தொடர்: 09
“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை!
ஸூபிஸம் என்றால் என்ன?
எந்தவொரு கலையாயினும் அதற்கு அடிப்படை அம்சங்கள் 10 இருக்க வேண்டும். “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ கலைக்கும் இவை உண்டு.
“இல்முத் தஸவ்வுப்” ஸூபிஸ ஞானக் கலைக்கான பத்து அடிப்படைகள்! அம்சங்கள்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
மேற்கண்ட தலைப்பில் கடந்த தொடர்களில் “தஸவ்வுப்” ஸூபிஸம் என்பதற்கான வரைவிலக்கணம் தொடர்பாகவும், “ஸூபீ” என்பவருக்கான அடையாளங்கள் தொடர்பாகவும் எழுதி வருகிறேன். இன்னும் சில விடயங்களை எழுதிவிட்டு 10 அடிப்படைகளில் இரண்டாம் அடிப்படையை எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!
ஸூபீ என்பவருக்கான அடையாளங்களில் அவர் பூமி போல் பொறுமையுள்ளவராக இருக்க வேண்டுமென்று எழுதினேன்.
எச்செயலாயினும் அது எவர் மூலம் வெளியானாலும் கூட அச் செயலின் உரிமையாளன் அல்லாஹ்தான் என்று நம்புவதே சரியான நம்பிக்கையாகும். அவன் தவிர வேறெவருக்கும், அல்லது எதற்கும் செயலுண்டு என்று நம்பினவன் முஸ்லிம் பெயரில் இருந்தாலும் கூட அவன் உண்மையான விசுவாசியாயிருக்கமாட்டான்.
“எல்லாம் அவன்” என்று நம்பினவன் எல்லாம் அவன் செயலென்றே நம்ப வேண்டும். எல்லாம் அவன் செயலென்று நம்பினவன் எல்லாம் அவன் என்றே நம்ப வேண்டும்.
இந்த நம்பிக்கை இன, மத வேறுபாடின்றி பொதுவாக மனிதனிடம் இருக்குமாயின் எவரும் எவரையும் பகைத்துக் கொள்ளத் தேவையுமில்லை, எவரும் எவருக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையுமில்லை.
குட்டிக் கதையொன்று சொல்கிறேன். இது அனைவரின் சிந்தனைக்கும் விருந்தாக அமையுமென்று நினைக்கிறேன். சுமார் 75 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பு பொலீஸ் நிலையத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த தெய்வ பக்தியும், இறைஞானமும் உள்ள பொலீஸ் அதிகாரி ஒருவர் இருந்துள்ளார்.
காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவனுக்கு இன்னொருவன் தலையில் பொல்லால் அடித்து அவனுக்கு இரத்தக் காயம் ஏற்பட்டது. அவன் மட்டு நகர் பொலீஸ் நிலையம் சென்று புகார் செய்தான். பொலீஸ் அதிகாரி அவனிடம், தம்பி! நீ தெருவில் நடந்து செல்லும் போது வீதியிலுள்ள தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் உன் தலையில் விழுந்து உனக்கு இரத்தக் காயம் ஏற்பட்டால் நீ யாருக்கு எதிராக வழக்குத் தொடர்வாய்? இது இறைவன் செயல் அல்லவா? இறைவனுக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? எங்கே தொடர்வது? என்று கேட்டார்.
அவரின் கருத்தும், கேள்வியும் அவனின் சிந்தனைக்கதவை தட்டியது. சேர்! உங்கள் கேள்வி நியாயமானதே! நான் அவனை மன்னித்துவிட்டேன் என்றான்.
எவரால் எச்செயல் நடந்தாலும் அச் செயலின் சொந்தக் காரன் அல்லாஹ்தான், அதற்கு உரிமை கோர வேண்டியவனும் அவன்தான் என்ற நம்பிக்கையோடு வாழ்பவன்தான் “ஸூபீ” ஆவான்.
அல்லாஹ் எவர் மூலம் எது செய்தாலும் அச் செயலுக்குரியவன் அவன்தான் என்றும், அச் செயல் எவன் மூலம் வெளியானதோ அவன் அல்லது அது அதாவது அச்செயல் வெளியான “மள்ஹர்” அவனின் பாத்திரம் மட்டும்தான் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
செயலுக்குச் சொந்தக்காரனான அல்லாஹ் எவர் மூலம் அல்லது எதன் மூலம் எச் செயலைச் செய்தாலும் அச் செயல் நீதியானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ்வின் எந்தவாரு படைப்பாயினும் அப்படைப்பின் அமைப்பும், அதன் மூலம் வெளியாகும் செயலும் நியாயமானதாகவே இருக்கும்.
“ஸூபீ” என்பவர் எவரால் எச் செயல் நடந்தாலும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ் என்று நம்புவதுடன் அச் செயல் நியாயமானதென்றும் நம்புவார். இத்தகைய மன நிலை செயல்களின் உண்மைத் தன்மை அறிந்த “ஸூபீ” என்பவரால் மட்டுமே சாத்தியமாகும்.
எனினும் மனிதனல்லாத சில பிராணிகளிடமும், தாயிடம் பால் குடிக்கும் – சுமார் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமும் செயலையும், அது வெளியான பாத்திரத்தையும் பார்க்காமல் செயலுக்குரியவனைப் பார்க்கும் பண்பு இருப்பதைக் காணலாம்.
நாய்க்கு கல்லால் எறிந்தால் அது கல்லைப் பார்த்து அதைக் கடிக்காமல் எறிதல் எனும் செயல் எவனால் வெளியானதோ அவனையே குறி வைத்துக் கடிப்பதையும், பாலருந்தும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தையிடம் ஏதாவதொன்றை நாம் கொடுத்தால் அக்குழந்தை முதலில் கொடுத்தவனைப் பார்த்த பிறகே கொடுக்கப்பட்ட பொருளைப் பார்ப்பதையும் நாம் காண்கிறோம். இதில் மற்றவர்களுக்கு பாடம் இருப்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கத்தி வெட்டுவதால் அதற்கு சுயமான செயல் உண்டு என்றும், நெருப்புச் சுடுவதால் அதற்குச் சுயமான செயல் உண்டு என்றும் நம்புதல் கூடாது. கத்திக்கு சுயமாக வெட்டும் தன்மையோ, நெருப்புக்கு சுயமாகச் சுடும் தன்மையோ கிடையாது.
கத்தி வெட்டுவதாயினும், நெருப்புச் சுடுவதாயினும் வெட்டுதல் என்ற செயல் கொண்டு அல்லாஹ் கத்தியில் வெளியாக வேண்டும். அதேபோல் சுடுதல் என்ற செயல் கொண்டு அல்லாஹ் நெருப்பில் வெளியாக வேண்டும். இன்றேல் கத்தியால் வெட்டவும் முடியாது. நெருப்பால் சுடவும் முடியாது.
கத்தி சுயமாக வெட்டும் என்றிருந்தால் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் மகன் நபீ இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை அறுத்த நேரம் கத்தி அறுத்திருக்க வேண்டும். நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை நும்றூத் என்பவன் தீக்குழியில் எறிந்த நேரத்தில் அத்தீ அவர்களை எரித்திருக்க வேண்டும். கத்தி அறுக்கவுமில்லை. நெருப்பு எரிக்கவுமில்லை.
இதன் மூலம் கத்திக்கு சுயமாக அறுக்கும் சக்தி இல்லை என்பதும், நெருப்புக்கு சுயமாக எரிக்கும் சக்தி இல்லை என்பதும் தெளிவாகின்றன.
எனவே, எந்த ஒரு படைப்பின் மூலம் எச் செயல் வெளியாவதாயினும் அல்லாஹ் அப்படைப்பில் அச் செயல் கொண்டு வெளியாக வேண்டும். இன்றேல் கத்தி அறுக்கவும் மாட்டாது. நெருப்புச் சுடவுமாட்டாது. இவ்வாறுதான் படைப்பின் மூலம் வெளியாகின்ற எச் செயலாயினும் அச் செயல் கொண்டு அப்படைப்பில் அல்லாஹ் வெளியாக வேண்டுமேயன்றி படைப்பால் சுயமாக எதையும் செய்ய முடியாது.
உணவு பசியை தீர்ப்பதாயினும், தண்ணீர் தாகத்தை தீர்ப்பதாயினும் அவற்றால் சுயமாக எதுவும் செய்ய முடியாது.
கத்தி அறுப்பதென்றும், நெருப்புச் சுடுவதென்றும், உணவு பசியை தீர்ப்பதென்றும், தண்ணீர் தாகத்தை தீர்ப்பதென்றும் சொல்வது மக்களின் பேச்சு வழக்கில் உள்ளவையே தவிர எதார்த்தம் அவ்வாறில்லை.
சாப்பிடுதல் என்பது பசி தீர்வதற்கான காரணமேயன்றி சாப்பிடுதல் சுயமாக பசியைத் தீர்த்து வைக்காது. இவ்வாறுதான் குடித்தல் என்பதுமாகும். குடித்தல் தாகம் தீர்வதற்கான காரணமேயன்றி குடித்தல் சுயமாக தாகத்தை தீர்க்காது. இவ்வாறுதான் கத்தி அறுப்பதும், நெருப்புச் சுடுவதுமாகும்.
எனவே, படைப்புக்கள் மூலம் வெளியாகின்ற எச் செயலாயினும் அச் செயலுக்குரியவன், அதன் சொந்தக் காரன் அல்லாஹ் மட்டுமேயாவான். அவன் அந்தப் பாத்திரங்கள் மூலம் அவற்றுக்குரிய தன்மைகள் கொண்டு “தஜல்லீ” வெளியாகாமல் படைப்பால் சுயமாக எதுவும் செய்ய முடியாது.
“ஸூபீ”க்குரிய அடையாளங்களில் பின்வரும் அடையாளமும் ஒன்றாகும்.
قَالَ الشِّبْلِيْ رَحِمَهُ الله: اَلصُّوْفِيُّ مُنْقَطِعٌ عَنِ الْخَلْقِ مُتَّصِلٌ بِالْحَقِّ
ஸெய்யிதுனா அபூ பக்ர் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஸூபீ” என்பவருக்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் சொல்லியுள்ளார்கள்.
“ஸூபீ” என்பவர் படைப்பின் தொடர்பை துண்டித்து படைத்தவனின் தொடர்பில் இருப்பவராவார்” என்பதாக.
மகான் ஷிப்லீ அவர்களின் இக்கூற்று தத்துவமாயினும் இது எவ்வாறு சாத்தியமாகும் என்று ஒரு கேள்வி பிறக்கிறது.
சந்தேகமின்றி இது சாத்தியமானதேயாகும். பின்வரும் விளக்கத்தை தெரிந்து கொண்டால் இது மிக இலகுவான ஒன்றுதான். கஷ்டமானதல்ல.
இதை தனக்கே உரித்தான பாணியில் ஓர் இறைஞானி பின்வருமாறு கூறியுள்ளார்.
காணும் பொருளையெல்லாம்
கர்த்தன் “மள்ஹர்” என்று
பேணி “ஷுஹூது” செய்து
பிலப்படுவதென்னாளோ?
நீ கண்ணால் காணும் பொருட்கள் – வஸ்த்துக்கள் யாவையும் “கர்த்தன்” இறைவன் “மள்ஹர்” என்று பார் என்று சொல்கிறார்கள். இக்கருத்தை சுருக்கிச் சொல்வதாயின் நீ காணும் பொருட்கள் யாவையும் அல்லாஹ்வாக – இறைவனாகப் பார் என்று சொல்ல வேண்டும்.
“மள்ஹர்” என்ற சொல் ظَهَرَ என்ற சொல்லடியில் உள்ளதாகும். இதற்கு சொல்லர்த்தம் வெளியாகுமிடம் என்று வரும்.
இதை ஓர் உதாரணம் மூலம் விளக்கி வைப்பதாயின் தங்கத்தினால் செய்யப்பட்ட வளையல் தங்கத்தின் “மள்ஹர்” என்றும், பஞ்சால் செய்யப்பட்ட ஷேட் பஞ்சின் “மள்ஹர்” என்றும், மண்ணால் செய்யப்பட்ட குடம் மண்ணின் “மள்ஹர்” என்றும் சொல்வது போலாகும்.
மேற்கண்ட மூன்று உதாரணங்களிலும் தங்கத்தால் செய்யப்பட்ட வளையல் தங்கத்தின் “மள்ஹர்” என்றால் அந்த வளையல் தங்கம் வெளியாகுமிடம் என்றும், பஞ்சால் செய்யப்பட்ட ஷேட் பஞ்சின் “மள்ஹர்” என்றால் அந்த ஷேட் பஞ்சு வெளியாகுமிடம் என்றும், மண்ணால் செய்யப்பட்ட குடம் மண்ணின் “மள்ஹர்” என்றால் அக்குடம் மண் வெளியாகுமிடம் என்றும் சொல்வது போல் படைப்பு என்பது எதுவாயினும் அது அல்லாஹ்வின் உள்ளமை அல்லது அவனின் “தாத்” வெளியாகுமிடம் என்றும் சொல்லப்படும்.
இவ் உதாரணங்களில் வளையல் தங்கத்தின் “மள்ஹர்” என்று சொன்னாலும் அவ் வளையல் தங்கம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல என்றும், ஷேட் பஞ்சின் “மள்ஹர்” என்று சொன்னாலும் அந்த ஷேட் பஞ்சு தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல என்றும், குடம் மண்ணின் “மள்ஹர்” என்று சொன்னாலும் அந்தக் குடம் மண் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல என்றும் நாம் விளங்கிக் கொள்வது போல் படைப்பு என்பது அல்லாஹ்வின் “மள்ஹர்” என்றால் அது அவன் தானானதேயன்றி அவனுக்கு வேறானதல்ல என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நமது முன்னோர்களான “வஹ்ததுல் வுஜூத்” ஞான தத்துவம் பேசியவர்கள் படைப்புக்கு அல்லாஹ்வின் “மள்ஹர்” என்று சொன்னார்களேயன்றி இச் சொல்லை உதாரணங்கள் கூறி விளக்கி வைக்காமல் விட்டதாலும், முன்னோர் சொன்ன அதே பாணியிலேயே மற்றவர்களும் சொல்லி வந்ததாலும் “மள்ஹர்” என்றால் என்னவென்று தெரியாமற் போய்விட்டது.
இங்கு மூன்று அம்சங்கள் உள்ளன. அவை மள்ஹர், ளாஹிர், ளுஹூர் (ظَاهِرْ، مَظْهَرْ، ظُهُوْرْ ) எனப்படும்.
தொடரும்….