தை நீங்கள் ஏச வேண்டாம். ஏனெனில் அல்லாஹ்தான் காலமாக உள்ளான்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் (2246-5)
இந்த நபீ மொழியின் பொருளை காயல் பதியில் கண்ணுறங்கும் அஷ் ஷெய்கு, காமில் வலீ தைக்கா ஸாஹிப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு பாடலில் கூறியுள்ளார்கள்.
காலத்தை ஏசவேண்டாம்
என்றதால் காலம் நீயே!
கோலங்கள் கொண்டதெல்லாம்
“குதா” அன்றி வேறுமுண்டோ!
ஆலத்தில் நீயேயல்லால்
அறவே வேறில்லை எந்தன்
சீலத்தை நல்லதாக்கி
சிறப்பருள் யா காலிகே!
தைக்கா ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்கள் மேற்கண்ட பாடலில், காலத்தை ஏச வேண்டாம் என்று மட்டும் கூறாமல் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்கள். அதாவது காலமாயிருப்பவனும் அவனே என்று நபீ மொழியில் வந்துள்ளது போல் தெளிவாகவே சொல்லியுள்ளார்கள்.
அதோடு சேர்த்து “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே எனும் தத்துவக் கருத்துக்களையும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
கோலங்கள் கொண்டதெல்லாம் “குதா” அன்றி வேறுமுண்டோ! பல உருவங்களில் தோற்றுபவன் அல்லாஹ் அன்றி வேறு யாருமில்லை என்றும், ஆலமாயும், இன்னும் அதிலுள்ள அனைத்துப் படைப்புக்களாயும் அல்லாஹ்தான் தோற்றுகிறான் என்றும் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை உலமாஉகளும், வலீமாரும், ஸூபீ மகான்களும் நிறைந்திருக்கின்ற, இப்போதும் இலை மறை காய்களாக காயல் நகரில் இருக்கின்ற அவர்கள் அனைவரும் அறியும் வகையில் தெளிவாகவே சொல்லியுள்ளார்கள்.
ஆயினும் அவ்வேளை – தைக்கா ஸாஹிப் அவர்கள் அவ்வாறு சொன்ன காலத்தில் காயல் நகரில் இமாம்கள் போன்ற பேரறிஞர்களும், “விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்ற வலீமார்களும் நிறைய இருந்தும் கூட அவர்களில் ஒருவர் கூட மகான் அவர்களுக்கு “முர்தத்” என்றோ, “காபிர்” என்றோ எந்த ஒரு பட்டமும் கொடுக்கவில்லை. இதற்கான காரணம் அக்கால உலமாஉகள் “தக்வா” இறையச்சம் உள்ளவர்களாயும், இறைஞானத் துறையில் பூரணத்துவம் பெற்றவர்களாயிருந்ததுமேயாகும். இவற்றையெல்லாம் விட அவர்கள் “ஹஸத்” எனும் பொறாமை கடுகளவேனும் இல்லாத தூய்மையான உள்ளம் உடையவர்களாக இருந்ததேயாகும்.
இறைஞானம் தெரியாத அந்தகவர்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவர்களையென்ன “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை அருள்மறை மூலம் அறிமுகம் செய்த அல்லாஹ்வையும், அண்ணலெம் பிரானையும், இவ்வுலகம் எவர்களினால் ஆடாமலும், அசையாமலும் இருக்கிறதோ அத்தகைய “குத்பு” நாதாக்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
தைக்கா ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரீ 1191 ஸபர் மாதம் பிறை 05ல் (கி.பி 14.03.1777) வெள்ளிக்கிழமை பிறந்தார்கள்.
காலத்தை ஏச வேண்டாம், ஏனெனில் காலமாக அல்லாஹ்தான் உள்ளான் என்ற நபீ மொழியையும், அதன் விளக்கத்தையும் ஏன் இங்கு நான் எழுதினேன் என்றால் காலம் என்ற படைப்பு போன்றதே பூமியுமாகும் என்பதை பொது மக்கள் புரிந்து முடிந்தவரை அதை ஏசுவதையும் அதில் அசுத்தங்களை கொட்டுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கேயாகும்.
ஸூபீக்குரிய அடையாளங்களில் ஒன்று அவர் பூமி போல் இருக்க வேண்டும் என்பதாகும். இதன் சுருக்கம் என்னவெனில் அவருக்கு யாரால் என்னதான் அநீதி நடந்தாலும் அவர் பொறுமை செய்து வாழ வேண்டும் என்பதாகும்.
அரசாங்கம் வஹ்ஹாபிஸ அமைப்புக்களைத் தடை செய்த பின்னும் அவ் அமைப்புக்கள் சார்ந்த சிலரைக் கைது செய்த பின்னும் ஏற்கனவே வஹ்ஹாபீகளாக இருந்தவர்களிற் சிலரும், ஸூபிஸத்தை எதிர்த்துக் கொண்டிருந்த ஸுன்னீகளிற் சிலரும் தற்போது தம்மைத் தாமே ஸூபீகள் என்று அழைத்து வருவது வியப்பாக உள்ளது. இதை விட வியப்பான விடயம் என்னவெனில் அவர்கள் அவ்வாறு “லேபல்” குத்திக் கொண்டும் கூட ஸூபிஸக் கொள்கையை எதிர்த்து வருவதாகும். இது வியப்பான விடயமாகும். இது வெறும் நடிப்பு மட்டுமேயாகும்.
ஸூபிஸம் என்பது கொள்கையைப் பொறுத்ததேயன்றி பெயரையும், உடையையும் பொறுத்ததல்ல. யார் “அசல்” ஸூபீ என்பதும், யார் “நகல்” ஸூபீ என்பதும் பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அன்று வாழ்ந்த பொது மக்களுக்கும், இன்று வாழும் பொது மக்களுக்கும் வித்தியாசமுண்டு. இன்று வாழும் பொது மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது.
நான் சொல்வதென்னவெனில் ஸூபீ என்று தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்டவர் ஸூபிஸக் கொள்கை தெரியாதவராயின் அவர் ஒரு நடிகனாகவே இருப்பார். பொது மக்கள் அவரைப் புறம் தள்ளாது விட்டாலும் அவர் கூறும் கொள்கையை ஏற்றுச் செயல்படக் கூடாது. அவ்வாறு செயல்படுவோர் வழி தவறிவிடுவர்.
ஸூபிஸக் கொள்கையும், இறையியலும் தெரியாத ஒருவருடன் உறவாயிருந்தாலும் கூட அவர் கூறும் கொள்கை வழி நடப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்னும் ஸூபீக்குரிய அடையாளங்களில் ஒன்று அவர் உலோபி அல்லாதவராயிருப்பதாகும். இது குறித்து பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.
مِنْ أَقْبَحِ كُلِّ قَبِيْحٍ صُوْفِيٌّ شَحِيْحٌ
இழிவான விடயங்களில் மிக இழிவான விடயம் ஸூபீ என்பவர் உலோபியாயிருப்பதாகும்.
உலோபித்தனம் – கஞ்சத்தனம் என்பது ஸூபிஸ வழி நடப்பவனிடம் அறவே இருக்கக் கூடாத பண்பாகும். “நப்ஸ்” மனவாசை என்ற மிருகத்திற்கு வழிப்படுபவனும், அதைத் தனது தெய்வமாக ஆக்கிக் கொண்டவனும் வெற்றி பெறமாட்டார்கள்.
“நப்ஸ்” மனவாசைக்கு வழிப்படுபவன் அதை தனது “இலாஹ்” நாயனாக – தெய்வமாக ஆக்கிக் கொண்டான் என்பதே தத்துவம். அல்லாஹ் திருக்குர்ஆனில்
أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ
“தனது மனவாசையை தனது “இலாஹ்” தெய்வமாக ஆக்கிக் கொண்டவனை நீங்கள் கண்டீர்களா?” என்று கூறியுள்ளான். இதே கருத்தில் பல நபீ மொழிகளும் உள்ளன.
قال النبي صلى الله عليه وسلّم: أَبْغَضُ إِلَهٍ عُبِدَ فِى الْأَرْضِ الْهَوَى
பூமியில் வணங்கப்பட்ட “இலாஹ்” தெய்வங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் கோபமானது “ஹவா” எனும் மனவாசையேயாகும் என நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.
“ஹவா” மனவாசை, மனவெழுச்சி, மன இச்சை என்பவை எல்லாம் “நப்ஸ்” என்பதற்கு வழிப்படுவதையே குறிக்கும். மனவாசைக்கு வழிப்பட்டு ஒரு தரம் அல்லாஹ் என்று சொல்வது கூட குற்றமேயாகும். மனவாசைக்கு இசைந்து – இணங்கிச் சாப்பிடுதல், பருகுதல், உடுத்தல், பேசுதல் எதுவாயினும், தொழுதல், நோன்பு நோற்றல், மற்றும் வணக்கம் செய்தல் எதுவாயினும் அது பாவமேயாகும். உயிரில்லாத வெறும் செயல்கள் மட்டுமேயாகும்.
ஒரு “ஸூபீ” மகானின் மனவாசை அவரிடம் ஆட்டிறைச்சி புரியாணி கேட்டது. அவர் பல வருடங்களாக அதற்கு மாறு செய்து கொண்டும், அதை ஏமாற்றிக் கொண்டும் பொறுமையுடன் இருந்தார். மனவாசை அவரை விட்ட பாடில்லை. தொல்லை செய்து கொண்டே இருந்தது. அதன் தொல்லை தாங்க முடியாமல் அதற்காக மணமான, சுவையான புரியாணி சமைத்து அதை ஒரு பீங்கானில் வைத்து விட்டு தனது இரு கைகளையும் முதுகுப் பக்கம் கட்டி வைத்து விட்டு தனது “நப்ஸ்” மனவாசைக்கு நீ எவ்வளவு தேவையானாலும் சாப்பிட்டுக் கொள். ஆனால் நானாக ஒரு பிடி சோறு கூட உனக்குத் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். “நப்ஸ்” எவ்வளவு அதிகாரம் செலுத்தினாலும், அட்டகாசம் பண்ணினாலும் கூட நாம் பிரியாணியைக் கையால் எடுத்து வாயில் வைத்தால்தானே சாப்பிட முடியும். இன்றேல் “நப்ஸ்” மனவாசை என்பது எவ்வாறு சாப்பிடும்?
எனவே, மேற்கண்ட விபரங்கள் மூலம் “ஸூபீ” என்பவர் தனக்கு ஏற்படுகின்ற கஷ்ட நஷ்டங்கள், துன்பம் துயரங்கள் எல்லாமே அல்லாஹ்வினால் தான் ஏற்படுகின்றன என்றும், எல்லாம் அவன் செயல் என்றும் நம்பியும், பொருந்தியும், பொறுமையோடும் வாழ்வார் என்பது தெளிவாகும்.