Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நாஹூர் எஜமான் அவர்களின் “கப்ர்” ஷரீபுக்கு சந்தனம் பூசுகின்றவர் மரணித்து விடுவாரா?

நாஹூர் எஜமான் அவர்களின் “கப்ர்” ஷரீபுக்கு சந்தனம் பூசுகின்றவர் மரணித்து விடுவாரா?

يَا قَادِرْ مُرَادْ حَاصِلْ!
யா காதிர் முறாத் ஹாஸில்!
 
اللهم أَرِنَا الْحَقَّ حَقًّا وَارْزُقْنَا اتِّبَاعَهْ، وَأَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَارْزُقْنَا اجْتِنَابَهْ،
 
யா அல்லாஹ்! எது சத்தியமோ அதை சத்தியமாகவே எமக்கு காட்டி அதைப் பின்பற்றும் பாக்கியத்தை எமக்குத் தருவாயாக! எது அசத்தியமோ அதை அசத்தியமாகவே எமக்குக் காட்டி அதைத் தவிர்ப்பதற்கும் அருள் செய்வாயாக!
 
எஜமான் ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகமவர்களின் முஹிப்பீன்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
 
நான் எனது சிறு வயதிலிருந்தே நாஹூர் நாயகம் காரணக்கடல், அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் பாதுஷா றஹிமஹுல்லாஹ் அவர்களை நேசித்து வருகிறேன்.
 
1965ம் ஆண்டு நான் 21 வயதுடையவனாக இருந்த காலத்தில்தான் முதலில் நாஹூர் ஷரீபில் கால் பதித்து பாதுஷா நாயகம் அவர்களை “சியாறத்” தரிசித்தேன். அவ்வேளை தமிழ் நாடு நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அறபுக் கல்லூரியில் நான் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.
 
அதன் பிறகு இற்றை வரை சுமார் 50 தடவைகளுக்கு மேல் அங்கு சென்று பாதுஷா நாயகம் அவர்களை தரிசித்துள்ளேன்.
 
1982ம் ஆண்டு ஒரு றமழான் மாதம் அங்கு சென்ற நான் தொடர்ந்து ஒன்பது நாட்கள் தங்கியிருந்துள்ளேன். அக்கால கட்டத்தில் அங்குள்ள இரு பள்ளிவாயல்களில் “பயான்” மார்க்க உபன்னியாசம் செய்தும் உள்ளேன். அவ்வேளை கௌரவ யாஸீன் ஆலிம் அவர்கள் “ஷம்ஸுல் உலமா” என்று என்னை வாழ்த்தினார்கள்.
 
அக்காலப் பகுதியில் நாஹூரில் உயிருடன் இருந்த கௌரவத்திற்குரியவர்களான மௌலானா மௌலவீ முஹம்மத் பாகர் ஆலிம், மௌலானா மௌலவீ யாஸீன் ஆலிம், மௌலானா மௌலவீ அப்துல் வஹ்ஹாப் பாகவீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோர்களுடனும், இன்னும் பல உலமாஉகளுடனும் நான் தொடர்பாக இருந்தேன்.
 
1979ம் ஆண்டு எனதூரான காத்தான்குடியில் இடம் பெற்ற மீலாத் விழா ஒன்றில் நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தத்துவத்தை தமது அறியாமை காரணமாக “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகெட்ட கொள்கை எனத் தலை கீழாய்ப் புரிந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்ட மக்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று வழங்கிய “பத்வா”வை மறுத்து الكبريت الأحمر “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற பெயரில் ஒரு நூல் எழுதி அதில் தமிழ் நாட்டு உலமாஉகளில் பிரசித்தி பெற்றவர்களின் கையெழுத்துப் பெறுவதற்காக 1982ம் ஆண்டு தமிழ் நாடு சென்று எனது நூலில் கையெழுத்திடுவதற்கு தகுதியான உலமாஉகள் தொடர்பாக நான் விசாரித்த போது அவ்வேளை கம்பம் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த அதி சங்கைக்குரிய ஷெய்குனா, ஸெய்யிதுனா அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் வலிய்யுல்லாஹ் அவர்களைப் பலர் சுட்டிக் காட்டினார்கள்.
 
நான் கம்பம் நகர் நோக்கிப் பயணித்து ஒரு நாள் காலை கம்பம் நகரை அடைந்தேன். அவர்களின் வீடு தேடி நடந்து கொண்டிருந்த போது சாலையோரம் தைக்காப் பள்ளிவாயல் அமைப்பில் சிறிய கட்டிடம் ஒன்றிருந்தது. அதன் வாயலில் (“உள்ளது ஒன்று மற்றது அன்று” என்று ஒரு வரியிலும், “ஒன்றும் பூச்சியமும் இரண்டாகாது” என்று இன்னொரு வரியிலும்) எழுதப்பட்ட பலகை ஒன்றிருந்தது.
 
இதைக் கண்ட போது என் மனம் இவ்விடம் அம்பா நாயகம் அவர்களின் இடம்தான் என்று சொன்னது.
 
உள்ளே நுழைந்தேன். ஒரு மா மனிதர் “வுழூ” செய்து கொண்டிருந்தார்கள். என்னை யாரென்றே தெரியாத அந்த மா மனிதர் என்னைக் கண்டதும் “உங்கள் தகப்பனாரின் “ஜனாசா” தொழுகையில் “அப்தால்”களில் ஒருவர் கலந்து கொண்டுள்ளார்” என்று கூறினார்கள்.
 
என்னைத் தூக்கி வாரிப் போட்டாற் போல் இருந்தது. இரண்டாவதாக “உங்கள் வயிற்று வலி சுகமா?” என்று கேட்டார்கள். இல்லை என்றேன். பின்னர் அவர்களின் கை, கால்களை முத்தமிட்டு நின்றேன்.
 
என் கையிலிருந்த எனது கையெழுத்துப் பிரதியை கொடுத்து விபரத்தைக் கூறி கையெழுத்தும் கேட்டேன். சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றார்கள். சம்மதித்தேன்.
 
மறு நாள் மாலை அவர்கள் தங்களின் மகன் மௌலவீ அப்துல் ஙபூர் என்பவரை அழைத்து, “இந்நூலை வாசிக்கவும்” என்றார்கள். அவர் வாசித்து முடித்த பின் “இந்நூலை ஒருவர் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வாசிக்க நான் செவியேற்றுக் கொண்டிருந்தேன். இதில் எழுதப்பட்டுள்ள விடயம் யாவும் சரியானதே. இதற்கு மாறான கொள்கை வழிகேடு” என்று அறபியில் எழுதித் தரவும் என்று அவரிடம் சொன்னதும் அவர் எழுதிக் கொடுத்தார். அதைக் கையிலெடுத்த மா மனிதர் அம்பா நாயகம் அவர்கள், “வஹ்ததுல் வுஜூதுக்கு நான் கையெழுத்திடும் முதல் கையெழுத்தும், கடைசிக் கையெழுத்தும் இதுதான்” என்று சொன்னவர்களாக கையெழுத்திட்டுத் தந்தார்கள்.
 
இதைத் தொடர்ந்து நாஹூர் நகருக்கு வந்து மேலே நான் பெயர்கள் குறித்த நாஹூரில் வாழ்ந்த உலமாஉகளிடம் எனது நூலைக் கொடுத்து கையெழுத்துக் கேட்டேன்.
 
அவ் ஊர் உலமாஉகளிற் பலர் அதில் கையெழுத்திட்டுத் தந்தார்கள்.
 
அம்பா நாயகம் அவர்களின் கையெழுத்தும், மற்றும் மேலே நான் பெயர் குறித்த நாஹூர் உலமாஉகளினது கையெழுத்துக்களும் இப்போதும் என்னிடமுள்ளன. தேவையானோர் நேரில் வந்து பார்த்துக் கொள்ள முடியும். (ஏற்கனவே எனது முகநூல் பக்கத்தில் பிரசுரித்தும் உள்ளேன்)
 
அன்புள்ள பொது மக்களே! நாஹூர் ஷரீப் வாழும் நல்லடியார்களே! தர்ஹாவின் கௌரவ நிர்வாகிகளே!
 
நான் நாஹூர் நகரில் தங்கியிருந்த கால கட்டத்தில் அங்கு நடைபெறுகின்ற “கறாமாத்” அற்புதங்களை நேரில் கண்டு வியந்துள்ளேன். அங்குள்ள வரலாற்றுச் சின்னங்கள் பற்றியும், மற்றும் நிகழ்வுகள் பற்றியும் அங்குள்ள “சாபு”மார் மூலம் விசாரித்து அறிந்துள்ளேன்.
 
பாதுஷா நாயகம் அவர்களின் புனித “கப்ர்” ஷரீபுக்கு சந்தனம் பூசும் விடயம் பற்றியும் பலரிடம் கேட்டு அறிந்துள்ளேன். அவர்களிற் சிலர் சொன்ன தகவல்தான் “எஜமான் அவர்களின் “கப்ர்” ஷரீபுக்கு சந்தனம் பூசுகின்றவர் அதன் பின் மரணித்து விடுவார்” என்ற தகவலுமாகும். அதை ஆதாரமாக வைத்தே கடந்த காலங்களில் நான் அவ்வாறு பேசி வந்துள்ளேன்.
 
நேற்றிரவு நாஹூர் நகரைச் சேர்ந்த “கலீபா ஸாஹிப்” என்று ஒருவர் சொன்ன பிறகுதான் ஏற்கனவே எனக்கும் சொல்லப்பட்ட தகவல் பிழையென்று எனக்குத் தெரிய வந்ததென்பதை அனைவருக்கும் அறிவித்துக் கொள்கிறேன்.
 
எனினும் சந்தனம் பூசுகின்றவர் இறுதியில் பலரால் சுமந்து செல்வதிலுள்ள அகமியத்தை – காரணத்தை கலீபா ஸாஹிப் அவர்கள் விபரமாகக் கூறினார்களாயின் அது பலருக்கும் பயனளிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
 
மௌலவீஅல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
10.01.2023
RELATED ARTICLES

Most Popular

Recent Comments