Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“ஆபித்” வணக்கசாலி

“ஆபித்” வணக்கசாலி

كان عابد من العُبّاد يعبد الله تعالى فى مكان خالٍ عن النّاس، وكان يدعو الله تعالى فى كلّ وقت وكان يسئلُه الغِنى فيقول فى دعائه ‘ اللهم اجعلني غنيّا كبيرا ‘ وكان يُكثر هذا السّؤالَ، وذات يومٍ سمع هاتفا يقول: كلٌّ يطلبون منّي إلّا أبا يزيد، فإنّه يَطْلُبُنِيْ، فترك العبادةَ وتوجّه إلى معرفة الله،
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
ஓர் “ஆபித்” வணக்கசாலி மனித நடமாட்டமில்லாத ஓர் இடத்தில் அல்லாஹ்வை வணங்கி வந்தார். எல்லா நேரங்களிலும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார். அவர் தனது பிரார்த்தனையில் அதிகமாக “இறைவா! என்னை பெரும் கோடீஸ்வரனாக ஆக்கிவை” என்று கேட்டு வந்தார்.
ஒரு நாள் அவருக்கு ஆள் தோற்றமின்றி ஒரு சத்தம் கேட்டது. அதில், “அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் அபூ யஸீத் என்பவரோ என்னை கேட்கிறார்” என்று சொல்லப்பட்டது.

இதன் கருத்து என்னவெனில் எனது அடியார்கள் அனைவரும் அதைத் தா, இதைத் தா என்றுதான் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் அபூ யஸீத் என்பவர் என்னையே கேட்கிறார் என்பதாகும். இவர் ஈரான் நாட்டில் பிரசித்தி பெற்ற ஓர் இறைஞானி ஆவார்.
நாம் அல்லாஹ்வை நேசிப்பதும், வணங்குவதும், அவனுக்கு வழிப்படுவதும் அவனுக்காகவே இருக்க வேண்டும். அதாவது அவனை அறிவதற்கும், அவனை அடைவதற்காகவுமே இருக்க வேண்டும்.
இதற்கு மாறாக அவனிடமிருந்து எந்தவொரு பலனையும் நாம் கேட்கலாகாது. எதிர் பார்க்கவும் கூடாது.
 
ஆகையால் நாம் அவனிடம் “துஆ” கேட்கும் போது சுவர்க்கத்தையும், அதன் இன்ப சுகங்களையும் தருவாயாக என்று மட்டும் கேட்காமல் உனது ஞானத்தையும், உனைக் கண்டு மகிழும் நற்பாக்கியத்தையும் தருவாயாக என்று கேட்க வேண்டும்.
இவ்வாறு கேட்கும் நிலை “ஆஷிகீன்” இறை காதலர்களின் நிலையாகும். இந்த நிலையிலேயே இறைஞானி அபூ யஸீத் இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இந்த “மகாம்” அந்தஸ்த்திலேயே அநேக இறைஞானிகளும், இறை காதலர்களும் வாழ்ந்துள்ளார்கள்.
 
வணக்க வழிபாடு செய்வதன் மூலம் சுவர்க்கம் கிடைக்க வேண்டும் அல்லது நரகம் கிடைக்கக் கூடாது, அல்லது “ஹூறுல் ஈன்” சுவர்க்க மங்கைகள் கிடைக்க வேண்டும் என்று இத்தகைய பிரதிபலனை எதிர்பார்த்து, கூலியை எதிர்பார்த்து வணக்கம் செய்தால் கூலிக்கு மாரடிப்பது போன்றாகிவிடும்.
சுவர்க்கம், சுவர்க்க இன்ப சுகங்கள், “ஹூறுல் ஈன்” சுவர்க்கத்து அழகிகள், மற்றும் நரகம் இவையெல்லாம் படைப்புகளேதான். இவற்றை நேசிப்பதும், விரும்புவதும் படைப்பை நேசிப்பதாகவும், விரும்புவதாகவும் ஆகுமேயன்றி படைத்தவனை நேசிப்பதாகாது.
 
