Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஏகனாம் அல்லாஹ் ஏந்தல் உருவில் “தஜல்லீ” வெளியாகவில்லையெனில் ஏகனை அறிவது எவ்வாறு?

ஏகனாம் அல்லாஹ் ஏந்தல் உருவில் “தஜல்லீ” வெளியாகவில்லையெனில் ஏகனை அறிவது எவ்வாறு?

தொடர் 02
 
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எப்போதாவது தங்களை அல்லாஹ் என்று தெளிவாகவோ, ஜாடையாகவோ சொல்லியுள்ளார்களா என்ற தலைப்பில் கடந்த பதிவின் போது மூன்று நபீ மொழிகளை ஆதாரங்களுடன் எழுதி விளக்கமும் எழுதியிருந்தேன்.
 
குறித்த மூன்று நபீ மொழிகளிலும் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று கூறியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரத்தை தொட்டுக் காட்டியிருந்தேன்.

அவற்றை வாசித்தவர்கள் பயன் பெற்றிருப்பார்கள். தவறியவர்கள் அவற்றை எனது முகநூல் பக்கத்தில் வாசித்து விளங்கிக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். கடந்த பதிவுகள் கிடைக்காது போனால் எம்முடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
 
இத் தொடரில் கடந்த பதிவுகளில் எழுதிய மூன்று நபீ மொழிகள் போன்ற இன்னுமொரு நபீ மொழியை இங்கு எழுதுகிறேன். இந்த நபீ மொழியும் கடந்த தொடர்களில் குறிப்பிட்ட மூன்று நபீ மொழிகள் போல் பெருமானார் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று சொல்லியுள்ளார்கள் என்ற கருத்தை தருவது சிந்தனையாளர்களுக்கு மறைவானதன்று.
இதன் கீழ் குறிப்பிட்டுள்ள நபீ மொழியை அறபியில் எழுதி அதற்கு நான் மொழியாக்கம் செய்யாமல் சென்னை “றஹ்மத் பப்ளிகேஷன்” இணைய தளத்தில் உள்ள மொழியாக்கத்தை இங்கு தருகிறேன். இந்த மொழியாக்கம் சரியானதென்று நான் ஏற்றுக் கொள்கிறேன். எனினும் விளக்கமற்ற மொழியாக்கம் மட்டுமே என்றும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ: وَحَدَّثَنِي القَاسِمُ بْنُ عَاصِمٍ الكُلَيْبِيُّ، – وَأَنَا لِحَدِيثِ القَاسِمِ أَحْفَظُ – عَنْ زَهْدَمٍ، قَالَ: كُنَّا عِنْدَ أَبِي مُوسَى، فَأُتِيَ – ذَكَرَ دَجَاجَةً -، وَعِنْدَهُ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ أَحْمَرُ كَأَنَّهُ مِنَ المَوَالِي، فَدَعَاهُ لِلطَّعَامِ، فَقَالَ: إِنِّي رَأَيْتُهُ يَأْكُلُ شَيْئًا فَقَذِرْتُهُ، فَحَلَفْتُ لاَ آكُلُ، فَقَالَ: هَلُمَّ فَلْأُحَدِّثْكُمْ عَنْ ذَاكَ، إِنِّي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ، فَقَالَ: «وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ»، وَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَهْبِ إِبِلٍ، فَسَأَلَ عَنَّا فَقَالَ: «أَيْنَ النَّفَرُ الأَشْعَرِيُّونَ؟»، فَأَمَرَ لَنَا بِخَمْسِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا: مَا صَنَعْنَا؟ لاَ يُبَارَكُ لَنَا، فَرَجَعْنَا إِلَيْهِ، فَقُلْنَا: إِنَّا سَأَلْنَاكَ أَنْ تَحْمِلَنَا، فَحَلَفْتَ أَنْ لاَ تَحْمِلَنَا، أَفَنَسِيتَ؟ قَالَ: «لَسْتُ أَنَا حَمَلْتُكُمْ، وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ، وَإِنِّي وَاللَّهِ – إِنْ شَاءَ اللَّهُ – لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ، فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلَّا أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ، وَتَحَلَّلْتُهَا»
3133. ஸஹ்தம் பின் முளர்ரிப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தோம். அப்போது கோழிக்கறி உணவு வந்தது. அவர்களிடம் தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (கிழக்கு ரோமானியரிடையேயிருந்து பிடித்துக் கொண்டுவரப்பட்ட) போர்க் கைதிகளில் ஒருவரைப் போன்று காணப் பட்டார். அபூமூசா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மனிதரை உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், “இந்தக் கோழி (அசுத்தம்) எதையோ தின்பதை நான் பார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே இதை இனி உண்பதில்லை என்று சத்தியம் செய்துவிட்டேன்” என்று சொன்னார்.
இதைக் கேட்ட அபூமூசா றழியல்லாஹு அன்ஹு அவர்கள், “இங்கே வா! இதைப் பற்றி உனக்கு (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து) அறிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கூறலானார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டுச் சென்றேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான ஊர்தி ஒட்டகங்கள் என்னிடம் இல்லை” என்று சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. உடனே எங்களைக் குறித்து, “அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டு, எங்களுக்கு (ஒட்டக மந்தைகளில்) வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து மந்தைகளைத் தரும்படி உத்தரவிட்டார்கள். நாங்கள் (அதைப் பெற்று) சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் எங்களுக்குள், “நாம் என்ன காரியம் செய்துவிட்டோம். (நமக்குக் கொடுக்க முடியாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபின் மீண்டும் இவற்றை நாம் வாங்கிச் சென்றால்) இவற்றில் நமக்கு வளம் வழங்கப்படாதே” என்று பேசிக்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் திரும்பிச் சென்றோம்.
“நாங்கள் தங்களிடம், நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு ஒட்டகங்கள் கொடுங்கள்” என்று கேட்டோம். நாங்கள் ஏறிச் செல்ல ஒட்டகம் கொடுக்க முடியாது” என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், “நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை. மாறாக, அல்லாஹ்தான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒரு வாக்குக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்த தாகக் கருதும் பட்சத்தில், சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற் காகப் பரிகாரம் செய்துவிடுவேன்” என்று சொன்னார்கள்.
இது இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
 
