தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இந் நாட்டைப் பொறுத்தவரை இங்கு வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளிட்ட மனிதனுக்குத் தேவையான எல்லா சுதந்திரங்களும் உண்டு. ஒருவரின் உரிமைகளில் – சுதந்திரங்களில் மற்றவர்கள் தலையிடுவதும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
உலமாஉகளே! எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டு அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று 1979ம் ஆண்டு நீங்கள் “பத்வா” தீர்ப்பு வழங்கி அதை நாடளாவிய ரீதியில் பகிரங்கப்படுத்தி பரப்பினீர்கள். சுமார் 42 ஆண்டுகள் கடந்துவிட்டன.
எங்களை மதம் மாற்றியவர்கள் நீங்களேயன்றி நாங்கள் மதம் மாறவில்லை. ஆயினும் நாங்கள் மதம் மாறிவிட்டதாக மக்கள் மத்தியில் பிரகடணம் செய்தவர்கள் நீங்கள்தான். இந்நாட்டுச் சட்டத்தின்படி எவரையும் மதம் மாற்றி வைக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லையென்றிருக்கும் நிலையில் இந் நாட்டுச் சட்டத்தை மதிக்காமலும், கவனத்திற் கொள்ளாமலும், அதை மாற்றி தன்னிச்சையாக எங்களை மதம் மாற்றி மக்களுக்குப் படம் காட்டியவர்கள் நீங்கள்தான்.
எங்களை மதம் மாற்றிய நீங்கள் எந்த மதத்திற்கு மாற்றினீர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை?
நீங்கள் சொல்வது போல் நாங்கள்தான் மதம் மாறினோம் என்று வைத்துக் கொண்டாலும் கூட நாங்கள் எந்த மதத்திற்கு மாறினோம் என்று கூட நீங்கள் கூறவில்லை.
நீங்கள்தான் எங்களை மதம் மாற்றினீர்கள் என்றோ, அல்லது நீங்கள் சொல்வது போல் நாங்கள்தான் மதம் மாறினோம் என்றோ வைத்துக் கொண்டாலும் நீங்கள் எந்த மதத்திற்கு எங்களை மாற்றினீர்கள் என்று பொது மக்களுக்கு நீங்கள்தான் சொல்ல வேண்டும். இதுவே நியாயம். நாங்கள் சொல்ல முடியாது. ஏனெனில் நாங்கள் மதம் மாறவில்லை. நாங்கள் முஸ்லிம்களான பெற்றோருக்குப் பிறந்து இதே நொடி வரை முஸ்லிம்களாகவே வாழ்ந்து வருகிறோம்.
இதற்கு ஆதாரம் கூட நாங்கள் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் முஸ்லிம்கள்தான் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் அதிகம் உள்ளன. அவையாவையும் இங்கு எழுதத் தேவையில்லை. ஆயினும் பிரதான ஆதாரங்களை மட்டும் எழுதுகிறேன்.
நாங்கள் மதம் மாறியிருந்தால் எங்களுக்கு “மஸ்ஜித்” பள்ளிவாயல் தேவையில்லை. நாங்களோ தொன்று தொட்டு 1960ம் ஆண்டிலிருந்து தொழுது வந்த பள்ளிவாயல் ஸூபிஸ சமூகத்திற்குப் போதாதென்று அதை உடைத்து தரை மட்டமாக்கி சுமார் 4000 பேர் ஒரே நேரத்தில் தொழுவதற்கான வசதியோடு நான்கு மாடிகள் கொண்டதாக 35 கோடி ரூபாய் செலவில் கட்டிக் கொண்டிருக்கிறோம். இன்னும் 15 கோடி செலவிட்டால் பள்ளிவாயல் திறப்பு விழாச் செய்து விடுவோம்.
நாங்கள் மதம் மாறியிருந்தால் இந்த வேலை எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் மதம் மாறவில்லை என்பதற்கு இது ஓர் ஆதாரம்.
நாங்கள் ஐந்து நேரமும் தொழுது வருகிறோம். வாரத்தில் வெள்ளிக் கிழமை ஜும்ஆவும் தொழுகிறோம். நாங்கள் மதம் மாறியிருந்தால் தொழுகைகள் எமக்கு எதற்கு? இது நாங்கள் மதம் மாறவில்லை என்பதற்கு இன்னோர் ஆதாரமாகும்.
ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – அதாவது “எல்லாம் அவனே” என்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தொழுகிறார்கள். அவர்களில் எவரும் தமக்கு தொழுகை கடமையில்லை என்று சொன்னதுமில்லை, சொல்வதுமில்லை. அவ்வாறு ஒரு கொள்கை நாங்கள் கூறும் ஸூபிஸ வழியில் இல்லவே இல்லை. நாங்கள் மதம் மாறியிருந்தால் எங்களுக்குத் தொழுகை எதற்கு?
நாங்கள் மதம் மாறவில்லை என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரம்.
ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களில் “ஹஜ்” வணக்கம் செய்வதற்கு வசதியுள்ளவர்கள் அவ் வணக்கம் செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டு முன் வரிசையில் நின்று முயற்சிக்கின்றார்கள். அவர்களில் எவரும் “ஹஜ்” வணக்கம் கடமை இல்லையென்று சொன்னதுமில்லை. சொல்வதுமில்லை. அப்படியொரு கொள்கை ஸூபிஸத்திலும் இல்லை. நாங்கள் மதம் மாறவில்லை என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.
– ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களில் “சகாத்” கொடுப்பதற்கு வசதி உள்ளவர்கள் அவர்களின் கடமையை பகிரங்கமாகச் செய்து வருகிறார்கள். அவர்களில் எவரும் அது கடமையில்லை என்று சொன்னதுமில்லை, சொல்வதுமில்லை. இது ஸூபிஸக் கொள்கையுமில்லை. நாங்கள் மதம் மாறவில்லை என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரம்.
மார்க்கத்தில் “ஹறாம்” கட்டாயம் தடுக்கப்பட்ட, தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லப்பட்ட எந்தவொரு சிறிய, பெரிய காரியமாயினும் அது ஆகும் என்று ஸூபிஸ சமூகத்தில் எவரும் சொன்னதுமில்லை, சொல்வதுமில்லை. இதேபோல் மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட எந்த ஒரு காரியத்தையும் அது கடமையில்லை என்று ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த எவரும் சொன்னதுமில்லை, சொல்வதுமில்லை.
இன்னுமிது போல் “குப்ர்” இறை மறுப்பு – நிராகரிப்பு, “ஷிர்க்” இணை வைத்தலை ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு காரியத்தையும் சொன்னதுமில்லை, சொல்வதுமில்லை. செய்ததுமில்லை, செய்வதுமில்லை.
மேற்கண்ட யாவும் முஸ்லிம் சமூகமும், முஸ்லிம்களல்லாத ஏனைய சமூகங்களும் பகிரங்கமாக அறிந்த விடயங்களேயாகும். குறிப்பாக எனதூர் மக்கள் அறிந்தவையேயாகும்.
“பத்வா” வழங்கிய உலமாஉகளைப் பொறுத்த மட்டிலும், அவர்கள் வழங்கிய “பத்வா”வை ஏற்றுக் கொண்டவர்களைப் பொறுத்த மட்டிலும் அவர்கள் எங்களில் ஒரு பிழை சொல்வதாயின் நாங்கள் பேசி வருகின்ற, ஸூபிஸ ஞானம் கூறுகின்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவக் கொள்கை ஒன்றை மட்டுமே பிழை என்று சொல்ல முடியும். இது கூட அவர்களின் கருத்துப்படியேதான். எங்களின் கருத்துப்படியல்ல. எங்களின் கருத்தின் படியும், நம்பிக்கையின் படியும் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவமே எந்த ஒரு சமயமும் சொல்லாத, புத்திக்கும், எதார்த்தத்திற்கும் பொருத்தமான, பகுத்தறிவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கையும், தத்துவமுமாகும். இதுவே எங்களின் கொள்கையும், நம்பிக்கையுமாகும்.
“எல்லாம் அவனே” என்ற தத்துவம் உலகம் தோன்றிய காலத்திலிருந்தோ, அல்லது இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்தோ எந்த ஓர் அறிஞனாலும் சொல்லப்படாத தத்துவம் என்று பலர் நினைப்பதே இதை மறுப்பதற்கான காரணமாகும்.
பலரின் இந் நினைப்பு பிழையானதாகும். ஏனெனில் “எல்லாம் அவனே” எனும் தத்துவம் அல்லாஹ்வினாலும், நபீமார்களாலும், குறிப்பாக நபீகட்கரசர் ஸெய்யிதுனா முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களாலும், ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாலும் சொல்லப்பட்ட கொள்கையும், தத்துவமுமாகும்.
யார் எங்கே, எவ்வாறு சொல்லியுள்ளார்கள் என்று யாராவது கேட்க விரும்பினால் அவருக்கு நான் கூறும் மிகச் சுருக்கமான பதில் 12 எழுத்துக்களை உள்வாங்கிய, நான்கு சொற்களைக் கொண்ட لا إله إلا الله “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனமேயாகும். இவ்வசனம் தமிழ் பேசும் முஸ்லிம்களால் “திருக் கலிமா” என்று அழைக்கப்படுகிறது. இவ்வசனம் இவ்வாறு அழைக்கப்படுவதுடன் இன்னும் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவற்றில் كلمة الحقّ “கலிமதுல் ஹக்” சத்திய வார்த்தை என்பதும் ஒன்று.
இவ்வசனம் திருக்குர்ஆனில் “முஹம்மத்” எனும் அத்தியாயத்தில் 19 வது வசனமாக உள்ளது. நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருள் மொழிகளிலும் வந்துள்ளது.
قال النبي صلّى الله عليه وسلم “أفضل ما قلت أنا والنبيّون من قبلي لا إله إلّا الله”
நானும், எனக்கு முன் வாழ்ந்த நபீமாரும் சொன்னவற்றில் மிகச் சிறந்தது “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதாகும்.
மேற்கண்ட இவ் இரு ஆதாரங்கள் மூலம் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்று என்பதும், ஓர் இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபீமாரும் சொன்னவற்றில் மிகச் சிறந்தது என்பதும் விளங்கப்படுகிறது.
இவ்வசனம் தொடர்பாக நான் ஆராய்ந்து ஆய்வு செய்த வகையிலும், இறை ஞானத்தின் கடல்கள் போன்ற இறை ஞான மகான்களிடம் நேரில் கேட்டறிந்த வகையிலும் நான் அறிந்த, நம்பியுள்ள பொருள் எல்லாம் அவனே என்ற பொருளேயாகும். இதை வேறு பாணியில் சொல்வதாயின் அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்றும், இன்னுமொரு பாணியில் சொல்வதாயின் அல்லாஹ் அல்லாத எதுவுமே இல்லை என்றும் சொல்லலாம். தமிழ் மொழியாக்க வசனங்கள் மாறுபட்டாலும் கூட அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்ற கருத்து மாறுபடாது.
குறித்த திரு வசனத்தின் இப்பொருள்தான் நபீ பெருமானாரின் காலத்திலிருந்து சுமார் மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் சொல்லி வந்த பொருளாகும். அதன் பிறகு குறித்த வசனத்தின் பொருளில் கலப்படம் ஏற்படத் தொடங்கிற்று. இது குறித்தே நபீகள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
قال النبي صلى الله عليه وسلم ” خير القرون قرني، ثم الذين يلونهم، ثمّ الّذين يلونهم، ثمّ يفشو الكذِبُ
நூற்றாண்டுகளில் சிறந்தது எனது நூற்றாண்டாகும். சிறப்பில் இதை அடுத்தது அதை அடுத்த நூற்றாண்டாகும். சிறப்பில் இதை அடுத்தது அடுத்த நூற்றாண்டாகும். பின்பு பொய் பரவும் என்று நபீ மணி அருளினார்கள்.
நூற்றாண்டுகளில் சிறந்தது தாங்கள் வாழ்ந்த நூற்றாண்டு என்றும், சிறப்பில் இதை அடுத்தது அடுத்த நூற்றாண்டு என்றும், சிறப்பில் இதை அடுத்தது இதை அடுத்த நூற்றாண்டு என்றும் கூறிய நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இதன் பிறகு பொய் பரவும் என்று அருளினார்கள். அதாவது நபீ பெருமானார் தாங்கள் வாழ்ந்த நூற்றாண்டு உள்ளிட்ட தொடரான மூன்று நூற்றாண்டுகள் பொய் பரவாத நூற்றாண்டுகள் என்றும், 300 ஆண்டுகளின் பின் பொய் பரவும் என்றும் கூறியுள்ளார்கள்.
எனினும் அவர்கள் எந்த விடயத்தில் பொய் பரவும் என்றும், குறித்த 300 ஆண்டுகளும் எந்த விடயத்தில் சிறந்த ஆண்டுகள் என்றும் தெளிவாகக் கூறவில்லை.
ஆயினும் மேற்கண்ட நபீ மொழியின் வசன அமைப்பும், அதன் நடையும் ஓர் உண்மையை எமக்கு உணர்த்துகிறது. ஆழமாக ஆய்வு செய்வோர் அறிந்து கொள்வர்.
குறித்த முன்னூறாண்டுகளையும் சிறந்த ஆண்டுகள் என்று கூறிய நபீகளார் பின் பொய் பரவும் என்று அதை மட்டும் குறித்துக் கூறியிருப்பதிலிருந்து குறித்த 300 ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள் அவை பொய் பரவாதிருந்த காரணத்தால் சிறந்தவர்கள் என்று கணிக்கப்படுகிறார்கள்.
குறித்த 300 ஆண்டுகளிலும் வாழ்ந்தவர்கள் என்ன விடயத்தில் பொய் சொல்லாதிருந்தார்கள் என்றும், 300 ஆண்டுகளின் பின் வாழ்ந்தவர்கள் என்ன விடயத்தில் பொய் சொன்னார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இதுவே நபீ மொழியின் உயிர் நாடியான அம்சம். இதை மட்டும் விளங்கிக் கொண்டால் போதும்.
இந்த நபீ மொழி இவ் உலக விடயத்தில் – துன்யாவுடைய விடயத்தில் பொய் சொல்வது தொடர்பாக கூறப்பட்டதல்ல. ஏனெனில் இவ் உலக விடயத்தில் பொய் சொல்லுதல் என்பது நபீ அவர்களின் காலத்திலும் கூட இருந்த ஒன்றுதான். இது பற்றி நபீ பெருமானார் அவர்கள் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கமாட்டார்கள் என்று முடிவு செய்தல் வேண்டும். அவர்கள் இங்கு குறிப்பிடுவது “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திரு வசனத்தின் பொருளிலும், அதன் விளக்கத்திலும் பொய் பரவும் என்று அவர்கள் சொன்னார்கள் என்றே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தொடரும்….