இதுகுறித்து இறைஞானப் பெண்மணி றாபிஅதுல் அதவிய்யா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு கவிதையில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
إِلْزَمِ الْبَابَ إِنْ عَشِقْتَ الْجَمَالَا
وَاهْجُرِ النَّوْمَ إِنْ أَرَدْتَ الْوِصَالَا
وَاجْعَلِ الرُّوحَ مِنْكَ أَوَّلَ نَقْدٍ
لِحَبِيبٍ أَنْوَارُهُ تَتَلَالَا
كُلُّهُمْ يَعْبُدُوكَ مِنْ خَوْفِ نَارٍ
وَيَرَوْنَ النَّجَاةَ حَظَّاً جَزِيلَا
أَوْ بِأَنْ يَسْكُنُوا الْجِنَانَ فَيَحْظُوا
بِقُصُورٍ وَيَشْرَبُوا سَلْسَبِيلَا
لَيْسَ لِي فِي الْجِنَانِ وَالنَّارِ حَظٌّ
أَنَا لَا أَبْتَغِي بِحِبِّي بَدِيلَا
பாடலின் பொருள்:
நீ அழகை – அழகனை – இறைவனை காதலித்தால் அவனின் மாளிகைக் கதவடியில் இரு. அதைப் பற்றிப் பிடித்துக் கொள். அவளுடன் சேர விரும்பினால் உறக்கத்தை வெறுத்துக் கொள்.
எவன் இலங்குகிறானோ அவனுக்கு உனது உயிரை “மஹர்” ஆக கொடு. “மஹர்” என்று திருமணத்திற்கு முன் அதாவது மனைவியை தொடுமுன் அவளுக்கு கணவன் கொடுக்க வேண்டிய பணத்தைக் குறிக்கும்.
 
இறைவா! நரகத்தைப் பயந்தே அனைவரும் உன்னை வணங்குகிறார்கள். அந்த நரகத்திற்குச் செல்லாமல் ஈடேற்றம் பெறுவதை பெரும் பாக்கியமாகவும் கருதுகிறார்கள். அல்லது சுவர்க்கம் சென்று அங்குள்ள இன்ப சுகங்களை அனுபவிப்பதையே பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
எனக்கு சுவர்க்கம் பற்றியோ, நரகம் பற்றியோ எந்தவொரு கவலையுமில்லை. தேவையுமில்லை. நான் எனது காதலுக்குப் பதிலாக அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்க மாட்டேன்.
மேற்கண்டவாறு ஞானப் பெண் றாபிஅதுல் அதவிய்யா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த இறைஞானப் பெண் திருமணம் செய்யாமல் இவ் உலகப் பற்றும், பாசமுமின்றி துறவியாக வாழ்ந்து மரணித்த, “விலாயத்” ஒலித்தனம் பெற்ற, உலகப் பிரசித்தி பெற்ற ஒரு பெண்மணியாவார்.
 
ஒருவன் مُخْلِصْ – “முக்லிஸ்” கலப்பற்ற, தெளிவான அடியானாவதாயின் அவன் அல்லாஹ்வை அவனுக்காகவே நேசிக்க வேண்டும். அவனுக்காகவே வணங்க வேண்டும். மனிதர்களிடம் புகழைப் பெறுவதற்காகவோ, பாராட்டுதல்களைப் பெறுவதற்காகவோ, அல்லது அல்லாஹ்விடமிருந்து சொர்க்கத்தையும், அதன் இன்ப சுகங்களையும் அடைவதற்காகவோ நேசிக்கவும் கூடாது. வணக்க வழிபாடுகள் செய்யவும் கூடாது. இத்தகைய நோக்கங்களை உள்ளத்தில் வைத்துக் கொண்டு நேசித்தவனும், வணக்கம் செய்தவனும் “முக்லிஸ்” ஆகமாட்டான்.
ஒரு மனிதன் தன்னைப் படைத்த “றப்பு” இரட்சகனை நேசிக்க வேண்டுமேயன்றி தன் போன்ற ஒரு படைப்பை நேசிக்க கூடாது, சுவர்க்கம் என்பதும் படைப்பேயாகும். அதைப் பெறும் நோக்கத்தில் வணக்கம் செய்தல் கூடாது. இதேபோல் நரகம் என்பதும் ஒரு படைப்புத்தான். அதைப் பயந்து பாவங்களை விடவும் கூடாது. சுவர்க்கத்தில் கிடைக்கின்ற “ஹூறுல் ஈன்” அழகிகளும் படைப்புகள்தான். அவர்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக வணக்கம் செய்வதும் கூடாது.
أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الجَنَّةَ» قَالُوا: وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: ‘ لاَ، وَلاَ أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَلاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ المَوْتَ: إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ أَنْ يَزْدَادَ خَيْرًا، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْتِبَ ‘
அறிவிப்பு அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு.
அல்லாஹ்வின் திருத்தூதர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எவரையும் அவரது நற் செயல் சுவர்க்கத்தில் ஒரு போதும் நுழைவிக்காது (மாறாக அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் சுவர்க்கம் புக முடியும்) என்று கூறினார்கள்.
தோழர்கள், தங்களையுமா? (தங்களின் நற் செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லையா? அல்லாஹ்வின் திருத்தூதரே! என்று கேட்டார்கள். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் (ஆம்) என்னையும்தான். அல்லாஹ் தனது கருணையாலும், அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர. என்று கூறிவிட்டு எனவே, நீங்கள் நேர்மையோடு நடு நிலையாகச் செயல்படுங்கள்.
நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார். அவர் உயிர் வாழ்வதன் மூலம் நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பாராயின் அவர் உயிர் வாழ்வதால் மனம் திருந்தக் கூடும் என்று கூறினார்கள்.
ஸஹீஹுல் புகாரீ: 5673
இந்த ஹதீது இன்னோர் அறிவிப்பில் لَنْ يَدْخُلَ أَحَدُكُمُ الْجَنَّةَ بِعَمَلِهِ “உங்களில் எவரும் தனது நற் செயல் மூலம் சுவர்க்கம் செல்ல முடியாது” என்றும் வந்துள்ளது. அறிவிப்பில் மாற்றம் இருந்தாலும் கருத்தில் மாற்றம் இல்லை.
 
