தொடர் 02
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இதன் பின்னால் அடைப்புக் குறிக்குள் நான் எழுதியுள்ள விடயம் அறபு மொழி இலக்கணத்தோடு தொடர்புள்ளவர்களுக்கு மட்டுமே விளங்குமாதலால் ஏனையோர் வாசிப்பதாயின் அறபு மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ளவர்களின் உதவியுடன் வாசிப்பது நல்லது.
“பிஸ்மில்லாஹ்” என்ற வசனத்தின் முதல் எழுத்தாக “பேB” என்ற எழுத்து வந்துள்ளது. இது தொடர்பான மொழியிலக்கண விளக்கம் சொன்னால் சரியான விளக்கத்திற்கு உதவியாயிருக்குமாகையால் சுருக்கமாக இது பற்றி எழுதுகிறேன்.
(“பேB” என்ற இவ் எழுத்து حَرْف الْجَرِّ என்று அழைக்கப்படும். இதன் சுருக்கம் என்னவெனில் இதற்குப் பின்னால் வருகின்ற பெயர்ச் சொல் எப்போதும் “ஜர்று” அதாவது “கஸ்று” செய்யப்பட்டே வரும். உதாரணமாக بِمَسْجِدٍ , بِوَلَدٍ , بِقَلَمٍ என்பது போன்று. இது اَلْحَرْفُ الشَّفَوِيُّ உதட்டோடு தொடர்புள்ள எழுத்து எனப்படும். ஏனெனில் இதை “பேB” என்று மொழியும் போது இரு உதடுகளும் செயல்படும். சொல்லிப் பாருங்கள். مَخْرَجُهَا مِنْ بَيْنِ الشَّفَتَيْنِ இதன் உச்சரிப்பு இரு உதடுகளுக்கும் இடையிலிருந்தே வெளிப்படும். இரு உதடுகளில் ஒன்று மற்றதை சந்திக்காமல் இதன் மொழித்தல் வராது. இவ் எழுத்துக்கு “அப்ஜத்” கணக்கின் படி இரண்டு (2) எண் வரும். “அப்ஜத்” கணக்கென்று சொல்வது போல் இதற்கு حِسَابُ الْجُمَّلْ என்றும் சொல்லப்படும்.
“பேB” என்ற இவ் எழுத்து ஓர் எழுத்தாயினும் இது பல பொருளுக்கு உபயோகிக்கப்படும். அவற்றில் ஒன்று اَلْإِلْصَاقْ – ஒன்றை இன்னொன்றுடன் சேர்த்தல் என்ற பொருளாகும். உதாரணமாக أَمْسَكْتُ بِالْغُلَامِ பையனைப் பிடித்தேன் என்பது போன்று. இதன் இன்னொரு பொருள் اَلْإِسْتِفَادَةُ – உதவி பெறுதல் என்பதாகும். உதாரணமாக كَتَبْتُ بِالْقَلَمِ எழுதுகோல் உதவியால் எழுதினேன் என்பது போன்று.
மேற்கண்ட விபரம் அறபு மொழி கற்கும் மாணவர்களுக்கு பயன் தரும் என்பதற்காக எழுதினேன்.
“பிஸ்மில்லாஹ்” என்ற சொல்லின் தொடக்கத்தில் வந்துள்ள “பேB” என்ற எழுத்துக்கு “கொண்டு” என்றே அதிகமானோர் பொருள் கூறுவர். இவ்வாறு கூறினாலும் இதற்கு “உதவி” என்ற பொருள் வரும். அதாவது كَتَبْتُ بِالْقَلَمِ எழுதுகோல் கொண்டு எழுதினேன் என்றால் அதன் உதவியால் எழுதினேன் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு “பிஸ்மில்லாஹ்” என்ற வசனத்திற்கு “அல்லாஹ்வின் பெயர் கொண்டு” என்று பொருள் சொன்னால் அதன் உதவியால் அல்லது அருளால் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
“பிஸ்மில்லாஹ்” என்ற வசனத்திற்கு அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு என்று சிலரும், அல்லாஹ் எனும் திரு நாமம் கொண்டு என்று வேறு சிலரும் பொருள் சொல்கிறார்கள். இவ்விரண்டிற்கும் சிறிய அளவிலான வேறுபாடு உண்டு.
அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு என்று சொல்வதை விட அல்லாஹ் எனும் திரு நாமம் கொண்டு என்று சொல்வதே கேள்விக்கு இடமில்லாத பொருளாகும். அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு என்று சொன்னால் அத்திரு நாமம் எது என்ற கேள்விக்கு இடமுண்டு. இதற்கு பதில் கூற முடியாது. ஆகையால் அல்லாஹ் எனும் திரு நாமம் கொண்டு என்று பொருள் சொல்வதே சிறந்தது.
بسم الله
– “பிஸ்மில்லாஹ்” என்ற வசனத்தின் தொடக்கத்திலுள்ள “பேB” என்ற எழுத்துக்கு “கொண்டு” என்று பொருள் கூறுவதால் மட்டும் அதன் பொருள் நிறைவு பெறாது. கொண்டு என்று சொல்வதுடன் பொருள் நின்று விடும். இவ்வாறு சொல்வதால் மட்டும் பொருள் பூரணமாகாது. இதன் பொருள் பூரணமாவதாயின் “பேB” என்ற எழுத்துக்கு முன்னால் இடத்திற்குப் பொருத்தமான ஒரு சொல்லை நாமே அமைத்துக் கொள்ள வேண்டும். நாம் அமைக்கின்ற அச் சொல் அறபு மொழியிலக்கணத்தில் مُتَعَلَّقٌ “முதஅல்லக்” என்று சொல்லப்படும்.
உதாரணமாக ஏதாவதொரு பானம் குடிக்கும் போது “பிஸ்மில்லாஹ்” என்ற வசனத்தைச் சொன்னால் நான் குடிக்கிறேன் என்ற பொருளுக்குரிய அறபுச் சொல்லான أَشْرَبُ என்ற சொல் அந்த “பேB” என்ற எழுத்துக்கு முன் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் ஒருவன் சாப்பிடும் போது “பிஸ்மில்லாஹ்” என்று சொன்னால் சாப்பிடுகிறேன் என்ற பொருளுக்குரிய آكُلُ என்ற சொல்லையும், இதேபோல் ஒருவன் உறங்கும் போது “பிஸ்மில்லாஹ்” என்று சொன்னால் நான் உறங்குகிறேன் என்ற பொருளுக்குரிய أَنَامُ என்ற சொல்லையும் “பேB” என்ற எழுத்திற்கு முன் அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் சொல் مُتَعَلَّقٌ என்று சொல்லப்படும்) அடைப்புக்குறி முடிந்தது.
ஆயினும் அல்லாஹ் “பிஸ்மில்லாஹ்” என்று சொல்கிறான் என்று வைத்துக் கொண்டால் அதற்கு மட்டும் அந்த “பேB” யின் مُتَعَلَّقٌ என்பதை தலைப்பில் நான் எழுதியுள்ளது போல் بِيْ كَانَ مَا كَانَ، َوبِيْ يَكُوْنُ مَا يَكُوْنُ என்று அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைத்தால் இவ் வசனத்தின் பொருள் “ஆனவை யாவும் என்னைக் கொண்டே ஆயின, ஆகுபவை யாவும் என்னைக் கொண்டே ஆகும்” என்று பொருள் வரும்.
விளக்கம்:
மேற்கண்ட இவ்வசனத்திற்கு “ஆனவை யாவும் எனது நாட்டப்படியே ஆயின என்றும், ஆகுபவை யாவும் எனது நாட்டப்படியே ஆகும்” என்று சிலர் விளக்கம் சொல்கிறார்கள். இது தவறான கருத்தாகும். ஏனெனில் இந்த வசனத்தின் எதார்த்த விளக்கம் அனைத்துப் படைப்பாகவும் ஆகியவையும், ஆகப் போகின்றவையும் அவனேயன்றி அவனின் நாட்டமல்ல. அவன் படைத்தவை யாவும் அவனின் நாட்டப்படியே படைக்கப்பட்டன. இதேபோல் அவன் படைக்கப் போகின்றவையும் அவன் நாட்டப்படியே படைக்கப்பட உள்ளன. இவ்விடயத்தில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.
ஏனெனில் அல்லாஹ்வின் “ஸிபாத்” தன்மைகள் அவனின் “தாத்” உள்ளமையை ஒருபோதும் பிரியவே மாட்டாது. இதை இறைஞானிகள் தெளிவாகவே கூறிவிட்டார்கள்.
اَلصِّفَةُ لَا تُفَارِقُ الْمَوْصُوْفَ
தன்மை என்பது எதை அண்டி நிற்கிறதோ அதை விட்டும் ஒருபோதும் பிரியாதென்று ஸூபீ மகான்கள் உறுதியாகவே கூறிவிட்டார்கள்.
அல்லாஹ்வின் தன்மைகள் அவனின் “தாத்” உள்ளமையை அண்டி நிற்பவையேயன்றி – அவனின் உள்ளமையில் நிற்பவைகளே தவிர அதை விட்டும் பிரிந்து வேறாக நிற்பவையல்ல. நிற்கவும் மாட்டாது.
அல்லாஹ்வின் ஏழு “ஸிபாத்” தன்மைகளான “குத்றத்” சக்தி, “இறாதத்” நாட்டம், “ஸம்உன்” கேள்வி, “பஸறுன்” பார்வை, “இல்முன்” அறிவு, “கலாமுன்” பேச்சு, “ஹயாதுன்” உயிர் என்பவற்றில் எதுவும் அவனின் “தாத்” உள்ளமையை விட்டும் பிரிந்து தனியாக வேறாகி நிற்கமாட்டாது. இதுவே “அகீதா” கொள்கையுடைய இமாம்களின் தீர்க்கமான முடிவாகும். “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்ளைவாதிகளினது முடிவும் இதுவேதான். இவை மட்டுமல்ல. “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளின் இமாம் என்று அவர்களால் போற்றிப் புகழ்ந்து பின்பற்றப்படுகின்ற இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் கொள்கையும் இதுவேதான். இவை மட்டுமல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்லியுள்ள கொள்கையும், அண்ணலெம் பெருமான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொல்லியுள்ள கொள்கையும் இதுவேதான்.
இதுதான் சரியான கொள்கை என்பதற்கு திருக்குர்ஆனில் இருந்தும், நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பொன் மொழிகளில் இருந்தும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாஉ உள்ளிட்ட எத்திரு மகானாலும் மறுக்க முடியாத எத்தனையோ ஆதாரங்கள் தேவையானாலும் தர முடியும். இன்ஷா அல்லாஹ்!
அல்லாஹ்தான் படைப்புக்களாக தனது “தாத்” உள்ளமை மூலம் “தஜல்லீ” வெளியாகியுள்ளான் என்பது இஸ்லாம் கூறும் கொள்கையே தவிர இது மஸ்த்தான்களின் கொள்கையுமல்ல, “ஸக்றான்”களின் கொள்கையுமல்ல. உலகில் தோன்றிய நபீமார், வலீமார், “ஆரிபீன்” ஞான மகான்கள் அனைவரும் பேசிய, சரி கண்ட கொள்கைதான்.
இவ்வாறு நான் சொல்வதற்கான, மறுக்க முடியாத, எவராலும் அசைக்க முடியாத காரணம் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவேயாகும். இது திருக்கலிமா என்று சொல்லிக் கொண்டாலும் கூட இது திருக்குர்ஆனில் கூறப்பட்ட அல்லாஹ்வின் பேச்சு – திருக்குர்ஆனின் வசனம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மறந்து விடவும் கூடாது, மறுத்து விடவும் கூடாது.
இது உலகிற்கு வழிகாட்டிகளாக அல்லாஹ் அருளிய ஓர் இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபீமார் – தீர்க்கதரிசிகள் அனைவரும் சொன்ன தத்துவமும், கொள்கையுமேயாகும். இவர்களில் ஒருவராவது இத்திரு வசனம் கூறுகின்ற கொள்கை பிழையென்று சொன்னதற்கோ, இது மறைக்கப்பட வேண்டிய கொள்கை என்று கூறியதற்கோ ஓர் ஆதாரம் கூட எமக்கு கிடைக்கவில்லை.
200க்கும் அதிகமான பல தரீகாக்கள் உள்ளன. அவற்றில் காலப் போக்கில் சில தரீகாக்கள் செயலிழந்து போயின. இன்னும் சில அவற்றின் தாபகர்களின் மறைவோடு அவையும் மறைந்துவிட்டன. இன்னும் சில குறிப்பிட்ட ஒரு கூட்டத்தினரால் மட்டும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இன்னும் பல உலகெல்லாம் பிரசித்து பெற்று, பல்லாயிரம் சிஷ்யர்கள், ஆதரவாளர்களால் பின்பற்றப்பட்டும் வருகின்றன.
அவற்றில் நமது இலங்கைத் திரு நாட்டில் நான் அறிந்த வரை காதிரிய்யா, ஷாதுலிய்யா, நக்ஷபந்திய்யா, ரிபாஇய்யா, ஜிப்ரிய்யா போன்ற பல “தரீகா”க்கள் உள்ளன. இவை யாவும் ஸூபிஸ, இறைஞான மகான்களால் தாபிக்கப்பட்டவையேயாகும். இவற்றில் இறைஞானம் கூறப்படாத, அல்லது இறைஞானத்தை எதிர்க்கின்ற எந்த ஒரு தரீகாவும் இல்லவே இல்லை.
ஆயினும் அவற்றை வழி நடத்துகின்ற ஷெய்குமார், மற்றும் அவர்களின் “கலீபா”மார்களிற் பலர் “தரீகா”வின் உயிர் எதுவோ அதை தமது முரீதுகளுக்கு – சிஷ்யர்களுக்கு மேலோட்டமாகச் சொல்லிக் கொடுக்கிறார்களே தவிர இதுதான் தரீகாவின் உயிர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் பாணியில் தெள்ளத் தெளிவாக சொல்லிக் கொடுப்பதற்கு தயங்குகிறார்கள். விரும்புகிறார்களில்லை. ஷெய்குமார்களும், “கலீபா”க்களும் இவ்வாறு காலம் கடத்தியதினால்தான் இன்று தரீகாவாதிகள் கூட “தரீகா” என்றால் என்னவென்று கூடத் தெரியாதவர்களாக இறை ஞானக் கருத்துக்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் “தாத்” அவனின் உள்ளமைதான் சர்வ சிருட்டிகளினதும் கரு என்ற தத்துவத்தையும், அவனின் அதே உள்ளமைதான் அனைத்துப் படைப்புக்களாகவும் தோற்றுகின்றது என்ற தத்துவத்தையும் அறிந்து தெளிவு பெற வேண்டும்.
இவ் அடிப்படையில் நான் தலைப்பில் எழுதிய “பேB” இன் விளக்கத்தையும் கவனிப்போம்.
بي كان ما كان، وبي يكون ما يكون
என்னைக் கொண்டே ஆகிய அனைத்தும் ஆகின, என்னைக் கொண்டே ஆகிற அனைத்தும் ஆகும் என்ற வசனத்திற்கு, بِقُدْرَتِيْ எனது சக்தி கொண்டும், بِإِرَادَتِيْ எனது நாட்டம் கொண்டுமே ஆகிய அனைத்தும் ஆகின என்றும், ஆகும் அனைத்தும் ஆகும் என்றும் பொருள் கொள்ளாமல் بِذَاتِيْ எனது “தாத்” கொண்டு அல்லது بِوُجُوْدِيِ எனது உள்ளமை கொண்டே ஆகிய அனைத்தும் ஆகின என்றும், ஆகுபவை அனைத்தும் ஆகும் என்றும் பொருள் கொண்டு “வஹ்ததுல் வுஜூத்” உள்ளமை ஒன்றே, அல்லது எல்லாம் அவனே என்ற அகமியத்தை நிலை நாட்ட வேண்டும்.
بي كان ما كان، وبي يكون ما يكون
என்ற வசனத்தில் வந்துள்ள بِيْ – “பீB” என்ற சொல்லில் “பேB” என்ற எழுத்துக்கும், “யே” என்ற எழுத்துக்குமிடையில் ஒரு சொல்லை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். விஷயம் தெரியாத, இறைஞான விளக்கமில்லாத, “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையென்றால் என்னவென்று கூடத் தெரியாத “பத்வா” வழங்கிய முல்லாக்கள் போன்றோர் அமைக்க வேண்டிய சொல்லை “இறாதத்”, “குத்றத்” போன்ற சொற்களை அமைத்து அல்லாஹ்வின் சக்தி கொண்டும், அவனின் நாட்டம் கொண்டுமே ஆயின அனைத்தும் ஆயின என்றும், ஆகுபவை அனைத்தும் ஆகும் என்றும் விளக்கம் சொல்வார்கள். இவர்கள் “தாத்”தை விட்டும் “ஸிபத்” தன்மையை பிரிக்கும் போலிகளாவர். இவர்கள் விஷயம் தெரியாதவர்களாவர். அமைக்க வேண்டிய சொல்லை “தாத்” என்றோ, “வுஜூத்” உள்ளமை என்றோ அமைத்தவர்கள் மட்டும்தான் அல்லாஹ் தனது “தாத்” கொண்டே படைப்புக்களாக வெளியானான் என்று சொல்வார்கள்.
Pages: 1 2