Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இலங்கும் இலங்கைத் திரு நாடு ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், குவலயம் போற்றும் குத்பு நாயகம்...

இலங்கும் இலங்கைத் திரு நாடு ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், குவலயம் போற்றும் குத்பு நாயகம் அவர்களையும் நினைவூட்டும் திரு நாடு. இங்கு இல்லாதது எதுவுமில்லை.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

உள்ளே சென்று பார்ப்போம்!
 
நாம் வாழும் இலங்கைத் திரு நாடு – திருத்தீவு திரு மக்கா, திரு மதீனா, மற்றும் திரு பைத்துல் மக்திஸ் உள்ள ஜெரூஸலம் முதலான இடங்கள் தவிர உலகிலுள்ள ஏனைய நாடுகளையும், தீவுகளையும் விடச் சிறந்த இடமாகும் என்பது எனது கருத்து.
இங்கு இருப்பவை எவை என்று கேட்பதை விட இங்கு இல்லாதவை எவை என்று கேட்பதே பொருத்தமான கேள்வியாகும்.

எல்லா வகையான அருட்களையும் விட இறையருட்களான அவ்லியாஉகள் இங்கு அடக்கம் பெற்றிருப்பது மிகப் பெரும் அருளாகும்.
 
இத்திரு நாடு முன்னொரு காலத்தில் سَيَلَانْ “ஸெயலான்” என்று அறபு மொழியில் அழைக்கப்பட்டது. இது ஆங்கிலத்தில் “சிலோன்” என்று சொல்லப்பட்டது. இவ்வாறு பெயர் சொன்னவர் யாரென்று அறியப்படாவிட்டாலும் ஏன் அவ்வாறு வைக்கப்பட்டது என்பதற்கான காரணம் ஓரளவு புரியக் கூடியதாக உள்ளது.
 
“ஸெயலான்” என்ற இவ் அறபுச் சொல் سَالَ يَسِيْلُ سَيْلًا وَسَيَلَانًا என்ற சொற்றொடரில் உள்ளதாகும். இச் சொல்லுக்கு اَلْمَاءُ جَرَى நீர் ஓடியது, நீர் ஓடுதல் என்று பொருள் வரும். அதாவது இத்திரு நாடு நீர் வளம் நிறைந்த நாடாக அவ்வேளை காணப்பட்டதால் அதோடு தொடர்பான சொல் கொண்டு அது பெயர் வைக்கப்பட்டது எனலாம்.
அவ்வேளை மட்டும் நீர் வளம் நிறைந்த நாடாக இருந்து பின்னர் நீர் வளம் குறைந்த நாடாகிவிட்டது என்பது கருத்தல்ல. இன்று வரை இந்நாடு நீர் வளம் குறையாத நாடாகவே உள்ளது.
 
இந் நாட்டில் மலையிலும் குளம் உண்டு. இதை “நுவரெலியா” எனும் ஊரிலும் காணலாம். இவ் ஊரை “உர்து” மொழி பேசுவோர் نُوْرْ عَلِيْ “நூர் அலீ” அலியின் ஒளி என்ற பொருளில் அவ்வாறு சொல்வார்கள். இதற்கும் ஒரு காரணம் இருக்கலாம். “அலீ” என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று. இதன்படி அல்லாஹ்வின் ஒளி என்றும் பொருள் கொள்ள முடியும்.
 
ஒருவேளை அக்காலத்தில் தவ ஞானிகள் யாராவது அந்த மலையிலிருந்த வேளை இறையொளியைக் கண்டு அவரே அவ்வாறு பெயர் சொல்லியிருப்பதற்கும் சாத்தியமுண்டு.
اَلسَّيْلْ
என்ற சொல்லுக்கும், سَيَلَانْ என்ற சொல்லுக்கும் தொடர்புண்டு. اَلسَّيْلْ என்றால் வெள்ளம் என்று பொருள் வரும். இலங்கைத் திரு நாட்டின் பல இடங்களில் அடிக்கடி வெள்ளம் வருவதுண்டு. இதைக் கருத்திற் கொண்டும் இந்நாட்டுக்கு “ஸெயலான்” என்று பெயர் சொல்லப்பட்டிருக்கலாம்.
 
سَيَّالَةْ
– என்று ஒரு செடி உண்டு. இது முள் செடி. முள் உள்ள செடி. இதற்கு வெள்ளை நிற நீளமான முள் உண்டு. அந்த முள்ளைக் கழட்டினால் அதிலிருந்து பால் போன்று வடியும். இச் செடி அக்காலத்தில் இலங்கை நாட்டில் இருந்துள்ளது. இதைக் கருத்திற் கொண்டு “செய்யாலா” என்று வைக்கப்பட்ட பெயர் “செயலான்” என்று மருவியிருப்பதற்கும் சாத்தியமுண்டு.
 
இதேபோல் اَلسِّيْلَانْ என்ற சொல்லுக்கு حَجَرٌ كَرِيْمْ “சங்கையான கல்” என்ற பொருளும் உண்டு. இது இரத்தினக் கல்லை சுட்டிக் காட்டுகிறது.
سَيَلَانْ
என்ற சொல்லை ஆய்வு செய்தால் இலங்கைத் திரு நாட்டுக்கு سَيَلَانْ “செயலான்” என்று முதலில் பெயர் வைத்தவர்கள் அறபீகள் என்பது புலனாகிறது.
இத்திரு நாடு முன்னொரு காலத்தில் سَرَنْدِيْبْ “சரன்தீப்” (சரண் தீவு) என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இப் பெயர் அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களால் வைக்கப்பட்டிருக்க சாத்தியமுண்டு. இவ்வாறு வைத்துக் கொண்டால் இதன் பொருள் “சரணடைந்த தீவு” என்று வரும்.
 
இது ஒரு வரலாறோடு தொடர்புள்ளதாயிருக்குமென்று நான் கருதுகிறேன். இதன் விபரம் பின்வருமாறு.
ஆதிபிதா – முதல் மனிதன் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவர்க்கத்தில் படைக்கப்பட்டார்கள். இதேபோல் அவர்களின் மனைவி “ஹவ்வா” அவர்களும் அங்குதான் படைக்கப்பட்டார்கள். இருவரும் அங்கு சில காலம் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் பூமிக்கு அனுப்பப்பட்டார்கள். சுவர்க்கத்தில் நடந்த சம்பவங்கள் அதிகம் உள்ளன. அவற்றை இங்கு எழுதினால் இக்கட்டுரை நீண்டு விடும். ஆகையால் தவிர்த்துக் கொண்டேன்.
 
இருவரும் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அதாவது ஸஊதியில் உள்ள “ஜித்தா” நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். “ஜித்தா” என்பது جِدَّةْ என்பது பிழை. இதை “ஜத்தா” جَدَّةْ பாட்டி என்றே சொல்ல வேண்டும். ஹவ்வா அவர்களின் நினைவாகவே அந்த நகருக்கு جَدَّةْ என்று பெயர் வைக்கப்பட்டது.
 
நான் திரு மக்கா நகரிலிருந்து “டெக்ஸி” ஒன்றில் “ஜித்தா” சென்று கொண்டிருந்தேன். சாரதியுடன் பேசிக் கொண்டு சென்ற போது நான் “ஜத்தா” என்று சொன்னேன். அவன் “ஜத்தா” அல்ல “ஜித்தா” என்றான். அவனிடம் தாயின் தாய் “ஜத்தா”வா? “ஜித்தா”வா? என்று கேட்டேன். “ஜத்தா” என்றான். நான் வரலாறைச் சொல்லிக் காட்டினேன். ஏற்றுக் கொண்டான். இங்குதான் ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்கள் அடக்கம் பெற்றுள்ளார்கள். “ஜத்தா” என்பதே சரி என்றும் அவன் ஏற்றுக் கொண்டான். இது தொடர்பாக ஸஊதியில் உள்ள ஆய்வாளர்கள் ஆய்வு செய்வது நல்லது.
 
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்களும் பூமிக்கு வந்த பின் இருவருக்குமிடையில் சிறு விரிசல் ஏற்பட்டதாகவும், சுமார் நாற்பதாண்டுகள் ஒருவரை ஒருவர் தேடியலைந்ததாகவும், பின்னர் இருவரும் மக்காவிலுள்ள “அறபா” எனுமிடத்தில் சந்தித்ததாகவும், இதனால்தான் அவ்விடத்திற்கு “அறபா” அறிதல் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு தகவல் உண்டு.
 
நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் மகன் நபீ இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அறுத்து இறைவனுக்காக பலியிட ஒரு கனவு கண்டார்கள். அந்தக் கனவு சரியான கனவுதான் என்று அவர்கள் அறிந்த நாள் அந்நாள் என்பதால் “துல்ஹஜ்” மாதம் ஒன்பதாம் நாள் “யவ்மு அறபா” என்று அழைக்கப்படுவதாகவும் ஒரு தகவல் உண்டு.
 
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், ஹவ்வா அவர்களுக்குமிடையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சில காலம் இருவருக்கும் சந்திப்பின்றி ஒருவரை ஒருவர் பூமியில் தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் அவர்களின் சந்திப்பு இலங்கையிலேயே நிகழ்ந்தது. அவ்வேளை “ஹவ்வா” அவர்கள் தனது கணவன் ஆதம் நபீ அவர்களிடம் சரணடைந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இதைக் கருத்திற் கொண்டே இலங்கை நாட்டுக்கு “சரண் தீவு” சரணடைந்த தீவு என்று பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் – இந்தியர்கள் பெயர் வைத்ததாகவும் ஒரு தகவல் உண்டு.
 
இத் தகவல்கள் யாவும் செவி வழி வந்த தகவல்களே தவிர இவற்றுக்கு ஆவண ரீதியான ஆதாரங்கள் இல்லை. எனினும் இவை பிழை என்பதற்கான ஆதாரமின்றி இவற்றை மறுப்பது அறிவுடைமையுமல்ல.
 
جبل سرنديب: هو الجبل الّذي أهبط عليه آدم عليه السلام، وهو بأعلى الصين فى بحر الهركند، ذاهبٌ فى السّماء، يراه البحريُّون مِن مسافة أيّام، وفيه أثرُ قَدَمِ آدم مغموسة فى البحر، ويُرى على هذا الجبل كلّ ليلة كهيئة البَرق من غيرِ سحابٍ، ولا بُدّ له فى كلّ يوم مِن مطرٍ يغسل موضِعَ قَدَمِ آدم عليه السلام، ويُقال إنّ الياقوت الأحمر يُوجد على هذا الجبل، تحدره السُّيول والأمطار إلى الحضيض، ويُوجد الماس أيضا، وبه يُوجد العُود،
சரண்தீப்மலை: “சரண் தீப்” என்ற சொல் இலங்கை நாட்டைக் குறிக்கும். “ஜபல்” என்றால் மலை. இலங்கையிலுள்ள மலை என்று பொருள் வரும்.
இலங்கையில் நிறைய மலைகள் உள்ளன. இங்கு சொல்லப்படுகின்ற மலை “ஆதம் மலை” பற்றிய விபரமாகும்.
 
(நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பூமிக்கு இறக்கபட்ட நேரம் இந்த மலை மீதே இறக்கப்பட்டார்கள். இந்த மலை சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள “ஹர்கந்து” எனும் வங்காள விரிகுடா கடலில் உள்ளது. இது விண்ணை நோக்கிச் செல்கிறது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இம் மலையை பல நாட்கள் தொலைவிலிருந்து காண்பார்கள். இம்மலையில் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காற்பாதம் கல்லிற் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த மலையில் ஒவ்வோர் இரவும் மேகம் இல்லாமலேயே மின்னல் போல் தோற்றும். இந்த மலையில் கல்லில் பதிந்துள்ள நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கால் பாதத்தைக் கழுவிச் சுத்தம் செய்வதற்காக தினமும் மழை இறங்கும். இம்மலையில் பல் வகை மாணிக்கம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் “ஊத்” போன்ற மணப் பொருளும் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது)
இலங்கையில் வாழும் பௌதர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் முதலான மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு சென்று வருகிறார்கள்.
 
இம்மலை சிவனொளி பாத மலை என்றும், பாவா ஆதம் மலை என்றும், ஸ்ரீபாத மலை என்றும் அழைக்கப்படுகிறது.
 
இம்மலை கடல் மட்டத்திலிருந்து 2243 மீற்றர் (7354 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ, மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலை உச்சியில் காணப்படும் 1.8 மீற்றர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடிச் சுவடாக பௌதர்களால் கருதப்படுகிறது. இந்து சமய நம்பிக்கையின் படி இது சிவனின் காலடிச் சுவடாக கருதப்படுகிறது. முஸ்லிம்கள் பாவா ஆதம் மலையென்று அழைக்கிறார்கள்.
 
இம்மலை இலங்கையில் இருந்தாலும் அதைக் காணாதவர்களே அதிகம் உள்ளனர். இந்நாட்டில் வாழும் மக்களில் பௌத மதத்தைச் சேர்ந்தவர்களே அங்கு அதிகம் சென்று வருகின்றனர். முஸ்லிம்கள் அங்கு செல்வது மிகக் குறைவு. நான் இந்நாட்டில் பிறந்து 80 வருடங்களாகின்றன. இதுவரைக்கும் அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
 
இலங்கைத் திரு நாட்டிலுள்ள அதிசயங்களில் இதுவும் ஒன்று. இங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் வந்து செல்வார்கள்.
 
(தப்தர் ஜீலானீ) ஜெய்லானீ
மேற்கண்ட இப் பெயரில் இலங்கையில் ஓர் ஊர் உண்டு. இங்கு ஒரு மலையும் உண்டு. இந்த மலையும், இவ்விடத்தின் அமைப்பும் இறைவனையும், இறை நேசர்களில் ஒருவரான அல்குத்புர் றப்பானீ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களையும் நினைவூட்டும். இவ் இடம் பலாங்கொடை என்ற நகருக்கு அண்மையில் உள்ளது.
 
இங்கு ஒரு குகை உண்டு. இது நீளமான, விசாலம் குறைந்த, உயரமும் குறைந்த குகை. காரிருளான இக்குகையில் குனிந்து செல்லக் கூடிய இடங்களும், கால் நீட்டிப் படுத்துச் செல்லக் கூடிய இடங்களும், தவண்டு செல்லக் கூடிய இடங்களும் உள்ளன. ஆண்களும், பெண்களும் உள்ளே செல்ல அனுமதியிருந்தாலும் மன உறுதியுள்ள, பயமில்லாதவர்கள் மட்டுமே உட்செல்வார்கள். அக்குகையின் இறுதியில் கிணறு போல் ஓர் இடம் உண்டு. அதனுள் தலையை சற்று உள்ளே செலுத்திப் பார்த்தால் ஒளிபோல் ஒரு வெளிச்சம் தெரியும். அது என்ன ஒளி? என்ன வெளிச்சம்? என்பது இதுவரை எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் “பிக்னிக்” உல்லாசப் பயணிகள் இன மத பேதமின்றி அங்கு சென்று வருகின்றனர். குறித்த இந்த ஒளி குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் “கறாமத்” அற்புதமென்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். குத்பு நாயகமவர்கள் இங்கு வந்து தவமிருந்துள்ளார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். இங்குள்ள மலைகளினதும், குகைகளினதும் அமைப்பு வலீமாரின் குறிப்பாக குத்பு நாயகம் அவர்களின் “கறாமத்” என்பதை பிரதிபலிக்கின்றன. ஒரு முறை இங்கு தரிசிக்கச் சென்ற ஒருவர் மீண்டும் அங்கு செல்வதையே விரும்புவார். சூழலும், அமைப்புக்களும் கண்களையும், கல்பு – உள்ளங்களையும் கவரும் வண்ணம் அமைந்திருக்கின்றன.
 
இங்கு இயற்கையாக அமைந்த ஒரு பள்ளிவாயலும் உண்டு. இப்பள்ளிவாயல் அங்குள்ள ஒரு மலையின் தோற்றமேயன்றி எவராலும் கட்டப்பட்டதல்ல. இங்கு தினமும் தொழுகை நடப்பதோடு விஷேட நாட்களில் விஷேட நிகழ்வுகளும் நடைபெறும். வருடத்தில் ஒரு தரம் பெரிய கந்தூரியும் இடம் பெறும். இலங்கைத் திரு நாட்டின் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் இன, மத, மொழி வேறுபாடின்றி பக்தர்கள் வருவார்கள். இங்கு வருடத்தில் ஒரு முறை பெரு விழா நடை பெறும். இங்கு நடைபெறும் மௌலித் நிகழ்வுகள் “பாவா”மாரின் தலைமையிலேயே நடைபெறும். விஷேட தினங்களில் “தகறா” றபான் அடியோசையோடும், “முறாதிய்யா” முழக்கத்தோடும் குத்பு நாயகத்தின் பெயரிலான திருக்கொடி ஏற்றப்பட்டு தொடராக பல நாட்கள் நடைபெறும்.
 
இவ்விடம் தொன்று தொட்டு முஸ்லிம்களாலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஒரு காலத்தில் இதன் தலைமை நிர்வாகியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் அபூ ஸாலிஹ் என்பவர் நெறிப்படுத்தி வந்துள்ளார்.
 
இதன் நிர்வாகத்தையும், ஆட்சியையும் பௌத மக்கள் தமக்குரியதென்று சொல்வதும், அதற்கான நடவடிக்கையில் இறங்குவதும் உண்டு. அவ்விடம் தமக்குச் சொந்தமானதென்று நிறுவுவதற்காக பௌத மக்கள் அங்கு ஓர் இடத்தில் இறைஞானி புத்தர் அவர்களின் சிலை ஒன்றையும் நிறுவியுள்ளதாக அறிய முடிகிறது. காலப் போக்கில் இவ்விடம் பௌதர்களுக்குச் சொந்தமான இடமாக மாறுவதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன. இவ்விடம் பிறருக்குப் போகாமல் காப்பாற்றுவதாயின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்களும், இலங்கை வாழ் அரசியல் செல்வாக்குள்ள முஸ்லிம்களும், இலங்கையிலுள்ள உலமா சபைகளும், வலீமாரின் பக்தர்களும், தரீகா அமைப்புக்களும், பொதுவாக முஸ்லிம்களும் ஒரே குரலில் ஒரே தலைமையில் ஒன்றிணைவார்களாயின் இவ்விடம் பிறருக்குச் செல்லாமல் காப்பாற்ற முடியும். பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும்.
இவ்விடம் முஸ்லிம்களின் கைவிட்டுப் போக வேண்டும் என்பதில் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கும், சியாறங்கள் – அவ்லியாஉகளின் அடக்கத்தலங்களுக்கும் எதிரானவர்கள் பற்றை மறைவில் நின்று ஒத்துழைப்பு வழங்குவது முஸ்லிம் தலைவர்களுக்கு மறைவானதல்ல.
 
முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்களும், இலங்கையிலுள்ள உலமாஉகள் அமைப்புக்களும் ஒன்றிணைந்து நீதிமன்று வரை சென்றாவது இதற்கு நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கான காரணம் இவர்களிலும் வஹ்ஹாபிஸக் கொள்கையுடையோர் இருப்பதேயாகும்.
 
ஜெய்லானீ போன்ற முஸ்லிம்களின் விஷேட இடமொன்று முஸ்லிம் அல்லாதவர்களின் கைக்குப் போய்விடாமல் காப்பாற்றுவதற்காக முஸ்லிம் தலைவர்கள் தமக்கிடையே உள்ள கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளை கைவிட்டு ஒன்றிணைய வேண்டுமென்பது எனது கருத்தாகும்.
 
ஸூபிஸ தத்துவம் பேசிய என்னையும், அதை ஏற்றுக் கொண்ட பல்லாயிரம் இல்லை பல இலட்சம் முஸ்லிம்களையும் மதம் மாற்றி “முர்தத்” என்று முல்லாக்கள் “பத்வா” வழங்கி 43 வருடங்கள் கடந்தும் கூட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், இலங்கை வாழ் முஸ்லிம் தலைவர்களும் இது தொடர்பாக நாடாளுமன்றில் குரலெழுப்பாமல் இருப்பதற்கு காரணம் அவர்களுக்கிடையில் கொள்கை ரீதியில் ஒற்றுமையில்லாதிருப்பதேயாகும். ஒற்றுமையிருந்தாலும் கூட அரசியல்வாதிகளின் நோக்கம் தமது அரசியலை வளர்த்துக் கொள்வதாயிருப்பதால் தாம் ஒரு பக்கம் மட்டும் சார்ந்து செயல்பட்டால் தமது அரசியல் லாபம் இல்லாமற் போய்விடுமென்று அவர்கள் பயப்படுகிறார்கள். இவர்களின் பதவியாசை நீங்கினால் மட்டுமே சமூகத்திற்காக இவர்கள் குரல் கொடுப்பார்கள். அதுவரை சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாய்கின்ற செம்மறி ஆடுகளாகவே இருப்பார்கள். அவர்கள் அவ்வாறே இருக்கட்டும். அல்லாஹ்வின் சமூகத்தில் பதில் கூறட்டும்.
 
தொடரும்….
RELATED ARTICLES

Most Popular

Recent Comments