Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஏகனாம் அல்லாஹ் ஏந்தல் உருவில் “தஜல்லீ” வெளியாகவில்லையெனில் ஏகனை அறிவது எவ்வாறு?

ஏகனாம் அல்லாஹ் ஏந்தல் உருவில் “தஜல்லீ” வெளியாகவில்லையெனில் ஏகனை அறிவது எவ்வாறு?

தொடர் 03

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று சொல்லியுள்ளார்களா? என்ற கேள்விக்கு கடந்த தொடர்களில் ஆம் சொல்லியுள்ளார்கள் என்று நபீ மொழிகளை ஆதாரங்களாகக் கொண்டு எழுதியிருந்தேன். எனது பதிவை வாசித்தவர்கள் பலன் பெற்றிருப்பார்கள். வாசிக்காதவர்கள் கடந்த பதிவுகளை வாசிப்பார்களாக!

“தாயிப்” யுத்தம் நடைபெறவிருந்த அன்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கரம் பற்றி இருவரும் ஏனைய தோழர்களை விட்டும் சற்றுத் தூரம் சென்று இரகசியம் பேசிக் கொண்டிருந்த சமயம் கலீபா ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்விருவரும் இருந்த இடம் சென்று يا رسول الله! لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ அல்லாஹ்வின் றஸூலே! நீங்கள் அலீ அவர்களுடன் இன்று பகல் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார்கள். என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்காமல் இந்த வசனத்தை மட்டும் பயன்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் சொன்னது அவ்விருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதை தானும் அறிந்து அதற்கு ஒத்துழைப்புவழங்க வேண்டும் என்பதற்கேயாகும். ஆயினும் அவர்கள் இருவரிடமும் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெளிவாகக் கேட்காமல் இந்த வசனத்தில் – இந்தப் பாணியில் சொன்னது ஒரு பெரிய மனிதனோடு “அதப்” ஒழுக்கம் பேணி பேச வேண்டும் என்பதை எமக்கு கற்றுத் தருகிறது.
ஒருவனின் “ஷெய்கு” – ஆன்மிக குரு, அல்லது அவனின் ஆசிரியர் தனக்கு நெருக்கமான ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவரின் சிஷ்யன் அல்லது மாணவன் அவர்களோடு பேசுவதாயின் மேற்கண்டவாறே வசனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது.
ஸெய்யிதுனா அபூ பக்ர் அவர்கள் அவ்வாறு சொன்ன போது எம் பெருமானார் அவர்கள் தங்கள் உருவில் பேசியவன் யார் என்ற இரகசியத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக مَا أَنَا اِنْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهَ اِنْتَجَاهُ “அவருடன் – அலீயுடன் நான் பேசவில்லை, எனினும் அல்லாஹ்தான் அவருடன் பேசினான்” என்று பதில் கூறினார்கள்.
பெருமானார் அவர்கள் அலீ அவர்களோடு முக்கிய விடயம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறியிருக்கலாம். அவ்வாறு கூறியிருந்தாலும் அது அவரின் கேள்விக்கான பதிலாக அமைந்திருக்கும். ஆயினும் பெருமானார் அவர்கள் அபூ பக்ர் நாயகம் அவர்களுக்கு ஒரு தத்துவத்தை நினைவூட்டுவதற்காகவே அவ்வாறு சொல்லியிருக்கலாம் என்று எண்ணத் தோணுகிறது. அதுவே “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமாகும்.