ஒருவர் செய்கின்ற நற் செயல் கொண்டு நற் செயல் மூலம் அவர் சுவனம் செல்ல முடியாது என்ற நபீ மொழியின் கருத்து என்னவெனில் அவர் செய்த அமல் – நற் செயல் மட்டும் அவர் சுவர்க்கம் செல்லக் காரணமாகாது என்பதாகும். அது ஒரு سَبَبْ காரணமாயினும் அதோடு அல்லாஹ்வின் இரக்கமும், அருளும் அவசியம்.
ஏனெனில் ஒருவன் செய்கின்ற எந்த நற் செயலாயினும் அது சுவர்க்கத்தின் நிலத்திற்கு – இடத்திற்கு பெறுமதியாகாது. நிகராகாது. சுவர்க்கத்தின் ஒரு அங்குல நிலம், அல்லது இடத்தின் பெறுமதியை எவராலும் இவ்வளவுதான் என்று மட்டிட முடியாது, நிலத்தை விடுவோம். அங்குள்ள ஒரு மண்ணிண் பெறுமதி எவ்வளவு என்று கூட எவராலும் சொல்ல முடியாது.
 
உங்களில் எவரும் தனது நற் செயல் கொண்டு சுவனம் செல்ல முடியாதென்று அருளிய போது நபீ தோழர்களிற் சிலர் வியந்தவர்களாக தாங்களும் அவ்வாறுதானா? என்று கேட்டதை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, அதை இரும்புத் துரும்பாக எண்ணிக் கொண்டு பெருமானார் அவர்களை நம் போன்ற சாதாரண மனிதர் என்று விளங்கி வைத்துள்ள நஜ்தீ ஸாஹிபுவின் ஆதரவாளர்கள் துள்ளிக் குதித்து மகிழலாம். அவ்வாறு அவர்கள் மகிழ்ந்தார்களாயின் அவர்கள் மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏதோ கோளாறுள்ளவர்களாகவே இருப்பார்கள். இன்னோர் எவருக்கும் தெரியாமலேனும் ஓர் ஆன்மிக வைத்தியரைச் சந்திப்பது அவசியம்.
பெருமானார் இவ்வாறு சொன்னது தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவேயன்றி எதார்த்தம் இதுவல்ல.
 
اَلْحَقِيْقَةُ الْمُحَمَّدِيَّةْ
– முஹம்மதிய்யாவின் எதார்த்தம் இன்னதுதான், இவ்வாறுதான் என்று ஒருவன் சரியாக விளங்க நாடினால் அவன் அம்மாறா, லவ்வாமா, முல்ஹிமா என்ற “நப்ஸ்” இன் மூன்று படிகளையும் தாண்டி “முத்மயின்னா” எனும் நாலாம் இடத்தை அடைந்திருத்தல் அவசியமாகும்.
ஏனெனில் “நப்ஸ்” எனும் எதிரியை குறைந்த பட்சம் வெல்வதாயினும் முதற்படி முதல் மூன்றாம் படி உள்ளிட்ட மூன்று படித்தரங்களையும் தாண்டி நாலாம் படியில் கால் வைக்க வேண்டும். முதலாம், இரண்டாம், மூன்றாம் படிகளில் நிற்பவன் எதார்த்தத்தில் வால் இல்லாத மிருகமேதான். அவன் மனித தோற்றத்தில் இருந்தாலும் சரியே!
 
ஒரு மனிதனில் உள்ள ஏழு வகை “நப்ஸ்”களில் நாலாம் “நப்ஸ்” ஆன “முத்மயின்னா” என்ற “நப்ஸ்” இல் உள்ள ஒருவனை மட்டுமே அல்லாஹ் தன் பக்கம் வருமாறு அழைக்கின்றானேயன்றி முதலாம், இரண்டாம், மூன்றாம் படிகளில் இருப்பவனை அழைக்கவே இல்லை. இதன் மூலம் நாலாம் இடத்தில் இருப்பவன் மட்டுமே அல்லாஹ் அளவில் செல்வதற்கு தகைமை பெற்றவன் என்ற உண்மை தெளிவாகிறது.
இவ் அடிப்படையில் இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் மூன்று படிகளையும் கடந்து நாலாம் படியான “நப்ஸ் முத்மயின்னா”வுக்குச் சென்றவர்கள் எத்தனை வீதம் இருப்பார்கள் என்று படித்தவர்களால் ஓரளவு கணிக்க முடியும்.
 
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ، ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً ،فَادْخُلِي فِي عِبَادِي ، وَادْخُلِي جَنَّتِي ،
சாந்தி பெற்ற நப்ஸே! அமைதி பெற்ற ஆத்மாவே! நீ உன் இரட்சகன் பக்கம் திருப்தி அடைந்த நிலையிலும், பொருந்திக் கொள்ளப்பட்ட நிலையிலும் மீள்வாயாக! நீ எனது நல்லடியார்களில் பிரவேசிப்பாயாக! மேலும் என்னுடைய சுவனத்தில் நீ நுழைந்து விடுவாயாக! (என்றும் அல்லாஹ் கூறுவான்)
(திருக்குர்ஆன்: 89 – 27, 28, 29, 30)
 
மேற்கண்ட இவ்வசனங்கள் மூலம் நாலாம் இடத்திலுள்ள “முத்மயின்னா” எனும் ஆத்மாவையே தன் பக்கம் வருமாறு அல்லாஹ் அழைத்துள்ளானேயன்றி அதற்கு முன்னுள்ள மூன்று ஆத்மாக்களில் எதையும் அழைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
எனவே, முஸ்லிம்களான நாம் அனைவரும் எந்த ஒரு சிறிய அல்லது பெரிய அமல் செய்வதாயினும் அல்லாஹ்விடம் அதற்கான கூலியை எதிர்பார்க்காமலும், சுவர்க்கத்தையும், அதிலுள்ள இன்ப சுகங்களான படைப்புக்களை எதிர் பார்க்காமலும், மற்றும் அவனின் படைப்பான நரகத்தையும், அதிலுள்ள வேதனைகளையும் தட்டி விடுமாறு கேட்காமலும் அவனின் திருப் பொருத்தத்தையும், அவனின் அருளையும், அவைனக் கண்டு மகிழும் நல் வாய்ப்புக்களையும் கேட்டுக் கொள்ள வேண்டும். அவனின் பொருத்தம் மட்டும் கிடைத்தால் போதும். எல்லா சுவர்க்கமும் எம்மைத் தேடி காலடி வரும்.
இன்ஷா அல்லாஹ்!
இவ்வாறு நான் எழுதுவதால் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தைக் கேட்கக் கூடாதென்பதோ, நரகத்தை விட்டும் பாதுகாப்புத் தேடக் கூடாதென்பதோ எனது கருத்தல்ல. இவை எமது பிரதான குறிக்கோளாக இருத்தலாகாதென்பதே எனது கருத்தாகும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments