Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இது நான் சொன்னதல்ல. எம் பெருமானார் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியது.

இது நான் சொன்னதல்ல. எம் பெருமானார் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியது.

மேற்கண்ட நபீ மொழியில் வந்துள்ள வசன நடை நபீ பெருமானார் அவர்கள் அதியுச்ச கோபத்தின் கட்டத்தில் சொன்னது போல் அமைந்துள்ளது. இதில் வந்துள்ள فَأَعِضُّوْهُ بِهَنِ أَبِيْهِ என்ற வசனத்தை தற்கால தமிழ் வசன நடையில் மொழியாக்கம் செய்வதே கருத்தைச் சுவைப்பதற்கு ருசியாக இருக்கும். நான் அவ்வாறு மொழியாக்கம் செய்யவில்லை. ஏனெனில் நான் அவ்வாறு மொழியாக்கம் செய்தால் என்னை நையாண்டி செய்வதற்கும், எதிர்ப்பதற்கும், பிரச்சினையை உருவாக்குவதற்கும், அதைத் துரும்பாக வைத்துக் கொண்டு அதைப் பூதாகரமாக்கும் இளம் மௌலவீமார்களிற் சிலர் இருப்பார்கள் என்பதற்காக மிகக் குளிராக இல்லாமலும், கடுஞ்சூடாக இல்லாமலும் குறித்த வசனத்தை மொழியாக்கம் செய்துள்ளேன்.

இந்த நபீ மொழியை மௌலவீப் பட்டம் பெற்ற அனைவரும் அறிந்திருந்தாலும் இதை மறந்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறேன்.
 
அறபு மொழியிலக்கண நூல்களில் “அஸ்மாஉஸ் ஸித்தா” என்ற பாடம் ஓதியவர்கள் அனைவரும் இந்த நபீ மொழியை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
“ஜாஹிலிய்யா” – மௌட்டீக காலம் என்பது – அறியாமைக் காலம் என்பது நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிக்கும். இக்காலம் நபீமார் எவரும் இல்லாத காலமாயிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
குறிப்பிட்ட இக்காலப் பகுதியில் வாழ்ந்த மக்களில் நற் பண்புள்ளவர்கள் இருந்தார்களாயினும் அவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். அறிவில்லாத, மார்க்கமில்லாத, மனச்சாட்சி, மனப் பக்குவமில்லாத, கொண்டதே கொள்கை, கண்டதே சாட்சி என்று வாழ்ந்தவர்களே அதிகமாக இருந்தார்கள்.
பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் குழி தோண்டிப் புதைக்கும் வழக்கம் இவர்களிடமிருந்தே ஒரு வகைக் கலாச்சார வடிவம் பெற்றதெனலாம். அவர்கள் மது வெள்ளத்தில் மிதந்தார்கள். விபச்சாரம், கொலை, கொள்ளை, அநீதி, அட்டூழியம் என்பன அவர்களிடம் தலை விரித்தாடின. வீடுகளிலும், கடைகளிலும் மது பெரும் பெரும் பறல்களில் இருந்தன. அவர்கள் தாகம் ஏற்பட்டால் தண்ணீர் குடிப்பதில்லை. அதற்கு பதிலாக மதுவையே குடிப்பார்கள். பெண் குழந்தை பிறந்தால் போதும். வாளும், கத்தியும் அவர்களின் கைக் கோல்களாகிவிடும். எதிரிகள் இருவர் சந்திக்கும் போது உன் மண்டை ஓட்டில் நான் மது அருந்துவேன் என்று சொல்லும் குடிகாரர்களின் கலாச்சாரம் இவர்களிடமிருந்து வந்ததேயாகும்.
 
பெருமானார் அவர்கள் நபீயாக வந்த பின் அவர்கள் மூலம் இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து நபீ தோழர்களானவர்களிற் பலர் அறியாமைக் காலத்தில் வாழ்ந்தவர்களேயாவர். நபீ பெருமானாரின் அருளாலும், ஈமானின் ஒளியாலும் அவர்கள் இன்று “றழியல்லாஹு அன்ஹு” எனும் மகத்துவத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
அறியாமைக் காலத்தில் வாழ்ந்தவர்கள் குலப் பெருமை, குடும்பப் பெருமை பேசுபவர்களாக இருந்தார்கள். இவ்வாறு பெருமை பேசுவோர் இப்போதும் எல்லா மதங்களைச் சார்ந்தவர்களிலும் உள்ளார்கள்.
 
ஒருவனின் பரம்பரையில் யாரோ பிரசித்தி பெற்ற கொடை வள்ளல் ஒருவன் வாழ்ந்திருந்தால் அவனைக் குறிப்பிட்டு அவனின் மகன் அல்லது பேரன் நான் இன்னானின் மகன் அல்லது பேரன் என்று பெருமை பேசுவது போன்றும், பரம்பரையில் ஒரு சண்டியன் வாழ்ந்திருந்தால் அவரைக் குறிப்பிட்டு நான் இன்னானின் பூட்டன் என்று பெருமைக்காக சொல்வது போன்றும். ஒருவன் இன்னொருவனுடன் சண்டையிடும் போது நான் யார் தெரியுமா? நான்தான் அமெரிக்க ஜனாதிபதியின் மகன் என்றும் சொல்வது போன்றுமாகும்.
பெருமைக்காக அல்லது பொய்யாக இவ்வாறு சொல்பவர்களைப் பெருமானார் அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளார்கள்.
இன்று நாம் சிலரைக் காண்கிறோம். அவர்கள் தம்மை “ஸெய்யித்” நபீ பெருமானின் வழித்தோன்றல் – குடும்பத்தவர்கள் என்று சொல்கிறார்கள். அவர்களிடம் அதற்கு “ஸில்ஸிலா” ஆதாரம் உண்டா? என்று கேட்டால் மேலும், கீழும் பார்த்துவிட்டு தந்திரமாக மறைந்து விடுகிறார்கள்.
 
இன்னும் சிலர் தம்மை குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் ஏதோ ஒரு தலைமுறையைச் சொல்வார்கள். அவர்களிடம் ஆதாரம் கேட்டால் “ஸில்ஸிலா” ஆதாரம் உண்டு. ஆனால் அதை வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டேன் என்று சாட்டுச் சொல்வார்கள்.
இவ்வாறு சொல்பவர்களில் உண்மை பேசுவோரும் உள்ளனர். பொய் பேசி மக்களை ஏமாற்றி உழைப்பவர்களும் உள்ளனர். ஆகையால் நாம் ஏமாந்து போகக் கூடாது. உண்மையான உயர் குல வழி வந்தவர்களாயின் அவர்களைச் சரியாக நோட்டமிட்டாலேயே விளங்க முடியும். அவர்கள் மார்க்கத்திற்கு முரணில்லாமலிருப்பார்கள். தொழுவார்கள். பெருமானாரைப் பின்பற்றியிருப்பார்கள்.
 
சுருக்கம் என்னவெனில், தம்மைப் பொய்யாக “ஸெய்யித்” என்று நடிப்பவர்களையும், குத்பு நாயகத்தின் வழி வந்தவர்கள் என்று சொல்வோரையும், தமது பரம்பரை சொல்லிப் பெருமை பேசுவோரையும் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். எந்த விடயத்திலும், எவரையும் கண்டிக்காத, கீழ்த்தரமான வார்த்தைகள் மூலம் கண்டித்திருக்கிறார்கள். தலைப்பில் நான் எழுதிய நபீ மொழிக்கு இப்போது நான் எழுதிய சாராம்சமே கூறப்படுகிறது. இவ்வாறு குலப் பெருமை பேசுவோரையும், பொய்யாக தம்மை “ஸெய்யித்” என்றும், குத்பு நாயகமவர்களின் குல வழி வந்தவர்கள் என்றும் சொல்வோரையும் எவ்வாறு இழித்துரைத்துள்ளார்கள் என்பதைக் கவனிப்போம்.
யாராவது குலப் பெருமை பேசினால், அல்லது “ஸெய்யித்” இல்லாத ஒருவன் தன்னை “ஸெய்யித்” என்று வாதிட்டால், அல்லது உயர் குலத்தைச் சேராதவன் தன்னை உயர் குல வழி வந்தவன் என்று வாதிட்டால் அவனுக்கு فَأَعِضُّوْهُ بِهَنِ أَبِيْهِ என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள் எம் பெருமானார் அவர்கள்.
 
இதன் கௌரவமான பொருள் “அவனுடைய தந்தையின் ஆண்குறியை கடிக்குமாறு அவனுக்குச் சொல்லுங்கள்” என்பதாகும்.
இந்த வசனத்தில் வந்துள்ள فَأَعِضُّوْهُ என்ற சொல் عَضَّ என்ற சொல்லடியில் உள்ளதாகும். இச் சொல்லுக்கு أَمْسَكَ بِأَسْنَانِهِ அவன் தனது பற்கள் கொண்டு கடித்தான் என்று பொருள் வரும். أَعَضَّ என்ற சொல்லுக்கு கடிக்கச் சொன்னான் என்று பொருள் வரும்.
هَنِ
என்ற சொல்லுக்கு ذَكَرْ ஆண்குறி என்று பொருள் வரும். ஆண்குறிக்கு إِيْرْ அல்லது أَيْرْ என்றும் அறபு மொழியில் சொல்லப்படும்.
فَأَعِضُّوْ بِهَنِ أَبِيْهِ
“அவனின் தந்தையின் ஆண்குறியைக் கடிக்கச் சொல்லுங்கள்” என்ற இதே கருத்தை எந்த மாற்றமுமின்றி தமிழில் வேறுமாதிரியும் சொல்லலாம். நான் அவ்வாறு எழுதினால் சிலர் என்னைக் குறை கூறலாம். ஊத்தப் பேச்சு பேசுகிறார் என்று சொல்லவும் கூடும். ஆகையால் அதை நான் எழுதவில்லை.
எனவே, எவனாவது குலப் பெருமை பேசினால், அல்லது தான் “ஸெய்யித்” உயர் குலத்தைச் சேர்ந்தவன் என்று பொய் சொன்னால் நபீ மொழியில் வந்துள்ளது போல் கூறாது போனாலும் அவனை வேறு வகையில் அவ்வாறு சொல்லாமல் தடுக்க வேண்டும். அவனைத் திருத்தி நல்வழிக்கு அழைக்க வேண்டும்.
குலப் பெருமை பேசுவது மட்டும் பிழையான, பாவமான காரியமல்ல. பொதுவாகப் பெருமை பேசுவதும், உடை, நடை, மற்றும் பாவனையில் பெருமையாக நடந்து கொள்வதும் பாவமேதான்.
 
எமது பள்ளிவாயல் பிரதேசத்தில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் கொள்கையில் இரு தலைப் பாம்பு போன்றவர். அவரை நாங்கள் விலாங்கு மீன் என்றுதான் சொல்வோம். அவர் ஓரளவு பண வசதியுள்ளவர். யாராவது பெருமையைப் படிப்பதாயின் அவரிடமே படிக்க வேண்டும். அவர் நடையில் لَا تَمْشِ فِى الْأَرْضِ مَرَحًا “பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்” என்ற திரு வசனத்திற்கு முற்றிலும் முரணானவர். அவரின் வீடிருந்த தெருவை நகர சபையால் எவரும் வந்து சுத்தம் செய்யத் தேவையில்லை. அவரே சுத்தம் செய்து விடுவார். அத் தெருவால் அவர் இரண்டு தரம் நடந்தால் போதும். தெரு சுத்தமாகிவிடும். அதெவ்வாறு என்று நினைக்கிறீர்களா? அவர் தனது கரண்டைக் காலின் கீழ்தான் சாரம் உடுப்பார். என்னைக் கண்டால் பல் தெரியாமல் சிரிப்பார்.
ஒரு நாள் அவருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்தேன். அதில் கரண்டைக் காலின் கீழ் சாரம் உடுப்பது தொடர்பாக பெருமானார் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தேன். அவர் அதே கடிதத்தின் மறு பக்கத்தில் “எனக்கு மார்க்கம் சொல்ல நீ யார்?” என்று மட்டும் எழுதியனுப்பியிருந்தார். தற்போது அவர் இல்லை. போகுமிடம் போய் விட்டார்.
“றவ்சர்” அணிபவர்களும் கரண்டைக் காலின் கீழ் அணிவது தவறென்பதை கவனத்திற் கொள்ள வேண்டுமென்று அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். அவர் போல் கடிதம் அனுப்பி விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
நபீ பெருமானார் அவர்களின் காலத்தில் அவர்கள் தோழர்களுடன் திரு மதீனாப் பள்ளிவாயலில் இருந்த சமயம் வானம் முழங்கிய சத்தம் போல் பயங்கர சத்தமொன்று கேட்டதாம். அச் சத்தம் தோழர்களைத் தூக்கியெறிந்ததாம். அல்லாஹ்வின் திருத்தூதரே! இது என்ன சத்தமென்று வினவிய போது, “முன்னொரு காலத்தில் பூமியில் பெருமையாக நடப்பவன் ஒருவன் இருந்தான். ஒரு நாள் பூமியில் பெருமையுடன் நடந்து சென்ற போது கோபம் கொண்ட அல்லாஹ் அவனை விழுங்குமாறு பூமிக்கு கட்டளையிட்டான். அது அவனை விழுங்கியது. இன்று இப்போதுதான் அவன் அதன் அடியை அடைந்தான். அந்தச் சத்தமே அது என்று நபீ பெருமானார் கூறினார்கள். இந்த ஹதீதை என் தந்தை அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு மஜ்லிஸில் கூறினார்கள். இது நான் ஹதீதுக் கிதாபுகளில் கண்ட செய்தியல்ல.
 
எனவே நாமும் பூமியில் பெருமையாக நடப்பதையும், பேசுவதையும், வாழ்வதையும் தவிர்ப்போம். பெருமைக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments