Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்என்னைக் கொண்டே ஆனவை யாவும் ஆயின,என்னைக் கொண்டே ஆகுபவை யாவும் ஆகும்.

என்னைக் கொண்டே ஆனவை யாவும் ஆயின,என்னைக் கொண்டே ஆகுபவை யாவும் ஆகும்.

 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப்மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
بِيْ كَانَ مَا كَانَ، وَبِيْ يَكُوْنُ مَا يَكُوْنُ،
என்னைக் கொண்டே ஆனவை யாவும் ஆயின,என்னைக் கொண்டே ஆகுபவை யாவும் ஆகும்.
 
بسم الله الرحمن الرحيم
 
“பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்” இவ்வசனம் இறைவனின் “தாத்”தின் பெயரையும் – இயற் பெயரையும், அவனின் தொழிற் பெயர்களில் இரண்டையும் உள்வாங்கிய ஓர் அற்புத வசனம்.
 
நல்ல காரியம் எது செய்வதாயினும் அது இவ்வசனம் கொண்டே ஆரம்பம் செய்யப்பட வேண்டும் என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகின்றது. இவ்வாறு செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அருள் நிறைந்ததாகவும், குறையற்றதாகவும் இருக்குமென்று நபீ பெருமானின் பொன் மொழிகள் கூறுகின்றன.
 
قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم كُلُّ أَمْرٍ ذِيْ بَالٍ لَا يُبْدَأُ فِيْهِ بِبِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ فَهُوَ أَبْتَرُ،
எந்த ஒரு நல்ல காரியமாயினும் அதைத் தொடங்கும் போது “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்” என்று மொழிந்து தொடங்கவில்லையாயின் அக்காரியம் இறையருள் அற்றதாகிவிடும் என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.

இதை ஆதாரமாகக் கொண்டே முஸ்லிம்கள் நல்ல காரியங்கள் செய்யும் போதெல்லாம் இவ்வசனத்தைச் சொல்வார்கள். இது திருக்குர்ஆன் வசனங்களில் உள்ளதாகும்.
நல்ல காரியமென்பது பாவமில்லாத, அருவருப்பில்லாத அனைத்துக் காரியங்களையும் குறிக்கும்.
நல்ல காரியங்களுக்கு உதாரணங்கள் சாப்பிடுதல், பருகுதல், உறங்குதல், பயணித்தல், கட்டிடத்திற்கு அத்திவாரமிடுதல், கடை திறத்தல், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்தல், தொழிலுக்குச் செல்லுதல் போன்று.
பாவமான காரியங்களுக்கு உதாரணங்கள் மது அருந்துதல், விபச்சாரம் செய்தல், திருடுதல், சூனியம் செய்தல், அநீதி செய்தல், கொலை செய்தல் போன்று.
அருவருப்பான காரியங்களுக்கு உதாரணங்கள் மூக்குச் சிந்துதல், உமிழ்தல், மலசல கூடத்தில் நுழைதல், மல, சலம் கழித்து துப்பரவு செய்தல் போன்று.
நல்ல காரியங்களுக்காக “பிஸ்மி” சொல்லுதல் “ஸுன்னத்” நபீ வழி நற்காரியம். பாவமான காரியங்களுக்காக “பிஸ்மி” சொல்லுதல் பாவமாகும். அருவருப்பான காரியங்களுக்காக “பிஸ்மி” சொல்லுதல் “மக்றூஹ்” வெறுக்கத்தக்கதாகும். விரும்பத்தகாததாகும். இவ்விடயத்தில் விபரம் உண்டு. “ஸுன்னீ” உலமாஉகளிடம் கேட்டறிந்து கொள்ளலாம்.
நல்ல காரியத்திற்காக “பிஸ்மி” சொல்வது “ஸுன்னத்” நபீ வழியாக – நல்ல காரியமாக இருந்தாலும் அதை ஒரு கேலிக் கூத்தாக ஆக்கிவிடக் கூடாது. எது போலென்றால் ஒருவன் தன்னால் நடக்கின்ற சிறிய, பெரிய நல்ல காரியங்கள் அனைத்திற்கும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து “பிஸ்மி” சொல்வது போன்று.
பல வருடங்களுக்கு முன் காத்தான்குடியில் வெளியூர் முஸ்லிம் டொக்டர் ஒருவர் இருந்தார். அவரிடம் நோயாளி சென்றால் அவனைச் சோதனை செய்து முடிவதற்குள் – சுமார் ஐந்து நிமிடத்தில் குறைந்தது பத்து தரமேனும் “பிஸ்மி” சொல்வார். வலது கையை பிடிக்கும் போது ஒரு தரமும், இடது கையைப் பிடிக்கும் போது ஒரு தரமும், நாக்கை பார்க்கும் போது ஒரு தரமும் இவ்வாறு பல தரம் “பிஸ்மி” சொல்வார். இதனால் “பிஸ்மி” டொக்டர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். அவரின் இச் செயல் நாளடைவில் சிரிப்புக்குரியதாக ஆகியது. எனவே, இவ்வாறு செய்யாமல் பகுத்தறிவைப் பயன்படுத்தியும், சந்தர்ப்ப சூழ் நிலையை கருத்திற் கொண்டும் செயல்பட வேண்டும்.
பொது இடங்களில் பல்லின, பல மத மக்கள் உண்ணுமிடங்களில் “பிஸ்மி” சொல்வதாயின் சொன்னவன் தனக்கு மட்டும் கேட்கும் வகையில் சொல்ல வேண்டும். அங்கு கூடியுள்ளவர்களின் கவனத்தை திருப்புமளவு சத்தமிட்டுச் சொல்வது நாகரீகமல்ல, பொருத்தமுமல்ல.
ஒரு “மஜ்லிஸ்” சபையில் உண்பதற்காக சாப்பாடு வைக்கப்பட்டு முடிந்த பின் அச்சபையின் தலைவர் அல்லது அது வீடாயிருந்தால் வீட்டுக்காரன் “பிஸ்மில்லாஹ்” என்று சொன்ன பிறகுதான் விருந்துக்கு வந்தவர்கள் சாப்பிடத் தொடங்கும் வழக்கம் இலங்கை நாட்டின் அதிகமான ஊர்களில் இருந்து வந்தது. வந்ததும் வந்தார்கள் மகான்கள் பிஸ்மியும் போச்சு, ஒழுக்கமும் போச்சு.
திருக்குர்ஆனில் 114 “ஸூறா” அத்தியாயங்கள் உள்ளன. அவற்றில் “பாதிஹா” அத்தியாயத்தில் முதலாவது வருகின்ற “பிஸ்மி” மட்டும்தான் அந்த அத்தியாயத்தின் ஒரு வசனமாக கணக்கெடுக்கப்படும். இவ்வடிப்படையில் “பாதிஹா” அத்தியாயம் “பிஸ்மியுடன்” சேர்த்தே ஏழு “ஆயத்” வசனம் எனப்படும். ஏனைய “ஸூறா” அத்தியாயங்களில் “பிஸ்மி” “ஆயத்” வசனங்களில் ஒன்றாக கணக்கு எடுக்கப்படமாட்டாது. இந்த விபரப்படி திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்களில் ஓர் அத்தியாயத்தில் மாத்திரமே “பிஸ்மி” அத்தியாயத்தின் வசனங்களில் ஒன்றாக கணக்கெடுக்கப்படும்.
எனினும் திருக்குர்ஆனில் 27ம் அத்தியாயத்தில் – “நம்ல்” அத்தியாயத்தில் 30வது வசனமாகவும் “பிஸ்மி” வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
இந்த “பிஸ்மி”யையும், “பாதிஹா” அத்தியாயத்தில் வருகின்ற “பிஸ்மி”யையும் சேர்த்தால் திருக்குர்ஆனில் “ஷபிஸ்மி” என்பது இரண்டு இடத்தில் திருக்குர்ஆன் வசனமாக வந்துள்ளது. திருக்குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயமான “அத்தவ்பா” அத்தியாயத்தின் தொடக்கத்தில் “பிஸ்மி” வராது. சொல்லவும் கூடாது.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “பிஸ்மில்லாஹ்” என்ற வசனத்தை ஓதி நோயாளியின் மீது ஊதி அவனை சுகமாக்கியுள்ளார்கள் என்று நபீ மொழி கூறுகிறது. நோயாளியின் முகத்திலும், உடலிலும் பின்வரும் ஓதலை ஓதி ஊதினால் நோய் சுகமாகும். ஓதல் இதுதான்.
بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ
“உன்னை வருத்தப்படுத்தும் வஸ்த்துக்களை விட்டும் அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு நான் உன்னை மந்திரிக்கிறேன்” என்று இதற்கு பொருள் வரும்.
“பிஸ்மி” என்ற சொல்லும், “பஸ்மலா” என்ற சொல்லும் “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்” என்பதையே குறிக்கும். காத்தான்குடியில் “பஸ்மலா ஜன்க்ஷன்” என்ற பெயரில் ஒரு சந்தி உள்ளது. பிரதான வீதியில் இருக்கும் “பஸ்மலா” சந்தியை உருவாக்கியவர் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் சாப்பிடத் தொடங்கும் போது “பிஸ்மி” சொல்ல வேண்டும். சொல்ல மறந்து இடையில் நினைவு வந்தால் بِسْمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ என்று சொல்ல வேண்டும். இவ்வாறு சொன்னால் தொடக்கத்திற்கும், கடைசிக்கும் சேர்த்து சொன்னது போலாகிவிடும்.
بسم الله الرحمن الرحيم
– “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்” எனும் இத்திரு வசனத்திற்கு அதிக சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஏதாவதொரு பொருளை எங்காவதோர் இடத்தில் வைக்கும் போது இவ்வசனத்தை பக்தியுடன் மொழிந்து வைத்தால் அது வைத்தவனின் மனதை விட்டும் மறந்தும் போகாது. அது காணாமற் போகவும் விடாது. இப்படியொரு சிறப்பு இத்திரு வசனத்திற்கு உண்டு.
ஓர் ஊரில் கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஒரு மத போதகர் இருந்தார். அவர் இத்திரு வசனத்தை பல சந்தர்ப்பங்களில் பரீட்சித்துப் பார்த்து வெற்றியும் கண்டுள்ளார்.
ஒரு நாள் அவர் பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது இத்திரு வசனத்தின் சிறப்பையும், இதன் மூலம் தான் பரீட்சித்துப் பெற்ற விஷேடங்களையும் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவ்வழியால் சென்ற அந்நாட்டு கிறித்துவ மதத்தைச் சேர்ந்த மன்னனின் மகள் மத போதகரின் உரையைச் செவியேற்று நின்றாள். அன்றிலிருந்து மத போதகர் கூறிய விடயத்தில் உண்மை உள்ளதா என்று பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்தாள்.
அரசன் வழமையாக அரச சபையில் கூட்டத்தை முடித்து விட்டு தனது அரண்மணைக்கு வந்ததும் தனது “சீல்” முத்திரையை தனது மகளிடமே கொடுத்து வைப்பார். அவள் அதை மிகவும் பத்திரமாக அலுமாரியில் வைத்து விடுவாள். அரசன் எப்போது கேட்கிறாரோ அப்போது அதைக் எடுத்துக் கொடுப்பாள்.
அவள் எப்போதும் அதை தந்தையிடமிருந்து எடுக்கும் போதும், மீண்டும் அவரிடம் கொடுக்கும் போதும் கிறித்துவ மத போதகர் சொன்னது போன்று “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்” என்ற திரு மறை வசனத்தை பக்தியுடன் மொழிந்தவளாகவே எடுப்பதும், கொடுப்பதும் அவளின் வழக்கமாக இருந்து வந்தது.
ஒரு நாள் இதன் உண்மைத் தன்மையை அறிய வேண்டுமென்று விரும்பிய அரசன் முத்திரையை அவளிடம் கொடுத்த பின் அவளுக்குத் தெரியாமலேயே அதை எடுத்து கடலில் எறிந்து விட்டார்.
சில நாட்களின் பின் அரச சபைக்குச் செல்வதற்காக மகளை அழைத்து முத்திரையைத் தருமாறு கேட்டார். அவள் வழமை போல் அதை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.
அரசன் வியப்படைந்து நான் கடலில் எறிந்தது எவ்வாறு வீட்டிற்கு வந்ததென்று அறிய விரும்பி மகளிடம் இதுபற்றி வினவினார். மகள் பின்வருமாறு கூறினாள்.
தந்தையே! வீட்டு வேலைக் காரன் மார்க்கட்டிலிருந்து மீன் வாங்கி வந்தார். அதை வேலைக்காரி அறுத்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள். மீனின் வயிற்றில் உங்களின் “சீல்” முத்திரை இருந்தது கண்டு வியந்தவளாக அதை என்னிடம் தந்தாள். நான் வழமை போல் அலுமாரியில் வைத்தேன் என்று விளக்கம் சொன்னாள்.
இது கேட்டு வியந்து போன அரசர் இளவரசியே! “பிஸ்மி”யின் தத்துவம் எப்படியானது என்பதை அறிவதற்காகவே நான் இவ்வாறு ஒரு நாடகம் நடத்தினேன். நான் கடலில் எறிந்த “சீல்” முத்திரையை மீன் விழுங்கி அல்லாஹ்வின் கட்டளைப்படி எம்மிடம் ஒப்படைத்துள்ளது என்று “பிஸ்மி”யின் மகிமையை உணர்ந்து கொண்டார்.
ஒரு பொருளை வைக்கும் போதும், எடுக்கும் போதும் “பிஸ்மி” சொல்வதில் உள்ள அகமியம் தெளிவாகிவிட்டது.
“பிஸ்மி” வசனத்துக்கு அல்லாஹ் இப்படியொரு வல்லமையை கொடுத்திருந்தாலும் கூட நம்பிக்கை அடிப்படையிலேயே ஒருவனுக்கு ஒரு காரியம் வெற்றியடைவதும் , தோல்வியடைவதும் அமைந்துள்ளது என்ற தத்துவத்தை நாம் புரிந்து நம்பிக்கை உள்ளவர்களாக மாற வேண்டும்.
 
“பிஸ்மி” வசனத்தின் அகமியம் தொடரும்….
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments