தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இலங்கைத் திரு நாடு ஜனநாயக நாடு. நான் பிறந்த நாடு. நான் வாழும் நாடு. நான் நேசிக்கும் நாடு. இங்கு எல்லா வளமும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் அன்பு உண்டு. அவனின் அருளும் உண்டு.
இந்நாட்டில் அனைத்து இன, மத, மொழி மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. எல்லோருக்கும் எல்லா சுதந்திரமும் உண்டு. இது போன்ற ஒரு நாட்டை நான் கண்டதில்லை.
சுதந்திரம் பெற்ற இந் நாட்டில் எவருக்கும் எவரையும் மதம் மாற்றி வைக்கவோ, மதம் மாற்றித் தீர்ப்பு வழங்கவோ அதிகாரம் கிடையாது. ஜனாதிபதிக்கும் கிடையாது. பிரதமருக்கும் கிடையாது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் கிடையாது. “ஷரீஆ” கவுன்சிலுக்கும் கிடையாது. எவருக்குமே கிடையாது.
சட்டம் இவ்வாறிருக்கும் நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்ற பெயரிலுள்ள ஓர் அமைப்பு – சங்கம் திருக்குர்ஆனிலும், திரு நபீயின் அருள் மொழியிலும் கூறப்பட்ட “தஸவ்வுப்” எனும் ஸூபிஸம் – ஸூபிஸ ஞானம் பேசிய எனக்கும், நான் பேசிய கருத்தைச் சரி கண்டு அதை ஏற்றுக் கொண்ட இந் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று தன்னிச்சையாக தீர்ப்பு வழங்கியதுடன் எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி அதை நாடளாவிய ரீதியில் பகிரங்கப்படுத்தி எங்களை அடக்கியும், ஒடுக்கியும் வைத்திருப்பது மனித உரிமைகள் மீறல்களில் மிகக் கொடிய மீறலாகும்.
குறித்த சங்கத்தினர் தமது தீர்ப்பு நூல் தமிழ்ப்பகுதி 20ம் பக்கத்திலும், அறபுப் பகுதி 9ம் பக்கத்திலும் என்னையும், நான் கூறிய ஸூபிஸக் கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் கொலை செய்ய வேண்டும் என்றும், கொலை செய்ய முடியாது போனால் நாடு கடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இலங்கை நாடு முஸ்லிம்கள் வாழும் நாடேயன்றி இஸ்லாமிய நாடல்ல. இது முஸ்லிம்கள் சுமார் 9.3 வீதமும், பௌதர்கள் 74.9 வீதமும், இலங்கைத் தமிழர்கள் 11.1 வீதமும், இந்தியத் தமிழர்கள் 4.1 வீதமும் வாழும் நாடாகும். ( தகவல் மூலம் https://en.wikipedia.org/wiki/Demographics_of_Sri_Lanka)
பௌத சமயத்திற்கும் மத குருக்கள் உள்ளனர். இந்து சமயத்திற்கும் மத குருக்கள் உள்ளனர். அதேபோல் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மத குருக்கள் உள்ளனர்.
எனினும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் தவிர வேறெந்த மதத் தலைவர்களும் தமது சமூகத்தவர்களுக்கு செய்யாத அநீதியும், அட்டூழியமும் இஸ்லாமிய மத குருக்கள் தமது சமூகத்திற்குச் செய்து வருவது கண்ணீர் வடிக்க வேண்டியதும், கண்டிக்க வேண்டியதுமாகும்.
இன்று எனக்கு 79 வயதாகின்றது. நான் இந்நாட்டில் ஒரு முஸ்லிம் இலங்கைப் பிரஜையாகவே வாழ்ந்து வருகிறேன். எனது வாழ்வில் பொளத மத குரு ஓருவரை ஏனைய குருமார் சேர்ந்து மதம் மாற்றி தீர்ப்புக் கூறி அவரை பௌத சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததாகவோ, இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு இந்து மத குருவை ஏனைய குருமார் சேர்ந்து மதம் மாற்றித் தீர்ப்புக் கூறி அவரை இந்து சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததாகவோ, கிறித்துவ மதத் தலைவர் ஒருவரை அதன் ஏனைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து அவரை மதம் மாற்றி கிறித்துவ சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததாகவோ நான் அறியவுமில்லை. கேள்விப்படவுமில்லை.
ஆயினும் முஸ்லிம் மதத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து என்னை மட்டுமன்றி ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த பல இலட்சம் முஸ்லிம்களை மதம் மாற்றி முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.
இஸ்லாமிய மத குருக்களான உலமஉகள் மேற்கண்டவாறு எமக்கு அநீதி செய்திருந்தும் கூட இதை அறிந்தும் அறியாதவர்கள் போல் – கண்டும் காணாதவர்கள் போல் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் – அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், பொது நலன் விரும்பிகள், ஸூபிஸக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இலை மறை காய் போல் வாழும் உலமாஉகள், தரீகாவின் ஷெய்குமார் ஆகியோர் அநீதி செய்தவர்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பாதிக்கப்பட்ட ஸூபிஸ சமூகத்தவர்களுக்கு புண்ணில் வேல் நுழைந்தாற் போல் உள்ளது. இவர்களின் மௌனம் அநீதியாளர்களை ஆதரிப்பதாக ஆகிவிடும் என்பதை இவர்கள் உணர்ந்து இறைவனுக்காகவும், தீனுக்காகவும் செயலாற்ற முன் வர வேண்டும்.
தீர்ப்பு வழங்கியவர்களின் தில்லு முல்லுகள்.
தீர்ப்பு வழங்கிய இஸ்லாமிய முல்லாக்கள் தீர்ப்பு வழங்கிய விடயத்தில் பல தில்லு முல்லுகள் செய்துள்ளார்கள். இவை பற்றி கடந்த பதிவுகளில் நான் குறிப்பிட்டுள்ளேன். எனினும் இவை விளக்கமாகவும், தெளிவாகவும் ஆங்கில பத்திரிகைகளில் வெளிவர உள்ளன. தேவையேற்படின் தமிழ் பத்திரிகைகளிலும் பதிவிடுவோம்.
தீர்ப்பு வழங்கிய கால கட்டத்தில் அவர்கள் செய்த தில்லுமுல்லுகள் அனைத்தையும் நான் பகிரங்கமாகவும், தெளிவாகவும் எழுதினால் அவர்களின் மானம், மரியாதை எல்லாம் காற்றில் பறந்து நாட்டையே நாற்றமாக்கிவிடும். எனினும் அவற்றில் சிலதையேனும் சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை என்பதற்காக அவற்றில் இரண்டு தில்லுமுல்லுகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
ஒன்று தலைப்பு விளங்காமல் தீர்ப்புக் கூறியமை. நான் பேசியது இஸ்லாமிய ஸூபிஸம் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமாகும். அவ்வேளை அவர்களுக்கு இத் தத்துவம் மண்ணளவேனும் தெரிந்திருக்கவில்லை. இப் பெயர் கூட அவர்களுக்கு அவ்வேளை தெரிந்திருக்கவில்லை என்றே கூற வேண்டும். இதற்கு ஆதாரம் அவர்களின் “பத்வா” என்ற தீர்ப்பேயாகும்.
நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் பிழையென்றால் அது பிழை என்பதற்கான ஆதாரங்கள் கூறி அதை மறுத்திருக்க வேண்டும். அவர்களின் தீர்ப்பில் அது பிழை என்பதற்கான ஆதாரம் ஒன்றுமே இல்லை.
அவர்களுக்கு அவ்வேளை “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் தெரியாதிருந்ததால் அதை “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகேடான கொள்கை என்று ஏமாந்து அது பிழை என்பதற்கான ஆதாரங்களையே தமது தீர்ப்பு நூலில் கூறியுள்ளார்கள். குறைந்தபட்சம் “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் கூட அவர்களின் தீர்ப்பில் இடம் பெறவில்லை. தலைப்பே தெரியாமல் தீர்ப்பு எழுதிவிட்டார்கள். இது தில்லுமுல்லு என்று சொல்வதை விட அவர்களின் அறியாமை என்றே சொல்ல வேண்டும்.
இதனால்தான் அவர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” என்றால் இதுதான் என்று விளக்கி வைப்பதற்காக அவர்களைப் பல முறை என்னிடம் வருமாறு நான் அழைத்தேன். என்னுடன் ஐந்து நாட்களாவது தங்கியிருக்க வேண்டும் என்றும், அந்த நாட்களில் மூன்று வேளை உணவு, மற்றும் தேனீர், தங்குமிட வசதிகள் தருவதாகவும் சொல்லியிருந்தேன். என் அழைப்பு செவிடன் காதில் சங்கூதினாற் போலாகிவிட்டது. அவர்கள் என்னிடம் வருவதற்கு பயப்படுவதற்கான உண்மையான காரணம் அவர்கள் வந்தால் தாம் வழங்கிய “பத்வா” தீர்ப்பை வாபஸ் பெறுவது தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை என்பதை திட்டமாக அவர்கள் அறிந்திருப்பதேயாகும். அவர்கள் சரியாகவே அறிந்துள்ளார்கள். அவர்கள் பயப்படுவதற்கு நியாயமான காரணம் உண்டு. எனினும் அவர்கள் தாம் செய்த தவறை உணர்ந்து, தன் மானம், கௌரவம் யாவையும் இழந்தேனும் உண்மையை தரிபடுத்த முன் வர வேண்டும்.
நான் இறுதியாக கடந்த மாதம் நான்கு “கிதாபு”களிலிருந்து பலமான, உறுதியான ஆதாரங்கள் எடுத்து அவற்றை ஒரு சிறு நூலாகத் தொகுத்து அனுப்பி வைத்தேன்.
அந்த நூல்கள் நான்கும் பெரும் மகான்களால் எழுதப்பட்ட நூல்களாகும். அவற்றை எழுதிய மகான்கள் நால்வரும் எவராலும் அசைக்க முடியாத அறிவு மலைகள் என்பது அவர்களுக்கே தெரியும். அந்த நான்கு நூல்களையும் ஒருவன் சரியான, தகுதியான ஒரு குரு மூலம் விளங்கிக் கொண்டானாயின் நான் பேசி வருகின்ற தத்துவம் இஸ்லாமிய உயர் தத்துவம்தான் என்பதை நிச்சயமாகப் புரிந்து கொள்வான் என்பதைத் திட்டமாக என்னால் கூற முடியும். இது மட்டுமல்ல. ரிஸ்வீ முப்தீ, மற்றும் தீர்ப்பு வழங்கிய குழு அனைவரும் விமானத்தில் ஆயிரம் ஒலி பெருக்கிகள் கட்டி ஆகாயத்திலிருந்து “வஹ்ததுல் வுஜூத்” பேசுவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
தலைப்பு விளங்காமல் தீர்ப்பு வழங்கிவிட்டு தற்போது விளங்கிய பின் தன்மானம் கருதி தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தானாகையால் முயல்கள் அனைத்திற்கும் மூன்று கால்கள்தான் என்று அடம் பிடித்து நிற்கிறார்கள். இவர்கள் கொள்கையோடும், மார்க்கத்தோடும் விளையாடும் கூட்டமேயன்றி சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அதை நிலை நாட்டும் கூட்டமல்ல.
இவர்கள் செய்த தில்லுமுல்லுகளில் ஒன்று பின்வருமாறு. “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று தீர்ப்புக் கொடுத்துவிட்டு அதில் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனது பெயரைக் குறிப்பிட்டிருப்பதாகும்.
இவர்கள் தமது தீர்ப்பின் ஆரம்பத்தில் எனது பெயரைக் கூறாமல் யாரோ ஒருவர் இவ்வாறு பேசினால் அவருக்குரிய சட்டம் என்ன என்று கேள்வி கேட்டது போல் கேள்வி கேட்டு அவர்களே எனது பெயரைக் குறிப்பிட்டு விடை சொல்லியிருப்பது முத்திப்பழுத்த பைத்தியம் என்றுதான் நானும் சொல்வேன். அறிவுள்ள அனைவரும் சொல்வார்கள். இதோ அவர்கள் என்ன பாணியில் கேள்வியை அமைத்துள்ளார்கள் என்பதை எழுதுகிறேன். கவனியுங்கள்.
தீர்ப்பு வழங்கிய குருடர்களின் தீர்ப்பு நூல் 3ம் பக்கம் السُّؤَالْ கேள்வி என்ற தலைப்பில் அவர்கள் எழுதியுள்ள வசனத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் எழுதியவாறே இங்கு எழுதுகிறேன்.
(فيا أيها العلماء أهل السنّة والجماعة ما تقولون فى رجل صرّح فى محافل النّاس بأن لله صورة وشكلا وجسما، وأنّ كلّ مخلوق هو الله إلى الآخر)
மொழியாக்கம்: (ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளே! ஒருவர் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இவர் மக்கள் கூட்டத்தில் அல்லாஹ்வுக்கு உருவம், தோற்றம், சடம் உண்டு என்றும், படைப்புகள் யாவும் அல்லாஹ்தான் என்றும் ….. என்றும் சொல்கிறார்)
இதுவே அவர்களின் கேள்வியின் தொடக்கம். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ما تقولون فى رجل என்ற வசனத்தில் “ஒருவர் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்றுதான் கேள்வியில் வசனம் வந்துள்ளதேயன்றி எனது பெயர் குறித்து “அப்துர் றஊப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்று வசனம் வரவில்லை.
கேள்வியில் இவ்வாறு வசனம் எழுதியவரை நான் பாராட்டுகிறேன். கேள்வி கேட்கும் முறைப்படி வசனம் அமைத்துள்ளார். “பத்வா” கேள்வி கேட்கும் முறையும் இதுதான்.
இதன் மொழியாக்கம் தமிழ் பகுதி 21ம் பக்கத்தில் குறித்த வசனத்தை “ஒருவர் பொதுக் கூட்டங்களில் பின்வருமாறு கருத்துக்களை கூறி வருகிறார்” என்று சரியாகவே மொழியாக்கம் செய்துள்ளார்கள். இதில் தவறில்லை.
மேற்கண்ட கேள்வி வசனத்தில் அறபுப் பகுதியிலும், கேள்வியின் தமிழாக்கத்திலும் ஒருவர் – ஒரு நபர் என்றுதான் எழுதப்பட்டுள்ளதே தவிர எனது பெயர் அப்துர் றஊப் என்று கூறப்படவில்லை.
கேள்வியில் யாரோ ஒரு நபர் என்று கூறிவிட்டு தீர்ப்பு நூல் 1ம் பக்கத்தில், (காத்தான்குடி றஊப் மௌலவீ போன்றோரின் மார்க்க விரோத கருத்துக்கள் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய “பத்வா” மார்க்கத்தீர்ப்பு) என்று எழுதியுள்ளார்கள்.
வினாவுக்குரிய விடை என்ற தலைப்பில் தமிழ் பகுதி 23ம் பக்கம் (புத்தி தெளிவான நிலையில் ஒரு பருவமடைந்த முஸ்லிம் எவ்வித வற்புறுத்தலுமின்றிப் பேசினால்) என்று எழுதியுள்ளார்கள்.
கேள்வி வசனங்களிலும் எனது பெயர் கூறப்படவில்லை. விடை வசனங்களிலும் எனது பெயர் கூறப்படவில்லை.
கேள்வியிலும், விடையிலும் “யாரோ ஒருவர்” என்றிருக்கும் நிலையில் தீர்ப்பு அட்டையில் மட்டும் (முதலாம் பக்கத்தில்) காத்தான்குடி றஊப் மௌலவீ என்று எழுதப்பட்டது ஏன்? கேள்வியிலும், விடையிலும் கூறுப்படாத எனது பெயர் தீர்ப்பு அட்டையில் வந்தது எவ்வாறு? ஏன் வந்தது? இதுவே நாம் ஆராய வேண்டிய விடயமும், இத்தீர்ப்பு வழங்கியவர்களின் உயிர் நாடியுமாகும். இத்தீர்ப்பு வழங்கியவர்களின் சதியும், சூட்சியுமாகும்.
இங்கு எவருக்கும் தெரியாத ஒரு செய்தி உண்டு. அதைச் சற்று விபரமாக எழுதினால்தான் கேள்வியிலும், விடையிலும் எனது பெயர் குறிப்பிடாமல் யாரோ ஒருவர் என்று எழுதியவர்கள் அட்டையில் மட்டும் காத்தான்குடி றஊப் மௌலவீ என்று ஏன் குறிப்பிட்டார்கள் என்பது புரியும்.
நடந்தது இதுதான். தெரிந்து கொள்ளுங்கள். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைதான் “பத்வா” தீர்ப்பு வழங்கியது. இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அவர்கள் அறபு மொழியிலும், தமிழிலும் “பத்வா” கொடுத்தது மட்டும்தான். “பத்வா”வை நூல் வடிவில் அமைத்து அதை அச்சிடும் பொறுப்பை மட்டும் காத்தான்குடியிலிருந்து இந்தப் பிரச்சினையை கொழும்புக்கு அள்ளிச் சென்ற அக்கால கட்டத்தில் காத்தான்குடி உலமா சபையின் அங்கத்தவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் “பத்வா”வோடு மட்டும் நின்று கொண்டார்கள்.
கொழும்பிலிருந்து அச்சிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு வந்த காத்தான்குடி உலமா சபையைச் சேர்ந்தவர்கள் காத்தான்குடி உலமா சபையிடம் கூறிய போது அச்சிடுவதற்கு எம்மிடம் நிதியில்லை, யாரிடமாவது வசூல் செய்து அச்சிடுவோம் என்று முடிவு செய்து எனது நண்பர்களில் ஒருவரான, கொழும்பில் MAM றான்ஸ்போட் கட்டிடத்தில் நூல் வியாபாரம் செய்து கொண்டிருந்த, பலராலும் “டபிள் ஏ றாஸிக்” என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவரிடம் சென்று புத்தகம் அச்சகச் செலவுக்காக பண உதவி கேட்ட போது அவர் ஐந்தாயிரம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தார். இந்தச் செய்தியை என்னிடம் சொன்னவர் அவர்தான். அப்பணத்தை செலவிட்டு “பத்வா” நூலை அச்சிட்டவர்கள் காத்தான்குடி உலமா சபையைச் சேர்ந்த அவ்வேளை இவ்விடயத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர்களேயாவர்.
இதன் மூலம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை எனது பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாக தீர்ப்பு வழங்கியிருந்தாலும் அதில் எனது பெயரைக் குறிப்பிட்டு இப்பிரச்சினையை பூதாகரமாக்கியவர்கள் இவர்கள்தான்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா செய்யாத ஒன்றை இவர்கள் செய்ததற்கான காரணம் என்னை நாடளாவிய ரீதியில் அவமானப்படுத்தி என்னை அடக்கியொடுக்கி வைக்க வேண்டும் என்று சிலர்கள் திட்டமிட்டதேயாகும்.
மேலே நான் எழுதிய விபரத்தை நிதானமாக வாசிப்பவர்களுக்கு இவ்வாறு என் பெயர் கூறப்பட்டதற்கான காரணம் என் மீதுள்ள பொறாமையேயன்றி வேறொன்றில்லை என்பது திட்டமாக விளங்கும்.
அரசாங்கம் விசாரிக்குமா?
அரசாங்கம் படித்தவர்கள் குழுவொன்றை நியமித்து இது தொடர்பாக விசாரணை நடத்தினால் மறைக்கப்பட்டுள்ள அனைத்து உண்மைகளும், தீர்ப்பு வழங்கியவர்களின் தில்லு முல்லுகளும், அவர்களின் தீர்ப்பின் பிறகு நடந்த எனது ஆதரவாளர் மௌலவீ பாறூக் காதிரீ அவர்களின் கொலை தொடர்பான இரகசியங்களும் வெளிவரும்.
ரிஸ்வீ முப்தீ அவர்களே! “பத்வா” வழங்கிய முல்லாக்களே!
உங்களுக்கு ஐந்து மாத கால அவகாசம் தருகிறேன். அதற்கிடையில் நான் உங்களுக்கு அனுப்பி வைத்த நான்கு அறபு நூல்களின் தொகுப்பையும் நீங்கள் ஆய்வு செய்து, “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் இஸ்லாமில் உள்ளதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வாருங்கள். உங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தின் ஆழ, நீளம் தெரியாதாகையால் தரீகாக்களின் ஷெய்குமார்களையும் அழைத்து உங்களின் ஆய்வைத் தொடங்குங்கள்.
என்னுடைய 2000 பக்கங்கள் கொண்ட “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் நூல் வெளியாகும் வரை இக்கால அவகாசமாகும். அதன் பின்னும் முயலுக்கு மூன்று கால்தான் என்ற உங்களின் பல்லவியை நீங்கள் பாடுவீர்களாயின் காலி முகத்திடலில் ஸூபிஸ சமூகத்தின் “ரிஸ்வீ கோ ஹோம்” என்ற அபயக் குரல் ஒலிக்கும்.
அதன் பின் அழுது பயனில்லை.