தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
اَلْمَعِيَّةُ لَا تُفِيْدُ الْغَيْرِيَّةَ، وَلَكِنَّ بَعْضَ الْجَهَلَةِ مِنْ عُلَمَاءِ السُّطُوْرِ اِغْتَرُّوْا بِهَا بِسَبَبِ عَدَمِ النَّصِيْبِ لَهُمْ مِنْ شَرَابِ الْعَيْنِيَّةِ أَوْ غَلَبَةِ حَمَاقَتِهِمْ حَذَاقَتَهُمْ، وَهَؤُلَاءِ الْبُلْهُ لَا يَنَالُوْنَ السَّعَادَةَ حَتَّى يَقْلَعُوْا شَجَرَةَ الْعِنَادِ مِنْ قُلُوْبِهِمْ بِعِرْقِهَا وَأَصْلِهَا، وَيَغْتَسِلُوْا مِنْ جَنَابَةِ غَفْلَتِهِمْ،
திருக்குர்ஆனின் பல இடங்களில் مَعَ – “மஅ” என்ற சொல்லுடன் பல வசனங்கள் உள்ளன. அவற்றில் சில வசனங்களை மட்டும் இங்கு எழுதுகிறேன்.
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
பகறா அத்தியாயம், வசனம் 153
وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
பகறா அத்தியாயம், வசனம் 194
وَأَنَّ اللَّهَ مَعَ الْمُؤْمِنِينَ
அன்பால் அத்தியாயம், வசனம் 19
لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا
தவ்பா அத்தியாயம், வசனம் 40
இவை போல் இன்னும் பல வசனங்கள் உள்ளன. مَعَ – “மஅ” என்ற சொல்லுக்கு உடன், உடனிருத்தல் என்று பொருள் வரும்.
வசனம் ஒன்று: நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளருடன் உள்ளான். இருக்கிறான்.
வசனம் இரண்டு: நிச்சயமாக அல்லாஹ் பக்தியுள்ளவர்களுடன் உள்ளான்.
வசனம் மூன்று: நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளுடன் உள்ளான்.
வசனம் நான்கு: கவலைப் படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எம்மோடு உள்ளான்.
மேற்கண்ட வசனங்களில் வந்துள்ள مَعَ – “மஅ” என்ற சொல் தருகின்ற مَعِيَّةْ – “மஇய்யத்” உடனிருத்தல் என்ற கருத்து படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற கருத்தை காட்டுவதால் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் திருக்குர்ஆனுக்கு முரணானதாகும் என்று “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தெரியாதவர்களும், அதை எதிர்க்கின்றவர்களும் கூறி வருகின்றார்கள்.
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்ற வசனத்தின் படி பொறுமையாளர்கள் நூறு பேர் இருந்தால் அல்லாஹ் நூற்றி ஓராவதாக இருக்கிறான் என்றும், அல்லாஹ் பக்தியுள்ளவர்களுடன் இருக்கிறான் என்ற வசனத்தின் படி பக்தியுள்ளவர்கள் நூறு பேர் இருந்தால் அல்லாஹ் நூற்றி ஓராவதாக இருக்கின்றான் என்றும், அல்லாஹ் விசுவாசிகளுடன் இருக்கின்றான் என்ற வசனத்தின் படி விசுவாசிகள் நூறு பேர் இருந்தால் அல்லாஹ் நூற்றி ஓராவதாக இருக்கின்றான் என்றும், அல்லாஹ் எம்முடன் இருக்கின்றான் என்ற வசனத்தின் படி ஓர் இடத்தில் நூறு பேர் இருந்தால் அல்லாஹ் நூற்றி ஓராவதாக இருக்கிறான் என்றும் இவர்கள் நினைக்கிறார்கள். இதனால்தான் படைப்பு அல்லாஹ்வுக்கு வேறானதென்று முடிவு செய்து விடுகிறார்கள். அவர்களின் இந்த முடிவின் படி எல்லாம் அவன் என்று சொல்வது பிழையென்றும், “ஷிர்க்” இணை வைத்தல் என்றும், “குப்ர்” நிராகரிப்பு என்றும் கூறுகிறார்கள்.
இவர்கள் இவ்வாறு கூறுவதற்கான பிரதான, அடிப்படைக் காரணம் இவர்கள் அல்லாஹ் யாரென்று இன்னும் அறியாதிருப்பதேயாகும்.
இவர்களும் வஹ்ஹாபிகள் போல் அல்லாஹ் தனது படைப்பை விட்டும் பிரிந்து அர்ஷிலோ, அதற்கப்பாலோ இருப்பவன் என்று விளங்கிக் கொண்டதினால்தான் இவ்வாறு உளறுகிறார்கள். இவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு அறிய வேண்டுமோ அவ்வாறு அறிந்து கொண்டார்களாயின் இவ்வாறு சொல்லமாட்டார்கள்.
ஆகையால் “மஇய்யத்” “உடனிருத்தல்” என்பதற்கு விளக்கம் சொல்லுமுன் இன்னோரின் நன்மை கருதி அல்லாஹ் என்றால் யார் என்று இரு உதாரணங்கள் மூலம் விளக்கி வைக்கிறேன்.
அல்லாஹ் என்பவன் யார்? அவன் எத்தகையவன்? என்று அறிந்து கொள்வதற்காக ஒருவன் இறைஞான மகான் ஒருவரிடம் சென்று “அல்லாஹ்” பற்றி தனக்கு விளக்கி வைக்குமாறு அவரிடம் கேட்டான்.
அதற்கவர், அவனை – அல்லாஹ்வை உனக்கு சொல்லித் தருவதற்கு என்னை விட கடலில் வாழும் மீன்களே பொருத்தமானவை என்று அவனைக் கடற்கரைக்கு அனுப்பி வைத்தார்.
நீ அங்கு சென்று கடல் வாழ் மீன்களே! எனக்கு அல்லாஹ் யாரென்று சொல்லித் தாருங்கள் என்று கேள் என்றும் அவனிடம் கூறினார்.
ஞானத் தாகமுள்ள அவன் கடற்கரை சென்று மகான் சொல்லியனுப்பியது போல் சொன்னான். நீருள் மறைந்திருந்த சில மீன்கள் நீரின் மேல் எழுந்து “அல்லாஹ் பற்றிச் சொல்வதற்கு நாங்கள் விருப்பமானவர்கள்தான். ஆயினும் நாங்கள் தற்போது முழுக்காளிகளாக உள்ளோம். அவனோ பரிசுத்தமானவன். அவனைப் பற்றி பரிசுத்தமானவர்கள்தான் சொல்ல முடியும். நாங்கள் குளிப்பதற்கு இதுகாலவரை நீரைக் காணவில்லை. ஆகையால் குளிப்பதற்கு எப்போது நீர் கிடைக்கின்றதோ அப்போது குளித்து சுத்தம் பெற்றுக் கொண்டு சொல்லித் தருகிறோம்” என்று அந்த மீன்கள் சொன்னன.
நீரிலேயே வாழும் மீன்கள் இவ்வாறு சொன்னது அவனுக்கு வியப்பாக இருந்தது. ஒன்றுமே புரியாத நிலையில் அவன் குருமகானிடம் வந்து மீன்கள் சொன்ன வியப்பான தகவலை அவரிடம் சொல்லி விளக்கம் கேட்டான்.
அதற்கவர், அந்த மீன்கள் நீரிலேயே வாழ்ந்தாலும் கூட அதை நீராகக் காணாமல் அல்லாஹ்வாகக் கண்டதினால்தான் நீரைக் காணவில்லை என்று அவை சொல்லியுள்ளன. நீராயினும், நிலமாயினும் மற்றுமுள்ள எந்த ஒரு படைப்பாயினும் அது அல்லாஹ்தான் என்று அந்த மீன்கள் உனக்கு விளக்கி வைத்துள்ளன என்று கூறினார்.
இவ் உதாரணம் மூலம் படைப்புக்கள் எவையாயினும் அவை எத்தோற்றத்தில் இருந்தாலும் அவை அல்லாஹ்வின் வெளிப்பாடுகள்தான் – அல்லாஹ்தான் என்பது தெளிவாகும்.
“மஇய்யத்” உடனிருத்தல் என்பது படைத்தவன் வேறு, படைப்பு அவனுக்கு வேறு என்று வாதிடுவோர் மேற்கண்ட உதாரணத்தை தமது தலைக்கெடுத்து ஆய்வு செய்ய வேண்டும்.
இதுபோல் இன்னுமோர் உதாரணம் சொல்கிறேன். இறைஞானத் தாகம் கொண்ட ஒருவன் ஸூபீ மகானிடம் வந்து இறைவன் பற்றிச் சொல்லித் தாருங்கள் என்று கேட்டான்.
அதற்கவர் “எல்லாம் அவனே” என்று சொல்லிக் கொடுத்தார். அவரின் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு அவன் திரும்பி வரும் வழியில் ஒரு யானை வந்து கொண்டிருந்தது. அதன் மீது யானைப் பாகனும் இருந்தான். அப்போது அவனுக்கு ஒரு சிந்தனை பிறந்தது. அதாவது எல்லாமவனே என்றுதானே குருமகான் சொன்னார். அவ்வாறாயின் நான் இவ்வழியின் குறுக்கே படுத்திருப்பேன். குருமகான் சொன்னது போல் யானையும் அவனாக இருந்தால் அது என்னை மிதிக்காமற் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் குரு மாகான் சொன்ன தத்துவம் என் மனதில் உறுதியாகிவிடும். இதற்கு மாறாக அது என்னை மிதிக்குமாயின் இறைவன் தன்னையே மிதிக்கிறான் என்று எனக்கு எண்ணத் தோணும். குரு மகானின் சொல்லில் எனக்கு நம்பிக்கை இல்லாது போய்விடும். குருவின் தத்துவமும் பிழையாகிவிடும் என்று கூறியவனாக பாதையின் குறுக்கே படுத்தான்.
யானை அவனை நெருங்கிய போது அதன் மேலிருந்த யானைப் பாகன் யானை வருகிறது எழுந்திரு என்று கூறி சத்தமிட்டான். ஆனால் அவனோ பாகனின் சொல்லை உதாசீனம் செய்து விட்டு எழும்பாமல் படுத்துக் கொண்டே இருந்தான். யானை அவனின் ஒரு காலில் மிதித்து அதை முறித்துச் சென்றது. கடவுளே கடவுளின் காலை மிதித்தது எந்த வகையில் நியாயமாகும்? என்று மனதில் நினைத்தவனாக “எல்லாம் அவனே” என்று கற்றுக் கொடுத்த ஞான மகானிடம் சென்று நடந்ததைக் கூறி விளக்கம் கேட்டான். இறைஞானி ஆம், நியாயம்தான் என்றார். அது எவ்வாறு என்று விளக்கம் கேட்டான் அவன். அதற்கவர் அவனிடம் யானைப் பாகன் யார் என்று கேட்டார். அதற்கவன் அவன் யாரோ ஒருவன் என்று அலட்சியமாகப் பதில் கூறினான். இது கேட்ட ஞான மகான் நான் உன்னிடம் எல்லாம் அவனே என்றுதான் சொன்னேனேயன்றி யானை மட்டும் அவனென்று சொல்லவில்லை. நான் சொன்னபடி யானை மீதிருந்த அதன் பாகனும் அவன்தானே! அவனின் சொல்லை நீ ஏன் கேட்டுச் செயல்படவில்லை? என்று கேட்டான். அவன் பதில் கூற முடியாமல் தலை குனிந்தான்.
மேற்கண்ட இவ்விரு உதாரணங்களையும் சிந்தனைக்கு எடுத்து ஆய்வு செய்தால் எல்லாமாயும் வெளியாகித் தோற்றுபவன் அல்லாஹ்தான் என்பது தெளிவாகும். இத் தத்துவத்தை நிறுவுவதற்கு திருக்குர்ஆன் வசனங்களும், நபீ மொழிகளும் ஆதாரங்களாக உள்ளன.
இத் தத்துவத்தின் படி மேலே எழுதிக் காட்டிய திரு வசனங்களில் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்றால் பொறுமையாளர்களாக அவனே உள்ளான் என்றும், அல்லாஹ் விசுவாசிகளுடன் இருக்கிறான் என்றால் விசுவாசிகளாக அவனே உள்ளான் என்றும், அல்லாஹ் இறையச்சம் உள்ளவர்களுடன் இருக்கின்றான் என்றால் இறையச்சம் உள்ளவர்களாக அவனே உள்ளான் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதேபோல் واللهُ مَعَكُمْ அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான் என்றால் உங்களாகவே அவன் உள்ளான் என்றும், واللهُ مَعَنَا அல்லாஹ் எங்களுடன் இருக்கிறான் என்றால் அவனே எங்களாக இருக்கிறான் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும், அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களும் “தவ்ர்” குகையினுள் மறைந்திருந்த சமயம் எம் பெருமானார் அவர்கள் அபூ பக்ர் நாயகம் அவர்களிடம் لَا تَحْزَنْ إِنَّ اللهَ مَعَنَا நீங்கள் கவலைப்பட வேண்டாம், நிச்சயமாக அல்லாஹ் எம்மோடுதான் உள்ளான் என்று கூறிய வசனம் அவன் எம்மாக உள்ளான் என்ற கருத்தையே தருகிறதென்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதனால்தான் திருக்குர்ஆனில் مَعَ – “மஅ” உடனிருத்தல் தொடர்பாக வந்துள்ள வசனங்களுக்கு ஸூபீ மகான்கள் விளக்கம் சொல்லும் போது اَلْمَعِيَّةُ الذَّاتِيَّةُ என்று ஒரு குறிப்புக் கூறுகின்றார்கள். இதன் விளக்கம் என்னவெனில் உடனிருத்தல் என்பது “தாதிய்யத்” ஆன உடனிருத்தல் என்று சொல்கிறார்கள்.
அதாவது அல்லாஹ் படைப்புடன் இருக்கிறான் என்பது முனீர் என்பவன் முசம்மிலுடன் இருக்கிறான் என்பது போலன்றி அவன் – அல்லாஹ் படைப்புத் தானாகவே உள்ளான் என்பதையே குறிக்கும். இதை இன்னும் விளக்கமாகச் சொல்வதாயின் அல்லாஹ் படைப்புடன் இருப்பதானது அவன் அந்தப் படைப்பை விட்டும் பிரிந்த “உடனிருத்தல்” அன்றி அதை விட்டும் பிரியாத, அது தானான உடனிருத்தல் என்றுதான் சொல்ல வேண்டும்.
உதாரணமாக முசம்மில் என்பவனின் உடலுறுப்புக்களை எடுத்துக் கொள்வோம். அவற்றில் ஒன்றேனும் அவனின் “தாத்” உடலை விட்டும் பிரிந்ததென்று சொல்ல முடியாது. இதுவே எதார்த்தம்.
முசம்மிலின் கை முசம்மிலுடன் இருக்கிறது. முசம்மிலின் கால் முசம்மிலுடன் இருக்கிறது. முசம்மிலின் முகம் முசம்மிலுடன் இருக்கிறது என்று சொல்வது போல், அவனின் கை, கால், முகம் எல்லாம் சேர்ந்து முசம்மிலாக இருப்பது போல் அல்லாஹ் எம்முடன் இருக்கிறான் என்றால் எம்மாக உள்ளான் என்றும், அல்லாஹ் அவனுடன் இருக்கிறான் என்றால் முழுமையாக அவனாக உள்ளான் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நான் மேலே சொன்னது போல் விளங்காமல் அல்லாஹ் என்னுடன் இருக்கிறான் என்று ஒருவன் சொன்னால் அல்லாஹ் அவனை விட்டும் பிரிந்த, அவனுக்கு வேறான இரண்டாமவனாக அவன் உள்ளான் என்றும், அல்லாஹ் எங்களுடன் இருக்கிறான் என்று இருவர் சொன்னால் அல்லாஹ் அவ்விருவரை விட்டும் பிரிந்த, அவ்விருவருக்கும் வேறான மூன்றாமவனாக இருக்கிறான் என்றும், அல்லாஹ் எம்முடன் இருக்கிறான் என்று மூவர் சொன்னால் அல்லாஹ் அவர்களை விட்டும் பிரிந்த, அவர்களுக்கு வேறான நாலாமவனாக அவன் இருக்கிறான் என்றும் நம்புதல் கலப்பற்ற அசல் “ஷிர்க்” இணை வைத்தலாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஏனெனில் இவ்வாறு சொல்வோர் அல்லாஹ்வை தம்மை விட்டும் பிரித்து அவனை அவர்களுக்கு வேறானவனாக நம்புகிறார்கள். இவர்களின் இந் நம்பிக்கை பிழையானதாகும். இந் நம்பிக்கை அசல் “ஷிர்க்” இணை வைத்தலாகும் என்று நிறுவ என்னாலும், என்னுடனுள்ள ஸூபீ ஞானமுள்ள மௌலவீமாராலும் முடியும் என்று அடித்தும், அல்லாஹ்வின் மீது ஆணையிட்டும் சொல்ல முடியும். இன்ஷா அல்லாஹ்!
இது தொடர்பாக இலங்கை வாழ் உலமாஉகளோ, அறபுக் கல்லூரி “உஸ்தாது”மார்களோ, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மதிப்பிற்குரிய தலைவர் அவர்களோ, “பத்வா” குழு மகான்களோ, குறிப்பாக தரீகாக்களின் ஷெய்குமார்களோ, அவர்களின் கலீபாக்களோ எம்மிடம் கற்றுக் கொள்ள விரும்பினால், அல்லது கலந்துரையாட விரும்பினால் மட்டும் ஒரு மாத காலத்திற்கு முன் எம்மிடம் அனுமதி பெற்றுக் கொண்டு வரலாம். இந் நோக்கத்துடன் வருபவர்களை வரவேற்க நாம் ஆயித்தமாயுள்ளோம் என்பதை மன நிறைவோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆயினும் இது தொடர்பாக எவருடனும் விவாதிக்க நாம் வரமாட்டோம். அவ்வாறு வருவதாயினும் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞான விளக்கத்தை முதலில் எம் மூலம் தெரிந்து கொள்வது அவசியம். ஸூபிஸ வழியில் விவாதமில்லை. இதற்கான ஆதாரம் பின்னால் வருகிறது.
سـَمِعْتُ سَيِّدِيْ عَلِيًّا الْخَوَاصَّ رَضِيَ الله عَنْهُ يَقُوْلُ ‘ اَلْجِدَالُ فِى الشَّرِيْعَةِ مِنْ بَقَايَا نِفَاقٍ فِى الْقَلْبِ، لِأَنَّهُ يُرِيْدُ بِهِ إِدْحَاضَ حُجَّةِ الْغَيْرِ، وَفِى الْقُرْآنِ الْعَظِيْمِ ‘ فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسـِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسـْلِيمًا ‘ فَنَفَى الْإِيْمَانَ الْكَامِلَ عَمَّنْ يَجِدُ فِى الْحُكْمِ عَلَيْهِ بِالشَّرِيْعَةِ حَرَجًا، وَمَعْلُوْمٌ أَنَّ الْجِدَالَ مَعَ أَئِمَّةِ الشـَّرِيْعَةِ جِدَالٌ مَعَهُ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنْ تَفَاوَتَ الْمَقَامُ، فَإِنَّ الْعُلَمَاءَ عَلَى مَدْرَجَةِ الرُّسـُلِ سَلَكُوْا، فَكَمَا يَجِبُ عَلَيْنَا الْإِيْمَانُ وَالتَّصْدِيْقُ بِكُلِّ مَا جَائَتْ بِهِ الرُّسـُلُ، وَإِنْ لَمْ نَفْهَمْهُ، فَكَذَلِكَ يَجِبُ عَلَيْنَا الْإِيْمَانُ وَالتَّصْدِيْقُ بـِكَلَامِ الْأَئِمَّةِ إِذَا لَمْ نَفْهَمْهُ، حَتَّى يَأْتِيَنَا عَنِ الشَّارِعِ مَا يُخَالِفُهُ، (الميزان الخضريّة للإمام عبد الوهاب الشعراني، ص – 48)
كان سيد الطائفة جنيد البغدادي رحمه الله كثيرا مَّا يُنشد:
عِلْمُ التَّصَوُّفِ عِلْمٌ لَيْسَ يَعْرِفُهُ – إِلَّا أَخُو فِـطْـنَـةٍ بِالْـحَقِّ مَـعْرُوْفٌ
وَلَيْسَ يَعْرِفُهُ مَنْ لَيْسَ يَشْهَدُهُ – وَكَيْفَ يَشْهَدُ ضَوْءَ الشَّمْسِ مَكْفُوْفٌ
அல்லாஹ் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பது வழிகெட்ட “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையாகும்.
நான் ஏழு வயதுச் சிறுவனாயிருந்த காலம் முதல் – 1951ம் ஆண்டு – தவ்ஹீத் புரட்சி ஏற்பட்ட 1979ம் ஆண்டு வரை “ஆலிம்”கள் முதல் “ஜாஹில்”கள் வரை அனைவரும் அல்லாஹ் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றே சொல்லி வந்தார்கள். இவ்வாறு சொல்வது பிழை என்று அன்றைய உலமாஉகள் உணரவுமில்லை. பொது மக்களை அவர்கள் தடுக்கவுமில்லை. எல்லோரும் கூட்டத்தோடு கோவிந்தா போட்டவர்கள்தான்.
உலமாஉகள் அவ்வாறு சொன்னாலும் கூட அவ்வாறு சொல்வது “குப்ர்” நிராகரிப்பு, “ஷிர்க்” இணை வைத்தல் என்று அவர்கள் சிந்திக்காமல் தெரியாமற் சொல்லி வந்தார்களேயன்றி அதன் உட்கருத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இன்றுள்ள உலமாஉகள் போல் மனமுரண்டாகச் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. எனினும் அவர்கள் அவ்வசனம் தொடர்பாக ஆழமாகச் சிந்திக்கத் தவறிவிட்டார்கள். இதற்கு அவர்கள் தமிழ் மொழியறிவு குறைந்தவர்களாயிருந்ததும் ஒரு காரணம் எனலாம்.
1979ம் ஆண்டு “தவ்ஹீத்” புரட்சி வெடித்தபின் காத்தான்குடியில் நானும், எனது கருத்தைச் சரி கண்ட மௌலவீமாரும் “எல்லாமவனே” என்று எட்டுத்திக்கும் கொட்டு முழக்கத்துடன் பேசி வந்ததால் இறைவன் “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று சத்தமிட்டு வந்தவர்கள் தமக்கும் “பத்வா” வழங்கிவிடுவார்கள் என்று பயந்து நிறுத்திக் கொண்டார்கள்.
இன்று ஸூபிஸ சமூகம் சொல்லும் தத்துவம் அல்லாஹ் தூணாயுமிருப்பான், துரும்பாயுமிருப்பான் என்பதேயாகும். இதுவே “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமுமாகும். இது “ஹுலூல் – இத்திஹாத்” தத்துவமல்ல.
அல்லாஹ் படைப்புக்களில் உள்ளான் என்பது வழிகேடான கொள்கையும், அல்லாஹ் படைப்பாக உள்ளான் என்பது சரியான கொள்கையுமேயாகும். இதுவே இஸ்லாமிய தத்துவம். இதை முஸ்லிம் மத குருக்கள் ஆய்வு செய்யத் தவறிவிட்டார்கள்.
“ஹுலூல்” கொள்கை என்பது அல்லாஹ் படைப்பில் இறங்குகிறான் என்பதாகும். அறபு மொழியில் حَلَّ என்றால் இறங்கினான், இறங்கியது என்று பொருள் வரும். حَلَّ اللهُ فِى الْخَلْقِ அல்லாஹ் படைப்பில் இறங்கினான் என்பது “ஹுலூல்” கொள்கை எனப்படும். இது பிழையான, வழிகேடான கொள்கை என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு முஸ்லிம் இவ்வாறு நம்பினால் அவன் “முஸ்லிம்” ஆகமாட்டான்.
இது எது போலென்றால் حَلَّ الْمَاءُ فِى الْإِنَاءِ பாத்திரத்தில் நீர் இறங்கியது போன்று எனப்படும். நீரை இறைவனாகவும், பாத்திரத்தை படைப்பாகவும் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
மற்றக் கொள்கை “இத்திஹாத்” கொள்கையாகும். اِتَّحَدَ என்றால் ஒன்றானது என்று பொருள். اِتَّحَدَ اللهُ فِى الْخَلْقِ أَوْ مَعَ الْخَلْقِ இறைவன் படைப்புடன் கலந்து ஒன்றாகிவிட்டான் என்ற கொள்கையாகும்.
இது எதுபோலென்றால் اِتَّحَدَ السُّكَّرُ مَعَ الْمَاءِ சீனி நீருடன் கலந்து இரண்டும் ஒன்றாகிவிட்டது என்பது போன்று. இதேபோல் இறைவன் படைப்புடன் கலந்து ஒன்றாகிவிட்டான் என்ற கொள்கை.
மேற்கண்ட இவ்விரு கொள்கைகளும் இஸ்லாம் சரிகண்ட கொள்கைகள் அல்ல. இவ்வாறு நம்பினவன் “முஸ்லிம்” அல்ல.
இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை இறைவன் படைப்பில் இறங்கவுமில்லை, அவன் படைப்புடன் கலந்து ஒன்றாகவுமில்லை. எனினுமவன் அனைத்து படைப்புக்களாகவும் வெளியாகி அனைத்துப் படைப்புக்களாகவும் தோற்றுகிறான் என்பதாகும்.
ஏனெனில் மேற்கண்ட “ஹுலூல் – இத்திஹாத்” என்ற இரு கொள்கைகளுக்கும் இரு வஸ்த்துக்கள் தேவை. இஸ்லாம் கூறும் கொள்கைக்கு இரு வஸ்த்துக்கள் தேவையில்லை.
இஸ்லாம் கூறும் கொள்கை அல்லாஹ் – இறைவனே அனைத்து படைப்புக்களாகவும் வெளியாகித் தோற்றுகிறான் என்பதாகும். இதற்கு இரு பொருட்கள் தேவையில்லை. இறைவன் எதிலும் இறங்கவுமில்லை, எதிலும் ஏறவுமில்லை, எதோடும் கலக்கவுமில்லை. அவன் தனது வல்லமையினால் அனைத்துப் படைப்புக்களாகவும் “தஜல்லீ” வெளியாகித் தோற்றுகிறான் என்பதாகும். இதனால் படைப்புக்களை வணங்கலாம் என்ற கருத்துக்கு இடமே இல்லை. வணக்கத்திற்கு தகுதியானவன் எல்லாமாய் வெளியான ஏக இறைவனேயாவான்.
தொகுப்பு:
காதிமுல் கவ்மி, மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
தலைவர்: அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு
(incorporated by act of parliament No 46 of 2009)
BJM வீதி, காத்தான்குடி 05.