பெருமானார் அவர்கள் மேற்கண்டவாறு مَا أَنَا اِنْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهَ اِنْتَجَاهُ என்று பதில் கூறாமல் مَا أَنَا اِنْتَجَيْتُهُ، وَلَكِنِّيْ اِنْتَجَيْتُ اللهَ “நான் அவருடன் – அலீயுடன் பேசவில்லை. எனினும் நான் அல்லாஹ்வுடன்தான் பேசினேன்” என்று கூறியிருக்கலாம். இவ்வாறு கூறாமல் وَلَكِنَّ اللهَ انْتَجَاهُ எனினும் அல்லாஹ்தான் அவருடன் பேசினான் என்று கூறியதற்கான காரணம் என்னவெனில் அவ்வாறு கூறியிருந்தால் அலீ அவர்கள்தான் அல்லாஹ் என்ற கருத்து வந்துவிடும். அவ்வாறு கருத்து வருவது “ஐனிய்யத்” எல்லாமே அல்லாஹ் தானானவைதான் என்ற தத்துவத்தின்படி சரியானதாயினும் இக்கட்டத்தில் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவர்களாவர். இந்த முக்கியத்துவம் இல்லாமற் போய்விடும் என்பதற்காக அவ்வாறு சொல்லவில்லை எனலாம்.
இதற்கு மாறாக, مَا أَنَا اِنْتَجَيْتُهُ، وَلَكِنَّ اللهَ انْتَجَاهُ என்று கூறியதன் மூலம் “அலீயுடன் நான் பேசவில்லை. எனினும் முஹம்மத் என்ற “மள்ஹர்” மூலம் – என் மூலம் பேசியவன் அல்லாஹ்தான்” என்ற கருத்து வந்துவிட்டது. இவ்வாறு வருவது நபீ பெருமானாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக ஆகிவிடும்.
எனவே, பெருமானார் அவர்கள் وَلَكِنَّ اللهَ انْتَجَاهُ எனினும் அல்லாஹ்தான் அலீயுடன் பேசினான் என்று கூறியது وَلَكِنِّيْ اِنْتَجَيْتُ اللهَ எனினும் நான் அல்லாஹ்வுடன் பேசினேன் என்று கூறுவதை விட பதின் மடங்கு சிறந்ததேயாகும். ஆகையால் பெருமானார் அவர்கள் பயன்படுத்திய வசனமே சிறந்ததாகும் என்பது தெளிவாகிறது.
(பின்னால் குறிப்பிடப்படும் (— இவ்வாறு அடையாளமிடப்பட்டு காட்டப்படும் பகுதிக்குட்பட்டவை) விடயம் அறபு மொழி இலக்கணத்தோடு தொடர்புள்ளதாகும். இது உலமாஉகளினதும், அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களினதும் நன்மை கருதி இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. இது பொது மக்களுக்குப் பிரயோசனம் அற்றதாயினும் அதையடுத்து வருகின்ற விடயங்கள் பிரயோசனமானவையேயாகும்.)
———-
مَا أَنَا اِنْتَجَيْتُهُ
நான் அவருடன் பேசவில்லை என்ற வசனத்தின் இறுதியில் வந்துள்ள “ழமீர்” – “ஹூ” என்ற எழுத்து – பிரதிப் பெயர் அலீ அவர்களையே குறிக்கும். அல்லாஹ்வைக் குறிக்காது. அதற்கு சாத்தியமே இல்லை. இதன்படி அலீயுடன் நான் பேசவில்லை என்று பெருமானார் சொன்னதாக நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் “ழமீர்” பிரதிப் பெயர் என்பது வசனத்தில் முன்னால் கூறப்பட்டதையும் சுட்டிக் காட்டும். கூறப்படாததையும் சுட்டிக் காட்டும். مَا أَنَا اِنْتَجَيْتُهُ என்ற நபீகளாரின் வசனத்தில் “ஹூ” என்ற பிரதிப்பெயர் நபீ அவர்களின் வசனத்தில் கூறப்படாததையே சுட்டிக் காட்டுகின்றது. எனினும் கூறப்படாது போனாலும் அது இன்னதுதான் என்று சூழ் நிலை அறிவித்தால் அதைத்தான் “ஹூ” என்பது சுட்டிக் காட்டுகின்றதென்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவு படுத்தலாம். உதாரணமாக مُزَّمِّلٌ ضَرَبْتُهُ முசம்மில் – அவனை நான் அடித்தேன் என்பது போன்று. இவ் உதாரணத்தில் ضَرَبْتُ – “ழறப்து” என்ற சொல்லின் இறுதியில் வந்துள்ள “ஹூ” என்ற எழுத்து ضمير “ழமீர்” பிரதிப் பெயர் எனப்படும். இது வசனத்தில் முன்னால் வந்துள்ள முசம்மில் என்பவனைக் குறிக்கும்.
இவ் உதாரணம் பிரதிப் பெயரால் சுட்டப்படுவது வசனத்தில் முன்னால் கூறப்பட்டதற்கு உதாரணமாகும். அது கூறப்படாததற்கு உதாரணம் பின்வருமாறு.
ஒருவன் இன்னொருவனிடம் هَلْ رَأَيْتَ مُزَّمِّلًا முசம்மிலை நீ கண்டாயா? என்று கேட்டதற்கு மற்றவன் نَعَمْ رَأَيْتُهُ என்று சொல்வது போன்றாகும். இவ் உதாரணத்தில் رَأَيْتُهُ என்ற சொல்லின் இறுதியில் உள்ள “ஹூ” எனும் பிரதிப் பெயர் விடை சொன்னவனின் வசனத்தில் கூறப்படாது போனாலும் சந்தர்ப்ப சூழல், மற்றும் முன்பின் தொடர் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு கேள்வி கேட்டவனின் வசனத்தில் கூறப்பட்ட முசம்மில் என்பவனைச் சுட்டிக் காட்டுகிறது.
நபீ பெருமானார் அவர்கள் அபூ பக்ர் நாயகம் அவர்களின் கேள்விக்கு مَا أَنَا اِنْتَجَيْتُهُ அவருடன் நான் பேசவில்லை என்ற பதில் மூலம் பெருமானார் அல்லாஹ் என்ற கருத்தோ, அலீ அவர்கள் அல்லாஹ் என்ற கருத்தோ விளங்கப்படவில்லை. எனினும் அலீயுடன் நான் (பெருமானார்) பேசவில்லை என்ற கருத்து மட்டும் விளங்கப்படுகிறது.
ஆயினும் இதையடுத்து வந்துள்ள وَلَكِنَّ اللهَ انْتَجَاهُ எனும் வசனம் நபீ பெருமான் அவர்கள் தங்களின் பெயர் வர வேண்டிய இடத்தில் அல்லாஹ்வின் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார்கள். இவ்வாறு வசனம் வந்தால் அல்லாஹ்தான் – அலீயுடன் பேசினான் என்று கருத்து வரும். இதன் மறைமுகமான கருத்து முஹம்மத் என்ற உடையில் – தோற்றத்தில் அல்லாஹ்தான் அவருடன் பேசினான் என்பதாகும். இக்கருத்து நிச்சயம் வரும்.
مَا أَنَا اِنْتَجَيْتُهُ ، وَلَكِنَّ اللهَ الْمُتَشَكِّلَ بِالشَّكْلِ الْمُحَمَّدِيِّ اِنْتَجَاهُ
நான் அலீயுடன் பேசவில்லை. எனினும் முஹம்மத் எனும் தோற்றத்தில் வெளியான அல்லாஹ்தான் அலீயுடன் பேசினான் என்ற கருத்து தெளிவாகும்.
———-
مَا أَنَا اِنْتَجَيْتُهُ، وَلَكِنَّ اللهَ اِنْتَجَاهُ
நான் அலீயுடன் பேசவில்லை. எனினும் அல்லாஹ்தான் அவருடன் பேசினான் என்ற இவ்வசனம்
مَا أَنَا اِنْتَجَيْتُهُ، وَلَكِنِّيْ اِنْتَجَيْتُ اللهَ
என்று வந்திருந்தால் இங்கு மறைமுகமாக அலீ அவர்கள்தான் அல்லாஹ் என்று காட்டப்படுவார்களேயன்றி பெருமானார் அவர்கள் அல்லாஹ்வாக காட்டப்படமாட்டார்கள்.
முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்தான் என்ற கருத்து காட்டப்படுவதாயின் நபீ மொழியில் கூறப்பட்ட வசனமே பொருத்தமானதாகும். அந்தக் கருத்தே காட்டப்பட வேண்டிய கருத்துமாகும்.
அலீ நாயகமாக தோற்றுபவனும் அல்லாஹ்தான், மற்றுமுள்ள அனைத்துப் படைப்புக்களாக தோற்றுபவனும் அல்லாஹ்தான் என்பது தத்துவமாயிருந்தாலும் இவ்விடத்தில் குறிப்பாக முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களே பேசும் பொருளானவர்களாவர்.
ஹதீது – நபீ மொழியில் வந்துள்ள مَا أَنَا اِنْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهَ انْتَجَاهُ அவருடன் – அலீயுடன் நான் பேசவில்லை. எனினும் அல்லாஹ்தான் அவருடன் பேசினான் என்ற வசனம் முஹம்மத் அல்லாஹ் என்ற கருத்தையே தரும்.
நபீ மொழியில் வந்துள்ள மேற்கண்ட வசனத்திற்குப் பதிலாக مَا أَنَا اِنْتَجَيْتُهُ، وَلَكِنِّيْ اِنْتَجَيْتُ اللهَ நான் அவருடன் பேசவில்லை, எனினும் நான் அல்லாஹ்வுடன் பேசினேன் என்று வசனம் வந்திருந்தால் அலீ அவர்கள் அல்லாஹ் என்ற கருத்து வரும்.
நபீ மொழியில் வந்துள்ள வசனம் مَا أَنَا اِنْتَجَيْتُهُ، وَلَكِنِّيْ اِنْتَجَيْتُ عَلِيًّا நான் அவருடன் பேசவில்லை. எனினும் நான் அலீ உடன் பேசினேன் என்று வசனம் வந்திருந்தால் இவ்வசனம் நிச்சமயாக பிழையான, அர்த்தமற்ற வசனமாகிவிடும். அதாவது பொருத்தமற்ற, அர்த்தமற்றதாக ஆகிவிடும்.
சுருக்கம் என்னவெனில் நபீ மொழியில் வந்துள்ள ما أنا انتجيته ولكن الله انتجاه “அலீயுடன் நான் பேசவில்லை. எனினும் அல்லாஹ்தான் அலீயுடன் பேசினான்” என்ற வசனம்தான் எல்லா வகையிலும் பொருத்தமானதாக உள்ளது. அதாவது பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான் அல்லாஹ் என்று காட்டப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் நபீ பெருமான் அவர்களே தங்களை அல்லாஹ் என்று சொல்லியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் أَعْقَلُ الْعَاقِلِيْنَ புத்தியுள்ளவர்களில் அதிக புத்தியுள்ளவர்கள் என்றும், أَعْلَمُ الْعَالَمِيْنَ உலக மக்களில் அதிக அறிவுள்ளவர்கள் என்றும், لَا يَنْطِقُ عَنِ الْهَوَى، إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوْحَى சுய விருப்பத்தின் படி பேசமாட்டார்கள். பேசினால் அது “வஹீ” இறையறிவிப்பாகவே இருக்குமென்றும், அனைத்து மத, இன மக்களாலும், மற்றும் விஞ்ஞான, மெய்ஞ்ஞான ஆய்வாளர்களாலும் வர்ணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் பிழையான எந்த ஒரு வசனமும் பேசமாட்டார்கள் என்பது நிச்சயமாக யாவரும் அறிந்ததேயாகும். أَنَا أَفْصَحُ مَنْ نَطَقَ بِالضَّادِ மிக நாகரீகமாக “ழாத்” என்ற எழுத்தை மொழிந்தவன் நான்தான் என்று சொன்னவர்களும் அவர்களேயாவர்.
நபீ பெருமான் அவர்களை அல்லாஹ் என்று சொல்வது மார்க்கத்திற்கு முரணானதாக, “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்குமாயின்
مَا أَنَا اِنْتَجَيْتُهُ، وَلَكِنَّ اللهَ اِنْتَجَاهُ
அலீயுடன் நான் பேசவில்லை. எனினும் அல்லாஹ்தான் அலீயுடன் பேசினான் என்று சொல்லியிருக்கமாட்டார்கள். அவர்கள் இன்றுள்ள ஆலிம்கள் போன்றவர்களல்ல. முப்தீகள் போன்றவர்களுமல்ல. சந்தர்ப்பவாதிகள் போன்றவர்களுமல்ல. அல்லாஹ்வுக்கு வட்டிலப்பம் கொடுத்து அவனுக்கு எண்ணெய் பூசுபவர்களுமல்ல. அரசனுக்கு ஒரு நியாயமும், ஆண்டிக்கு இன்னொரு நியாயமும் சொல்பவர்களுமல்ல.
ஸூபீகளும், இறைஞானிகளும் “மஷாயிகு” குருமார்களும் தமது பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் இரண்டு வசனங்கள் பயன்படுத்துகிறார்கள். அவை أَنَا عَرَبٌ بِلَا عَيْنٍ، وَأَنَا أَحْمَدُ بِلَا مِيْمٍ என்பனவாம்.
இவ்விரண்டிற்கும் முறையே “நான் “ஐன்” இல்லாத “அறபு” என்றும், “நான் “மீம்” இல்லாத “அஹ்மத்” என்றும் பொருள் வரும்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை நாட்டுக்கு மார்க்கப் பெரியார்கள், “ஷெய்கு” குருமார்கள், மற்றும் ஸூபீ மகான்கள் வருகிறார்கள்.
 
இவர்கள் தமது பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் மேலே நான் எழுதியுள்ள இரண்டு வசனங்களையும் பயன்படுத்துகிறார்கள். அவர்களிற் சிலர் இவ்விரண்டும் நபீ மொழிகள் என்றும், இன்னும் சிலர் அவ்லியாஉகளின் பேச்சு என்றும் சொல்கிறார்கள்.
நான் அறிந்தவரை இவ்விரண்டும் நபீ மொழிகள் என்று எந்த நூலிலும் கூறப்பட்டிருப்பதாக அறியவில்லை. எனினும் நம்பத்தகுந்த, அல்லாஹ்வின் ஞானமும், பக்தியும் நிறைந்த, “கறாமத்” எனும் அற்புதம் உள்ள இறைஞானிகளிற் பலர் இவ்விரண்டும் நபீ மொழிகள் என்று பேசியுள்ளதை என் காதால் கேட்டிருக்கிறேன்.
அவர்களில் ஒருவர் அதி சங்கைக்கும், மரியாதைக்குமுரிய, இறை ஞானக் கடல், “மன்கூல்”, “மஃகூல்” இருவகை அறிவின் சமுத்திரம், ஹைதறாபாத் குத்பின் ஆசி பெற்ற மகான் அல்ஆலிமுல் பாழில் அப்துல் காதிர் ஆலிம் ஸூபீ சித்தீகீ றஹிமஹுல்லாஹ் அவர்களாவர்.
 
இவர்கள் எனது ஞான குருக்களான இரு குருக்களில் ஒருவராவார்கள். இவர்கள் “றாதிப்” திக்ர் மஜ்லிஸ் சபைகளில் பின்வருமாறு பாடுவார்கள்.
ஐனில்லா அறபியே
மீமில்லா அஹ்மதே
அர்ஷளாவும் சிரசுடைய
அண்ணலே ஸலாம்.
மேலே எழுதியுள்ள இரண்டு வசனங்களையும் உள்வாங்கிய பாடல் பாடுவார்கள். இப்பாடல்கள் அவர்களின் “ஸலாம்” பைத்தில் உள்ளவையாகும்.
இவ் அடிகளின் பொருள் வருமாறு. “ஐன் இல்லா அறபியே” என்றால் “ஐன்” என்ற அறபு எழுத்து இல்லாதவர்களே என்று பொருள் வரும். இதன் விளக்கம் என்னவெனில் عَرَبْ – அறப் என்ற அறபு மொழிச் சொல்லில் உள்ள “ஐன்” என்ற முதலெழுத்தை நீக்கினால் “றப்” என்று வரும். இச் சொல் அல்லாஹ்வைக் குறிக்கும். அறபு மக்கள் யா றப்! யா றப்! என்று அல்லாஹ்வை அழைப்பார்கள். “யா றப்பு” என்றும் அழைப்பார்கள். “யா றப்பீ” என்றும், “யா றப்பனா” என்றும் அழைப்பதுண்டு. எவ்வாறு அழைத்தாலும் அது அல்லாஹ்வையே குறிக்கும். இதன் பன்மைச் சொல் أَرْبَابْ “அர்பாப்” என்றும், رُبُوْبْ “றுபூப்” என்றும் வரும். “றப்புன்” என்ற சொல்லுக்கு “ஸெய்யித்” தலைவர் என்ற பொருளும் உண்டு. இதன்படி رَبُّ الْقَوْمِ கூட்டத்தின் தலைவர் என்று பொருள் வரும். இது سَيِّدُ الْقَوْمِ என்று சொல்வது போன்றாகும். இன்னும் இச் சொல்லுக்கு مَالِكْ “மாலிக்” சொந்தக் காரன் என்ற பொருளும், அதிபதி என்ற பொருளும் உண்டு. இதேபோல் இச் சொல் இறைவனுக்கும் பாவிக்கப்படும். இது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாகவும் பாவிக்கப்படும். இச் சொல்லுடன் சேர்ந்த சொல்தான் “றப்பானீ” என்ற சொல்லாகும். இச் சொல்லின் பெண் பால் رَبَّةٌ என்று சொல்லப்படும். எஜமாட்டி என்ற பொருளுக்கும் இது பயன்படுத்தப்படும். பெண் உருவில் உள்ள விக்கிரகத்திற்கும் இச் சொல் பயன்படுத்தப்படும்.
عَرَبْ
என்ற சொல்லில் உள்ள அதன் முதலெழுத்தான “ஐன்” இல்லாது போனால் அது “றப்பு” என்று அமையும். வரும். இது அல்லாஹ்வைக் குறிக்கும். “ஐன்” இல்லாத அறபியே என்றால் “றப்பே” என்று கருத்து வரும். இதன்படி பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை ஷெய்குனா அவர்கள் “றப்பு” என்று சூசகமாக சொல்கிறார்கள்.
இன்னும் ஷெய்குனா அவர்கள் “மீம் இல்லா அஹ்மதே” என்றும் பெருமானார் அவர்களை வர்ணிக்கின்றார்கள்.
 
أَحْمَدْ
– அஹ்மத் என்ற சொல் நான்கு எழுத்துக்களைக் கொண்ட சொல்லாகும். இதில் “மீம்” என்ற எழுத்தை மட்டும் நீக்கினால் أَحَدْ “அஹத்” என்று வரும். “அஹத்” என்ற இச் சொல் அல்லாஹ்வைக் குறிக்கும். நபீ பெருமான் அவர்களை ஷெய்குனா அவர்கள் “அஹத்” அல்லாஹ் என்று சூசுகமாக சொல்கிறார்கள். மறைக்கப்பட்டு வருகின்ற, உலமாஉகளால் மறுக்கப்பட்டும் வருகின்ற ஒரு தத்துவத்தை ஷெய்குனா அவர்கள் ஒரு நொடி சொல்வது போல் சொல்கிறார்கள். அவர்கள் இவ்வாறு சொன்னதற்கும் ஒரு காரணம் உண்டு. குற்றம் பிடிக்கும் குருடர்கள் அனைவரும் மரணிக்கவில்லையே! இன்னோரின் அட்டூழியத்தினால் தானே இறைஞான மகான்களிற் பலர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார்கள். தோல் உரிக்கப்பட்டார்கள். வன விலங்குகளுக்கு உயிருடன் உணவாக்கப்பட்டார்கள். கொதிக்கும் நீரூற்றி கொல்லப்பட்டார்கள். நஞ்சூட்டியும் கொல்லப்பட்டார்கள்.
 
எதார்த்தம் பேசியதாலும், “ஐனிய்யத்” எல்லாமவனே என்ற தத்துவம் கூறியதாலும் கொல்லப்பட்ட மகான்களின் பட்டியலை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்யவாகீது வல் ஜவாஹிர்” எனும் நூல் முதலாம் பாகம் 18, 19, 20ம் பக்கங்களில் எழுதியுள்ளார்கள். வாசித்தால் கண்ணீரால் நூலே நனைந்து போகும். அல்ஹம்துலில்லாஹ்! எதார்த்த வாதி பொது சன விரோதி என்ற முதுமொழி எதார்த்த வாதி கற்றோரின் விரோதி என்று மாற்றப்பட வேண்டும்.
ஷெய்குனா ஸூபீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்கண்ட பாடலில் திருக்குர்ஆனும், நபீ மொழிகளும் தருகின்ற தத்துவத்தை கூறியுள்ளார்களேயன்றி “ஷரீஆ”வுக்கு முரணான எந்த ஒரு கருத்தும் கூறவில்லை.
اَلنَّاسُ أَعْدَاءُ مَا جَهِلُوْا
மனிதர்கள் தமக்குத் தெரியாதவற்றின் எதிரிகள் என்பது பழமொழி.
ஸூபீ நாயகம் அவர்களின் முரீதுகளே!
ஷெய்குனா அவர்கள் எனக்கும், உங்களுக்கும் ஷெய்காக கிடைத்தது அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் செய்த அருளாகும். அவர்கள் போல் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய மகானை என் வாழ்வில் நான் கண்டதில்லை. எனக்கு இறைஞான அறிவுக்கு வித்திட்டவர்கள் ஷெய்குனா அவர்கள்தான். சிலர் என்னையும், அவர்களையும் பிரித்துப் பார்ப்பார்கள். இது அறிவின்மையும், விளக்கமின்மையுமேயாகும்.
நான் வருடத்தில் ஒரு முறை புனித றமழான் 24ம் இரவு காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளியில் “முப்பெரும் நாதாக்களின் முபாறக்கான கந்தூரி” என்ற பெயரில் ஒரு கந்தூரி நடத்தி வருகிறேன். நான் கொழும்பு செல்லும் போதெல்லாம் குப்பிகாவத்தை சென்று “ஷெய்குனா” அவர்களை “சியாறத்” செய்து வருகிறேன். ஒரு மாதத்தில் ஒரு முறை ஷெய்குனா அவர்கள் எனக்கு வழங்கிய “இஜாசா” அனுமதிப்படி “றாதிப் மஜ்லிஸ்” நடத்தியும் வருகிறேன். சுமார் 1200 பேர் ஆண்களும், பெண்களும் கலந்து சிறப்பிக்கின்றனர். அல்ஹம்து லில்லாஹ்!
(அடுத்த தொடர் சங்கைமிகு மௌலானா வாப்பா அவர்கள்)
مَا أَنَا اِنْتَجَيْتُهُ
(மா அன இன்தஜைதுஹூ) என்பதை مَا أَنَا انْتَجَيْتُهُ (மா அனன்தஜைதுஹூ) என்று சேர்த்தும் வாசிக்கலாம்.
தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments