لَأَنِينُ الْمُذْنِبِينَ أَحَبُّ إِلَيَّ مِنْ زَجَلِ الْمُسَبِّحِينَ (الحديث القدسي(
பாவிகளின் முனகல், “தஸ்பீஹ்” துதிப்போரின் இரைச்சலை விட எனக்கு மிக விருப்பமானதாகும். (நபீ மொழி, ஆதாரம்: தப்ஸீருர் றாஸீ)
دَمْعَةُ الْعَاصِيْ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ (نزهة المجالس)
பாவி ஓட்டும் கண்ணீர் இரட்சகனான அல்லாஹ்வின் கோபத் தீயை அணைக்கும்.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
முதலாவது நபீ மொழியில் أَنِيْنْ “அனீன்” என்று ஒரு சொல் வந்துள்ளது. இது أَنَّ يَئِنُّ أَنِيْنًا என்ற சொல்லடியில் உள்ளதாகும். أَنَّ “அன்ன” என்றால் صَوَّتَ لِأَلَمٍ وَتَأَوَّهَ ஒரு நோயினால் அனுங்கினான், முனங்கினான் என்று பொருள் வரும். முனகல் என்பது சரியான தமிழ் சொல்லாகும்.
பாவிகள் தமது பாவங்களை நினைத்து வருந்தி முனகுதல், அல்லது அனுங்குதல். இத்தகைய முனக்கம் – முனகல் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. எதைவிட விருப்பமானதெனில் அல்லாஹ்வைப் பல பேர் சேர்ந்து துதிக்கும் போது – புகழும் போது எழுகின்ற இரைச்சலை விட விருப்பமானதாகும்.
“அன்ன” அனுங்கினான் என்பது சென்ற கால வினைச் சொல். இதன்படி أَنَّ مُزَمِّلٌ قَائِمًا – முசம்மில் நின்ற நிலையில் அனுங்கினான் அல்லது முனங்கினான் என்று சொல்ல முடியும்.
“முஃமின்” விசுவாசிகள் ஓர் இடத்தில் கூடி தமது இரட்சகனை புகழ்ந்து அவனின் அன்பைப் பெற வேண்டும் என்று விரும்பி அனைவரும் ஒரே குரலில் “ஸுப்ஹானல்லாஹ்” என்றோ, அல்லது “அல்ஹம்துலில்லாஹ்” என்றோ சொல்லும் போது ஓர் இரைச்சல் கேட்கும். இவ் இரைச்சலை அல்லாஹ் கேட்பதை விட பாவிகள் ஓர் இடத்தில் கூடி அவர்கள் தமது பாவங்களை நினைத்து வருந்தி அனுங்கும் சத்தத்தை அல்லது முனங்கும் சத்தத்தை தான் கேட்பது தனக்கு மிக விருப்பமானதென்று அல்லாஹ் கூறியுள்ளான்.
இது எது போன்றதென்றால் ஒருவனின் மனைவி தனது அறியாமையினாலோ, அல்லது மன முரண்டினாலோ அவனுக்கு ஒரு குற்றம் செய்து விட்டு தான் செய்ததை நினைத்து வருந்தி முனங்கும் அல்லது அனுங்கும் சத்தத்தை கணவன் கேட்பது ஒரு கூட்டம் ஒன்று சேர்ந்து அவனைப் புகழும் சத்தத்தை அவன் கேட்பதை விட அவன் மனச் சாட்சியுள்ள கணவனாயிருந்தால் மட்டும் அது அவனுக்கு மிக விருப்பமானதாகவேயிருக்கும்.
இக்கட்டத்தில் அந்தக் கணவன் என்ன செய்வான்? நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சொல்லாமலேயே புரியும். இத்தகைய நிகழ்வுகளை தமது வாழ்வில் அனுபவித்த பலர் இதை வாசிக்கும் போது புரிந்து கொள்வார்கள். எனினும் நான் சுட்டிக் காட்டுகிறேன்.
அவன் எவ்வளவுதான் கௌரவமுள்ளவனாயினும், செல்வந்தனாயினும் அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு அவள் காலடி சென்று அவளின் தலை தடவி, கண்ணீர் துடைத்து, அவளின் கன்னம் முத்தி தேவையேற்படின் காலையும் முத்தி அவளை மன்னிப்பான். (மன்னிக்க வேண்டும். இதுவே நிரந்தர நல்வாழ்வுக்கு ஒரே வழி. இன்றேல் “காழீ” நீதி மன்றம்தான்)
இவ்வாறுதான் றஊப் ஆன, றஹ்மான் ஆன, றஹீம் ஆன, ஙப்பார் ஆன, தவ்வாப் ஆன, ஷகூர் ஆன, முன்இம் ஆன, லதீப் ஆன, அபுவ்வு ஆன, கரீம் ஆன, ஹலீம் ஆன அல்லாஹ்வுமாவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவ் அறிவு புத்தகங்களில் பெறக் கூடிய அறிவல்ல. வாழ்க்கையில் ஒரு தரமேனும், அல்லது ஒரு கணமேனும் முனங்குங்கள். அனுங்குங்கள். அழுது சலித்து கரமேந்துங்கள். அவன் உங்களைக் கை விடான். அவன் உள்ளத்தில் ஓர் இடத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். நற்குணத்துக்கு வரைவிலக்கணமான நபீகள் கோமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒரு நாள் தனது தோழர்களிற் சிலருடன் திரு மக்கா நகர் சாலையில் நடந்து செல்கிறார்கள். ஓலைக் குடிசையொன்றின் வாசற் படியில் நின்று கொண்டிருந்த ஒரு மாது மண்ணில் கால் பதியா கருணை நபீயைக் கண்டதும் அல்லாஹ்வின் றசூலே! என் நெஞ்சில் வாழும் வள்ளலே! இவ் ஏழையின் ஓலைக் குடிசைக்குள் வந்து போகலாமா? என்று கண்ணீர் வடித்தவளாய் கெஞ்சிக் கேட்டாள். بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ நற்குணங்களை நிறைவு செய்ய அனுப்பி வைக்கப்பட்ட நபீயல்லவா நான், இதோ வருகிறேன் என்று குடிசைக்குள் நுழைந்தார்கள் கோமான் நபீ. ஓலைக் குடிசையில் கதிரை இருக்குமா? அல்லது தரமான விரிப்புகள்தான் இருக்குமா? பெருமானார் தரை மீது அமர்ந்தார்கள். ஒரு பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். அடுப்பில் நெருப்பு எரிகின்றது. மறு பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். தாயின் மூன்று குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாது அண்ணலெம்பெருமானிடம் அல்லாஹ்வின் றசூலே! என்று விழித்து நான் எனது குழந்தைகள் மீது வைத்துள்ள பாசத்தை விட அல்லாஹ் இக்குழந்தைகள் மீது பாசமுள்ளவனா? இல்லையா? என்று கேட்டார். ஆம், பாசமுள்ளவன் என்றார்கள் நபீ பெருமான். அல்லாஹ்வின் றசூலே! நான் இக்குழந்தைகளை இதோ எரியும் நெருப்பில் எரித்து வேதனை செய்வேனா? என்று கேட்டார் அப் பெண். இல்லை என்றார்கள் ஏந்தல் நபீ பெருமான். அல்லாஹ்வின் றசூலே! அவ்வாறாயின் அடியார்கள் மீது இரக்கமுள்ள அல்லாஹ் அவர்களை நரகில் எறிந்து வேதனை செய்வானா? என்று கேட்டார். அவ்வளவுதான் நபீ பெருமான் தலை குனிந்து மௌனியானார்கள். அவர்களின் கண்கள் கண்ணீரை ஓட்டின. அந்த மாது கேட்ட கேள்வி பெருமானாரை மௌனியாக்கி அவர்களின் கண்களைக் குளமாக்கியது. அழுதார்கள். அழுது கொண்டே இருந்தார்கள். தோழர்கள் சகிதம் வாடிய வதனத்தோடு வெளியேறினார்கள் பெருமானார் அவர்கள்.
இங்கு சிந்திக்க வேண்டிய விடயம் என்னவெனில் அந்தப் பெண் கேட்ட கேள்விக்கு நபீகளார் விடை சொல்லாமல் அழுததேயாகும். அதற்கு விடை இல்லையென்று அழுதார்களா? அல்லது இருந்தாலும் அது சொல்ல முடியாததென்று அழுதார்களா? நான் அறிந்தவரை அதற்கு விடை உண்டு. ஆயினும் அதை எல்லோரிடமும் சொல்ல முடியாது. ஒருவரிடம் சொல்வதாயினும் அவர் ஆன்மிக அறிவுத் துறையில் எந்த இடத்தில் உள்ளார் என்று நாடி பிடித்துப் பார்த்த பிறகுதான் சொல்ல வேண்டும். எனக்கு நூறு வீதம் சரியான விடை தெரியாது போனாலும் ஐம்பது வீதமேனும் தெரியும். யாரிடம் எவ்வாறு சொல்வதென்று சிந்தனை செய்தவனாக உள்ளேன். உண்மையான, “இக்லாஸ்” உள்ள ஒரு முரீதிடம் சொல்லி அவர் ஒருவரிடமும் சொல்லா விட்டாலும் கூட அவரே வழி கெட்டுப் போகமாட்டார் என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு. இன்ஷா அல்லாஹ் ஆன்மிகத்தில் இன்னும் நான் முன்னேறி, இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்தும் காலம் வந்தால் வெளியாக்குவேன். இதை வெளிப்படுத்துவதன் மூலம் இரகசியம் பேணத் தெரியாதவர்களால் எனக்கும், ஸூபிஸ சமூகத்திற்கும் சங்கடம் ஏற்படுவதை அஞ்சுகிறேன். இதற்குப் பொருத்தமான வரலாறு ஒன்று உண்டு. அடுத்து வரும் தொடர்களில் அதை எழுதுவேன்.
إِظْهَارُ سِرِّ الرُّبُوْبِيَّةِ كُفْرٌ
றப்புடைய இரகசியத்தை வெளிப்படுத்துவது “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்தும் என்பது ஸூபீ மகான்களின் மூல மந்திரமாகும்.
ஆனால் நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் றப்புடைய இரகசியத்தைச் சேர்ந்ததல்ல. இது கட்டாயம் வெளிப்படுத்திப் பேச வேண்டிய “தவ்ஹீத்” தத்துவமாகும்.
دَمْعَةُ الْعَاصِيْ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ (نزهة المجالس(
பாவி ஓட்டும் கண்ணீர் இரட்சகனான அல்லாஹ்வின் கோபத் தீயை அணைக்கும். (நபீ மொழி)
பாவம் செய்த ஒரு பாவி தான் செய்த பாவங்களை நினைத்து வருந்தி வடிக்கும் கண்ணீர் அவனின் பார்வையிலும், ஏனையோரின் பார்வையிலும் தரையில், அல்லது உடையில், அல்லது உடலில் விழுவதுபோல் தோற்றினாலும் கூட அது அவ்வாறு எதிலும் விழுவதில்லை. அல்லாஹ் ஒரு “மலக்” அமரரை கண்ணீர் வடிக்கும் அந்த மனிதனிடம் அனுப்பி அவன் வடிக்கும் கண்ணீரை ஒரு போத்தலில் அடைத்து அதை “அர்ஷ்” எனும் தனது சிம்மாசனத்தின் தூணில் அவனின் பெயர் எழுதி வைக்குமாறு கட்டளையிடுகிறான். அந்த அமரரும் அவ்வாறே செய்கிறார். அது பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது.
மறுமை நாளில், மஹ்ஷர் மைதானத்தில் அழுது கண்ணீர் வடித்த அந்த மனிதனை தீப் பந்தமொன்று துரத்திச் செல்லும். அவ்வேளை அல்லாஹ் அதே “மலக்” அமரரை அழைத்து அவன் வடித்த தண்ணீர் போத்தலை அவனிடம் எடுத்துச் சென்று அவனைத் துரத்திக் கொண்டிருக்கின்ற தீயை அந்த நீரால் அணைத்து விடுமாறு கட்டளையிடுவான். அவர் அவ்வாறே செய்வார். அப்போது அந்த மனிதன் நீங்கள் யார்? இது என்ன? என்று அவரிடம் கேட்பான். அதற்கவர், நான் “மலக்” அமரர்களில் ஒருவர். இந்த நீர் உனது நீர்தான். உலகில் நீ செய்த பாவத்தை நினைத்து வருந்தி நீ வடித்த நீர்தான் இந்நீர். அல்லாஹ்வின் கட்டளைப்படி உனக்காகப் பாதுகாத்து வைக்கப்பட்டது என்று சொல்வார். அப்போதவன் அல்ஹம்து லில்லாஹ்! என்று கூறி மகிழ்ச்சியடைவான். அதே நேரம் இன்னும் பலரை நெருப்பு பந்தம் துரத்திச் செல்வதையும், அவர்களை எரித்துக் கரித்துச் சாம்பலாக்குவதையும் அவன் கண்டு மீண்டும் அல்ஹம்து லில்லாஹ்! என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து மகிழ்வான்.
இன்று முஸ்லிம்களில் தமது பாவத்தை நினைத்து வருந்தி கண்ணீர் மல்கி கையேந்துவோர் எத்தனை பேர்? இளமையில் தாம் செய்த அட்டூழியங்களையும், அட்டகாசங்களையும், அநீதிகளையும், அடக்குமுறைகளையும் எண்ணிப் பார்த்து ஏங்கி அழுபவர்கள் எத்தனை பேர்?
தப்லீக் சகோதரர்கள் மூட்டை முடிச்சுகளுடன் வருவர். பள்ளிவாயலைத் தமது வீடாக்கிக் கொள்வர். சமைப்பர், சாப்பிடுவர். குறட்டை விட்டு உறங்குவர். அறபுக் கல்லூரிகளில் பல்லாண்டுகள் ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா முதலான அறிவுகளில் ஒரு சொட்டேனும் தொட்டுக் கூடப் பார்க்காத புத்தக வியாபாரிகளும், அத்தர் வியாபாரிகளும் முற்றும் கற்ற முல்லாக்கள் போல் மின்பரில் அமர்ந்து மார்க்கம் பேசுவர். அழுதழுது கண்ணீர் வடிப்பர். கண்ட பலனொன்றுமில்லை கண்ணே றஹ்மானே என்று கலைந்து செல்வர்.
உளச் சுத்தமும், உடல் சுத்தமுமில்லாத “அவாம்”கள் மின்பரில் ஏற்றப்பட்டு பயான் பண்ணுவார்கள். கண்டதே காட்சி, கொண்டதே கொள்கை என்று பேசுவார்கள். இறுதியில்
ஸூறத் மே இன்ஸான்ஹே, ஸீறத் நெஹீஹே!
ஸீறத் மே ஹயாவான்ஹே, மகர்தும் நெஹீஹே!
என்று அறிஞரும், கவிஞருமான அல்லாமா இக்பால் சொன்னது போல் கதை முடிந்து விடும்.