விளக்கம்:
மேற்கண்ட நபீ மொழியில் எனது தலைப்பிற்கு தேவையான வசனம்
لَسْتُ أَنَا حَمَلْتُكُمْ، وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ،
என்ற வசனம் மட்டும்தான். இது பற்றி சற்று ஆய்வு செய்வோம்.
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் தோழர்களிற் சிலர் வந்து நாங்கள் எங்களூருக்குச் செல்லவுள்ளோம். எங்களின் பொதிகளை ஏற்றிச் செல்வதற்கும், நாங்கள் ஏறிச் செல்வதற்கும் எங்களிடம் ஒரு வாகனமும் இல்லை. குதிரையுமில்லை. ஒட்டகமும் இல்லை. ஆகையால் எங்களை எப்படியாவது ஏற்றி அனுப்பி வையுங்கள் என்று கேட்டு நின்றார்கள்.
அவ்வேளை நபீ பெருமானார் அவர்களிடம் ஒட்டகமோ, குதிரையோ, கழுதையோ எந்த ஒரு வாகனமும் இருக்கவில்லை. இதனால் பெருமானார் அவர்கள்
وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ
இறைவன் மீதாணையாக நான் உங்களை ஏற்றி அனுப்பமாட்டேன். ஏற்றி அனுப்புவதற்கு என்னிடம் எதுவுமில்லை என்று கூறினார்கள். இவ்வாறு நபீ பெருமான் அவர்கள் கூறியதால் தோழர்கள் போய்விட்டார்கள். அதன் பின் நபீ பெருமான் அவர்களுக்கு சில ஒட்டகங்கள் கிடைத்தன. அப்போது நபீ பெருமானார் அவர்கள் ஒருவரை அழைத்து விடை பெற்றுச் சென்ற தோழர்களை அழைத்து வருமாறு பணித்தார்கள். அவர் சற்று நேரத்தில் அழைத்து வந்தார். நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு சில ஒட்டகங்கள் கொடுத்து அவற்றில் அவர்களையும், அவர்களின் பொதிகளையும் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். அவற்றை எடுத்துச் சென்ற தோழர்கள் மீண்டும் பெருமானாரிடம் வந்து, நாங்கள் முதலில் ஏற்றியனுப்புமாறு கேட்ட போது அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏற்றியனுப்பமாட்டேன் என்று சொன்ன நீங்கள் முன் சொன்னதற்கு மாறாக ஏற்றி அனுப்பி விட்டீர்களே என்று கூறினார்கள். அப்போது பெருமானார் அவர்கள்
لَسْتُ أَنَا حَمَلْتُكُمْ، وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ،
நான் உங்களை ஏற்றி அனுப்பவில்லை. அல்லாஹ்தான் ஏற்றி அனுப்பி வைத்தான் என்று கூறினார்கள்.
தலைப்பிற்குப் பொருத்தமான இடம் இவ்விடமேயாகும். அதெவ்வாறெனில் நபீ தோழர்களை ஒட்டகங்களில் ஏற்றியனுப்பியவர்கள் பெருமானார் அவர்களேயன்றி வேறு யாருமில்லை. அவர்களை ஏற்றியனுப்புவதற்கான ஒழுங்கு செய்தவர்களும், ஏற்றியனுப்பியவர்களும் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான் என்பது யாவரும் அறிந்த பகிரங்க விடயமாகும். இதை பெருமானார் அவர்கள் நான் செய்யவில்லை என்று மறுத்தது மட்டுமன்றி அல்லாஹ்தான் ஏற்றியனுப்பினான் என்று கூறியது மிக ஆழமாக ஆராய வேண்டிய ஒன்றாகும்.
 
இது எது போலுள்ளதென்றால் காத்தான்குடியிலுள்ள இம்தியாசின் வீட்டிற்கு கொழும்பிலுள்ள அவனின் நண்பன் முஸ்தபாவும், அவனின் மனைவி மக்களும் வந்து தங்கியிருந்தார்கள். சில நாட்களின் பின் கொழும்பிலிருந்து வந்த முஸ்தபா தனது நண்பன் இம்தியாசிடம் தானும், மனைவி மக்களும் கொழும்பு செல்வதற்கு வாகன ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டான். அதற்கு இம்தியாஸ் என்னிடத்தில் வாகனமுமில்லை, என்னால் ஏற்பாடு செய்து தரவும் முடியாது என்று சத்தியம் செய்து கூறினான். எனினும் இம்தியாஸ் இவ்வாறு சொன்ன பின் அவனுக்கு எதிர்பாராமல் வாகனம் ஏற்பாடாகிவிட்டது.
 
இம்தியாஸ் முஸ்தபாவை அழைத்து வாகனம் கிடைத்து விட்டது. நீங்களும், மனைவி மக்களும் அதில் பயணிக்கலாம். உங்கள் பொதிகளையும் எடுத்துச் செல்ல முடியும் என்று கூறி இம்தியாஸ் எல்லா ஏற்பாடுகளும் செய்து அவனே பொதிகளை வாகனத்தில் ஏற்றி, அவர்களையும் ஏற்றி அனுப்பி வைத்தான். இதுவே உண்மை.
இவ்வாறு செய்த இம்தியாஸ் நான் ஏற்றியனுப்பவில்லை, அல்லாஹ்தான் ஏற்றி அனுப்பினான் என்று சொன்னால் இதை எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதுபோன்ற விடயம்தான் பெருமானார் அவர்கள் தோழர்களை ஏற்றி அனுப்பி வைத்து விட்டு நான் ஏற்றி அனுப்பவில்லை, அல்லாஹ்தான் ஏற்றி அனுப்பி வைத்தான் என்று சொன்னதுமாகும்.
(தொடரும்….)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments