Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஏகனாம் அல்லாஹ் ஏந்தல் உருவில் “தஜல்லீ” வெளியாகவில்லையெனில் ஏகனை அறிவது எவ்வாறு?

ஏகனாம் அல்லாஹ் ஏந்தல் உருவில் “தஜல்லீ” வெளியாகவில்லையெனில் ஏகனை அறிவது எவ்வாறு?

தொடர் 01
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
لَقَدْ جَاءَ مَوْلَانَا بِصُوْرَةِ أَحْمَدٍ – وَإِلَّا فَكَيْفَ الرَّبُّ يُعْرَفُ وَيُقْصَدُ؟
 
காரணக்கடல், காமில் வலீ, அந்தறூத் ராஜாளி அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “றாதிப் மஜ்லிஸ்”களில் பாடும் பாடலே இப்பாடல்.
 
அந்தகர்கள் அறியார்கள்! அகமியங்கள் புரியார்கள்!
 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، ثنا يَحْيَى بْنُ الْحَسَنِ بْنِ فُرَاتٍ الْقَزَّازُ، ثنا مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصٍ الْعَطَّارُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي حَفْصٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ غَزْوَةِ الطَّائِفِ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مَلِيًّا مِنَ النَّهَارِ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: يَا رَسُولَ اللهِ لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهَ انْتَجَاهُ» (المعجم الكبير للطبراني)
عن جابرٍ قالَ:لمَّا كانَ يومُ الطائفِ دَعا رسولُ اللهِ صلى الله عليه وسلم علياً فَناجاهُ طويلاً، فقالَ بعضُ أصحابِهِ: لَقد طالَ نَجوى ابنِ عمِّه، فقالَ : «ما أَنا انتَجيتُه ولكنَّ اللهَ انتَجاهُ» (المخلصيات)
عن جابر بن عبد الله قال: ناجى رسول الله صلى الله عليه وسلم علياً يوم الطائف فأطال نجواه فقال رجل: لقد أطال نجوى ابن عمه، فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال: ((ما أنا انتجيته ولكن الله انتجاه)) (مناقب علي لابن المغازلي)
மேற்கண்ட நபீ மொழியை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் றழியல்லாஹு அன்ஹு எனும் ஸஹாபீ அறிவித்துள்ளார்கள்.
 
மேற்கண்ட மூன்று நூற்களிலும் பல அறிவிப்பாளர் வழியாக சில சொற்கள் மாற்றத்துடன் மட்டும் இந்த நபீ மொழி வந்துள்ளது. சொற்களில் மட்டும்தான் மாற்றமுள்ளதே தவிர நபீ மொழியின் கருத்தில் எந்த ஒரு மாற்றமும் காணப்படவில்லை.
 
நபீ மொழியின் தமிழாக்கம்:
“தாயிப்” யுத்த நாள் வந்தது. நபீ தோழர்கள் சிறு சிறு குழுக்களாக கலைந்து நின்றார்கள். வீரர் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒரு கூட்டத்துடன் நின்றிருந்தார்கள்.
 
அங்கு வந்த பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அக் கூட்டத்தில் நின்றிருந்த ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கையைப் பிடித்து இருவரும் சற்று தூரம் சென்று அன்று பகற் பொழுது முழுதும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
இதை அவதானித்துக் கொண்டிருந்த ஸெய்யிதுனா கலீபா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானாரிடம் வந்து يا رسول الله! لقد طالت مناجاتك عليا مند اليوم அல்லாஹ்வின் திருத்தூதரே! இன்று அலீ அவர்களுடன் நீண்ட நேரம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வியந்து கூறினார்கள். இது கேட்ட நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், مَا أَنَا اِنْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهَ انْتَجَاهُ அவர்களுடன் நான் பேசிக் கொண்டிருக்கவில்லை. அல்லாஹ்தான் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான் என்று பதில் கூறினார்கள்.
ஆதாரம்: அல்முஃஜமுல் கபீர், ஆசிரியர்: இமாம் தபறானீ,
அறிவிப்பு: ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு
இதே நபீ மொழி “அல் முக்லஸிய்யாத்” எனும் நூலிலும் வந்துள்ளது.
இதே நபீ மொழி “மனாகிபு அலீ” எனும் நூலிலும் வந்துள்ளது.
அறிவிப்பு: ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு
نَاجَى
என்ற சொல்லும், اِنْتَجَى என்ற சொல்லும் ஒரே பொருளுக்குரியவையாகும். இரண்டுக்கும் பேசினார்கள் என்றே பொருள் வரும்.
 
நபீ பெருமானார் அவர்கள் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்துக் கொண்டு சற்று தூரம் சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த போது அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்விருவரும் பேசிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்று குறுக்கிட்டு மேற்கண்டவாறு கேட்டவர்களாவர்.
 
இவர்கள் கேட்டது போல் அங்கு யுத்தத்திற்காக வந்திருந்த இன்னொருவரும் பெருமானாரிடம் நேரில் கேட்காமல் தோழர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களிடம் பின்வருமாறு சொல்லியுள்ளார் لَقَدْ طَالَ نَجْوَى اِبْنِ عَمِّهِ பெருமானார் அவர்கள் தங்களின் சாச்சாவின் மகனோடு நீண்ட நேரம் பேசுகிறார்கள் என்று சொன்னதாக இரண்டாவதாக நான் எழுதியுள்ள நபீ மொழியில் கூறப்பட்டுள்ளது. (இரண்டாவது நபீ மொழியைக் கவனிக்கவும்)
 
மூன்றாவதாக நான் எழுதியுள்ள நபீ மொழியிலும் இதேபோல் வந்துள்ளது. (மூன்றாம் நபீ மொழியைக் கவனிக்கவும்)
 
போருக்காக “தாயிப்” சென்ற நபீ பெருமானாரும், தோழர்களும் ஓர் இடத்தில் முகாமிட்டு இருந்த போதே இவ்விருவருக்கும் இடையில் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
 
ஸெய்யிதுனா அபூ பக்ர் நாயகம் அலீ நாயகம் அவர்களைவிட வயது கூடியவர்களும், பெருமானாருக்கு மிக நெருங்கியவர்களுமாவர். இவர்களை நபீ பெருமான் அவர்கள் அழைக்காமல் அலீ நாயகம் அவர்களை அழைத்துச் சென்று நீண்ட நேரம் பேசியது போருடன் தொடர்புள்ள விடயமாகவே இருக்க வேண்டும். இவ்விருவரும் என்ன பேசினார்கள் என்பது நபீ மொழியில் கூறப்படவில்லை.
 
ஸெய்யிதுனா அபூ பக்ர் நாயகம் அவர்கள் பெருமானாரிடம்,
يَا رَسُولَ اللهِ لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ
அல்லாஹ்வின் திருத் தூதரே! இன்று அலீ அவர்களுடன் நீங்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்ன போது, “நான் பேசவில்லை, அல்லாஹ்தான் அவர்களோடு பேசினான்” என்று கூறினார்கள்.
 
“நான் அலீயுடன் பேசவில்லை. அல்லாஹ்தான் பேசினான்” என்று நபீ பெருமானார் அவர்கள் சொன்னதிலுள்ள ரகசியம் என்னவென்று எமக்குப் புலனாகாவிட்டாலும் அவர்கள் நான் பேசவில்லை என்று மட்டும் சொல்லியிருந்தால் அதற்கு வேறு விளக்கம் சொல்வதற்கு சாத்தியமுண்டு. நபீ அவர்கள் அவ்வாறு மட்டும் சொல்லாமல் அதை உறுதி செய்யும் வகையில் وَلَكِنَّ اللهَ انْتَجَاهُ அல்லாஹ்தான் பேசினான் என்று மீண்டும் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று சொல்லியுள்ளார்கள் என்பது குன்றின் மேல் தீபம் போல் தெளிவாக விளங்குகிறது.
 
பெருமானார் அவர்களே தங்களை “அல்லாஹ்” என்று சொல்லியிருக்கும் நிலையில் நாம் அவ்வாறு சொல்லத் தயங்குவது ஏன்?
 
பெருமானார் அவர்களின் இன்னொரு ஹதீதையும் இங்கு எழுதுகிறேன். இந்த நபீ மொழியும் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று சூசகமாக கூறியுள்ளார்கள் என்று காட்டுகிறது.
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ: حَدَّثَنِي أَبِي، حَدَّثَتْنَا أُمُّ عُمَرَ، ابْنَةٌ لِحَسَّانَ بْنِ زَيْدٍ – قَالَ أَبِي: عَجُوزُ صِدْقٍ – قَالَتْ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ قَيْسِ بْنِ عَبْسٍ، عَنْ أَبِيهِ قَالَ: بَلَغَنِي أَنَّ حَفْصَةَ ابْنَةَ عُمَرَ قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَنْتَ مَرِضْتَ قَدَّمْتَ أَبَا بَكْرٍ، قَالَ: «لَسْتُ أَنَا الَّذِي أُقَدِّمُهُ، وَلَكِنَّ اللَّهَ قَدَّمَهُ» (فضائل الصحابة لأحمد بن حنبل)
 
கைஸ் இப்னு அப்ஸ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் தந்தை சொன்னதாக அறிவிக்கின்றார்கள். உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் ஹப்ஸா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் நீங்கள் நோயுற்றால் அபூ பக்ர் அவர்களை – தொழுகை நடத்துவதற்காக – முற்படுத்துகிறீர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், அவர்களை – தொழுகைக்காக – நான் முற்படுத்தவில்லை, அல்லாஹ்தான் அவர்களை முற்படுத்தினான் என்று கூறினார்கள்.
ஆதாரம்: பழாயிலுஸ்ஸஹாபா, ஆசிரியர் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ்
 
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் தொழுகை நடத்துவது அவர்கள்தான். வேறு யாரும் நடத்துவதில்லை. அவர்கள் உடல் நலக் குறைவாக இருந்தால் முதலாவது கலீபா ஸெய்யிதுனா அபூ பக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களை தொழுகை நடத்துமாறு முற்படுத்துவார்கள். அதாவது தொழுகை நடத்துமாறு பணிப்பார்கள். அதை ஏற்று அவர்கள் இவ்வாறு செய்வது நபீ தோழர்களில் அதிகமானவர்களுக்குத் தெரியும். எனினும் அவர்களில் எவரும் நபீ பெருமானார் அவர்களிடம் அது பற்றிக் கேட்பதில்லை.
 
ஏனெனில் நபீ தோழர்களில் முதலில் அவர்களைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்டவர்கள் அபூ பக்ர் நாயகம் அவர்கள்தான். அது மட்டுமல்ல. நபீ பெருமான் அவர்களின் வாழ்க்கையில் ஏனைய தோழர்களை விட அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தும் வந்துள்ளார்கள்.
 
இவ்விபரங்கள் இரண்டாவது கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் ஹப்ஸா நாயகி அவர்களுக்கும் நன்றாகத் தெரிந்ததேயாகும்.
 
நபீ பெருமானார் அவர்களின் தோழர்களில் அவர்களின் செயல்களில் எதையும் ஆட்சேபித்தவர்கள் எவரும் இருந்ததற்கு வரலாறே இல்லை.
 
உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் ஹப்ஸா நாயகி அவர்கள் நபீ பெருமானாரிடம்
إِذَا أَنْتَ مَرِضْتَ قَدَّمْتَ أَبَا بَكْرٍ
நீங்கள் நோயுற்றால் அபூ பக்ர் அவர்களை தொழுகை நடத்துவதற்கு முற்படுத்துகிறீர்கள் என்று கூறியது பெருமானாரின் செயலை ஆட்சேபித்து அவ்வாறு சொன்னார்கள் என்று எவரும் நினைத்து விடக் கூடாது. ஏனெனில் நபீ தோழர்களான ஸஹாபாக்கள் ஆண்கள், பெண்களில் தவறான எண்ணம் கொள்வது பெருங்குற்றமாகும். அவர்களின் சொற், செயல்களில் நல்லெண்ணம் கொள்வது எமது கடமையாகும்.
 
உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் ஹப்ஸா நாயகி அவர்கள் பெருமானாரிடம் அவ்வாறு கேட்டது அவர்கள் தனது தகப்பனை தொழுகை நடத்துவதற்கு முற்படுத்தாமல் இருப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக அவ்வாறு கேட்டிருக்கலாம் என்று அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்வது நமது கடமையாகும்.
 
உமர் நாயகமவர்களின் மகள் ஹப்ஸா நாயகி அவர்களுக்கு பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “நான் முற்படுத்தவில்லை, அல்லாஹ்தான் முற்படுத்தினான்” என்று பதில் கூறாமல் வேறு விதமாக பதில் கூறியிருக்கலாம். அவ்வாறு கூறாமல் இவ்வாறு கூறியதற்கான காரணம் “என் செயல் அல்லாஹ்வின் செயல்தான்” என்ற தத்துவத்தை ஹப்ஸா நாயகி அவர்களுக்கு உணர்த்துவதற்காகவேயாகும் என்று நான் கருதுகிறேன்.
 
ஏனெனில் யாரால் எச் செயல் வெளியானாலும் அச் செயலுக்குரியவன் – சொந்தக் காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமேயாகும். اَلْأَفْعَالُ كُلُّهَا للهِ எல்லாச் செயல்களும் அவனுக்குரியவையாகும். படைப்புக்கள் அவனின் செயல்கள் வெளியாகும் பாத்திரங்கள் “மள்ஹர்” மட்டுமேதான்.
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ: حَدَّثَنِي أَبِي، حدثنا عَبْدُ الصَّمَدِ حدثنا عُمَرُ بْنُ رُشَيْدٍ حدثنا إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَسْلَمُ سَالَمَهَا اللَّهُ، وَغِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا، أَمَا وَاللَّهِ مَا أَنَا قُلْتُهُ وَلَكِنَّ اللَّهَ قَالَهُ» (فضائل الصحابة لأحمد بن حنبل، مُسندُ أحمد، المُعجم الكبير للطبراني)
“அஸ்லம்” கோத்திரத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக! “ஙிபார்” கூட்டத்தின் குற்றத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் மீது ஆணையாக இதை நான் சொல்லவில்லை, அல்லாஹ்தான் சொன்னான்.
ஆதாரம்: பழாயிலுஸ்ஸஹாபா, ஆசிரியர்: இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்,
முஸ்னத் அஹ்மத், அல்முஸ்தத்றக் லித்தபறானீ
 
“அஸ்லம்” குலத்தவர்களும், “ஙிபார்” குலத்தவர்களும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது அதிகம் அன்பு வைத்தவர்களும், அதிகம் உதவி செய்தவர்களுமாவர். இதனால் அவ்விரு கூட்டத்தவர்களுக்காகவும் நபீகளார் பிரார்த்தனை செய்தார்கள். இவ்வாறு செய்த பெருமானார் அவர்கள் இதை நான் சொல்லவில்லை, அல்லாஹ்தான் சொன்னான் என்று கூறினார்கள்.
 
நபீ மொழியில் மேற்கண்டவாறு சொன்னவர்கள் பெருமானார் அவர்கள்தான். வேறு யாருமில்லை. எனினும் இறுதியில் நான் அவ்வாறு சொல்லவில்லை. அல்லாஹ்தான் சொன்னான் என்று கூறினார்கள்.
 
இதன் மூலம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று சூசகமாக கூறியிருப்பது புத்தியும், அறிவும் உள்ளவர்களுக்கு மறைவானதன்று.
 
இதுவரை மூன்று நபீ மொழிகள் எழுதியுள்ளேன். இம் மூன்றும் எம் பெருமானார் அவர்கள் தங்களை “அல்லாஹ்” என்று சூசகமாக சொல்லியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களாகும். இவற்றுடன் இது தொடர்பான ஆதாரங்கள் முடிந்து விடவில்லை. இன்னும் பல நபீ மொழிகளும், திருக்குர்ஆன் வசனங்களும், வரலாறுகளும், ஸூபீ மகான்களின் தத்துவப் பேச்சுக்களும் ஆதாரங்களாக உள்ளன. அவற்றைக் கட்டம் கட்டமான எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!
 
எமது கொள்கை பெருமானார் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும், படைப்புக்களும் அவன் தானானவை என்பதேயாகும். எனினும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அவற்றில் முதன்மையானவர்களும், விஷேடமானவர்களுமாவார்கள் என்பதால் அவர்களை மட்டும் குறித்து எழுதுகின்றோம்.
 
“வஹ்ததுல் வுஜூத்” எனும் இறையியல் தத்துவம் கடல் கடந்தும், காடுகள், மலைகள் கடந்தும் தேடியலைந்து தெரிந்து கொள்ள வேண்டிய தத்துவமாகும். இத்தகைய தத்துவத்தை, ஷெய்குமாரும், ஸெய்யிதுமாரும் வீட்டின் கதவுகள், ஜன்னல்களை மூடிவிட்டு, இதை தேடி வருவோர் செவிகளில் வாய் வைத்து குசு குசு மந்திரம் போல் சொல்லி வந்த இத்தத்துவத்தை ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த நானும், என்னுடன் இருக்கின்ற மௌலவீமாரும் எந்த ஒரு பிரதிபலனையும் மக்களிடமிருந்து எதிர்பாராமல் இராப் பகலாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ்! அவர்கள் அவ்வாறு மந்திரம் சொல்லி வந்ததினால்தான் இந்த ஞானம் பலரைச் சென்றடையாது போய்விட்டது.
 
இத்தகைய ஞான அறிவைத்தான் வழி கேடென்றும், “குப்ர்” என்றும், தமது தந்தை யாரென்று அறியாத, “வஹ்ம்” பேதமை என்ற இருளில் வாழும் சிலர் கூறி வருகிறார்கள். அவர்கள் அறியாமைச் சேறில் புதையுண்டு அழிந்து போகட்டும். எவர் எது கூறினாலும் எமது உடலில் உயிர் இருக்கும் வரை எம் பணி தொடரும்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments